Pages

Friday, June 2, 2023

"இளையராஜா"வின்ர ஆள் ❤️

வார இறுதி ஞாயிறு காலையானால் 

வழக்கம் போலப் பயணிக்கும் மாதா கோயில் 

நோக்கிய பயணம் தான்.

சிட்னியின் நகர ஒழுங்குகளைக் கடந்தவொரு காட்டுப்புறம் போன்றதொரு சூழலை ஊடறுக்கும் பாதை அசந்து தூங்கிக் கொண்டிருப்பது போலிருக்கும். மன அமைதி தேடிப் போகும் தேவாலயத்தை எதிர்கொள்ளப் பழக்கப்படுத்தி விடுமாற்போல அந்த நேரமும், சூழலும் இருக்கும்.

அன்றும் அப்படித்தான், பழக்கப்பட்ட மந்தை தானே வீடு வருமாற் போல கார் அந்தத் திசை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்க, 

ஒலி 96.8 வானொலி வழியே வழிந்தோடுகிறது

“வழி நெடுக காட்டுமல்லி

யாரும் அதைப் பார்க்கலையே

எனக்கா பூத்தது காட்டுக்குள்ள

வருமா வருமா வீட்டுக்குள்ள

காடே மணக்குது வாசத்துல

என்னோட கலக்குது நேசத்துல....”

உடம்பெல்லாம் சில்லிட்டது போலிருந்தது. 

ஏற்கனவே கேட்ட பாடல் தான். ஆனால் இந்தச் சூழலில், இந்த நேரத்தில் அது எதேச்சையாக ஒலிக்கும் அந்தக் கணம், மனம் ஒரு சில வருடங்களுக்கு முன்னால் இருந்த மனோ நிலையை ஒப்பிட்டுப் பார்த்து விடுகிறது அந்த நேரம்.

அப்போதும் இதே மாதிரியானதொரு பயணம் தான். இதேபோலொரு ஏகாந்தம் தான், ஆனால் மனமோ அமைதியற்று அலைச்சலோடும், அந்த நேரம் சந்தித்த சவாலோடும் குழம்பியிருந்தது. 

அந்தச் சோதனை மிகுந்த வாழ்வியல் பயணத்தில் ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.  

“காட்டு வழி

கால் நடையா போற

தம்பி காட்டு வழி கால்

நடையா போற தம்பி

பொழுதாகும் முன்னே

போற இடம் சேர்ந்துவிடு”

அந்த நேரம் காரின் முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்து ஆறுதல்படுத்துவார் இளையராஜா.

தனியனாகக் கார் ஓட்டும் போது அந்தப் பாட்டை ஓடவிட்டால் எல்லாச் சோகங்களின் திண்மத்தையும் கரைத்து விடுகிறதோ என்பது போலக் என் கண்கள் சாட்சியம் பறையும்.

அந்தப் பழைய நினைவை ஏன் இந்த நேரம் கிளறிப்பார்த்தது என் மனம் என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன்.

நம் சுக, துக்கங்கள் எல்லாவற்றிலும் ஒரு “பாதுகாவலனாக” இயங்கியிருக்கிறார் அவர். 

சந்தோஷம் கரைபுரண்டு ஓடும் தருணங்களில் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடவும்,

துவண்டு விழும் போது அள்ளி அரவணைத்து முதுகு தடவி ஆற்றுப்படுத்தவும் அவரே எல்லாமும் ஆகியிருக்கிறார்.

இளையராஜா இசையமைத்த பாடல் என்ன மொழியில் கிடைக்கிறது என்று தேடிப் பிடித்துக் கைக்குள் போடுமளவுக்குச் சுருங்கிய இன்றைய உலகத்தில் தான் அவரின் பரந்து விரிந்த இசை உலகம் பார்த்துப் பிரமிக்கிறோம்.

இளையராஜா, தென்னாட்டை இணைத்த ஒரு இசை நதி.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னகத்தையே ஒரு குடையின் கீழ் வளைத்துப் போட்ட இசைச் சக்கரவர்த்தி.

அந்த எல்லா மொழிகளிலும் அடையாளப்பட்ட ஒவ்வொரு சூப்பர் ஸ்டார்களதும் ஒருமித்த காலத்தில் அடையாள இசையாக இயங்கியவர்.

இசையமைப்பாளராக 47 ஆண்டு கணக்கைப் போட்டு வைக்கலாம், ஆனால் ஒரு வாத்திய விற்பன்னராக 50 ஆண்டுகளைக் கடந்த பொன் விழா நாயகன் எங்கள் இசைஞானி.

பக்தி இலக்கியம் சமைத்த இறையடியார்களின் கீர்த்தனைகள் தொட்டு, 

தமிழில் பாரதியார், பாரதிதாசன் தொட்டு கண்ணதாசன், ஆலங்குடி சோமு, பஞ்சு அருணாசலம், புலவர் புலமைப்பித்தன், வாலி, முத்துலிங்கம், உள்ளிட்ட மூத்த கவிஞர் ஈறாக உள்வாங்கி, அறிவுமதி, பழநிபாரதி, யுகபாரதி என்ற சம காலத்துப் பாடலாசிரியர்கள்,

தெலுங்கின் மூத்த ஆளுமை வெட்டூரி சுந்தரராமமூர்த்தி தொடக்கம் மறைந்தும் தன் படைப்பிலக்கியம் கொடுத்துப் போன சிரிவென்னில சீதாராம சாஸ்திரி,

மலையாளத்தின் மகோன்னதம் ஓ.என்.வி.குரூப் எனுமோர் பழுத்த ஆளுமை தொடங்கி ஒரு வரிசை,  

கன்னடத்தில் உதயசங்கர் என்ற மூத்த பாடலாசிரியர்

ஹிந்தியில் குல்சார் ஐயும் விட்டு வைக்காது, அப்படியே மராத்தியும், ஆங்கிலமும் என்று 250 + பாடலாசிரியர்களோடும்,

இத்தனை மொழிகளையும் கூட்டி 380 + இயக்குநர்களோடும் தன் அட்சய பாத்திரம் வழியே இசை கொடுத்தவர் எங்கள் இசைஞானியார்,

தமிழில் மட்டும் உதாரணம் பறைய வேண்டில், இயக்குநர் சிகரம்  கே.பாலசந்தர், ஶ்ரீதர், இயக்குநர் இமயம் பாரதிராஜா, மகேந்திரன்,பாலுமகேந்திரா, அடூர் கோபாலகிருஷ்ணன், பத்மராஜன் உள்ளிட படைப்பாளிகளின் புதிய புதிய சிந்தனைகளுக்கு இசைக் கருவூலமாக அமைந்தவர், புதிய படைப்பாளிகளின் அறிமுகப்படங்களைத் தன் இசையால் தூக்கி நிறுத்திக் கொடுத்த அடையாளத்தைப் பற்றிப் பேசப் புகுந்தால் இன்னொரு நீள் கட்டுரையாக விரியும்.

தென்னகத்தை எழுபதுகளின் இறுதிக்காற்பகுதியில் ஆண்ட இயக்குநர்களில்

தேவராஜ் – மோகன் தொடங்கி,  ஏ.சி.திருலோகச்சந்தர், சிங்கீதம் சீனிவாசராவ், எஸ்.பி.முத்துராமன், டி.யோகானந்த், எஸ்.ஏ.சந்திரசேகர், ஏ.ஜெகந்நாதன், கே.சங்கர், எம்.பாஸ்கர், பெகட்டி சிவராம், ஆர்.சி.சக்தி, வி.சி.குக நாதன், ஐ.வி.சசி, V.B.ராஜேந்திரபிரசாத், எம்.ஏ.திருமுகம், சங்கர் நாக், கே.பாக்யராஜ், பார்த்திபன், மனோபாலா, மணிவண்ணன்,  ஆர்.சுந்தரராஜன், ராஜசேகர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.ரங்கராஜ், விசு, பாசில், பாலச்சந்திரன்மேனன், சத்யன் அந்திக்காட், கே.ராகவேந்திரராவ்,வி.எம்.சி,ஹனீபா, பத்மராஜன், ஆர்.வி.உதயகுமார், ஈ.வி.வி.சத்யநாராயணா, வம்சி, கிருஷ்ணவம்சி, பி.பானுமதி, சேரன், லோகிததாஸ், குணசேகர், மிஷ்கின், வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா

அறிமுக அடையாளங்களில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளாக ருத்ரையா, ஜி.என்.ரங்கராஜன், ஆர்.செல்வராஜ், நிவாஸ், பி.லெனின், எம்.ஜி.வல்லபன், கோகுலகிருஷ்ணா, பாண்டியராஜன், பாரதி - வாசு, கங்கை அமரன், பிரதாப் போத்தன், மணிரத்னம், கே.நட்ராஜ், அமீர் ஜான், ஜி.எம்.குமார், சுரேஷ் கிருஷ்ணா, வஸந்த், கதிர், பஞ்சு அருணாசலம், ஆர்.கே.செல்வமணி, ராம் கோபால் வர்மா,  கஸ்தூரி ராஜா, ராஜ்கிரண், நாஸர், ஞான ராஜசேகரன், கணேசராஜ், பாலா, தங்கர் பச்சான், லெனின் பாரதி என்று நீண்டு செல்லும் படைப்பாளிகளோடும்.

எழுத்தாளர் பூமணி கருவேலம் பூக்கள் படத்தை இயக்கிய போது அங்கேயும் இசை படைத்து, சுகாவின் “படித்துறை”யில் எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன் என்று சமகால எழுத்துலக ஆளுமைகளைத் தன்னிசையில் பாடலாசிரியர்களாக்கியும் அழகுபார்த்தார். இலக்கியக்காரர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் ஒரேயொரு திரையெழுத்து “மலர்களே நாதஸ்வரங்கள்” ராஜா இசையில் வரவேண்டிய பேறு பெற்றது.

பாலமுரளிகிருஷ்ணா தொடங்கிய சாஸ்திரிய இசைப் பாடகர் குழாம், T.M.செளந்தரராஜன், P.B. ஶ்ரீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், K.J.ஜேசுதாஸ் என்று இன்னொரு வரிசையாக இளையராஜாவின் கூட்டுச் சேர்ந்த பாடகர்களை எண்ணிப் பார்த்தால் நூறைத் தாண்டி நிற்கும்.

பண்டிட் பீம் சென் ஜோஷி, உத்தம் சிங் என்று இன்னொரு பக்கம் மொழி கடந்து நீளும் இந்திய இசை ஐக்கியம் எனும் இசைராஜாவின் கூட்டு.

இந்த ஐந்து தசாப்தங்களுக்குள் இளையராஜா என்ற ஒரு இசையாளுமை கூட்டுச் சேர்ந்த அணிகளை எண்ணிப் பார்த்தாலேயே பிரமிப்பு விலகாத சூழலில் அவரின் ஒவ்வொரு இசைப் படைப்பிலக்கியங்களையும் ஒவ்வொன்றாக ஆய்ந்து பேச ஒரு ஆயுள் போதுமோ?

மலையாளத்தில் தன் ஆத்ம குரு வெ.தட்சணாமூர்த்தி சுவாமிகளோடு “காவேரி”க்கு இசை கொடுக்கிறார், கூடவே மரகதவீணை படத்தில் பாட வைத்துப் போற்றுகிறார்.

அது போல் மெல்லிசை மன்னருக்கு ஏகலைவனாக வாழ்க்கைப்பட்டவர் தன்னிசையில் பாட வைத்தும்,கூட்டுச் சேர்ந்து இசையமைத்தும் நிறைவு கொள்கிறார். தன் சாஸ்திரிய சங்கீதத்தின் குருவான T.V.கோபாலகிருஷ்ணனைத் தன் பாடல்களில் ஆலாபனை இசைக்க வைக்கிறார்.

தென்னகத்தை ஆண்ட அளவுக்கு வட நாட்டில் இசைஞானி கால்பதிக்கவில்லை என்றதொரு கூற்றுக்குப் பதில் சொல்லும் 

சத்மா வழி வந்த “Aye Zindagi Gale Lagaa Le”, அப்படியே YouTube ஐத் தட்டிப் பாருங்கள் “இளைய நிலா பொழிகிறது" பாடலை இளையராஜாவின் அடையாளத்தை மறைத்து எத்தனை பேர் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள் என்று. அந்தப் பாடல் ஹிந்திக்குத் தாவிய போது “கலாகர்” படத்தில் கல்யாண்ஜி – ஆனந்த்ஜி ஆக அடையாளப்பட்டது போல, “இஞ்சி இடுப்பழகா” பாடலும் மீள் அடையாளத்தில் அனுமாலிக்கின் இசையாகக் கொண்டாடப்பட்டு சித்ராவுக்குத் தேசிய விருது பெற்றதெல்லாம் தனிக் கதை.

தெலுங்கில் இளையராஜா இசையமைத்த “பிரேமா” (தமிழில் அன்புச் சின்னம்) ஹிந்திக்குத் தாவிய போது “ ஈ நாடே” என்ற புகழ்பூத்த பாடல் “சாத்தியா” ஆகி இன்று வரை அதற்கு இசை ஆனந்த் மிலிந்த் என்று கொண்டாடும் அவலமும் அங்கே நிகழ்கிறது. இசைஞானியின் பன்முக இசைப் பிரவாகத்தை அள்ளிப் பருகும் பாக்கியம் தென்னகத்தவருக்கே அதிகம் வாய்த்திருக்கிறது.

இந்த மிலேனியத்திலும் மராத்தி மொழியில் வந்த “சாய்ராட்” இசைஞானியின் இசைத் தாக்கத்தில் வெளிவந்த சேதி இணைய உலகில் பரபரப்பானது நீங்களும் அறிந்ததே.

இசைஞானி இளையராஜா மேற்கத்தேயம், கீழைத்தேயம் என்று இசை மரபுகளைக் கற்றுத் தேர்ந்தவர் என்றாலும் அவற்றை அப்படியே கொடுக்காமல் கட்டுடைப்பை நிகழ்த்தியவர். சொல்லப் போனால் அப்படியானதொரு கட்டுடைப்புச் செய்ய குறித்த இசை மரபில் ஆழ்ந்த புலமை இருந்தால் தான் சாத்தியப்படும் என்று நிரூபித்தவர்.

உலக வானொலிகளைக் கேட்கும் மரபு எனக்குண்டு. உலகின் எந்தத் திசையில் இருந்து நேயர்கள் பேசினாலும் அங்கே தம் ஆன்மாவில் இளையராஜாவின் இசை ஒட்டியிருப்பதற்கு இரண்டு உதாரணங்கள் தருகிறேன்.

ஒன்று,

சில வருடங்களுக்கு முன் நடந்தது இது. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை கார்ப் பயணத்தில் சிங்கப்பூர் ஒலி வானொலி நிலைய ஒலிபரப்பை முடுக்கி விடுகிறேன்.

அன்று அன்னையர் தினமென்பதால் சிறப்பு நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கிறது. சிங்கை வானொலி அங்கு பிறந்து வளர்பவர்களை விட, தொழில் நிமித்தம் அந்த ஊருக்குப் போனவர்களுக்கு உவப்பானதொரு களைப்பு நீக்கி என்பதை உணர்ந்திருக்கிறேன்.

தொலைபேசி உரையாடல்களில் அதிகம் அவ்வாறானதோரே கலந்து கொள்வர்.

அன்றும் அப்படித்தான் ஒரு தொலைபேசி அழைப்பு.

கட்டுமானத் துறையில் வேலை செய்யும்

தொழிலாளி ஒருவர் அழைத்துப் பேசினார்.

தான் மிகுந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், ஒற்றை ஆளாகத் தன் தாயே காணி, பூமியை விற்றுத் தன்னை ஆளாக்கி அனுப்பி வைத்தார் என்றும் சொன்னவரின் குரல் கமறத் தொடங்கியது.

சிங்கப்பூர் வந்து தன் முதல் சம்பளத்தில் தன் தாய்க்கு அருமை பெருமையாக ஏதும் வாங்கி அனுப்புவோம் என நினைப்பதற்குள் தாய் இறந்து போய் விட்டார் என்றும் கலங்கியவாறே சொல்லித் தன் தாயின் நினைவில் "அம்மா அம்மா எந்தன் ஆருயிரே" பாட்டைக் கேட்டார். காரில் போய்க் கொண்டிருந்த எனக்குக் கண்கள் முட்டி விட்டது.

அதற்குப் பின்னர் எப்போது கேட்டாலும் அந்த இளைஞன் ஞாபகம் தான் வரும். எங்கள் சக்திக்கு ஏதாவது செய்து பார்த்து விடவேண்டுமென்றால் அது நண்பரோ, உறவினரோ காலம் தாழ்த்தக் கூடாதென்றும் நினைத்துக் கொண்டேன்.

இன்று காலையில் கூட இந்தப் பாடலைக் கேட்கும் போது அந்த இளைஞன் தான் ஞாபகத்துக்கு வந்தார்.

அதுவும் அந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும் புல்லாங்குழல் ரீங்காரம் தாய்ப் பறவை ஒன்று தன் இறகால் சேயை வருடுமாற் போல இருக்கும்.

ஒவ்வொரு பாட்டும் எத்தனை பேர் கதைகளைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது....

இன்னொன்று,

நிகழ்ச்சி அறிவிப்பாளர் : இளையராஜாவோட பாடல்கள் நிறையவே பிடிக்கும் போல உங்களுக்கு?

வானொலி நேயர் : என்னோட உசுரு சார் அது..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னக மொழிகளின் சினிமாவில் ஊற்றெடுத்த புதிய புதிய படைப்பிலக்கியக்காரர்களின் இசை அடையாளத்தை நிறுவியவர் 1995 இலிருந்து சமீப வருடங்களில் ஒரு தேக்க நிலையில் நிற்கக் கூடிய அளவுக்கு அவரை அடுத்த தலைமுறை பயன்படுத்தவில்லையோ என்றவொரு ஏக்கம் எழுகிறது 

“காட்டு மல்லி”யும் “Modern Love Chennai” யும் ஊற்றெடுத்தது போலப் பொங்கியதொரு இசைப் பிரவாகம் கண்டு.

“அன்னக்கிளி” வெளிவந்து 47 ஆண்டுகள், 

அன்று தொட்டிலில் கிடந்த குழந்தை இன்று 47 வருஷம் கழித்துப் பாட்டு வாங்குகிறது அவரிடம். அந்த 47 வயசுக்காரர் வேறு யாருமல்ல இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவே தான்.

இளையராஜாவின் ஒவ்வொரு பாடலுக்குள்ளேயும் 

ஒவ்வொரு கதை இருக்கும். 

உள்ளே ஒவ்வொரு இசையாக மாறிக் கொண்டிக்கும் போது ஒவ்வொரு காட்சியாகவும் விரியும் அது” 

என்று அண்மையில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி சொன்னார்.

இசைஞானியின் ஒவ்வொரு பாடல்களும் கடந்த அரை நூற்றாண்டு மனிதர்களின் வாழ்ந்த வரலாறு பேசும். 

 நம்மூர் தோட்டக்காரர்கள் தம் நிலத்தைக் கிண்டிக் கொண்டே இருப்பார்கள். ஏதாவது பயிர் செய்து கொண்டே இருப்பார்கள். விளைச்சல்கள், வருமானம் இல்லாவிட்டாலும் அவர்கள் ஓய்வதில்லை. மூப்பு அவர்களைப் பிடித்தாலும் மண்வெட்டியை இறக்கிப் பார்த்ததில்லை.

“ஏன் இந்த வயசில் இவ்வளவு தோட்டவேலை?”

என்று கேட்டால், 

“இதுதான் வாழ்க்கை” 

என்பார்கள். இந்த மனிதர்களை என் வாழ்வியலில் கண்டதுண்டு, என் அப்பாவும் அதில் ஒருத்தர்.

இளையராஜாவும் அப்படித்தான், 80 வயதைத் தொட்டு நிற்கும் கடின உழைப்பாளியாகவும்  அந்த இசை மேதையின் இன்னொரு பரிமாணத்தை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அவர் நம் மனதை உழுது கொண்டிருக்கிறார்.

எவரவராகிலும் 

அவர்க்கொரு துயரம் 

உயர் இசை கேட்டால் 

துயர் மனம் உருகும் 

இன்னிசை உன்னிசை

எவர்க்கும் பொதுவென்று

அள்ளிக் கொடுத்து....

https://www.youtube.com/watch?v=sAMT75FlUvU&list=RDsAMT75FlUvU&start_radio=1

எத்தனையோ இசைமைப்பாளர்களைக் கொண்டாடி எழுதியிருக்கிறேன். ஆனால் 

“இளையராஜாவின்ர ஆள்” 

என்று சுற்றம் அடையாளப்படுத்தும் அளவுக்கு 

என்னுள் உறைந்து விட்டார் இசைஞானி.

கானா பிரபா

02.06.2023


3 comments:

Krubhakaran said...


❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

Kannan.S said...

நீங்க சொன்ன அத்தனையும் உண்மை!
அவரோட இசை நமக்கெல்லாம் பொது உடைமை ! எல்லாருக்குமான உலக இசை பொதுமறை!

Child Artists said...

பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் போன்றதே ஆகும் இசை யோகம். ஆம் மனதை ஒருமைப்படுத்தி சச்சிதானந்த பேரின்ப நிலையை பாமரனும் அடைந்திட செய்தவர் இளையராஜா அவர்கள். இசை யோகம் தந்த இசை யோகி இளைய ராஜா அவர்கள் பின்னிரவில் ஜன்னலோர சீட்டில் பாதி தூக்கத்தில் இளையராஜா அவர்கள் இசையில் 1982 ம் வருடத்திய பாடல்களை (மதுரை டூ Coimbatore) கேட்ட நிலையில் பயணிப்பது ஓர் யோக நிலை தான் . அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள முடியாது. உணர தான் முடியும். நன்றி கானா பிரபா அவர்களே