Pages

Monday, July 12, 2021

சந்திரபோஸ் வழங்கிய “முதலாளியம்மா” 31 வருடங்களுக்குப் பின் கேட்ட பாட்டு ♥️

அந்தக் காலத்தில் தூரதர்ஷனின் வெள்ளிக்கிழமை “ஒலியும் ஒளியும்” பார்ப்பதற்காக அன்ரெனாவைத் திருப்போ திருப்பென்று திருப்பி, பாயாசப் புள்ளி அலைவரிசையில் இருந்து காட்சி பிடித்த கதைகளை எல்லாம் முன்னர் பேசியிருக்கிறேன்.

யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் தூரதர்ஷனை அனுபவித்த அந்தத் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அப்போதெல்லாம் “ஒலியும் ஒளியும்” பாடல்களோடு புத்தம் புதுப் படங்களின் பாட்டுகளின் நறுக்குகளைப் போட்டு விளம்பரப்படுத்திய வகையில் அறிமுகமானது

“ஆத்தோரம் ஆலமரம்

 நாமாட ஊஞ்சல் தரும்

 நாளெல்லாம் ஆடுவமா

 தெம்மாங்கு பாடுவமா....”

https://www.youtube.com/watch?v=fGPXIx3rG78

ஆனால் பின்னர் தொடர் போர்க்காலங்கள், மின்சாரமில்லாப் பொழுதுகளால் அந்தப் பாடலை மீண்டும் கேட்க முடியாது போனது.

கொழும்பு வந்து தேடினாலும் ரெக்கோர்டிங் பார் காரர் “நாறின மீனைப் பூனை பார்ப்பது” போலப் பார்த்ததால் அப்படியே விட்டு விட்டேன்.

ஆனாலும் அந்த ஆரம்ப வரிகளை மட்டும் முணுமுணுத்துக் கொண்டிருப்பேன், பசுமையாகப் பதிந்ததால்.

சந்திரபோஸ் நினைத்திருந்தால் ஹிட் அடித்த தன் “காக்கிச் சட்டை போட்ட மச்சான்” போலவே இன்னும் சிலதைக் கொடுத்துத் தன்னைப் பாதுகாத்திருக்கலாம். ஆனால் துள்ளிசைப் பாடல்களில் கூட வித விதமாகக் கொடுத்து ரசிக்க வைத்ததில் இந்தப் பாட்டின் அந்த முதல் அடிகளோடு அப்படியே காலம் கழிந்து போனது. அவ்வப்போது நினைப்பூட்டினாலும் பல்லாண்டுகளாக இணையத்தில் கிடைக்காத இசைப்பொருளாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன்.

சில வாரங்களுக்கு முன்னர் எதேச்சையாக என் மூளை ஞாபகப்படுத்த மீண்டும் தேடினால் அட்டகாஷ் ஒலித்தரத்தில் இந்தப் பாடல் கிட்டியது.

சரிகம நிறுவனத்தாரும் தம் பங்குக்கு ஏற்றியிருப்பது தெரிந்தது.

இசையமைப்பாளர் சந்திரபோஸ் எஸ்.பி.சைலஜாவுக்குக் கொடுத்த துள்ளிசைப் பாடல்களை வைத்தே தனிக் கட்டுரை எழுதலாம். அப்படி வந்தால் இதுவும் முதல் ஐந்துக்குள் இருக்கும் பாட்டு.

திருச்சி லோகநாதனின் புதல்வர்கள் இருவருக்கும் இந்தப் படத்தில் வாய்ப்பு. அவ்விதம் இந்தப் பாடலில் சைலஜாவோடு ஜோடி கட்டியவர் அருமை அண்ணன் T.L.மகராஜன்.

இன்னொருவர் சந்திரபோஸ் அவர்களாலேயே அறிமுகப்படுத்தி

“தேடும் என் காதல் பெண் பாவை  (ஒரு மலரின் பயணம், வாணி ஜெயராமுடன்)

https://www.youtube.com/watch?v=ilxtjzq-cYY

ஏதேதோ கற்பனை வந்து ( வாய்க்கொழுப்பு, லலிதா சாகரியுடன்)

https://www.youtube.com/watch?v=wYOO-KYuYG8

இரண்டு புகழ் பூத்த பாடல்களைக் கொடுத்த T.L.தியாகராஜன் அவர்கள் இங்கே “அக்கம் பக்கம் வீட்டில் எல்லாம்” https://www.youtube.com/watch?v=R1YKMQNVhqc  பாடலை சைலஜாவோடு இணைந்து பாடியிருக்கிறார்.

முதலாளியம்மா படத்தில் வந்த பாடல் என்றே தெரியாமல் பலகாலமாய் அனுபவித்த அற்புதமான பாட்டு கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடிய

“என்னில் வாழும் ஜீவனே”

https://www.youtube.com/watch?v=NLnlpD_pxQA

இந்தப் பாட்டெல்லாம் கொண்டாடித் தீராச் சுகம்.

வி.சி.குகநாதனின் படமாச்சே, புரட்சிப் பாட்டு இல்லாமலா?

அந்தப் பொறுப்பை “பூமியும் தூங்குதடா” பாடலாக வாணி ஜெயராமுக்குக் கொடுத்திருக்கிறார்.மலேசியா வாசுதேவன், லலிதா சாகரிக்கு “எங்கிருந்தோ வந்தவடா” பாடலுமாக மொத்தம் ஆறு பாடல்கள்.

இயக்குநர் வி.சி.குகநாதன் & இசையமைப்பாளர் சந்திரபோஸ் இணைந்த “மைக்கேல் ராஜ்” , “கை நாட்டு” படங்களில் மு.மேத்தாவே எல்லாப் பாடல்களும் என்ற தன்மையில் இங்கே “முதலாளியம்மா” படத்தில் எல்லாமே புலவர் புலமைப்பித்தன் கை வண்ணம்.

முதலாளியம்மா படத்தின் பாடல்களில் இன்னொரு மிக முக்கியமான பாடலைக் குறிப்பிடவேண்டும். அதைக் குழுவினரோடு பாடியவர் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.

“கங்கை என்ன வைகை என்ன

எல்லாம் இங்கு நதிகளே

தெற்கே என்ன மேற்கே என்ன

எல்லாம் இங்கு திசைகளே

நம் மனிதரில் ஏன் பிரிவுகள் 

எண்ணிப் பார்ப்போம் தோழனே.....

https://www.youtube.com/watch?v=FEAS477NvMg

இந்தப் பதிவை எழுத முன்னர் இந்தப் பாடலைக் கேட்டு விட்டுத் தான் தொடங்கினேன். அப்படியே கரைந்து போய் விட்டது மனசு.

கானா பிரபா


1 comments:

பிரதீப் said...

இதைப் போன்றே உள்ள வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை பாடல் பெற்ற வரவேற்பை இந்தப் பாடல் பெறவில்லை என்பது சோகமே. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.