Pages

Saturday, July 31, 2021

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே





பாடல் எழும்பும் போது ஒரு ஆலாபனையை நீட்டி முழக்குவாரே இசையரசி......

அப்படியே மாடத்தில் இருக்கும் கர்ணனின் நேரெதிரே ஒளிரும் நிலவில் முகத்தில் இருந்து கீழிறங்கி அவனிடம் வரும் தொலைவிருக்கும் அந்தச் சங்கதி.

மெல்லிச மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி காலத்து “பாகுபலி. அது பிரமாண்டத்துக்கான ஒப்புவமை மட்டுமே. ஆனால் பின்னாளில் எழுந்த எத்தனையோ ஏகலைவ இசையமைப்பாளர்களிடம் இந்தத் துரோணாச்சாரியர்கள் தம் வித்தையைக் கடத்தி விட்டார்கள் அப்படியொரு இசைக் காவியம் இந்தக் கர்ணன்.

“கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே...

கண்ட போதே சென்றன அங்கே……”

அப்படியே உடம்பு சிலிர்த்துக் கண்ணில் சில துளிகள் பிறக்கும் இந்த இசையின்பம் கேட்கும் போது. இதிலும் நீட்சியோடு தான் பிறக்கும் பாட்டு. ஆனால் அந்த ஆலாபனையில் வரிகள் மிதக்கும்.

ஒரேயொரு பாட்டுத் தான் சூலமங்களம் ராஜலட்சுமி பாடுவார், மீதிப் 16 பாட்டில் அரைக்கரைவாசி அதாவது எட்டுப் பாடல்களை பி.சுசீலாவுக்குக் கொடுத்திருப்பார்கள் இந்த இசையுலகக் கர்ணர்கள்.

“இரவும் நிலவும் வளரட்டுமே” பாடல் என்னமோ படமாக்கப்பட்டது பகட்டான மாட மாளிகை, கூட கோபுரங்களோடு தான். ஆனால் இந்தப் பாட்டைக் கற்பனையில் இன்னொரு சூழலில் பொருத்திப் பார்த்தால் எளிமையோடு இன்னும் அழகு பிறக்கும்.

அது, கருப்பு வெள்ளை நிறத்தில் தென்னந்தோப்பு கொண்ட புற்தரை வெளி, மேலே தக தகவென்று மின்னும் நிலவு, அப்படியே அந்தக் காதலர்கள் கூடும் சூழல். கூப்பிடு தூரத்தில் வீடுகள் இல்லாத் தோப்பு என்று அந்த ஏகாந்தத்தை இந்தப் பாடலோடு பொருத்திப் பார்த்தால் ஆகா ஆகா. 

இரவும் நிலவும் வளரட்டுமே 

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே


கூடவே சேர்ந்தும் பாடிப் பார்ப்பார் கர்ணன் ஆகப்பட்ட TMS ஆனால்

அங்கே “சுபாங்கி” ஆகப்பட்ட பி.சுசீலாவோ 

இரவும் நிலவும் வளரட்டுமே........


இன்னும் நீட்சியாகக் கொண்டு போவார் பாருங்கள், கர்ணனின் மனைவி அல்லவா? 

ஒரு மனுஷன் நல்லவனாக இருக்கலாம். ஆனால் அ நியாயத்துக்கு நல்லவனா இருக்கக் கூடாது என்று வாய் விட்டுக் கூறுவோமே அப்படி ஒரு சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகிறார் இந்தக் கர்ணன்

அதுதான்.

“தரவும் பெறவும் உதவட்டுமே 

நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே”


என்ன மனுஷனய்யா, காதல் கூடலும் கூட “தரவும்” “பெறவும்” என்று உம்முடைய அக்மார்க் கொடை வள்ளல் புத்தியா என்று கூவ வேண்டும் போலிருக்கும். அதையெல்லாம் தாண்டி நெகிழ வைப்பார் ஒரு இடத்தில் பாருங்கள் அதுதான்.

நெஞ்சில்

இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே....

கர்ணன் முன்னே வந்தால் கட்டிப் பிடிக்க வேண்டும் போலக் கொண்டு வந்து போட்டிருப்பார் கவியரசு.

மகாபாரத்தின் ஒரு கிளை நாயகனுக்கான காவியத்தை ஒருவர் எடுக்கிறார். இன்னொருவர் நடிக்கிறார், தன் கூட இருப்பவர்கள் வடநாட்டு வாத்தியங்களையும் கூட இணைத்து ஒரு இசைப் பேராட்சி நடத்துகிறார்கள், நான் மட்டும் என்னவாம் என்று சொல்லுமாற் போல இந்தக் கண்ணதாசன் கொடுத்ததெல்லாம் கொடை இந்தப் படத்தில், அதுவும் இந்தப் பாடலில் இன்னும் நெஞ்சம் இருக்கிற இடம் வரை.

இந்தப் பாடலின் திறத்தை அப்படியே ராகமாலிகா சென்று கேட்டும்

கொண்டாடுங்கள்.

https://www.youtube.com/watch?v=YmpQRUb1_GI

கடந்த ஒரு மணி நேரமாக இந்தப் பாடலின் காட்சியை எடுத்துத் தகுந்த உச்ச ஒலித்தரம் பொருத்தி, நிறமூட்டி உங்களிடம் கொடுக்கிறேன். அனுபவியுங்கள்.

தரவும் பெறவும் உதவட்டுமே 

நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே 

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே

 https://www.youtube.com/watch?v=tA4bAJQYBFw

0 comments: