Pages

Tuesday, June 6, 2023

அந்தரங்கம் யாவுமே ❤️❤️❤️ மஞ்சள் அந்தி வேளையோ💛💛💛


“ஆயிரம் நிலவே வா” SPB க்கு அடையாளம் கொடுத்த பாட்டு,

அடுத்த பதினான்கு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்ட அவருக்கு

இன்னொரு வாய்ப்பு “ஆயிரம் நிலவே வா” படம் வழியாக.

இரட்டை வேடத்துக்கு ஒரே குரல், குணத்தால் மாறுபட்ட இரு துருவங்கள் அவர்கள். 

அதில் கெட்டவனின் தனிப்பழக்கம் “எப்பிடி எப்பிடி" போடுவது. 

அந்த “எப்பிடி எப்பிடி" யை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டாவது துருவமாக நிற்கின்றார்.

இந்தப் பக்கம், உருகி உருகித் தன் காதலியை வர்ணிக்கும் காதலன் அந்தக் குரலிலேயே அவ்வளவு காதலைக் கொட்டிக் கொண்டே ஒப்பிவிப்பார்,

மறு பக்கம் “எப்பிடி எப்பிடி" எப்படி எப்படியெல்லாம் கையாளப்பட்டிருக்கிறது பாருங்கள்.

இதே மாதிரி “ஓடக்கார மாரிமுத்து" பாடலில் “செளக்யமா” என்ற சொல்லை ஒவ்வோர் மாதிரிப் பிரயோகித்திருப்பார் அதுதான் SPB.

பாடல் வரிகளிலே தன் காதலி பற்றிய வர்ணிப்பும், அதை எதிராளி கேட்பதுமாக அமைய, இடையிசையைப் பயன்படுத்தி அந்தக் காதலர் கூடலை இன்னோர் பரிமாணத்தில் ஒரு காதல் பாட்டுக்கே உரிய வடிவத்தைக் காட்டி விட்டு மீண்டும் பாய்கிறார் ராஜா.

QFR இல் இசைஞானியின் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வில் கலந்து சிறப்பித்த மணி, பாடல்களில் “Bass” ஐச் சிலாகித்துப் பேசிய போது விஜி மேனுவேலின் கிட்டார் வித்தையின் திறனை இந்தப் பாடலை வைத்து உதாரணத்தோடு விளக்கியிருப்பார். அந்த ஒலி1 வது நிமிடத்தில் ஆரம்பிக்கிறது பாருங்கள். இதெல்லாம் இன்றைய தொழில் நுட்பம் வருவதற்கு நாற்பது வருடங்களுக்கு முன்பு செய்த “கைவினைத் திறன்”. 

இப்படி ஒரு உரையாடல் பாங்கில் அமைந்த பாட்டுக்குள் காதலிசை. அப்படியே இந்த மெட்டைத் தூக்கிக் கொண்டு போய் இன்னொரு கார்த்திக் படத்துக்குப் பயன்படுத்துகிறார் ராஜா.

அதுதான் தெலுங்கில் அசோக்குமார் இயக்கிய “அபிநந்தனா”, தமிழில் காதல் கீதம் ஆகிறது. 

“அபிநந்தனா” இந்தப் பெயர் தான் எவ்வளவு அழகானது. இதில் 

இடம் பெற்ற அத்தனை பாடல்களும் தேன் தேன். கீதாஞ்சலி போலவே அபிநந்தனா என்ற தலைப்பின் மீது ஒரு காதல்.

“மஞ்சு குருசே வேளலு” இவ்வளவு தூரம் உள்ளார்ந்தமாக ரசிக்கப்படுவதற்குக் காரணமே அன்பால் இணைந்த காதலர்கள் எவ்வளவு தூரம் தங்கள் நேசத்தை வார்த்தைகளால் பரிமாறிக் கொள்வார்களோ அதை அப்படியே ஒரு பாட்டாக வடித்தால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி அதை அப்படியே மொழி பெயர்த்துக் கொடுத்தது போலவொரு உணர்வு. அந்த இசை மொழி கூட கூடவே அணைத்துக் கொண்டு வரும். “அந்தரங்கம் யாவுமே” பாடலை எடுத்து ஒரு தூய காதலிசையாக மாற்றி அதை எங்கள் மனதில் ஆளப் பதிய வைக்கும் தொடக்கத்தில் துளிர்க்கும் இசையோடு கலந்த பாட்டு. இரண்டு பாடல்களுமே வைரமுத்துவின் கைவண்ணம்.

இந்தப் பாடலை ஓட விட்டு மனம் அந்த அழகிய பழைய உலகத்தில் உலாவிக் கொண்டிருக்கும். பாடல் முடிந்த பின்னும் அந்தச் சிந்தனைகள் வியாபித்துக் கொண்டிருப்பதால் மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அந்தரங்கம் யாவுமே

https://www.youtube.com/watch?v=ng6QA5u8FnA

மஞ்சு குருசே வேளலு ( அபிநந்தனா)

https://www.youtube.com/watch?v=n8aoEXydVT0

மஞ்சள் அந்தி வேளையோ (காதல் கீதம்)

https://www.youtube.com/watch?v=66FZ8n6B1Jk

கானா பிரபா


0 comments: