Pages

Friday, November 13, 2026

Tapasya Academy of Dance படைப்பில் சிட்னியில் அரங்கேறிய மாயவனம் நாட்டிய நிகழ்வு

Tapasya Academy of Dance   படைப்பில்

சிட்னியில் அரங்கேறிய மாயவனம் நாட்டிய நிகழ்வு

ரசனைப் பகிர்வு : கானா பிரபா


ஊதா நிறத்தைப் போர்த்திய (Jacaranda) மரங்கள், பகட்டான நீள ஆடையை அணிந்தது போலப் பொங்கிப் பூத்திருக்கும்,  முற்றத்தில் வீற்றிருக்கும் Joan Sutherland அரங்கம்.

மறு வாரத்தில் தீபாவளி தினம் வருகிறது.

இங்கே அக்டோபர் 31 ஆம் திகதி தபஸ்யா நடனப் பள்ளியின் “மாயவனம்” எனும் நடன
நிகழ்வு,

இயற்கையும், கால நேரமும் கூடி வந்தது போல அமைந்ததொரு நிகழ்ச்சி அரங்கேறுகிறது. 

என்னவொரு பொருத்தம் என்று மனம் சொல்லிக் கொண்டு அதே எதிர்பார்ப்போடு நடனப் பள்ளி மாணவர்களின் மேடை நிகழ்வில் ஐக்கியப்படுகிறது.


Tapasya Academy of Dance  இன் நிறுவனர் மற்றும் ஆசிரியரான குரு திருமதி. தர்மினி சுமித்ரன் அவர்களால் நடனப்பள்ளி 2016 இல்  Girraween இல் வெறும் மூன்று சிறுமிகளும், ஒரு கனவும் மட்டுமே கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில் பிறந்து வளர்ந்த தன் பால்ய காலத்திலேயே பரத நாட்டியம் மீது ஈடுபாடுகொண்ட ஶ்ரீமதி தர்மினி சுமித்ரன், திருமதி. அம்பிகாவதி மற்றும் திருமதி. துஷ்யந்தி வேலுப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பகாலப் பயிற்சியைப் பெற்றவர்.  இந்தியாவின் சென்னையில் உள்ள புகழ்பெற்ற 'கலாக்ஷேத்ரா நுண்கலைக் கல்லூரியில்' (Kalakshetra College of Fine Arts) 2008-ஆம் ஆண்டு அங்கு தனது பயிற்சியைத் தொடங்கினார்.

கலாக்ஷேத்ராவில் இருந்த காலத்தில், பல மதிப்பிற்குரிய ஆசிரியர்களிடம் கற்கும் வாய்ப்பைப் பெற்ற அவர், பாரம்பரிய 'கலாக்ஷேத்ரா பாணி' பரதநாட்டியத்தில் ஆழமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

2012-ஆம் ஆண்டு படிப்பை முடித்து இலங்கை திரும்பிய அவர், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன், 'சக்தி டிவி' (Shakthi TV) நிறுவனத்திலும் பணியாற்றினார்.

ஆஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னரும் நடனம் மீதான தனது தீராத வேட்கையால் இவ்விதமாக நடனப் பள்ளியை ஆரம்பித்து இன்று ஒரு பெரிய நடனக் குடும்பமாக வளர்த்துள்ளார். 

தபஸ்யா நடனப்பள்ளியை ஆரம்பித்து பத்தாண்டுகள் நிறைவில், அனைத்து மாணவச் செல்வங்களையும் ஒன்று திரட்டி ஒரே அரங்க நிகழ்வாக, அதில் பல்வேறு நடனப் பாங்குகளையும், பாடல்களையும் கொடுத்து இந்த “மாயவனம்” எனும் நடனப் பகிர்வை வழங்கியது வெகு சிறப்பானதொரு சிந்தனை என்றே சொல்ல வேண்டும்.

பிருந்தாவனம் எப்படி இருக்குமோ அதைக் கண் முன்னே கொண்டு வரும் மேடைப் பின்னணி.

ஆடலரசன் நடராஜப் பெருமானின் திருவுருவம், 

இறையடியில் தான் கற்ற கலைக்கூடமாம் கலா ஷேத்ரா நிறுவனர் ஶ்ரீமதி ருக்மணிதேவி அருண்டேல் அவர்களின் ஒளிப்படம் நன்றியோடு நினைவுகூரப்படுகிறது. 

என்று அரங்க அமைப்பே எழிலுருவாய் இருக்கிறது.

நடனப்பள்ளி ஆசிரியை மற்றும் நிர்வாகி ஶ்ரீமதி தர்மினி சுமித்திரன், சக மாணவியரோடு நிகழ்வு சிறக்க இறையருள் வேண்டிய நடனத்தோடு ஆரம்பிக்கிறது.

தொடர்ந்து “மாயவனம்" நாட்டிய நிகழ்வு. 

“பிருந்தாவனம்” எனும் இயற்கை எழில் நிறைந்த உலகில், கிருஷ்ணருக்கும், ராதைக்குமான தெய்வீகக் காதல் மலர்கிறது.

புகிருஷ்ணனின் புல்லாங்குழல் இசையைச் சுமந்து வர, ராதையும் கிருஷ்ணனும் ஒரு அழகான மற்றும் தெய்வீக பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

ஒரு நாள், கிருஷ்ணர் கோபிகளுடன் விளையாட்டில் திளைத்திருக்க, அதைக் கண்ட ராதையின் மனதில் பொறாமையும் துயரமும் அலைமோதின. இதைக் கண்டு மனமுடைந்த ராதை, கிருஷ்ணரை விட்டு விலகிச் சென்றாள். ஒரு சிறிய தவறான புரிதல் இருவருக்கும் இடையே பிரிவினையை உண்டு பண்ணுகிறது. 

ஒரு கணம் வரை மாயாஜாலமாகத் தெரிந்த உலகம், இப்போது தனிமையாகவும் வெறுமையாகவும் மாறியது. தன் அன்புக்குரியவரைப் பிரிந்த ராதை, தன் ஏக்கத்தின் ஆழத்தை உணரத் தொடங்கினாள்.

கோபிகைகள் அவளுக்கு அன்புடன் வழிகாட்டினர்; அன்பு என்பது நம்பிக்கை, புரிதல் மற்றும் முழுமையான சரணாகதி ஆகியவற்றைக் கோருகிறது என்பதை அவளுக்கு உணர்த்தினர். வருத்தம் நிறைந்த இதயத்துடனும், கிருஷ்ணரைச் சென்றடையத் துடிக்கும் ஆன்மாவுடனும், அவரைத் தேடி ராதை பயணத்தைத் தொடங்கினாள்.

அவளது பயணம் 'மாயாவனம்' எனும் ஒரு விசித்திரமான காட்டிற்குள் அவளை அழைத்துச் சென்றது. 

அழகு, வியப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மை நிறைந்த அந்த மாயக் காட்டில் பயணிக்கும்போது, ராதை பல்வேறு உணர்ச்சிகளை எதிர்கொண்டாள்: 

பயம், ஏக்கம், துயரம், நம்பிக்கை, இறுதியாக முழுமையான சரணாகதி.

ஒவ்வொரு அடியிலும் அவளது அன்பு சோதிக்கப்பட்டது; அவளது அகங்காரம் கரைந்து போனது; அவளது இதயம் பக்தியின் உண்மையான பொருளைக் கண்டறிந்தது.

இறுதியில், கண்களில் கண்ணீருடனும், உதடுகளில் கிருஷ்ணரின் நாமத்துடனும், ராதை தன்னை முழுமையாகத் தன் அன்புக்குரியவரிடம் ஒப்படைத்தாள்.

அன்பு அகங்காரத்தைத் தாண்டிச் செல்லும்போது, நம்பிக்கை சந்தேகத்தை வெல்லும்போது, இரு இதயங்கள் ஒன்றாக இணையும்போது, கிருஷ்ணர் மீண்டும் ராதையிடம் வந்து சேர்கிறார்.

இவ்விதமாக அமைந்த “மாயவனம்" நாட்டிய நிகழ்வின் அஙகங்கள் ஒவ்வொன்றிலும் பொருத்தமான பாடல்கள், வெவ்வேறு நடன அமைப்புகள், நடனமணிகளுக்கு அழகுறு ஆடை அலங்காரங்கள், தேவையான காட்சியமைப்புகள் என்று ஒரு முழு வர்ணத் திரைச்சித்திரத்தைப் பார்த்த பிரமிப்பு எழுந்தது.

அதிலும் அந்த கிருஷ்ணரும், ராதையும் தெய்வீகப் பிறப்போ எனுமளவுக்கு அச்சொட்டான இறை வடிவம் கொண்டிருந்தார்கள்.

ஒரு சிறு பிசகு இல்லாமல் நேர்த்தியான ஒழுங்கில் மாறும் காட்சியமைப்புகளுக்கு ஈடுகொடுத்து நடனம் ஆடிய சிறுமிகள் கண் கவர்ந்து உள்ளத்தில் நிறைந்தார்கள்.

தபஸ்யா நடனப் பள்ளி இயக்குநர் ஶ்ரீமதி தர்மினி சுமித்ரன் மற்றும்  மாணவர்களுக்கு எவ்வளவு பாராட்டை வழங்கினாலும் அது பெறுமதியானதாகவே இருக்கும்.

“தபஸ்யா” என்றால் மனதை ஒருமுகப்படுத்திய தவசிந்தை நிலை என்று அர்த்தப்படும்.

இந்த நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக வந்த முனைவர் ஞானா குலேந்திரன் அவர்கள் தனது சிறப்புப் பேச்சில் குறிப்பிட்டது போல எல்லா மாணவர்களது நடனப் பகிர்விலும் “தன்னம்பிக்கை” தொனித்தது. இது பல்வேறு வயதுத் தரப்பினரை ஒருமுகப்படுத்தும் சவாலானதொரு பணியும் கூட.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, சட்டவாளர் மற்றும் அரசியல் பிரமுகர் துர்கா ஓவன் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்குக் கேடயங்கள் வழங்கிக் கெளரவித்தார்.

அரங்க அமைப்பைத் தொண்டர்களாக இயங்கிய பெற்றோரும் வெகு சீராகக் கவனித்தது குறிப்பிடத்தக்கது.

தமது ஆசிரியருக்குப் பூச்சொண்டு கொடுத்து மாணவர்கள் அவரைக் கெளரவித்தது நெகிழ்வானதொரு செயற்பாடு.


கன கச்சிதமாக இரண்டு மணி நேரத்துக்குள் நிறைந்து விடுகிறது இந்த நிகழ்வு, தேவையற்ற பேச்சு அலங்காரங்கள் இல்லாமல் இந்த நடனப் பள்ளி மாணவர்கள் தந்த இசையும், நடனமும் கலந்த பெரு விருந்தினை மட்டுமே மனம் அசை போடுகிறது.

“மாயவனம்” நாட்டிய நிகழ்வு சிட்னியின் இன்னொரு சந்தர்ப்பத்திலும் இன்னும் பரவலாகப் போய்ச் சேரவேண்டிய அற்புதமானதொரு உழைப்பு.



















0 comments: