Pages

Tuesday, January 7, 2025

மெல்லிசை மன்னரும் திரைக்கதை மன்னரும் ❤️❤️❤️

மெல்லிசை மன்னரின் எண்பதுகளும் இன்னும் அதிகமாகக் கொண்டாடப்பட வேண்டியவை. அதுவும் அந்த ஆர்மோனியக்காரின் காதல் கதைக்குப் பொருத்தமான பண் அமைத்துப் பாடல்களில் கூட அந்த நிறத்தைக் கலவையாக்கிக் கொடுத்த அழகுணர்ச்சியைச் சிலாகித்துக் கொண்டே அந்த ஏழு நாட்கள் பாடல்களைக் கேட்க வேண்டும்.

பாலக்காட்டு மாதவன் என்ற பாக்யராஜ் மெட்டமைக்கும் தோற்றப்பாட்டிலேயே மெல்லிசை மன்னரை ஞாபகப்படுத்துவார். 

“கவிதை அரங்கேறும் நேரம் 

மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்” பாடலிலும் சரி, 

“தென்றலது உன்னிடத்தில் 

சொல்லி வைத்த சேதி என்னவோ” பாடலும் கூட ஆரம்பத்தில் கொடுக்கும் ஸ்வர ஆலாபனையில் அந்த இசையமைப்பாளனின் காதல் ஒட்டியிருக்கும்.

“ஸ்வர ராக” பாடலில் மலையாளமும், தமிழும் காதல் கொள்ளும் பாட்டு,இதுவும் தென்றலது பாடலும் கண்ணதாசன் கை வண்ணம். அது போல் குருவிக்கரம்பை சண்முகம் “கவிதை அரங்கேறும் நேரம் பாடலை எழுதியிருக்கிறார்.

“எண்ணி இருந்தது ஈடேற” பாடல் வைரமுத்துவை வைத்துப் படத்தின் வணிக சமரங்களுக்காகக் கொடுத்த குத்து வகையறாவோ என்று எண்ணிக் கொண்டே ரசித்தாலும் அதிலும் தன் முத்திரையைக் காட்டியிருப்பார் எம்.எஸ்.வி.

எண்பதுகளில் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனைக் கொண்டாட ஒரு சங்கராபரணத்தையும், இசைஞானி இளையராஜாவுக்கு சிந்து பைரவியுமாக அமைய, 

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அந்த 7 நாட்கள் ஐ எழுதி வைக்கலாம் போல. அதுவும் ஜெயச்சந்திரனுக்கு வைதேகி காத்திருந்தாளுக்கு முன் வந்த ஒரு பொக்கிஷம் இது.

பின் வரும் வரிகளில் தபேலாவை வழித்து தாள லயம் கொண்டும் மெல்லிசை மன்னரின் முத்திரை 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ

https://www.youtube.com/watch?v=eavNXIrVddI

இயக்குநர் கே.பாக்யராஜ் & இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் 

கூட்டணியின் ஆரம்பப் படமாக அமைந்தது “பாமா ருக்மணி”.

அந்தப் படத்தின் பெயரை உச்சரிக்கும் போதே

“நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்

எழில் உருவானவள்”

https://www.youtube.com/watch?v=HjmStSr_zpY

என்று எஸ்பிபி அடிமனசில் பாடத் தொடங்கி விடுவார்.

பாக்யராஜின் முதல் மனைவி பிரவீணாவும் படத்தில் ஒரு நாயகியாக இணைந்த படமிது.

கே.பாக்யராஜின் ஆஸ்தான பாடலாசிரியர்களில் ஒருவரான புலவர் சிதம்பரநாதன் வரிகளில் “நீ ஒரு கோடி மலர் கூடி” பாடலோடு 

Take Somebody 

https://www.youtube.com/watch?v=PrdPUXhiCOs

என்ற துள்ளிசைப் பாடலும் உருவானது இப்படத்துக்காக.

எல்.ஆர்.ஈஸ்வரியோடு அந்தப் பாடலை இணைந்து பாடியவர் மெல்லிசை மன்னரின் உதவி இசையமைப்பாளர் ஜோசப் கிருஷ்ணா.

கூக்காட்டும் அந்த ஆண்குரலாக மெல்லிசை மன்னரின் பல படங்களில் அடையாளப்பட்டிருப்பார் இங்கும் அப்படியே.

“கோகுலக் கண்ணன் நீயென்று 

இந்தக் கோதைக்குத் தெரியும்”

வாணி ஜெயராம் குரலில் ஒரு பாடலும்,

“கதவைத் தெறடி பாமா

என் காலு வலிக்கலாமா”

என்ற பாடலை பாக்யராஜின் ஆஸ்தான குரலாளர் மலேசியா வாசுதேவன் பாடவும் இன்னொரு பாடலுமாக

கவிஞர் முத்துலிங்கம் பாடல்களை எழுதினார்.

கே.பாக்யராஜின் திரைப்பயணத்தில் இன்னொரு சிகரம் “ஒரு கை ஓசை” வாய் பேச முடியாதவராக, அழுத்தமான நடிப்பினால் நாயக பிம்பத்தை உடைத்துப் பரவலான வெகுஜன அபிமானம் பெற்றவர் கே.பாக்யராஜ்.

இங்கும் மெல்லிசை மன்னர் கூட்டோடு 

“முத்துத்தாரகை வான வீதி வர

தங்கத்தேரென பூவை தேடி வர

ஊர்கோல நேரமிது”

https://www.youtube.com/watch?v=Con3PS60Jvg

என்ற அற்புதமான பாடலை எஸ்பிபியுடன், சுசீலா பாடியிருப்பார்.

அந்தப் பாடலை எழுதியவர் பின்னாளில் பிரபல வில்லனாகத் திகழ்ந்த ஆர்.பி.விஸ்வம்.

வழக்கம் போலத் தன் கூட்டணிப் பாடலாசியர்கள் புலவர் சிதம்பரநாதன், கவிஞர் முத்துலிங்கத்துக்கும் பாடல்களைக் கொடுத்ததோடு இன்னொரு புதுமை படைத்திருப்பார் பாக்யராஜ்.

அது என்னவெனில் பைரவி என்ற பாடலாசிரியரை வைத்து விடுகதைப் பாணியிலேயே சொல்லும் பாடலொன்றை எழுதி அந்த விடுகதையைப் பாடிப் பின் விடையையும் பகிரும் குரலாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையே பாட வைத்து, படத்தின் எழுத்தோட்டப் பாடலாக்கி விட்டார். 

அந்தப் பாடல் தான்

“சேலை இல்லே ரவிக்கை இல்லே புள்ளே”

https://www.youtube.com/watch?v=BXUcsLN5_qk

கேட்டுப் பாருங்கள், புதுமையாக ரசிக்க வைக்கும்.

கே.பாக்யராஜின் பலமே இன்னார் தான் இசை, இன்னார் தான் பாட்டு எழுத வேண்டும் என்ற ஒரு வரையறைக்குள் சிக்காமல் எம்.எஸ்.விஸ்வநாதன் முதற்கொண்டு இளையராஜா, சங்கர் - கணேஷ், கங்கை அமரன் ஈறாகவும் அப்படியே தானும் இசையமைத்துத் தீபக் இடமும் கை மாற்றிய பாங்கில் அவரது திரைப்பயணம் அமைந்திருந்தது.

அண்மையில் இயக்குநர் மு.களஞ்சியம் பேட்டியில் “தனக்கு இளையராஜா இசை தான் வேண்டும்” என்று கவிதாலயாவுக்குப் படம் பண்ண ஒப்பந்தமான போது, 

“உனக்கு உன் மேல் நம்பிக்கை இல்லையா?” 

என்று கே.பாலசந்தர் சொன்னதை அப்படியே கே.பாக்யராஜிடம் பொருத்திக் கொண்டேன்.

அற்புதமான கதை சொல்லியிடம் எல்லாமே வயப்படும். அதே நேரம் கதையில் தொய்வு இருந்தால் இசை இளையராஜாவாகவே இருந்தாலும் தூக்கி நிறுத்த முடியாது என்பதற்கு கே.பாக்யராஜின் இசைக் கூட்டணிகளே சான்று பகரும்.

கானா பிரபா

07.01.2025


0 comments: