ஒரு காலத்தில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வருவதற்கு முன்னர் வானொலி உரையாடல் நிகழ்ச்சிகளில் நேயராக நான் பங்கு பெறும் போதெல்லாம் ஏதோ ஒரு பாட்டு எப்படி உருவானது என்று குறித்த பாட்டின் பின்புலம் குறித்து எனக்குத் தெரிந்த செய்திகளைப் பகிர்வேன். பின்னர் என் வானொலி நிகழ்ச்சியாக அமைந்ததும் "பாடல் பிறந்த கதை" தான்.
கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் பாடல் பிறந்த கதை என்ற நூலை அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்த போது வாங்கி ஒரே மூச்சில் வாசித்திருந்தேன். அந்த நூலில் வெறுமனே அவரின் திரையுலக அனுபவங்கள் மாத்திரமன்றி அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரையான திரையிசைக் கவிஞர்களின் வாழ்வில் நடந்த சில சுவையான அனுபவங்களையும் அதில் சொல்லியிருந்தார். அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இந்த ஆண்டு "முத்து மணி மாலை" என்னும் புதிய நிகழ்ச்சியைப் படைக்கவெண்ணி அதில் ஒரு பகுதியாக பல வருஷங்களுக்குப் பின் "பாடல் பிறந்த கதை" என்ற அம்சத்தையும் சேர்த்தேன். அப்போது முதலில் நினைவுக்கு வந்தவர் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள். அவரை அழைத்தபோது மறுப்பேதும் இன்றி ஒரு சில நாட்களில் வானொலி நேர்காணலைச் செய்வதற்கு இணங்கினார். கவிஞர் முத்துலிங்கத்தில் தமிழ் மீதான காதல், திரையுலகிற்கு அவர் வந்த சூழ்நிலையில் ஆரம்பித்து 50 நிமிடங்களுக்கு மேல் ஒரு அழகிய தமிழ் விருந்தைத் தந்தார். அவற்றைத் தொடர் பகுதியாக வானொலியில் ஒலிபரப்பும் அதே வேளை றேடியோஸ்பதி வாயிலாகவும் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தொடர்ந்து பாடலாசிரியர் முத்துலிங்கம் பேசுவதைக் கேட்போம்.
வணக்கம் கவிஞர் முத்துலிங்கம் அவர்களே
வணக்கம் ஐயா
ஒரு பாடலாசிரியராக அன்றும் இன்றும் பிரபல்யத்தோடு விளங்கும் நீங்கள் சென்னையில் வந்து இந்த இடத்தைப் பிடிப்பதற்கு முன் உங்கள் இளமைப்பிராயம், குறிப்பாக தமிழ் மீதான காதல் உங்களுக்கு எப்படி வந்ததென்று சொல்லுங்களேன்.
தமிழ் நாட்டில் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கடம்பன்குடி என்கின்ற கிராமம். சொந்தத் தொழில் விவசாயம் தான். சிவகங்கை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தேன். படிக்கும் போதே தமிழ் மீதான ஆர்வத்தினால் இலக்கண இலக்கியங்களை எல்லாம் கற்றுக்கொண்டேன். எனக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்தியது பள்ளியிலே ஒன்பதாம் வகுப்பில் மனப்பாடச் செய்யுளாக இருந்த கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் தான். இந்த அளவுக்குப் படித்ததே சிறப்பாக இருக்கிறதே என்றெண்ணி நூலகங்களுக்குச் சென்று கம்பராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் முழுமையாகப் படித்தேன். அர்த்தம் தெரியாமல் ஓசை இன்பத்தால் ஈர்க்கப்பட்டு நான் படித்தேன். அதன் பிறகு தான் அவற்றின் பொருளுணர்ந்து படித்தேன். அதன் வழியாக எனக்குத் தமிழார்வம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் பத்திரிகைகளுக்குக் கதை கட்டுரை எல்லாம் அனுப்புவேன். கவிஞர் சுரதா அவர்கள் "இலக்கியம்" என்ற கவிதைப் பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகையில் தான் என் முதற் கவிதை வெளிவந்தது. அப்போது நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான் என் கவிதை ஆர்வம் வளர்ந்தது. அதுபோக என் தாயார் தாலாட்டுப் பாடல்களை என் தம்பி தங்கைகளுக்குப் பாடும் போது இளவயதில் கேட்டவகையில் அதன் மூலமும் என்னுடைய கவிதை உணர்வு உள்ளத்திலே எழுந்தது.
அப்போது கண்ணதாசன் தென்றல் என்றொரு பத்திரிகை நடாத்தினார். அதில் வெண்பாப் போட்டி ஒன்று வைத்தார். அதே சமயம் கவிஞர் சுரதா இலக்கியம் என்ற பத்திரிகையில் குறள் வெண்பாப் போட்டி வைத்தார். அதில் கேள்வி ஒன்று கேட்டார்
"பறக்கும் நாவற்பழம் எது கூறுக?" என்ற அந்தக் கேள்விக்கு நாம் குறள் வெண்பாவில் எழுதணும்.
"பறக்கும் நாவற்பழம் எது கூறுக? இது அகவல், ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது
நான் எழுதினேன்,
"திறக்கின்ற தேன்மலரைத் தேடிவரும் வண்டே
பறக்கின்ற நாவற்பழம்"
அப்படின்னு எழுதினேன்.
இதற்கு எனக்கு முதற்பரிசு கிடைத்தது.
அதன் பிறகு சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்த பிற்பாடு நான் பத்திரிகைத் துறையில் தான் முதலில் பணியாற்றினேன் முரசொலி, அலையோசை ஆகியவற்றில் எல்லாம். அப்போது ஊரில் இருக்கும் காலத்திலே எல்லாம் திரைப்பாடப் பாடல்களை நாமும் எழுத வேண்டும், அவை திரையில் வரவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் சென்னைக்கு வந்தபிறகு அதற்கான முயற்சி செய்தேன். கதாசிரியர் பாலமுருகன் என்பவரால் தான் திரைப்படத்தில் எனக்குப் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இயக்குனர் மாதவனிடம் எனக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். "பொண்ணுக்குத் தங்கமனசு என்ற திரைப்படத்தில் தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா என்ற பாடல்.
அந்தப்பாடலைப் பற்றிச் சொல்லும் போது இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக அங்கீகரிக்கப்பட முன்னர் அவர் இசையமைக்க நீங்கள் எழுதிய பாடல் என்ற பெருமையும் இருக்கின்றது என்று அறிந்துகொண்டேன் அப்படித்தானே?
ஆமாமா, அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அப்போது அவரிடம் உதவியாளரா இருந்தவர் ராஜா. முதலில் என்ன சொன்னாங்கன்னா கங்கை, காவிரி, வைகை இந்த நதிகள் எல்லாம் பாடுறது மாதிரி அவங்களுக்குள்ள போட்டி வந்து சண்டையிடுவதாகவும் உழவன் வந்து சமாதானம் செய்வதாகவும் ஒரு காட்சி இதை முதலில் எழுதிட்டு வாங்க அப்புறமா ட்யூன் போட்டுடுவோம் என்று கதாசிரியர் பாலமுருகன் சொன்னார். நான் எழுதிட்டுப் போனேன். பாட்டைப் பார்த்தார் ஜி.கே.வெங்கடேஷ் எல்லாம் ஒரே மாதிரி இருக்கே நான்கு ஐந்து பேர் பாடுறதனால ராகமாலிகை மாதிரி அதாவது மாண்டேஜ் சாங் ஆ இருக்கணும். அப்படி இருந்தாத் தான் நல்லா இருக்கும் நாம ட்யூன் போடுறோம் அதுக்கேத்த மாதிரி எழுதுங்கன்னார். ட்யூன் போட்டார் அந்த ட்யூன் டைரக்டர் மாதவனுக்குப் பிடிக்கல. அந்தப் படத்தில் அவர் இயக்குனர் இல்லை என்றாலும் அவரின் தயாரிப்பில் அவரின் உதவியாளர்கள் தேவராஜ் மோகன் டைரக்ட் பண்ற படம். இரண்டு நாள் இருந்து டியூன் போட்டார் வெங்கடேஷ் சரியா வரல. அப்புறமா ஜி.கே.வெங்கடேஷ் சொன்னார் "என்னுடைய அசிஸ்டெண்ட் பாடிக்காண்பிப்பாருய்யா அதை வச்சு எழுதுங்க"ன்னார். அப்போது இளையராஜா தத்தகாரத்தில் பாடிக் காண்பிக்க அந்த ட்யூன் நல்லா இருக்கே அதையே வச்சுக்கலாம் என்று அமைந்தது தான் அந்தப் பாட்டு. அதனால இளையராஜா இசையில் முதலில் பாட்டு எழுதியவன் என்ற பெருமை என்னைச் சாரும், அல்லது என்னுடைய பாட்டுக்குத் தான் இளையராஜா முதலில் இசையமைச்சார் என்று சொல்லலாம்.
இதோ அந்த "தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா" என்ற அந்தப் பாடலை எஸ்.ஜானகி.பி.எஸ்.சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடுகின்றார்கள். இந்தப் பாடல் எண்பதுகளின் பிரபலக் குயில்களில் ஒன்றாக விளங்கிய பி.எஸ்.சசிரேகாவின் முதற்பாட்டு என்பதும் கொசுறுத் தகவல்
முத்துலிங்கம் இன்னும் பல பாடல் பிறந்த கதைகளைச் சொல்லுவார்.....
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
தில்லியில் கருத்தரங்கத்தில் அருமையான இவருடைய பேச்சைக்கேட்டோமே..
பேட்டிக்கு நன்றி கானா..
இது தொடருமா..சூப்பர்.
தில்லியில் நடந்த கருத்தரங்கத்தில் இவரது பேச்சு பலராலும் ரசிக்கப்பட்டது. சுமார் 100 பூக்களின் பெயர்களை மனப்பாடமாக அப்படியே சொல்லிக்கொண்டு போனார்! நல்ல பேட்டிக்கு நன்றி திரு கானா!
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_24.html
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் தல ;)
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் தல
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். :) நன்றி!!
வாங்க முத்துலெட்சுமி
ஒரே பதிவில் போட இருந்தேன் ஆனால் பாடல்களோடு தருவது சிறப்பு என்பதால் பாகம் பாகமாக ;)
அன்பின் வெங்கட் நாகராஜ்
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
தல கோபி, மகராஜன், இசைஞானி பக்தன்
சீக்கிரமே போட்டு விடுகின்றேன், மிக்க நன்றி
தல வெரி இண்டரஸ்டிங். அடுத்தது?
வாங்க ரவிஷங்கர், அடுத்தது வரும் ;0
இதே டியுனில் வந்த இன்னொரு பாடல்"எங்க ஊரு பாட்டுக்காரன் அய்யா எல்லாத்திலும் கெட்டிககாரன்"
வணக்கம் சங்கர்
நல்லதொரு அவதானிப்பு நீங்கள் சொன்னபின்னர் ஒப்பிட்டுப்பார்த்தேன் கச்சிதமாக அதே மெட்டுத்தான்
Post a Comment