Pages

Friday, January 10, 2025

மஞ்ஞூலும் ராத்ரி மாஞ்ஞு யாத்ரா மொழியோடே... ஆற்றோரம் சூர்ய நெத்தி அக்னி விளக்கோடே....❤️

மஞ்ஞூலும் ராத்ரி மாஞ்ஞு 

யாத்ரா மொழியோடே...

ஆற்றோரம் சூர்யன் எத்தி

அக்னி விளக்கோடே....❤️

பாடகர் ஜெயச்சந்திரனுக்கு அவர் தம் தாய்மொழியாம் மலையாளத்தில் இசைஞானி இளையராஜா கொடுத்த ஆகச் சிறந்த பொக்கிஷப் பாடலாக இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் என் மனது மெச்சும்.

ஜெயேட்டனோடு இசைஞானி இளையராஜா கூட்டுச் சேர்ந்த வருஷம் 1977. "மஞ்ஞூலும்" பாடல் பிறந்தது 1997 இல்.

இளையராஜாவின் இசையில் ஜெயச்சந்திரனின் இசைப் பயணத்தின் முடிவிடத்தின் பாடல்களில் ஒன்று இது.

வேறொன்றும் வேண்டாம், படத்தின் கதையே தெரியாமல் இந்தப் பாடலை மட்டும் கேட்டுப் பாருங்கள்.

ஒரு பாசத்தின் தேடலை, அன்பின் பயணத்தை உருக்கும் குரலில் பாடியே நம்மை நெகிழ வைத்து விடுவார் ஜெயச்சந்திரன்.

தண்டவாளத்தில் தன் விழி வைத்துப் பயணிக்கும் ரயிலின் தேடலோடு தொடங்கி, அந்த ஏமாற்ற விழிகளோடு மீண்டும் கிளம்பும்  "யாத்ரா மொழி"யின் முகவரிப் பாட்டு இது.

இப்போது இந்தப் பாடலின் சந்தத்துக்கு இசைஞானி கொடுத்த இன்னொரு ரயிலோசையைக் காது கொடுத்துக் கேட்டுப் பாருங்கள். பேரிரைச்சல் இல்லாத ஏகாந்தத் தொனியோடு பாடலில் கூட வரும் பின்னணி இசையாக, அங்கே தளர்வான நடை எழும்.

கதாசிரியரோ, இயக்குநரோ சொன்ன கதையைத் தனக்குள் உருவேற்றி, அதற்கு ஒரு உணர்வு ரீதியானதொரு இசையைக் கொடுக்கும் பிரம்மாவாக இசைஞானி பிரமிப்பைக் கொடுக்கும் இன்னொரு படைப்பாகவே இதையும் எடுத்துக் கொள்வேன்.

மலையாள சங்கீதத்தில் இசைஞானியோடு நீண்ட பயணம் பயணப்பட்ட கிரிஷ் புத்தன்சேரியின் மலையாள வரிகளை மொழிபெயர்த்துப் பார்த்தேன். ஆகச்சிறந்ததொரு திரை இலக்கியமாகப் பாடல் வரிகள் தேங்கி நிற்கின்றன.

இன்று அவரும் இல்லை, பாடிய ஜெயேட்டனும் இல்லை. ஆனால் அவர்கள் கொடுத்த உணர்வு அப்படியே தேயாமல் இருக்கிறது.

பதகளிப்பு அல்லது தவிப்பினை மொழி பெயத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் இதுவும். 

https://www.youtube.com/watch?v=VjMA4aKScqI


கானா பிரபா

0 comments: