Pages

Sunday, September 21, 2008

"முதல் மரியாதை" பின்னணி இசைத் தொகுப்பு


"முதல் மரியாதை" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா உலக ரசிகர்களால் மரியாதைக்குரிய படமாகப் போற்றப்படுகின்றது. 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, தீபன், ரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தனர்.

1986 ஆம் ஆண்டில் தேசிய விருதாக வெள்ளித் தாமரை விருது சிறந்த பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக இப்படத்தின் தயாரிப்பாளர் பாரதிராஜாவுக்கும் கிடைத்திருந்தது.

கதை வசனத்தை ஆர்.செல்வராஜ் எழுத, இப்படத்தைத் தயாரித்து இயக்கிவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. ஆர்.செல்வராஜின் சிறந்ததொரு கதாசிரியர். பொண்ணு ஊருக்கு புதுசு, நீதானா அந்தக் குயில், பகவதிபுரம் ரயில்வே கேட் உட்பட ஆர்.செல்வராஜே ஒரு சில படங்களை இயக்கியும் இருக்கின்றார். ஆனால் இயக்குனராக அவர் வெற்றியடையவில்லை. பாரதிராஜாவின் இயக்கத்தில் ஆர்.செல்வராஜின் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அங்கே தான் ஒரு நல்ல கதையை படமாக்கும் வித்தை ஒரு நல்ல இயக்குனர் கைகளில் இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. அதற்கு மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று இந்த முதல் மரியாதை.

இப்படத்தின் பின்னணி இசைப் பிரித்தெடுப்புக்காக நேற்று படத்தை ஓடவிட்டுக் கொண்டிருந்தேன். 2 மணி 32 நிமிடம் ஓடும் படத்தின் பின்னணை இசைக் கோர்ப்புக்காக கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கு மேல் செலவாகியது. காரணம் இப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கே தனி இசையைப் பிரிப்பது, வார்த்தைகளை வெட்டுவது என்பது மகா சவாலாகி விட்டது. இயக்குனர் பாரதிராஜாவின் தலைசிறந்த இயக்கத்தை அணு அணுவாக ரசிக்க மீண்டும் ஒரு பெரும் வாய்ப்பும் கிட்டியது.

பெரிய மாப்பிள்ளை என்ற ஊர்ப்பெரிய மனுஷனுக்கு நிர்ப்பந்தமாய் வாய்க்கும் திருமண பந்தம் தரும் வேதனை வாழ்வில் பரிசல்காரியின் நட்பு அவருக்கு அவருக்கு ஒத்தடமாகின்றது. தூய அன்பைத் தேடும் இரு உள்ளங்களின் நட்பே காதல் என்னும் நீறுபூத்த நெருப்பாய் இருக்கின்றது. இன்னொரு பக்கம் இளவட்டங்கள் இரண்டின் காதல் என்னும் காமம் கலந்த நேசத்தைக் காட்டுகின்றார் இயக்குனர். அங்கேயும் தன் அத்தையின் அன்பில்லாத, வஞ்சிக்கப்பட்ட வாழ்வில் இருக்கும் இளைஞன் தான் காட்டப்படுகின்றான்.

சிவாஜி கணேசனுக்கு மிகைப்படுத்தப்பட்ட நடிப்புத் தான் வரும் என்ற வீணர்களின் பேச்சுக்கு சாவு மணி போல் வந்த படங்களில் முதல் மரியாதை தலை சிறந்தது. மனுஷர் என்னமாய் வாழ்ந்திருக்கின்றார். அடக்கி வைக்கப்பட்ட தன் உணர்வுகளை மெளனமாகக் காட்டும் விதம், பரிசல்காரியின் அன்பில் பொங்கிப் பாயும் மகிழ்ச்சிப் பிரவாகம் என்று காட்சிக்குக் காட்சி நடிகர் திலகத்தின் நடிப்பின் பரிமாணம் சிறப்பாகப் பதியப்பட்டிருக்கின்றது. பரிசல்காரியாக வரும் ராதா மட்டும் என்னவாம். ரவிக்கை போடாத ஆனால் கவர்ச்சியை தன் நடிப்பிலும், கள்ளமற்ற சிரிப்பிலும் கொண்டு, நடிகை ராதிகாவின் பின்னணிக் குரலுக்கு இசைவாகவே ராதாவின் நடிப்பு வெளிப்படுகின்றது. தீபன் (எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அம்மாள் வளர்ப்பு மகன் திலீபன்) ரஞ்சனி ஆகிய அறிமுகங்கள் கூட சோடை போகவில்லை. விடலைக் காதலைக் கண் முன் கொண்டு வருகின்றார்கள். படம் முடிந்த பின்னரும் வடிவுக்கரசியின் மேல் ரசிகன் கொள்ளும் ஆத்திரம் தணியவில்லை என்பது அந்தப் பாத்திரத்துக்குக் கிடைத்த வெற்றி. ஒரு சில நிமிடங்கள் வந்தாலும் முழுப்படத்திலும் வந்தது போல இருக்கின்றது என்னம்மா கண்ணு சத்தியராஜ்.

இப்படத்தின் இயக்கத்தில் அவதானித்த சில சிறப்பான விடையங்கள்.
சத்யராஜ் துடுப்புக் கட்டையால் அடிவாங்கி கடற்கரை ஓரமாய் இறந்து கிடக்கையில் கூட்டத்தின் நடுவே அவரின் முன்னாள் காதலி வடிவுக்கரசி அதிர்ச்சியால் உறைய, கூடி நிற்கும் மக்களை போலிஸ் விரட்ட கடற் தண்ணீர் தெறிக்க அது வடிவுக்கரசி நெற்றியில் தெறித்து அவரின் குங்குமத்தை மெல்லக் கரைக்கின்றது. வடிவுக்கரசியை ஏமாற்றிய காதலன் அவர் தான் என்பதை சிம்பாலிக்காக அது காட்டுகின்றது.இதை ஜிராவிடம் சொல்லும் போது அவர் சொன்னார் விதவையாகும் போது அவளின் குங்குமம் கைபட்டு அழிக்க வேண்டியது, ஊர் மக்கள் கால் பட்டு அழிப்பது போல் காட்டப்படுகின்றது என்ற சிறப்பைக் காட்டினார்.

இன்னொன்று, தன் காதலி இசக்கியின் மறைவுக்குப் பின் தன் வாழ்வில் சுமை தாங்க வந்தவளின் மரணத்தின் நினைவாக எழுப்பியிருக்கும் சுமைதாங்கியில் காலம் தள்ளும் காதலன்.

இன்னொரு உதாரணம், சிவாஜியின் வெள்ளி நரைமயிர் ஒன்றில் ராதா கோத்த பாசிமணி மாலையை ராதா ஜெயிலுக்கு போகும் போது கடல்மணலில் தெரியாமல் தொலைக்கின்றார். காலம் பல கடந்து மரணப்படுக்கையில் இருக்கும் சிவாஜியைப் பார்க்க வரும் ராதாவுக்கு அதுவரை தான் பாதுகாத்த அந்தப் பாசிமணிமாலையைத் தன் உள்ளங்கை விரித்துக் கொடுத்துவிட்டு மூச்சை விடுகின்றார் சிவாஜி. ஒரு சில நிமிடங்களில் ரயிலேறி எங்கோ போக நினைக்கும் ராதா ரயிலிலேயே இறக்கின்றார். அந்தப் பாசிமணி மாலை கீழே விழுகின்றது.

வைரமுத்துவின் கவி வரிகள் இப்படத்தில் பாடல்களின் தேவையை உணர்த்துகின்றது. வெறும் இடைச்செருகலாக வைக்காமல் காட்சிகளின் தேவையைப் பொறுத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடல்களில் தேவையற்ற "மானே", "தேனே", "மயிலே" போன்ற வார்த்தை விளையாட்டுக்கள் இல்லை. "வெட்டி வேரு வாசம், விடலைப்புள்ள நேசம்" இப்பாடலில் மண்ணுக்குள் புதைந்திருக்கும் வெட்டிவேரின் வாசம் போல தன் உள்ளத்தில் மறைவாகப் புதைந்திருக்கும் பரிசல்காரியின் நேசத்தைக் காட்டுகின்றது. "பூங்காத்து திரும்புமா" இப்பாடலில் வரிக்கு வரி பெரியமாப்பிளையின் உள்ளக் கிடக்கையும், அதற்கு பரிசல்காரியின் ஒத்தடமான வார்த்தைகளும் கவியாகப் பிறக்கின்றன. பூங்காத்து திரும்புமா பாடலுக்கெல்லாம் இந்த ஒரு பதிவு பத்தாது. ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதைய்யா பாடல் காட்சியின் நீளம் கருதி வெட்டப்பட்டிருக்கின்றது. அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன் பாடலில் ஒரு வசனம் ஆபாசமாக இருக்கின்றது என்பதால் படத்தில் மாற்றப்பட்டிருக்கின்றது. இசைத்தட்டுக்களில் அப்படியே இருக்கின்றது. இங்கே அதையும் தந்திருக்கின்றேன். "ஓடிவா ஓடப்பக்கம் ஒளியலாம் மெதுவாக" என்ற காதலன் கூற்றுக்கு காதலி சொல்லும் பதில் "அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாக" என்று படத்தில் வரிகள் மாற்றப்பட்டிருக்கின்றது.

இசைஞானி இளையராஜா, இவரைப் பற்றி நான் என்ன சொல்ல. ஆரோக்கியமான கூட்டணியும், கதைக்களனும் இருந்தால் ராஜாவுக்கு தனி களையே வந்து விடும். அதுவும் தன் நண்பனின் உயிர்த்துடிப்புள்ள படைப்பு, கூடவே வைர வரிகள் என்று இருக்கும் போது ராஜா மட்டும் ஓய்ந்து விடுவாரா?

முதல் மரியாதை போன்ற உயரிய படைப்பில் சிவாஜி, ராதா, பாரதிராஜா, ஆர்.செல்வராஜ், வைரமுத்து என்று அவரவர் பங்கைச் செய்து தனித்தன்மையோடு இருந்தது போல ராஜாவின் இசையிலும் தனித்துவம் இருக்கின்றது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. பின்னணி இசையைப் பொறுத்தவரை குயிலோசை, குழலோசை படமெங்கும் ஆங்காங்கே தூவ மற்றைய கிராமிய வாத்திய இசையும் கலக்கின்றது.

ஏ கிளியிருக்கு, அந்த நிலாவத்தான் போன்ற பாடல்களுக்கு ராஜாவின் குரல் தான் பொருத்தமானது, அது போல் பூங்காத்து திரும்புமா, வெட்டி வேரு வாசம் போன்ற பாடல்களுக்கு மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி போன்றவர்களால் தான் கிராமியத்தனத்தை பாடல்களில் கொண்டுவர முடியும். அதையே உய்த்துணர்ந்து ராஜா கொடுத்திருக்கின்றார். ஆனால் முதல் மரியாதை தெலுங்கு பதிப்பான "ஆத்ம பந்துவு" வில் எஸ்.பி பாலசுப்ரமணியத்தை இப்பாடல்களைப் பாடுவதற்கு கொடுத்தது நெருடலாக இருக்கின்றது. அப்பாடல்களைக் கேட்க
இதே ஆண்டில் சிறந்த இசையமைப்பாளருக்காக "சிந்து பைரவி" திரைக்காக தேசிய விருது பெற்ற இளையராஜா முதல்மரியாதை திரைப்படத்துக்கும் போனசாக பெற்றிருக்கவேண்டும்.


இம்முறை வழக்கமாக கொடுக்கும் பின்னணி இசையோடு காட்சிகளோடு மிளிரும் முதல் மரியாதை காட்சியும் கானமும் சிறப்பாக அனைத்துப் பாடல்களோடும் இடம்பெறுகின்றது. இதில் ராஜாங்கத்தின் பெருமையை என் எழுத்துக்களை விட அவரின் இசையே மெய்ப்பிக்கும்.

"மீண்டும் ஒரு கிராமத்து ராகத்தை எனது பரிவாரங்களோடு பாட வருகின்றேன்" பாரதிராஜ குரலோடு முகப்பு இசையும் இளையராஜா குழுவினர் பாடும் "ஏ கிளியிருக்கு" என்ற பாடலும், கூவும் குயில், புல்லாங்குழல் இசை பரவ வருகின்றது



"ஓவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல், வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்துக் கொண்டு தான் இருக்கும், அப்படி ஒரு சோகராகத்தைத் தான் சுரம் பிரித்தேன், அதைத்தான் உங்கள் பார்வைக்குப் படம் பிடித்தேன்" என்று சொல்லும் பாரதிராஜாவின் அறிமுகம்




பரிசல்காரியும் அவள் தந்தையும் கிராமத்துக்கு வருதல்



பெரியமாப்பிளையின் மனைவி தன் மூக்கைச் சிந்திய கையால் அவருக்கு உணவு பரிமாறுதல். இந்த ஒரே காட்சியில் அவளின் குணாம்சம் காட்டப்படுகின்றது.



வயற்கரையில் பெண்களைச் சீண்டிப் பாட வைக்கும் பெரியமாப்பிளை, தொடர்ந்து வரும் தாலாட்டு




பெரியமாப்பிளை குருவியைப் பார்த்து "ஏ குருவி" பாட மருமகப்புள்ளை எசப்பாட்டு பாட, பரிசல்காரி பாடும் எதிர்ப்பாட்டு




பரிசல்காரி பெரியமாப்பிளை மனைவியின் கண்ணிற் படாமல் ஓடுதல்




கோழிக்கூட்டில் அடைபட்ட பரிசல்காரியை காப்பாற்ற நினைத்த பெரியமாப்பிளை மனைவியிடம் அகப்படல்




"ஏறாத மலை மேலே எலந்தை பழுத்திருக்கு" பாடலை பெரிய மாப்பிளை பாட, எதிர்ப்பாட்டு பாடும் பரிசல்காரி




மனைவியின் கோப தாண்டவத்தில் மனம் வெதும்பி பெரிய மாப்பிளை பாடும் "பூங்காத்து திரும்புமா" கூடவே "ராசாவே வருத்தமா" என்று தொடரும் பரிசல்காரி பின்னணி இசை ஆரம்பத்தில் வர ஒலிக்கின்றது



பரிசல்காரியின் சவாலுக்கு முகம் கொடுக்க பெரிய மாப்பிளை இளவட்டக் கல்லை தூக்கும் முயற்சி, தோல்வியில் முடிகின்றது



பரிசல்காரியிடம் செருப்பு தைப்பவன் பெரியமாப்பிளையின் சோகக்கதையைச் சொல்லுதல், வசனம் இன்றி இசை மட்டும் உடுக்கை ஒலியோடு



விடலைப் பருவக்காதலர்கள் பேசும் காதல் மொழி, நாயனத்தோடு முடிகின்றது



பெரியமாப்பிளையும், பரிசல்காரியும் போட்டிக்கு மீன்பிடித்தல், இருவரும் சேர்ந்து முயற்சி செய்யும் போது வரும் மீன் குவியலோடு பின்னணி இசை, கூடவே"என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல"



பெரியமாப்பிளை ஆசையோடு அவள் ஆக்கி வைத்த மீன் சோறு சாப்பிடுதல்



சோகத்தோடு உட்கார்ந்து புல்லாங்குழல் இசைக்கும் காதலனுக்கு நீரில் அள்ளிய நிலாவைத் தண்ணீரில் போட்டுக் காட்டுகிறாள் காதலி. "அந்த நிலாவாத்தான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக" பாடல் ஒலிக்கின்றது. வைரமுத்து இப்படி முன்னர் விளக்கம் சொல்லியிருந்தார். "நிலவை பூமிக்கு வரச்சொல்லிக் காலம் காலமாய் கவிஞர்கள் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லம் கட்டுப்படாத அந்த வட்ட நிலவு இந்தக் காதலியின் கையில் கட்டுப்பட்டதே"



இளவட்டக்கல்லை தூக்கும் முயற்சியில் பெரிய மாப்பிளை வெற்றி, கிட்டார் இசையோடு வரும் காட்சி



காதலி இசக்கிக்கு இன்னொரு மாப்பிளை பார்த்திருப்பதாக செய்தியோடு தன் காதலனைத் தேடி ஓடும் காட்சி



பெரியமாப்பிளையை நேசத்தோடு பாராட்டும் பரிசல்காரி, வயலினில் "பூங்காத்து திரும்புமா" இடையடிகள் ஒலிக்க "வெட்டி வேரு வாசம்" பாட்டு கலக்கின்றது



இசக்கி தன் காதல் புல்லாங்குழல் வாசிக்க தான் ஓடுவதாகப் போட்டி வைத்து துர்மரணத்தை தழுவுதல்



இசக்கியின் தந்தை பெரிய மாப்பிளையிடம் சொல்லும் "ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்". இசக்கியின் காதற்கணவன் புத்தி பேதலித்தல்



இசக்கியின் இறப்புக்குக் காரணமாக இருந்த தன் மருமகனை பெரியமாப்பிளை போலீசில் காட்டிக் கொடுத்தல்



பஞ்சாயத்தில் பெரியமாப்பிள்ளை பரிசல்காரியை வச்சிருக்கேன் என்று சொன்னதை தவறாக நினைக்கவேண்டாம் என்று அவளிடம் சொல்ல, அவள் தன் காதலைச் சொல்லுதல். சோக ராகம், குயிலோசையோடு



பரிசல்காரி பெரிய மாப்பிளையை நினைத்து "ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க"



சொல்லமுடியாத காதலோடு மருகும் சோகராகம்



பரிசல்காரி குயிலு ஊரை விட்டுக் கிளம்ப ஆயத்தமாதல்



பெரியமாப்பிளை பரிசல்காரி குயிலுவைத் தேடி வருதல்


பூங்காத்து திரும்புமா சோக இசையோடு ஜெயிலுக்கு போகும் குயிலு



ஜெயிலில் வைத்து பெரியமாப்பிளை தன் உள்ளார்ந்த காதலை பரிசல்காரி குயிலுவிடம் சொல்லுதல், அதைத் தொடர்ந்து மரணப்படுக்கையில் பெரியமாப்பிளை, அவரின் இறப்பு, குயிலுவின் நிறைவான மரணம் என்று தொடரும் இறுதிக்காட்சிகளின் இசைத் தொகுப்பு



34 comments:

ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய்ய்!

நாந்தான் பர்ஸ்ட்டூ!

ஆயில்யன் said...

எம்ம்மாம்ம்ம்ம் பெரிய போஸ்ட்டூ!!!!
(தல நீங்க ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கீங்க போல! ஆமாம் பழைய ஞாபகமெல்லாம் அப்படியே லைன்ல் வந்துருக்கும்!)

:))

ஆயில்யன் said...

//. 2 மணி 32 நிமிடம் ஓடும் படத்தின் பின்னணை இசைக் கோர்ப்புக்காக கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கு மேல் செலவாகியது.///


எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி இசையோடு இணைந்த வாழ்க்கையில், இணையத்தில் இசைக்கும் உம்
பணியினை பாரட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்!
:)

ஆயில்யன் said...

// தூய அன்பைத் தேடும் இரு உள்ளங்களின் நட்பே காதல்//

எளிதில் புரிபடாத ஆனால் ஏற்றுக்கொண்டால் காலம் முழுதும் மகிழ்ச்சியான மனத்தினை பெற்று தரும் இத்தகைய உறவுகள்!

G.Ragavan said...

முதல் மரியாதைக்கு என்னைக்கும் உண்டு முதல் மரியாதை. தமிழ்த் திரையில் வெளிவந்த சிறந்த படங்கள்ள முதலிடம்னு கூடச் சொல்லலாம். அந்தத் தகுதி அந்தப் படத்துக்கு இருக்குது. கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை, பாடல் என்று எல்லாத்துலயும் பிரமாதமா அமைஞ்ச படமய்யா அது. படமா...சேச்சே.. காவியம்யா. காவியம்.

பினாத்தல் சுரேஷ் said...

பதிவுக்கும் அதற்கு நீங்கள் செலவழிக்கும் நேரத்துக்கும் நன்றி கானா பிரபா.

இப்படம் வெளியான நேரத்தில் கேள்விப்பட்ட வதந்தி ஒன்று:

வினியோகஸ்தர் ஒருவர் இந்தப்படத்தை பார்த்துவிட்டு இது ஓடாது என்றாராம். இரண்டு நாள் கழித்து அதே படத்தைப் பார்த்து - இது சில்வர் ஜூபிளி படம் என்று உடனே எடுத்துச் சென்றார்ம் - இரண்டு நாட்களில் நடந்த ஒரே விஷயம் - பின்னணி இசை சேர்க்கப்பட்டது மட்டுமே!

ஊர்ஜிதமாகாத தகவல் என்றாலும் பின்னணி இசை ஹிட் ஆன முதல் படம் என்ற வகையில் - நம்பமுடிகிறது.

G.Ragavan said...

// இப்படத்தின் பின்னணி இசைப் பிரித்தெடுப்புக்காக நேற்று படத்தை ஓடவிட்டுக் கொண்டிருந்தேன். 2 மணி 32 நிமிடம் ஓடும் படத்தின் பின்னணை இசைக் கோர்ப்புக்காக கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கு மேல் செலவாகியது. //

ஹா ஹா ஹா என்ன பிரபா இது? படத்துல இசை கலந்து மயங்கியிருக்கு. அதுல இருந்து எப்படிப் பிரிக்க முடியும்? இசையரசாட்சி நடத்தீருக்காருய்யா இளையராஜா. நீங்க என்னடான்னா...பால்பாயசத்துல இருந்து பாலப் பிரிக்கப் பாத்திருக்கீங்க. கடைசீல பாத்தீங்களா...பால்பாயசத்தையே குடுக்க வேண்டியாதாப் போச்சு. :)

ஜோ/Joe said...

//சிவாஜி கணேசனுக்கு மிகைப்படுத்தப்பட்ட நடிப்புத் தான் வரும் என்ற வீணர்களின் பேச்சுக்கு //

அது!

G.Ragavan said...

// சிவாஜி கணேசனுக்கு மிகைப்படுத்தப்பட்ட நடிப்புத் தான் வரும் என்ற வீணர்களின் பேச்சுக்கு சாவு மணி போல் வந்த படங்களில் முதல் மரியாதை தலை சிறந்தது. மனுஷர் என்னமாய் வாழ்ந்திருக்கின்றார். அடக்கி வைக்கப்பட்ட தன் உணர்வுகளை மெளனமாகக் காட்டும் விதம், பரிசல்காரியின் அன்பில் பொங்கிப் பாயும் மகிழ்ச்சிப் பிரவாகம் என்று காட்சிக்குக் காட்சி நடிகர் திலகத்தின் நடிப்பின் பரிமாணம் சிறப்பாகப் பதியப்பட்டிருக்கின்றது. //

ஒரு உண்மையான நடிகனை உண்மையாகப் பயன்படுத்திக் கொண்ட படம் இது. இயக்குனர் என்ன சொல்வாரோ அதை செஞ்சிட்டுப் போயிருவாரம் நடிகர் திலகம். ஏன்னா...அவரு இயக்குனரு. அவரோட வேலைல தலையிட்டா நல்லாவாயிருக்கும்னு எண்ணம். பாரதிராஜா என்ன எதிர்பாத்தாரோ..அதை அப்படியே செஞ்சிருக்காரு அவரு. தமிழில் இன்னும் நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நடிகர் நடிகர் திலகம். அந்த மீன் சாப்புடுற காட்சி ஒன்னே போதுமேய்யா.... கூரைல ஒழுகுற மழத்தண்ணீல குயிலு கையக் கழுவீட்டுச் சோறு போடுறப்போ...அந்த அழகை நெனச்சி ரசிக்கிறதாகட்டும்...மனைவி மூக்கச் சிந்தீட்டுச் சோறு போட்ட கொடுமையை நினைச்சி மருகுறதாகட்டும். அப்பப்பா.

இந்தப் படத்துல எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க. ராதா குயிலாவே வாழ்ந்திருப்பாங்க. அவங்களுக்குப் பொருத்தமா ராதிகாவின் குரல். ஒளக்கு..ஒலக்குன்னு உச்சரிப்புப் பிசகினாலும் பொருத்தமோ பொருத்தம். அப்புறம் வடிவுக்கரசி...இப்பிடியொரு பெண்டாட்டி அமையக் கூடாதப்போய்னு எல்லாரும் பயப்படுற அளவுக்கு ஒரு பாத்திரம். அதையும் பிரமாதப் படுத்தீருப்பாங்க. அப்புறம் அருணா.... அப்பாவைத் தப்பா நெனச்சிட்டு திட்டுறதாகட்டும்... அப்புறம் ....கழுத்துச் சங்கிலிக்கு ஆசப்பட்டு சங்க நெறிச்சிட்டா எங்க போவேன்னு அவரு கலங்குறப்போ காலைப் பிடிச்சிட்டுக் கதறுவதும்...பின்னாளில் அவர் அப்பாவேயில்லை என்று தெரிஞ்ச பெறகு...காலைக் கட்டிக்கொண்டு..."அப்பா ஒரு வரம் கொடுப்பீங்களான்னு" கேக்குறப்பவும்...அதுக்கு அவரு.."நீ என்ன கேக்கப் போறேன்னு எனக்குத் தெரியும். இந்தச் செம்மம் மட்டுமில்லை...ஏழேழு செம்மத்துக்கும் நாந்தான் தகப்பன்..நீதான் மகன்னு" ரெண்டு பேரும் கலங்குறதாகட்டும். அடடா...பாத்தா அழுகை வந்துருமய்யா....

Anonymous said...

எவ்வளவு அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. அருமையா இருக்கு இசை ஞானியின் இசை பிரியர்களுக்கு (எனக்கு தெரிந்தவர்களுக்கு) எல்லாம் லிங்க் கொடுத்துவிட்டேன். நன்றி

கானா பிரபா said...

ஆயில்ஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள். நம்ம காலத்தில் (உங்களையும் சேர்த்து) வந்த இப்படியான படங்களைச் சொல்ல இதெல்லாம் கம்மியான பதிவு ;)

கானா பிரபா said...

ராகவன்

முதல் மரியாதைக்கு உங்கள் பின்னூட்டமும் சிறப்பான உள்வாங்கலைக் கொடுத்திருக்கின்றது. உண்மையில் இப்படியான காவியங்களுக்கு தனியே இசையைப் பிரித்தெடுப்பது தோனில் ஒற்றிய பலாச்சுழையில் இருந்து இனிப்பைப் பிரிப்பது போல. இசைக்கு 5 மணி நேரம் பதிவுக்கு 2 மணி நேரம் ;-) ஞாயிறு காலி. ஆனா மனசு நிறைவா இருக்கு அது போதும்.

கோபிநாத் said...

தலைவா...நீ வாழ்க ;)

பதிவும் நீங்கள் அதற்காக செய்திருக்கும் உழைப்புக்கு வாழ்த்துக்கள்...நன்றிகள் ;)

எத்தனை தடவை பார்த்தாலும் கொஞ்சம் கூட சளிக்காத கவியம்...ஒவ்வொரு துறையிலும் ரசிச்சி செய்திருப்பாங். நடிப்பு, இயக்கம், இசை, வசனம், பாடல்கள் அட அட கலக்கல் படம் ;)

\\கதை வசனத்தை ஆர்.செல்வராஜ்\\

அருமையான படைப்பாளி ஒரு சில மணிரத்தினம் படத்திறக்கு கூட இவர் கதை எழுதியிருக்காருன்னு நினைக்கிறேன்.

\\Photo]இப்படத்தின் பின்னணி இசைப் பிரித்தெடுப்புக்காக நேற்று படத்தை ஓடவிட்டுக் கொண்டிருந்தேன். 2 மணி 32 நிமிடம் ஓடும் படத்தின் பின்னணை இசைக் கோர்ப்புக்காக கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கு மேல் செலவாகியது.\\

தல
எப்படி தல முடியும்...அதான் ஜிரா சூப்பராக சொல்லிட்டாரு. இந்த படத்தின் பாடல்கள் கூட சில மணிநேரங்களில் தான் ராஜா போட்டு கொடுத்தார் என்று கேள்வி பட்டியிருக்கிறேன். பாரதிராஜா அவர்கள் காலையில் இருந்து வெயிட் பண்ணி பண்ணி பார்த்து சீக்கிரம் டீயூன் போடுப்பான்னு கத்த...ராஜாவோ இருய்யயா சிக்க மாட்டேன்கிதுன்னு கடைசியில ஒரு மணிநேரத்தில் அத்தனை பாடல்களையும் போட்டு கலங்கடித்தவார் நம்ம ராசா ;))

\\சிவாஜி கணேசனுக்கு மிகைப்படுத்தப்பட்ட நடிப்புத் தான் வரும் என்ற வீணர்களின் பேச்சுக்கு சாவு மணி போல் வந்த படங்களில் முதல் மரியாதை தலை சிறந்தது\\

சூப்பரு...உண்மையில் சொன்ன சிவாஜி சார் இதுல வாழ்ந்திருப்பாரு...அந்த பூங்காத்து திரும்புமான்னு பாடலில்...."கொஞ்சம் பாருங்க பெண் குயில் தானுங்கன்னு ராதா சொல்லும் போது சிவாஜி சார் நடிப்பை பார்க்க வேண்டுமே..அப்படியே ராதாவை மேல இருந்து கீழா ஒரு லுக்கு..அட அட பின்னியிருப்பாரு. ;)

\\ராதா மட்டும் என்னவாம். ரவிக்கை போடாத ஆனால் கவர்ச்சியை தன் நடிப்பிலும், கள்ளமற்ற சிரிப்பிலும் கொண்டு, நடிகை ராதிகாவின் பின்னணிக் குரலுக்கு இசைவாகவே ராதாவின் நடிப்பு வெளிப்படுகின்றது\\

அந்த கடைசியில ஜெயில்....அட அட பின்னியிருப்பாங்க...இப்பாவச்சும் சொல்லுய்யான்னு கேட்கும் போது அய்யோ தல சொல்லு தல..நீ தான்னு சொல்லு தலன்னு நாமளே சொல்லிக்கிட்டு இருப்போம். ராதிகாவின் அந்த சிரிப்பு எப்படி தான் ராதாவுக்கு மிக சரியாக பொருந்தி இருக்கும். அந்த சிரிப்பே தனி தான் ;)

\\வைரமுத்துவின் கவி வரிகள் இப்படத்தில் பாடல்களின் தேவையை உணர்த்துகின்றது. \\

ஒவ்வொரு பாடலும் உணர்ந்து எழுதியிருப்பாரு. ;)

கானா தல

எல்லாத்தையும் சொல்லிட்டு இன்னொரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டிங்க...அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்ய்யா..;))

கோபிநாத் said...

\\"மீண்டும் ஒரு கிராமத்து ராகத்தை எனது பரிவாரங்களோடு பாட வருகின்றேன்" \\

இங்க ஆரம்பிப்பாரு ராஜா தன்னோட ராஜங்காத்தை....இந்த முகப்பு இசையில அடிச்சிருப்பாரு பாருங்க கிராமத்து அடி அடின்னா அப்படி ஒரு அடி அப்படியே துள்ளி எழுந்து அடலாம் போல இருக்கும்.

\\வயற்கரையில் பெண்களைச் சீண்டிப் பாட வைக்கும் பெரியமாப்பிளை, தொடர்ந்து வரும் தாலாட்டு \\\

:)) சிவாஜி திரையில் விளையாடு வாரு..நம்ம ராஜா பின்னணி இசையில விளையாடிப்பாரு.

\\பெரியமாப்பிளை குருவியைப் பார்த்து "ஏ குருவி" பாட மருமகப்புள்ளை எசப்பாட்டு பாட, பரிசல்காரி பாடும் எதிர்ப்பாட்டு \\

இந்த பாடலில் இசையும் வரியும் எப்படி அழகாக அமைந்திருக்கு பாருங்க. வடிவுகரசியை பாடலில் கூட நல்லவுகன்னு கூட எழுதல ;))

\\பரிசல்காரி பெரியமாப்பிளை மனைவியின் கண்ணிற் படாமல் ஓடுதல்\\

;))))) சிரிப்பு தான் வருது.

\\"ஏறாத மலை மேலே எலந்தை பழுத்திருக்கு" பாடலை பெரிய மாப்பிளை பாட, எதிர்ப்பாட்டு பாடும் பரிசல்காரி\\

ஜானகி அம்மாவுக்கு எம்புட்டு அழகாக அந்த கிராமத்து ஸ்டையில் பாடியிருக்காங்க....கலக்கல் ;)

\\மனைவியின் கோப தாண்டவத்தில் மனம் வெதும்பி பெரிய மாப்பிளை பாடும் "பூங்காத்து திரும்புமா" கூடவே "ராசாவே வருத்தமா" என்று தொடரும் பரிசல்காரி பின்னணி இசை ஆரம்பத்தில் வர ஒலிக்கின்றது\\

இந்த பாட்டை எல்லாம் என்னென்னு சொல்ல அனுபவிக்கானும் அம்புட்டு தான். வரிகளும், இசையும் அட அட நாம எல்லாம் கொஞ்சம் கொடுத்துவச்சியிருக்கோம் போல!

\பரிசல்காரியின் சவாலுக்கு முகம் கொடுக்க பெரிய மாப்பிளை இளவட்டக் கல்லை தூக்கும் முயற்சி, தோல்வியில் முடிகின்றது \\

படத்தில் எனக்கு மிகுவும் பிடித்த இசை இது..அப்படியே துள்ளி எழுந்து கடையில் அவர் தோல்வியுரும் நிலைவரும் போது டெய்ன்னு முடிச்சியிருப்பாரு. ஒரு காட்சியின் உணர்வை இசையால் உணர்த்த முடியும் என்று சொன்னால் அது ராசாவாள மட்டும் தான் முடியும். அப்படி ஒரு உழைப்பு இந்த இசையில ;)

\\\பரிசல்காரியிடம் செருப்பு தைப்பவன் பெரியமாப்பிளையின் சோகக்கதையைச் சொல்லுதல், வசனம் இன்றி இசை மட்டும் உடுக்கை ஒலியோடு\\

சூப்பர் பீட்டு ;))


\\பெரியமாப்பிளையும், பரிசல்காரியும் போட்டிக்கு மீன்பிடித்தல், இருவரும் சேர்ந்து முயற்சி செய்யும் போது வரும் மீன் குவியலோடு பின்னணி இசை, கூடவே"என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல"
\\

ஒரு பெண்ணின் முந்தானை மற்றவர்களிடத்தில் கொடுக்க கூடாது. அது கிராமங்களில் எந்த அளவிற்க்கு மதிக்க படுகிறது என்று செய்தி சொல்லும் காட்சி.

முதல் ரெண்டு முறை வரும் போது அந்த இடத்தில் இசை எழுதுவும் இருக்காது. இருவரும் சேர்ந்து பிடிக்கும் மீன் சரியாக வலையில் விழ்ந்ததோ இல்லையோ ஆனால் நாம எல்லாம் ராஜாவின் இசை வலையில் விழ்ந்திருப்போம். அந்த இரண்டு காதபத்திரங்களுக்கும் எற்படும் சந்தோஷம் நமக்கும் ஏற்படும். அந்த இடத்தில் நாமும் அவர்களுடன் கூடி சிரிக்கிறோம் எப்படி ராசாங்க எல்லாம் ராசா அடிச்ச அடி அந்த மாதிரி. ரொம்ப சிரிச்சிட்டேன்லன்னு சொல்லும் போது அப்படியே ஒரு மெல்லிய சோகம் கலந்த இசை வரும் பாருங்க வாழ்ந்துருப்பாரு மனுஷன் ;)

கோபிநாத் said...

\\பெரியமாப்பிளை ஆசையோடு அவள் ஆக்கி வைத்த மீன் சோறு சாப்பிடுதல்\\

படத்தில் எனக்கு பிடித்த இடம். என்னை அழவைத்த காட்சி. சிவாஜி சார் வசனம் பேசி நடிச்சியிருப்பாரு பாருங்க...சொல்ல வார்த்தை இல்லை. உண்ணும் உணவில் ருசி இல்லமால் இருக்கலாம். ஆனால் அதை பரிமாரும் விதம் முக்கியம்.

ஒன்னும் சொல்ல முடியல தல..ஒவ்வொரு வசனத்திற்க்கும் ராஜா இசையால பேசியிருப்பாரு..அதை உணர்த்தியிருப்பாரு... கிரேட் ;)

\\சோகத்தோடு உட்கார்ந்து புல்லாங்குழல் இசைக்கும் காதலனுக்கு நீரில் அள்ளிய நிலாவைத் தண்ணீரில் போட்டுக் காட்டுகிறாள் காதலி. "அந்த நிலாவாத்தான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக" பாடல் ஒலிக்கின்றது.\\

இந்த பாடலை நன்றாக கேட்டு பாருங்கள். நீங்களும் பாடலுடன் ஓடுவிங்க. அப்படி ஒரு ஒட்டம் இருக்கும் இந்த பாடலில் ;)

என்னால முடியல...அனுபவிக்கானும்..ஒவ்வொருஇசையும் அனுபவிக்கானும் அம்புட்டு தான்.

கள்ளிக்காட்டு இதிகாசம் புத்தக வெளியிட்டு விழா மேடையில் பாரதிராஜா சொல்லியது நினைவுக்கு வருகிறது.

"இப்படி ஒரு கதையை வைரமுத்து போல் இனி யாராலும் எழுத முடியாது. இந்த கதையை என்னை போல் படமாக்க யாராலும் முடியாது. அதே போல் இந்த படத்திற்க்கு ரத்தமும் உயிருமாக இசைமைக்க, அங்கு ஒருவன் இருக்கிறான் அவனை போல் யாராலும் இசைமைக்க முடியாது" என்று அவர் சொல்லி முடித்தவுடன் அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்து அடங்கியது.

அந்த பெயர் சொல்லி தான் தெரிய வேண்டுமா!!! ;))

இனி இப்படி ஒரு படைப்பு இவர்களின் மூலமாக வர முடியாது.

இந்த படத்திற்காக உழைத்த, ரசித்த அனைவருக்கும் நன்றிகள்

தல கானாவுக்கு நன்றி எல்லாம் கிடையாது...இது அவரோட கடமை ;)

சரண் said...

தமிழில் வந்த படங்களில் முதலிடம் கண்டிப்பாக முதல் மரியாதை -க்கு என்பது மிகையில்லை.. எல்லாம் மிகச் சரியாக அமைந்த படம்.

நிறைய உழைத்து இப்பதிவை எழுதியிருக்கிறீர்கள்.. பின்னூட்டங்களும் அருமை..

நன்றி..

பாலராஜன்கீதா said...

இதேபோல் சலங்கைஒலிக்கும் ஒரு பதிவை எழுத வேண்டுமென அன்புத்தோழர் கானாபிரபா அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.

தமிழன்-கறுப்பி... said...

அண்ணன் எவ்வளவு பெரியபதிவு நிறைய நிறைய நன்றி அண்ணன் என்னால பின்னணி இசையை கேட்க முடியாவிட்டாலும் முதல் மரியாதை படத்ததையும் இசையையுடம் மறக்க முடியுமா???????!!!!
வசதி கிடைக்கும் பொழுது வந்து கட்டாயமா கேட்பேன் இப்படி தொகுத்து கொடுத்திருப்பைத யாராவது கேட்காமல் இருப்பார்களா என்ன!!!

முன்னர் கணினியில் கேட்க கூடிய வசதி இருக்கும் பொழுது நீங்கள் தொகுத்த பல தொகுப்புகளை திரும்ப திரும்ப கேட்டிருக்கிறேன் அது போல திரும்ப திரும்ப கேட்க கூடிய இசைத்தொகுப்புகளில் இதுவும் ஒன்று நன்றி அண்ணன்...

சின்ன வயதில பாத்திருந்தாலும் மறக்க முடியாத பல காட்சிகளால் நிறைந்திருந்த படங்களில் இதுவும் ஒன்று பின்னர் படங்களை உணர்வோடு முழுமையாக பார்க்கிற அறிவு வந்ததுக்கு பிறகு பல முறை நான் தனியாக அமர்ந்து பார்த்திருக்கிறேன் இந்தப்படத்தை...

நீங்க சொன்ன மாதிரி பாராதிராஜாவின் "டைரைக்க்ஷன் டச்" நிறையவே இருக்கும் இந்தப்படத்துல...
மறக்க கூடிய படமா அது காவியம் அண்ணன்...

நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

இதுக்காவே ஒரு மோதிரம் செய்து போட வேணும் உங்களுக்கு...:)

வாழ்த்துக்கள் அண்ணன்...!

Thanjavurkaran said...

இந்த படத்தில் நான் ரசிக்கும் பின்னணி இசை. flashback ஆரம்பத்தில் வடிவுக்கரசி செய்கைகள் (தோன தோன பேச்சு, மூக்கு சளியை துடைத்து கை கழுவாமல் பரிமாறுவது, ஒரு லோட்டா காபியை ஒரே மூச்சில் குடிப்பது) போது வரும் வயலின் சோக இசை சிவாஜி வீட்டை விட்டு வெளியே வந்து ஆகாயம் பார்த்து உற்சாகம் அடையும் போது வரும் அற்புதமான பின்னணி இசை. நம்மையும் சோக மனநிலையில் இருந்து உற்சாகம் அடைய வைக்கும்.

உங்கள் பதிவில் விட்டு போனதுபோல் உள்ளது.

இந்த பின்னணி இசைக்காகவே பலமுறை பார்த்து உள்ளேன். என்னோடு என் மகனும் ( 2 1/2 வயது) பலமுறை பார்த்திருக்கிறான். ஒரு முறை கண்டு கொண்டேன் அதற்கான காரணத்தை. அவனுக்கு மிகவும் பிடித்த ஆடு, மாடு, கோழி, பறவைகள் அனேகமாக படம் முழுவதும் வருகிறது. அவை வரும்போது கண் இமைக்காமல் பார்ப்பான்.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ஜோ,


// பினாத்தல் சுரேஷ் said...
ஊர்ஜிதமாகாத தகவல் என்றாலும் பின்னணி இசை ஹிட் ஆன முதல் படம் என்ற வகையில் - நம்பமுடிகிறது.//

வாங்க சுரேஷ்

சுவையான தகவலாக இருக்கின்றது இது போன்ற பல வெற்றிப் படங்களின் பின்னர் இப்படியான வரலாறும் இருக்கின்றது இல்லையா.

கானா பிரபா said...

// மது... said...
இசை ஞானியின் இசை பிரியர்களுக்கு (எனக்கு தெரிந்தவர்களுக்கு) எல்லாம் லிங்க் கொடுத்துவிட்டேன். நன்றி//

வாங்க மது

இசைஞானியின் சிறப்பான பதிவினை மற்றைய இசைப்பிரியர்களுக்கும் மிக்க நன்றி

கானா பிரபா said...

தல கோபி

உங்க பின்னூட்டம் ராஜாவின் மேலுள்ள வெறிபிடித்த இசை நேசத்தை மீண்டும் நிரூபித்திருக்கு. உண்மையில் இங்கே வரும் பின்னூட்டங்களிலேயே அதீத ரசனையின் வெளிப்பாடு தெரியுது. அதில் உங்களுடையது ஒன்று. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் கூட இருக்கே. அது ஆயில்ஸ் விருப்பம் ;)

அந்த மீன் பிடிக்கும் காட்சியின் பின்னணி இசை தான் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதுக்காக மற்றையதெல்லாம் ஒதுக்குவேனா ராசா.

முதல் மரியாதை பின்னணி இசையைப் போடத் தூண்டிய உங்களுக்கும் என் நன்றி தல.

Anonymous said...

இதுவரை படத்தை பார்த்ததில்லை...இன்றே பார்த்துவிட வேண்டும் என உங்கள் பதிவு சொல்கின்றது

கானா பிரபா said...

// சூர்யா said...
தமிழில் வந்த படங்களில் முதலிடம் கண்டிப்பாக முதல் மரியாதை -க்கு என்பது மிகையில்லை.. எல்லாம் மிகச் சரியாக அமைந்த படம்.//

வாங்க சூர்யா

உங்களைப் போன்ற ரசிகர்கள் இதைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

நிஜமா நல்லவன் said...

தல கலக்கல் பதிவு....ரொம்ப பீல் பண்ணி எழுதி இருக்கீங்க..!

நிஜமா நல்லவன் said...

/ ஆயில்யன் said...

//. 2 மணி 32 நிமிடம் ஓடும் படத்தின் பின்னணை இசைக் கோர்ப்புக்காக கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கு மேல் செலவாகியது.///


எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி இசையோடு இணைந்த வாழ்க்கையில், இணையத்தில் இசைக்கும் உம்
பணியினை பாரட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்!/


ரிப்பீட்டேய்...!

கானா பிரபா said...

//பாலராஜன்கீதா said...
இதேபோல் சலங்கைஒலிக்கும் ஒரு பதிவை எழுத வேண்டுமென அன்புத்தோழர் கானாபிரபா அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.//

வாங்க பாலராஜன்கீதா

சலங்கை ஒலியினை விடுவேனா, நிச்சயம் வரும். தங்கள் வருகைக்கு நன்றி

கானா பிரபா said...

தமிழன்

உங்களைப் போன்றவர்களுக்கு திருப்தியளிக்கும் பதிவாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். உங்கள் வருகைக்கு நன்றி.

//தமிழன்... said...
இதுக்காவே ஒரு மோதிரம் செய்து போட வேணும் உங்களுக்கு...:)//


மோதிரம் தங்கத்தில தானே போடுவீங்கள் ;-)

கானா பிரபா said...

//Thanjavurkaran said...
இந்த படத்தில் நான் ரசிக்கும் பின்னணி இசை. flashback ஆரம்பத்தில் வடிவுக்கரசி செய்கைகள் //

வணக்கம் தஞ்சாவூர்க்காரன்

நீங்க கேட்ட அந்த ஒலியை இப்போது சேர்த்திருக்கின்றேன். உங்கள் மகனும் ரசிக்கின்றார் என்று கேட்கும் போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.


தூயா

தேடி எடுத்துப் பாருங்கோ, பிளெமிங்ரன் பக்கம் படத்துக்கா குறைச்சல் ;)

நிஜம்ஸ்

வருகைக்கு நன்றி தல ;-)

தங்ஸ் said...

ஹையோ...இசை விருந்துக்கு கோடி நன்றி! ஈஸியாக்கேட்டுட்டீங்களேன்னு திட்டினதை வாபஸ் வாங்கிக்கறேன்:-)))

வ்டிவுக்கரசி கலக்கியிருப்பாங்க..

கானா பிரபா said...

வாங்க தங்கா, முதல் மரியாதை இசைமழையில் நனைக ;-)

தாஸ். காங்கேயம் said...

2014 ஆண்டு (நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆண்டு) முதல் இந்த பதிவை வாசிக்கிறேன். எத்தனை முறை வாசித்தாலும் தங்கள் எழுத்துக்களின் சுவை சலிக்காமல் இருக்கிறது. இதன் நீட்சியாக மறுபடியும் இப்படத்தை பார்க்கிறேன் வேறொரு கோணத்தில். மறுபடியும் நெகிழ்வு.

இதயம் கனக்க வைக்கிற அதே இசைஞானி இறக்கியும் வைக்கிறார்.
வாழ்க நீவிர் பல்லாண்டு.

கானா பிரபா said...

அன்பின் தாஸ்

உங்கள் பின்னூட்டம் கண்டு நெகிழ்ந்தேன். இத்தனை ஆண்டுக்குப் பின்னும் அதே உணர்வுடன் ரசிக்க முடிவதற்கு எல்லாம் வல்ல இசைஞானியின் இசையே அடிப்படை.