Pages

Friday, July 2, 2021

♥️ தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே ♥️ கன்னடம் | தமிழ் | தெலுங்கு



“என் அண்ணன் இவ்வளவு தூரம் மெலடிப் பாடல்கள் இசையமைப்பதற்கு மிக முக்கிய காரணம் ஜி.கே.வெங்கடேஷ் தான்”

என்று கங்கை அமரன் தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டதை நியாயப்படுத்த வேண்டுமென்றால் இளையராஜாவின் திரையிசைக் குருநாதர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்கள் கன்னடத்தில் கொடுத்த திரையிசை மகா சமுத்திரத்தில் மூழ்கினால் போதும் ஏகப்பட்ட முத்துக் குவியல்களோடு கரையொதுங்க மனமில்லாமல் அந்தப் பெருஞ் சமுத்திரத்திலேயே இருந்தால் என்னவென்று தோன்றும்.

அப்படியொரு பாட்டுத் தான்

“ஹாயாகிதே….ஈ தினா மனா ஹகுதாகிதே….”



அட எங்கேயோ கேட்ட பாட்டு என்று யோசிக்கவே தோன்றாது,

“தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே….”

என்று வாய் முணுமுணுக்க ஆரம்பித்து விடும். சரி தான்
இந்தத் “தேன் சிந்துதே வானம்” பாடலின் நதி மூலம் தான் “ஹாயாகிதே..”



இந்தக் கன்னடத்துப் பேரழகிப் பாட்டைப் பாருங்கள். எப்பேர்ப்பட்டதொரு பகட்டான ஆரம்பத்தோடு வயலின், புல்லாங்குழல், வீணை எல்லாம் சங்கமிக்க, கொஞ்சம் வீணையைக் கொஞ்சிப் பேச வைத்து விட்டு அப்படியே ராஜாவிடம் தான் கிட்டாரைக் கொடுத்து வாசிக்கச் சொல்லியிருப்பார் போல. அதை அப்படியே மெல்ல P.B.ஶ்ரீனிவாஸ் இடம் அப்படியே தன் கிட்டார் நரம்பின் வழியே கடத்தி விட மனுஷர் பாடும் அந்த மிதப்பை அனுபவிக்கும் கணம் இருக்கிறதே
ஸ்வர்க்க லோகம் ஐயா
ஸ்வர்க்க லோகம்

அந்த “ஹாயாகிதே” என்று கொடுக்கும் பண்பைப் பாருங்கள், காத்திருந்து காதலி தரிசனம் கண்டவனின் ஒரு சிறு பெருமூச்சின் இன்பத் துள்ளலோ?

கன்னடத்தில் எப்படி இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் ஒரு முடிசூடா மன்னராக் கோலோச்சினாரோ அது போலவே அங்கே P.B.ஶ்ரீனிவாஸ் இற்குத் தனி இராச்சியம்.

கன்னடத்து நடிப்புலக ராஜா டாக்டர் ராஜ்குமார் முழு நேரப் பாடகராக 1974 இல் இருந்து இயங்க ஆரம்பிக்கும் வரை ஆஸ்தான குரல் இவரே. டாக்டர் ராஜ்குமார் தானே பாடி நடிக்கும் பண்பைத் தொடர வாய்ப்பைக் கொடுத்தது கூட ஜி.கே.வெங்கடேஷ் தான்.
எஸ்.ஜானகி ஜி,வெங்கடேஷ் இன் செல்லப் பிள்ளை போல எத்தனை எத்தனை முத்தாரங்களை அள்ளி வழங்கியிருக்கிறார். அப்படியாக அமைந்தது தான் இந்த “ஹாயாகிதே”.

இந்தப் பாடல் ஒலித்த “தாயி தேவரு” கன்னடப்படம் வெளிவந்து இந்த ஆண்டோடு ஐம்பது வருடங்கள். ஆனால் கேட்கும் போது அப்படியே முகத்தில் அறையும் பனிக்காற்று.

இப்போது அப்படியே தமிழுக்கு வாருங்கள் “தேன் சிந்துதே வானம்” என்று எஸ்.பி.பாலசுப்ரணியம் பாட அவருக்கு ஈடாக அதே கன்னடத்து இறக்குமதி எஸ்.ஜானகி தான்.
“ஹாயாகிதே” பாட்டில் பூசப்பட்ட இசையில் ஒரு பிரமாண்டம் தொனிக்கும், “தேன் சிந்துதே வானம்” ஒரு மெல்லிசைப் பாடலுக்கான அங்க இலட்சணங்களோடு பகட்டற்ற அழகி.
இந்த இரண்டு பாடல்களிலும் மெட்டைத் தவிர ஒரு ஒற்றுமை சரணத்தில் வரும் “தளாங்கு தத் தத்” தபேலா மேவல்.
இந்த இடத்தில் நிறுத்தி விட்டுப் போய்

“பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்
பருவங்கள் வாழ்க”

என்ற பகுதியைக் கேட்டுப் பாருங்கள் அந்த ஒற்றுமையைக் காண இல்லையில்லை கேட்க.


“பொண்ணுக்குத் தங்க மனசு” படத்தில் இந்தப் பாட்டுக்குக் கவியெழுத வந்தார் கவியரசர் கண்ணதாசன். பாடல் காட்சிப் பின்னணியைக் கேட்டு விட்டுத் தயாராகிறார்

இளையராஜாவிடம் மெட்டைப் பாடிக் காட்டுமாறு பணிக்கிறார் ஜி.கே.வெங்கடேஷ்.

