ஏ.ஆர்.ரஹ்மான் இசையை நான் காதலிக்கத் தொடங்கியதன் தொடக்கப் புள்ளி இந்தப் பாடல் என்பேன்.
"ரோஜா"வை விடவும் நிரம்பப் பிடிக்கும்.
ஒரு தடவை கேட்டால் போதும் குறைந்த பட்சம் இன்னொரு தடவையும் கேட்டு விடுவேன் இப்போதும்.
அந்த விரல் சொடுக்குத் தாள இசை, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பழக்கப்பட்டதைக் கொண்டாடுவது போலவும், அனுபமாவின் போதைக் குரலுமாக ஆஹா அற்புதம் எல்லோ?
இந்தப் பாடல் ஏன் அவ்வளவு ஈர்க்கும் என்று எனக்குள் நானே கேள்வியும் போட்டுக் கொண்டிருப்பேன்.
அதற்கான பதிலும் கிடைத்தது என்னுள் இருந்தே.
ஒரு சிம்பிளான இசைக் கூடத்தில் நாலைந்து வாத்தியக் கருவிகளும், கீபோர்ட்டுமாக வாத்தியம் மீட்ட,
எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பழமைக்கும் புதுமைக்கும் பாலமிசைக்கும் ஒரு இசை அசுரன் கூடவே நிற்க, ஒரு புதுமையின் தொனியாக மிளிரும் அனுபமாவின் குரல்.
“புதிய முகம்" படத்துக்கு முன்பும், பின்பும் ஏராளம் புதுக்குரல்களை ரஹ்மான் அறிமுகப்படுத்தினாலும், இந்த அனுபமாவின் போதைக் குரல் ரஹ்மானின் சக வாத்தியக் கருவிகள் முன்பு கொடுக்காக ஒரு புதுமையையும், நவீனத்தையும் குழைத்தது போலிருக்கும்.
உண்மையில் பின்னாளில் வட நாட்டில் இருந்து பாடிச் சென்ற பாடகிகளுக்குச் சற்றும் இளைத்ததல்ல அனுபமாவின் குரல்.
இந்தக் குரல் தான் ரஹ்மானின் புத்திசையின் திறவுகோல் என்பேன்.
“ஜ்ஜ்ஜூலை மாதம் வந்தாஹல்" என்று அந்த உச்சரிப்பிலேயே ஒரு கிறக்கம் கொடுத்து, ஒரு தெனாவெட்டாகத் திருப்பு
‘ஹச்சம் நாணம் என்பது" என்று திருப்பி விடுவார். சங்கதியை ஒப்புவிக்கும் போது சில சமயம் தம்முடைய குரலை ஆளுமைப்படுத்துவார்கள் சில பாடகர்கள், இன்னொருவரோ வார்த்தைகளை அறுத்து உறுத்துப் பிரவாகிப்பார்கள்.
இரண்டும் சேர்ந்த கலவையாக இருப்போரில் அனுபமாவைச் சேர்த்து விடலாம். அதற்கு இந்தப் பாடலே நல்லுதாரணம்.
ரஹ்மானின் வாத்தியக் கூட்டில் தான் எவ்வளவு எளிமை, சரணத்துக்கு முந்திய பகுதியில் தரை தட்டிய இசையாக, சம்மணமிட்டுக் கொண்டு கிட்டார் பரிவாரங்கள் தமக்குள் ஒரு சின்னப் போட்டி வைப்பது போல.....
அதுவும் பின் சரணத்துக்கு முந்திய ஆலாபனை எல்லாம் வெகு எளிமையான வாத்திய அணி வகுப்பு. ஆனால் எவ்வளவு இனிமை.
என்னடா தனக்குப் பக்கத்தில் ஒரு 25 வயசுப் பெண்ணு அசையாமல் நின்று கலக்குகிறாளே என்பது போன்ற தோரணையில் சுதாகரித்துக் கொண்ட 47 வயசுக்கார எஸ்பிபி விட்டுப் பிடித்து விட்டு 2.30 வது நிமிடத்தில்
அச்சம் நாணம் என்பது
ஹைதர் காலப் பழசு
என்ற அந்தச் சின்ன அடிக்குள் ஒரு சதிராட்டம் போடுவார் பாடுங்கள். ராட்சசன் ஐயா இசை ரட்சகனும் கூட.
புதிய முகம் படத்தின் காட்சிகள், குறிப்பாக இந்தப் பாடல் காட்சிகளை கொழும்பில் எடுக்கும் நேரம் தான் நானும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்து அடைக்கலமானதால் இந்தக் காட்சிகளைப் பார்க்கும் போது என் பழைய டயரியைப் படிப்பது போலிருக்கும்.
https://www.youtube.com/watch?v=wzcq2PJDAj0
வெட்ட வெளியில் போவோமா
அடி சிட்டுக்குருவியின் சிறகைக் கேள்
நட்ட நடு நிசி நேரத்தில்
நாம் சற்றே உறங்கிட நிலவை கேள்
காடு மலைகள் தேசங்கள்
காண்போமா காற்றைக் கேள்
வீடு வேண்டாம் கூடொன்று
வேண்டாமா காட்டைக் கேள்
அனுபமா குரலில் தேக்கிய கள்
0 comments:
Post a Comment