Pages

Tuesday, January 11, 2011

பாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி

இரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணியை வைத்துப் படம் பண்ணியிருந்த அனுபவங்களை வானொலிப்பேட்டிக்காகப் பகிர்ந்திருந்தார். ஒரு சில நாட்களின் பின்னர் ஜான் மகேந்திரன் தன்னுடைய சரவெடி படத்துக்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்துக்காக மீண்டும் ஜென்சியைப் பாடவைத்திருப்பதாக மின்மடல் வந்திருந்தது. அவரிடம் ஜென்சியை ஒரு வானொலிப்பேட்டி எடுக்க வேண்டும் தொடர்பிலக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ஜென்சியின் இலக்கத்தைக் கொடுத்து விட்டு, கொஞ்சம் சென்னைப்பாஷையில் பேசுங்க அப்பத்தான் புரியும் என்று சொல்லி வைத்திருந்தார். ஜென்சியின் இலக்கம் கிடைத்தாலும் ஒரு காலத்தில் தன் குயிலோசையால் உச்சத்தில் இருந்த பாடகிக்கு அழைப்பது கொஞ்சம் தயக்கத்தை உண்டு பண்ணவே இரண்டு வருஷமாக அந்த இலக்கத்தைத் தொடாமல் இருந்தேன். இரண்டு வருஷங்கள் கழிந்த நிலையில் ஒரு உத்வேகத்தோடு ஜென்சியை ஒரு வானொலிப் பேட்டி எடுத்து விடவேண்டும் என்று மீண்டும் அதே இலக்கத்துக்கு அழைத்தேன் அதே இலக்கம் இயங்குமா என்ற இலேசான சந்தேகத்தோடு.

"என் வானிலே ஒரே வெண்ணிலா" செல்போனின் உள் இணைக்கும் இசை பரவ
"ஆராணு" பாட்டுக்குயில் ஜென்சியின் பேச்சுக்குரல் மறுமுனையில்
கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் சென்னைச் செந்தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் கலந்து கட்டி என்னை அறிமுகப்படுத்தினேன்.
"இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியில் கிளம்புறேன்,உடனேயே செய்யலாமா" என்று கேட்கிறார். ஆகா கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று "சரி ஒரு பத்து நிமிஷத்தில் அழைக்கிறேன் மேடம்" என்று விட்டு பக்கத்தில் இருந்த வானொலிக்கலையகம் செல்கிறேன். எந்தவிதமான முற் தயாரிப்பும் எனக்கும் ,பாடகி ஜென்சிக்கும் இல்லாமல் அந்தக் கண நேரத்தில் என் உள்ளே தேங்கிக்கிடந்த கேள்விகளும் அருவியாய் அவரின் பதில்களும் கூடவே நதியில் மிதந்து செல்லும் தாமரைக் கண்டு போல திடீர் திடீரென மிதந்து கலந்த பாட்டுக்கச்சேரியுமாக ஜென்சியின் வானொலிப்பேட்டி.


பேட்டியைக் கேட்க


Download பண்ண இங்கே அழுத்தவும்

வணக்கம் ஜென்சிம்மா

வணக்கம் வணக்கம்


ஆஸ்திரேலிய நேயர்கள் சார்பிலே ஒரு ரசிகனாகவும் கூட உங்களை வானலையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.
உங்களை நீங்கள் எப்படி ஒரு பின்னணிப்பாடகியாக வளர்த்தெடுத்துக் கொண்டீர்கள், உங்களின் ஆரம்பம் எப்படி இருந்தது?


எனக்கு ஐந்து ஆறு வயசிருக்கும் போதே சர்ச்சில் எல்லாம் பாடயிருக்கிறேன், அப்புறம் 10 , 11 வயதிலேயே வெளியே அறிமுகமாகி மேடைக்கச்சேரிக்கெல்லாம் போவதுண்டு, அதில் சுசீலாம்மா, ஜானகி அம்மாவோட தமிழ் மலையாளப்ப்பாடல்கள் எல்லாம் படிப்பேன். அப்புறம் அப்பாவின் நண்பர் மலையாள சினிமா இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜீனன் மாஸ்டரின் வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கம். அவர் என்னுடைய நிறையப்பாடல்கள் கேட்டிருக்கின்றார். அவர் தான் எனக்கு முதல் சினிமா வாய்ப்பை மலையாளத்தில் கொடுத்தார்.

அதாவது உங்களின் எத்தனை வயதில் ஒரு திரையிசைப்பாடகியாக அறிமுகமானீர்கள்?


அப்போது எனக்கு ஒரு பதினைந்து வயசிருக்கும்.

உங்களின் முதல் அறிமுகப்படம் ஞாபகம் இருக்கிறதா?

ஆமாம், அந்தப் படம் அவள் கண்ட லோகம்

பின்னர் தமிழ்த்திரையுலகிலே ஒரு பெரும் பின்னணிப்பாடகியாக நீங்கள் மாறக் காரணமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா அவர்கள், அவருடைய அறிமுகம் எப்படிக் கிட்டியது?


அந்த நேரம் 10 பாட்டுக்களுக்கு மேல் பாடி இருந்த வேளை , ஜேசுதாஸ் அண்ணாவோடு நிறையக் கச்சேரிகள் உள்ளூரிலும் , வெளியூருக்கும் போவதுண்டு. அந்த அறிமுகத்தில் தாஸண்ணா இளையராஜா சாரிடம் இந்தப் பெண்ணின் குரல் பிடிச்சிருந்தா பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டார். அப்போது ராஜா சார் தாஸண்ணாவின் செக்கரட்டரிக்கு அழைத்து என்னை ஸ்டூடியோ வரச் சொல்லிக் கேட்டிருந்தார். அடுத்த நாளே நானும் அப்பாவுமாக சென்னைக்குப் போய் ராஜா சார் முன்னிலையில் வாய்ஸ் டெஸ்ட் பண்ணி அன்றைக்கு மத்தியானமே எனக்கு பாடறதுக்கு வாய்ப்புக் கொடுத்தார் ராஜா சார்.

வாய்ஸ்ட் டெஸ்ட்டுக்கு ராஜா சாருக்கு எந்தப் பாடலையெல்லாம் பாடிக்காட்டினீர்கள்?

ஒரு மலையாள கிளாசிக்கல் பாட்டு, அப்புறம் ஹிந்திப்பாட்டு "சத்யம் சிவம் சுந்தரம்" (பாடிக்காட்டுகிறார்) அப்புறம் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற ராஜா சார் பாட்டு அப்போது தான் அந்தப் பாட்டு வந்திருந்த நேரம் கூட. அன்று மத்யானம் ஜானகி அம்மா கூட எனக்கு முதல் பாட்டு பாடக் கிடைச்சுது

எந்தப் பாடலை நீங்கள் தமிழுக்காக முதலில் பாடினீர்கள்?

திரிபுரசுந்தரி படத்தில் ஜானகி அம்மாவோடு கூடப்பாடும் "வானத்துப் பூங்கிளி" என்ற பாட்டு

திரிபுர சுந்தரி படத்தைத் தொடர்ந்து திரையுலகில் ஒரு எண்பதுகளிலே நிறையப்பாடல்களைப் பாடி நிறை ஹிட்ஸ் கொடுத்திருக்கிறீர்கள் இல்லையா?

நிறைய இல்ல ஒரு நாற்பது ஐம்பது பாட்டுக்கள் பாடினேன்

அந்தக் காலகட்டத்தில் உங்களைப் பெரிய அளவில் மக்களிடையே கொண்டு சேர்த்த பாடல் என்றால் எதைச் சொல்வீர்கள்?

எனக்குத் தோணுறது "என் வானிலே ஒரே வெண்ணிலா (பாடிக்காட்டுகிறார்) என்று நினைக்கிறேன், அப்புறம் தெய்வீக ராகம் திகட்டாத பாடல் (இரண்டு அடிகளைப் பாடுகிறார்) அப்புறமா காதல் ஓவியம், மயிலே மயிலே (பாடுகின்றார்), இரு பறவைகள் மலைமுழுவதும் அங்கே இங்கே பறந்தன, ஆயிரம் மலர்களே மலருங்கள், இதயம் போகுதே எனையே பிரிந்தே....

நீங்கள் மெல்லிசைப்பாடகியாக ஆரம்பத்தில் உங்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் ஒரு பின்னணிப்பாடகியாக வருவதற்கு எப்படி உங்களைத் தயார்படுத்திக் கொண்டீர்கள்?


அந்த நாளில் சாரின் இசையில் பாடுவது ரொம்ப பெருமையா இருந்தது ராஜா சாரைப்பார்ப்பதே பெருமையான விஷயம். அந்த நாளின் என்னோட ஊரில் இருந்து யாருமே பாடகியாக வந்ததே இல்லை. சுஜாதாவும் கூட. இருவரும் ஒரே ஊர்தான்.

அந்தக் காலகட்டத்தில் ராஜா சார் இசையில் தமிழைத் தவிர வேறு மொழிகளிலும் பாடியிருக்கிறீர்களா?

ஆமாம், தெலுங்கில் பாடியிருக்கிறேன். மகேந்திரன் சாரின் முள்ளும் மலரும் படத்தோட தெலுங்குப் பதிப்பில் அடி பெண்ணே பாட்டை பாடியிருக்கிறேன்.

சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையில் கூட நீங்கள் பாடியிருக்கிறீர்கள்


ஆமாம், பனிமலர் படத்தில் (பாடுகிறார்) பனியும் நீயே மலரும் நானே பருவராகம் பாடுவோம்.
அப்புறம் சந்திரபோஸ் சாரின் முயலுக்கு மூணு கால் படத்திலும், மலையாளத்தில் ஷியாம் சார், ஜோன்சன் மாஸ்டர் என்று பாடியிருக்கிறேன்.


உங்களுக்கு ரசிகர்களின் அமோக அங்கீகாரம் கிடைத்த அதே சமயம் விருதுகள் என்ற மட்டில் ஏதாவது கிட்டியதா?

விருதுகள் ஒண்ணுமே கிடைக்கல, என்னோட பாட்டுக்கள் பிடித்தமான ரசிகர்கள் எனக்கு போன் பண்ணுவார்கள் அதுதான் எனக்குக் கிடைச்ச விருதுகள். இன்னும் இன்றைக்கும் மக்களோட இதயத்துல என்னோட இரண்டு மூன்று பாட்டுக்களாவது இருக்கும். அது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம். அதுக்கு ராஜா சாருக்கு என் லைஃப் பூராகவும் கடமைப்பட்டிருப்பேன்.

ராஜா சார் இசையில் பாடிய அந்த நாட்களில் மறக்க முடியாத அனுபவம் என்று ஏதாவது இந்த வேளை ஞாபகப்படுத்த முடியுமா?

ராஜா சார் கிட்டப் பாடினதே எனக்குப் பெரிய அனுபவம். ஒரு பாட்டையும் நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டார். நீயே கேட்டுப்பாரு நீயே கரெக்டு பண்ணு அப்படிச் சொல்லுவார். எனக்கு பயம் அப்பவுமே இப்பவுமே (சிரிக்கிறார்)

தமிழிலே ஒருகாலகட்டத்தில் பெரும் பின்னணிப்பாடகியாக இருந்து ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு அன்னியப்பட்ட பாடகியாக மாறிய அந்த சந்தர்ப்பம் எப்படி அமைந்தது?

எனக்கு அந்த நேரம் மியூசிக் டீச்சர் வேலை கிடைச்சது அதனால அந்தத் தொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. அந்த நேரம் சுசீலாம்மா, ஜானகியம்மா, வாணியம்மா என்று நிறையப் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும் எப்போது போகும்னு ஒண்ணுமே தெரியல. அப்போது கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சதும் பெற்றோர்கள் அதை விடவேண்டாம்னு சொன்னாங்க.

உங்களை மீண்டும் பாட வைத்த சந்தர்ப்பம்?

நான் எங்கிருக்கேன் என்று தெரியாத நிலையில் பல வருஷங்களுக்குப் பிறகு ஆனந்த விகடனில் என் பேட்டி வந்திருந்ததைப் பார்த்து மகேந்திரன் சாரின் மகன் ஜான் மகேந்திரன் நிறைய இடத்தில் தொடர்பு கொண்டு என் போன் நம்பரை கண்டுபிடிச்சுத் தன் படத்தில் பாடவச்சார். இசை ஶ்ரீகாந்த் தேவா. ஆனா அந்தப் படம் இன்னும் வரவில்லை அதனால் வேறு இசையமைப்பாளர்களிடம் இருந்து வாய்ப்புக்கள் கிட்டல. 23 வருஷங்களுக்குப் பின்னர் இந்தப் பாட்டுப் பாடியிருக்கிறேன்.

நீங்கள் திரையுலகில் இருந்து ஒதுங்கிய காலகட்டத்தில் யாரும் உங்களைப் பாட வைக்க முயற்சிக்கலையா?

அந்த நேரத்தில் என்னோட தொடர்பு கிடைக்காத காரணத்தால் நான் எங்கே இருக்கேன்னு கூடப் பலருக்குத் தெரியாது. ஆனாலும் ஒன்றிரண்டு மலையாளப்பாட்டு பாடியிருக்கேன்.

ராஜா சார் இசையில் மீண்டும் உங்களுக்கு ஒரு பாடல் பாடும் வாய்ப்புக் கிட்டியதாகவும் ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வாய்ப்பு நழுவி விட்டதாகவும் ஒரு செய்தி அறிந்தேன்?

ஆமாமா, அந்தப் பாட்டு பாடும் நாள் காலை என்னுடைய மகன் விழுந்து தலை அடிபட்டு விஜயா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோக வேண்டி இருந்தது. நானும் பயந்து போயிருந்தேன். பாட்டுக்காக ராஜா சார் அழைச்ச நேரம் காலை எட்டு மணி. இதெல்லாம் முடிஞ்சு ஆனால் நான் அங்கே போனபோது பத்து மணி. அந்தப் பாட்டை வேறொருத்தர் பாடிட்டார். பரவாயில்லை அது கடவுள் எனக்குக் கொடுத்த பாட்டு இல்லை.

ஜேசுதாஸ் சாரின் அறிமுகத்தில் தமிழில் பாடும் வாய்ப்புக் கிடைத்து, தமிழில் அவரோடு சேர்ந்து பாடிய பாடல்?

ப்ரியா படத்தில் "என்னுயிர் நீதானே" அப்புறமா டிக் டிக் டிக் இல் "பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே"

அத்தோடு இன்னொரு அருமையான பாடகர் ஜெயச்சந்திரனோடு கூட "கீதா சங்கீதா"?

ஆமாமா, ரொம்ப நல்ல பாட்டு , வாலி சார் எழுதினது கீதா சங்கீதா சங்கீதமே செளபாக்யமே (பாடிக் காட்டுகிறார்)

அந்தக் காலத்தில் பாடலாசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் எல்லாமே பாட்டு பதிவாகும் போது இருப்பாங்க, ஏதாவது தப்பா பாடினாக் கூட உடனேயே திருத்தம் சொல்லிடுவாங்க. ஏன்னா தப்பா பாடினா அது என்னைக்குமே ரெக்கார்ட் ஆகியிருக்கும் இல்லையா?


அந்தக் காலகட்டத்தில் கிடைத்த மறக்க முடியாத பெரும் பாராட்டு?


"இதயம் போகுதே" பாட்டு ரெக்கார்ட் ஆகும் நாள் சுசீலாம்மா ஸ்டூடியோ வந்திருந்தாங்க. அப்போ ராஜா சார் என்னை அழைச்சு "சுசீலாம்மா முன்னாடி அந்தப் பாட்டைப் பாடு" என்று கேட்டார். நான் நினைக்கிறேன் ராஜா சாருக்கு பெருமையா இருந்திருக்கும் அந்தப் பாட்டை என்னை வச்சு பாடவைச்சதால். சுசீலாம்மா "ரொம்ப நல்லா பாடியிருக்கீம்மா" என்று என்று பாராட்டியிருக்கின்றார்.

நீங்கள் பாடிய பாடல்களிலேயே உங்களுக்கு ரொம்பவே பிடிச்ச பாட்டு?

எனக்கு காதல் ஓவியம் பாட்டு ரொம்ப பிடிக்கும்

இப்படியான பாடல்களைப் பாடிவிட்டு அந்தப் பாடல் எப்படிப் படமாக்கப்பட்டிருக்கு என்ற ஆவலும் அந்த நேரத்தில் எழுந்திருக்கிறதா?

அந்த நேரத்தில் நான் பாடல் பாடிவிட்டு கேரளாவுக்கு போய் விடுவேன். அந்த நேரத்தில் எங்களூரில் தமிழ்ப் படங்கள் வரும் வாய்ப்போ அல்லது இப்போது மாதிரி டிவி வாய்ப்புக்களோ கிடையாது அதனால அந்த சந்தப்பம் வாய்க்கல.

இப்போது தான் டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கு, அப்படிப் பார்த்து ரசித்த பாட்டு, என் வானொலே, காதல் ஓவியம், தெய்வீக ராகம் அப்புறம் ஷோபா நடிச்ச எனக்கு ரொம்பப் பிடிச்ச "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை" அந்தப் பாடலின் ஒரு சில வரிகளைப் பாடக் கேட்கிறேன் பாடுகிறார்.

இத்தனை ஆண்டு இடைவெளி வந்துவிட்டதே என்ற ஏக்கம் எப்போதாவது வந்திருக்கிறதா?

சில வேளைகளில் வருத்தப்பட்டதுண்டு ஆனால் ராஜா சார் கொடுத்ததெல்லாமே எனக்கு ரொம்ப நல்ல பாடல்கள், அதுவே போதும் என்றும் நினைப்பதுண்டு.

பேட்டி முடிந்ததும் இவ்வளவு நேரமும் நல்லதொரு சம்பாஷணையைத் தந்ததுக்கு நன்றி சொல்லித் தன் விலாசத்தைக் கொடுத்து பேட்டியின் ஒலிப்பதிவை அனுப்ப முடியுமா என்கிறார்.
ஜென்சி என்றதொரு பாட்டுக்குயிலைப் பேட்டி எடுத்து விமோசனம் தேடிக்கொண்ட சந்தோஷம் கூடவே இருக்கும்.




ஜென்சி ஜோடி கட்டிய பாடல்கள் - பழைய இடுகை

"தெய்வீக ராகம்" ஜென்சி பாடிய சில பாடல்கள்

என் வானிலே ஒரே வெண்ணிலா




இதயம் போகுதே எனையே பிரிந்தே



அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை



"இரு பறவைகள் மலை முழுவதும்"



"தெய்வீக ராகம் திகட்டாத பாடல்"


22 comments:

S Maharajan said...

ஆஹா எண்ண ஒரு அருமையான உரையாடல் தல!
நானும் கூடவே இருப்பது போன்ற ஒரு உணர்வு
மீண்டும் இந்த குரல் திரையில் ஒலிக்க இறைவன்
அருள் புரிய வேண்டும்......
பகிர்வுக்கு நன்றிகள் தல!!!!!!!!!!!!!

MyFriend said...

Nice

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Wow!
Jenci is Jenci!
Welcome back Jenci!

blogpaandi said...

அருமையான பேட்டி. தொடரட்டும் உங்கள் கலைச் சேவை.

thamizhparavai said...

மிக்க நன்றிகள் ப்ரபா... கலக்கல் பேட்டி...
இனிமேல்தான் கேட்க வேண்டும்...படித்துவிட்டேன் ஆர்வம் தாங்காமல்...ஜென்சியின் பாடலைக் கேட்கவேண்டும்... மிக்க நன்றிகள்...

thamizhparavai said...

follow up

வடுவூர் குமார் said...

அருமையாக வந்திருக்கு. நன்றி.

கோபிநாத் said...

ஜென்சிம்மாவுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)

\\ஜென்சி என்றதொரு பாட்டுக்குயிலைப் பேட்டி எடுத்து விமோசனம் தேடிக்கொண்ட சந்தோஷம் கூடவே இருக்கும். \\

தல அதை கேட்டு நாங்களும் விமோசனம் தேடிக்கொண்டோம் தல ;))

பாலராஜன்கீதா said...

ப்ரபா நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். இடுகை மிகவும் அருமை. நன்றி.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி!

கானா பிரபா said...

மிக்க நன்றி மகராஜன், மைஃப்ரெண்ட், கே.ஆர்.எஸ்

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

blogpandi

தமிழ்ப்பறவை ;-)

வடுவூர் குமார்

கானா பிரபா said...

மிக்க நன்றி தல கோபி, பாலராஜன் கீதா, இக்பால்

Anand said...

மிக அருமையான பேட்டி.
அதை எழுதிய விதம் அதைவிட அருமை.

Unknown said...

உங்கள் குரலை இப்போதுதான் கேட்கிறேன். பழைய சிலோன் கே.எஸ்.ராஜாவின் ஈழ accent ஞாபகம் வருகிறது.

ஜென்சி பேட்டி நன்று.

Ganapathy Ram said...

Superb interview :)

I like jency mam a lot Deiveega raagam is my most fav

கானா பிரபா said...

ஆனந்த்

மிக்க நன்றி

ரவிஷங்கர்

வருகைக்கு நன்றி


கணபதிராம்

மிக்க நன்றி

Anonymous said...

அருமையான கேள்விகள் பிரபா... ஜென்ஸியின் பதிலில் இருந்த நேர்மை அவரது பாடல்களைப் போலவே இனிமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.

-வினோ, என்வழி

காத்தவராயன் said...

கானா,

நீண்ட நாட்களுக்கு முன்பு, ஒன்று உங்களிடம் கேட்டதாக ஞாபகம்.

ஜானி படத்தில் "ஒரு இனிய மனது" இரண்டு வெர்ஷன் உண்டு என்று கேள்விப்பட்டதுண்டு.

இரண்டயும் ஒரு சேர காட்டுகிறேன் என்றீர்கள். இந்த ஒத்த பாட்டுமட்டுமாவது டவுன்லோடு பண்ணுறமாதிரி குடுத்தா நல்லாயிருக்கும் கானா.

லேட்டாகும்ன்னா மெயிலாவது பண்ணுங்க சார், நானும் ரொம்ப நாளா காத்துக்கிடக்கேன், ஜென்சி - சுஜாதா வெர்ஷனை கேட்க.

Anonymous said...

பிரபா சார்... அருமையான பேட்டி என் பாசப்பறவைகள் தளத்திலும் ஜென்சி பேட்டி பதிந்துள்ளேன். என்ன நீங்கள் ஒரிஜனல் ட்ராக் பதிவாக போட்டிருக்கிறீகள். எனது நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பும் போது அலைபேசியில் பதிந்து அதிகபட்ச விளம்பரங்கள் வராமல் பார்த்து பதிகின்றேன் நேரம் கிடைக்கும் போது சென்று கேளூங்கள். மேலும் உங்கள் கேள்வியில் பல புதிய விசயங்கள் இருக்கின்றன. பகிரிவிற்க்கு நன்றி சார்.

Rathnavel Natarajan said...

அருமையான நேர்காணல்.
நன்றி.

Umesh Srinivasan said...

அருமையான நேர்காணல் நண்பரே. 70'களில் வானொலிப் பேட்டிகளைக் கேட்டு சிலாகித்த அதே உணர்வை நம் ஜென்சியுடனான கலந்துரையாடல் தந்தது என்பது பூரணமான உண்மை. நன்றி.