“அப்புராணிப் புள்ளைப்பா,
அது பாட்டுக்கு வருது, அது பாட்டுக்குப் போகுது"
ராமராஜன் குறித்து கிராமத்து வெள்ளாந்தி மனிதர்களின் உள்ளக் கிடைக்கையை அழகாக வெளிப்படுத்தியிருந்தார் P.R.O மற்றும் தயாரிப்பாளரான விஜயமுரளி.
மேலும், ராமராஜனைப் பொறுத்தவரை தனி நாயகனாக 44 படங்களில் நடித்து விட்டார். உலகத்திலேயே ஐம்பது படங்கள் தனி நாயகனாக நடித்த பெருமை அவருக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றார், அதனால தான் அவருக்கு வரும் குணச்சித்திர வேடங்களைக் கூட மறுக்கிறார்” என்றார் விஜயமுரளி.
இதோ ராமராஜன் தன்னுடைய அடுத்த படமான, அதாவது 45 வது படமான “சாமானியன்" பட அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்.
உண்மையில் ராமராஜன் படங்களை ரசித்துப் பார்க்கும் ரசிகனாக எனக்கு மகிழ்ச்சி என்பதை விட அவரின் தன்னம்பிக்கைக்குத் தலை வணங்க வேண்டும்.
படத்தின் முதல் முன்னோட்டம் கூட மிரட்டுகிறது.
https://www.youtube.com/watch?v=6tTegbEKW_o
ராமராஜன் படங்களில் இசைஞானி இளையராஜா தவிர கங்கை அமரன், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், செளந்தர்யன், சிற்பி என்று யார் தொட்டாலும் பொன்னான பாடல்கள் கிட்டியிருக்கின்றன.
“என்னய்யா உன் படத்துக்குப் பாட்டுப் போடணும்னு ஆர்மோனியத்தைத் தொட்டா அருமையா வருது" என்று ராஜா கூடக் கிண்டலடிப்பாராம் ராமராஜனை.
இடைப்பட்ட காலத்தில் “காவலன்” போன்ற வெளிவராத படத்தைக் கூட்டினாலேயே 50 ஐத் தொட்டிருக்கலாம்.
“சாமானியன்" படத்த்தின் முன்னோட்டத்தில் ஈர்த்தது அதன் பின்னணி இசை. அதை வழங்கிய அச்சு ராஜாமணி இலேசுப்பட்டவர் அல்ல. எண்பதுகளில் மலையாளப் படங்களில் ஏராளம் பின்னணி இசை “ராஜா மணி" என்று ஒடும். அவரின் புதல்வர் தான். ராஜாமணி கூட அவ்வளவு சாதாரணம் அல்ல, அவரின் தந்தை பி.ஏ.சிதம்பரநாதன் இசையுலகின் மகோன்னதம் பொருந்திய முக்கிய ஆளுமை. தமிழராக இருந்தும் தட்சணாமூர்த்தி சுவாமிகளை அரவணைத்தது போலக் கொண்டாடியது இவரையும் கேரளச் சமூகம். ஜெயச்சந்திரனைத் திரையுலகுக்கு மலையாளம் வழி அறிமுகப்படுத்தியவர் சிதம்பரநாதன் தான்.
ஆக, மூன்றாவது தலைமுறை இசையமைப்பாளர் தான் இந்த அச்சு ராஜாமணி. அச்சுவின் மாலைப் பொழுதின் மயக்கத்திலே https://www.youtube.com/watch?v=ktMHzgxmnM8 பாடல் வந்த நாள் முதல் நான் ரசிப்பது.
ராமராஜனைப் பொறுத்தவரை அவர் சின்னப் பட நிறுவனங்களுக்கே தொடர்ந்தும் முன்னுரிமை கொடுப்பவர். இந்த ஆட்டமும் அப்படித்தான்.
சமூக வலைத்தள உலகம் வேறு, நிஜ உலகம் வேறு. மீம்ஸ் போட்டுக் கிண்டலடிக்கும் மேதை படத்தின் பூஜைக்கே கிராமத்தில் இருந்து நூறு பேருக்கு மேல் வேனில் இறங்கிய கதையை விஜய முரளி சொல்லியிருக்கிறார். கிராமங்கள் ராமராஜனை மறவாது கொண்டாடட்டும்.
இந்த முன்னோட்டம் ராமராஜனை "கதையின் நாயகனாக"ப் பயன்படுத்த நல்ல வாய்ப்பு.
ராமராஜன் 50 ஐத் தொட “சாமானியனும்" வாய்ப்பை வழங்கட்டும்.
கானா பிரபா
ராமராஜனின் பெயர் அறிவித்து வெளிவராத படங்கள் ( நன்றி : Rama Chandran )
1 வேலா
2 தர்மன்
3 காவலன்
4 தங்க நிலா
5 ராமர் படை
6 வள்ளல் மகன்
7 பெத்தவ மனசு
8 சத்தியதாய்
9 மதுரை தங்கம்
10 கும்பாபிஷேகம்
11 நீ ஒரு தனிப்பிறவி
12 காங்கேயம் காளை
13 கண்ணுபட போகுது
14 பல்லவன் பாண்டியன்
15 தம்பிக்கு தாய் மனசு
16 நான் உங்கள் பக்கம்
17 நம்ம ஊரு சோழவந்தான்
18 கூவுங்கள் சேவல்களே
19 மண்ணுக்கேத்த மைந்தன்
1 comments:
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘காளையன்’ என்ற படத்தின் பெயரையும் அறிவித்தார்கள்.
நம்ம ஊர்க்காரன் என்ற பெயரும் வெளியானது.
‘வைர பூமி’ என்ற பெயரும் அறிவித்தார்கள்.
Post a Comment