ராஜா தத்தகாரம் இசைக்க, ஆறே நிமிடத்தில் மள மளவென்று எழுதிக் கொடுத்து விட்டுப் போனாராம் கவியரசர்.
இதைச் சொன்னவர் சாட்சாத் எஸ்பிபியே தான். அதுவும் இங்கல்ல.
தெலுங்கு இசை மேடையிலே.

பின்னாளில் வானொலி உலகக் கத்துக்குட்டிகள் “தேன் சிந்துதே வானம்” பாடலை இளையராஜா இசைத்த கணக்கில் போடுவதற்கு ஒரேயொரு பம்மல் கே.சம்பந்தம் தான். அதாவது இந்த “பொண்ணுக்குத் தங்க மனசு” (படத்தில் உதவியாளராக இருந்த இளையராஜா இதே இயக்குநர்கள் தேவராஜ் – மோகன் இயக்கிய “அன்னக்கிளி” வழியாகப் பிற்காலத்தில் அறிமுகமானது ஒன்றே தான்.

இன்னொரு விஷயத்தையும் சொல்லி விட்டு ஆந்திராப் பக்கம் போகிறேன்.

இந்த பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் தான் புகழ்பூத்த பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கமும் அறிமுகமாகிறார். அவர் எனக்கு வழங்கிய பேட்டியில் “தஞ்சாவூரு சீமையிலே” என்று தான் எழுதிய பாட்டுத் தான் இளையராஜா இசையமைத்த முதல் பாட்டு என்று சொல்லியிருக்கிறார் இங்கே


சரி கர்னாடகாவில் “ஹாயாகிதே” ஆகக் கனிந்து “தேன் சிந்துதே வானம்” ஆகத் தமிழகத்தில் பொழிந்தது அப்படியே சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைத்ததை இனிப் பார்ப்போம்.

அதாவது 1971 இல் கன்னடம், 1973 இல் தமிழ் அடுத்து 1974 இல் வருகிறது தெலுங்குப் படம் “ஜமீந்தாருகாரி அம்மாயி”.

நீங்கள் இதுவரை கன்னடத்தில் சொக்கிப் போய்க் கேட்ட பாட்டு, தமிழில் கூதல் காய்ந்த கீதம், தெலுங்கில் இன்னொரு பிறவி எடுக்கிறது. இரட்டைப் பிறவி என்றால் தகும்.
ஆம் தெலுங்கிலே இந்தப் பாட்டுக்கு இரண்டு குரல்கள். அதுவும் தனித்தனியாக.

“ம்ரோகிந்தி வீணா பதே பதே ஹிருதலாலோ
ஆ திவ்ய ராகம் அனு ராகமி சஹிந்திலே.....”

ஒன்று பாட்டுத் தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,



எஸ்பிபி பாடும் தொனியில் ஒரு வித்தியாசமான குரலைக் கேட்கலாம். அதுவரை இருந்த பிஞ்சுக் குரலைத் தாண்டிய கொஞ்சம் கண்டசாலாத்தனம் மிளிரும் இந்தப் பாட்டில்.

இனித்தான் முக்கியமான பாட்டைக் கேட்க வேண்டும்,
இசையரசியும் இந்தப் பாடலைப் பாடிக் கேட்டவர்கள் மனம் தந்தியடிக்கும் இப்படி.

பி.சுசீலாம்மாவின் குரல் “ஊர்வசி” சாரதாவுக்குப் போகின்றது. வீணை இசை மீட்டிக் கொண்டே கலைமகளாக அவர் பாடும் அந்தக் கணம் எழும் “ம்ரோகிந்தி வீணா”

எவ்வளவு பாந்தமானதொரு அனுபவத்தைக் கூட்டுவார் பி.சுசீலாம்மா.
முந்திய கன்னட, தமிழ்ப் பாடல்களைத் தாண்டிய ஒரு வீணா கானத்தோடு பயணப்படும் இந்தப் பாட்டு இன்னொரு பரிமாணம்.

ஒலித் துல்லியத்தோடு நம் இசையரசி பாடுவதைக் கேளுங்கள்


எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கண்ணதாசனைச் சிலாகித்தது இந்த மேடையில் தான்


ஒரு மெட்டுத்தான் எத்தனை வித்தை காட்டும், ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்குத் தகுந்தாற் போன்றதொரு பண்பாட்டு இசைச் சட்டை போட்டுக் கொண்டே வரும் இந்தப் பாடல் எல்லாம் பின்னாளில் இசையுலகத்தின் சக்கரவர்த்தியாக எண்பதுகளில் ஆண்ட இசைஞானி இளையராஜாவுக்கான பால பாடங்கள்.

இருந்து பாருங்கள்
இந்தப் பாடல்களை ஆழ்ந்து அனுபவிக்கும் உங்களில் சிலருக்கு அல்லது பலருக்கு இந்தப் பாடல்கள் தான் வார இறுதி வரை வாயில் முணு முணுக்க வைக்கப் போகின்றன.

மூன்று மாநிலங்களுக்கான பாட்டுகள், மூன்று பாடல்களையும் கேட்டு விட்டால் மூலோகம் சொர்க்கலோகம்.


மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க

கானா பிரபா

4 comments:

kasivishwanathan said...

மிகச் சிறப்பான ஒப்பீடுகள். வாழ்த்துகள்🙏💐

gsrikanth said...

notonly song is nice. your observation is also very good.

Abi said...

Lovely post. Thank you for the links to Kannada and Telugu versions.

Recently, someone uploaded a video in which Ilaiyaraaja recounts several interesting stories about Kannadasan's greatness; the specific story about this song starts at the 5:00 minute mark ...

https://youtu.be/h7q-rsRspY8?t=299

Anonymous said...

இது போன்ற நல்ல பாடல்களை இளைஞர்கள் கேட்க விரும்புவது இல்லை.