Pages

Thursday, September 30, 2021

இசையமைப்பாளர் சந்திரபோஸ் “நினைக்கையில் இனிப்பாக இருக்கிறார்”மாம்பூவே.....

சிறு மைனாவே.....

எங்க ராஜாத்தி ரோஜா செடி

முள்ளிருக்கும் கள்ளிருக்கும்

நினைக்கையில் 

இனிப்பாக 

இருக்கிறா ஆ ஆ

நெருங்கையில் 

நெருப்பாகக் 

கொதிக்கிறா......

https://youtu.be/z1OXjduTZCk

“சந்திரபோஸ் ! 

இந்தப் பாட்டை இசையமைச்சது என்னமோ 

நீங்க தான். ஆனா எனக்குத் தான் 

நிறையக் கடிதங்கள் வந்துக்கிட்டிருக்கு”

என்று இளையராஜா சந்திரபோஸிடம் சொன்னாராம் ஒரு பொழுது.

இந்தத் தகவலைச் சொன்னவர் சந்திரபோஸ் அவர்களின் உறவினரும், வாத்தியக் கலைஞருமான தபேலா முரளி.

“இளமைக் காலத்தில் சேர்த்த சுவாரஸ்யமான அனுபவங்கள் தான் எஞ்சிய காலத்தை இனிமையாக்குகிறது”

என்று ஒருமுறை எழுதியிருந்தேன். நாம் கடந்து வந்த பாதையில் எத்தனை திருப்பங்கள், சவால்கள், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள்....

ஆனால் இந்த மாதிரி ஒரு ஒற்றைப் பாட்டு போதும் அப்படியே எல்லாவற்றையும் வழித்து துடைத்து விட்டு அப்படியே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வசந்த காலத்தில் கொண்டு போய் இருத்தி விடும் கால இயந்திரப் பாட்டு இது.

புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு

சத்தங்கள் கொண்டாட

சித்திரப் பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு

சங்கீதப் பண் பாட

கட்டுக் கருங்குழல் பட்டுத் தளிருடல்

பின் புறம் நின்றாட

கொட்டடிச் சேலை கட்டிய வண்ணம்

பல்லக்கு ஒன்றாட....

ஆகா ஆகா எப்பேர்ப்பட்டதொரு மெட்டுக் கட்டு என்று சிலாகித்துக் கொண்டிருக்கும் போது அப்படியே எடுத்தள்ளி

“அழகான மான்

அதற்காக நான்

பழகாத நாளெல்லாம் 

துயிலாத நாள்

ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ

மாம்பூவே…….”

என்று கொண்டு போய்த் தூளியில் கிடத்தித் தாலாட்ட வைக்கும் இதம். அதுவும் ஜேசுதாஸுடன் ஜோடி போடும் இசையரசி பி.சுசீலாவின் அந்த ஓஓஓஓ லாலியில் லயித்துக் கிடக்கும் மனசு. 

இன்னொரு பக்கம் அந்த Rhythm pattern, ஆரம்பத் தாளக் கட்டில் கவர்ச்சிக் குலுக்கல் ஆடும் தபேலா, தக்கிடத்தத்தோம் 

நான் தனித்துவமானவன் என்று பளிச்சிடுவார் சந்திரபோஸ் அங்கேயே.

இந்தப் பாட்டெல்லாம் நூற்றாண்டு கடந்த தமிழ்த் திரையிசையின் கல்வெட்டில் பொறிக்க வேண்டியதொரு பொக்கிஷப் பாட்டு.

எண்பதுகளில் இசையுலகச் சிற்றரரசராகப் பவனி வந்த சந்திரபோஸ் குறித்து முன்பு ஏவிஎம் படைப்புகளில், விஜயகாந்த் தொடரில் மற்றும் பாலாஜியின் விடுதலை என்றெல்லாம் நான் எழுதிப் பகிர்ந்திருந்தேன். 

இந்தப் பதிவு எழுதும் போதே

“தன்னன்னா தானே தன்னன்னா....” என்று சந்திரபோஸ் சாதகம் கற்பிப்பது போலொரு பிரமை

https://www.youtube.com/watch?v=m5DwbfHnP8s

“ஏலம் மணக்குற கூந்தல் மணத்துல 

வாசமல்லி வச்சு விடவா

பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே

பாலம் கட்டவா?

ஆகா ஆகா கவிஞர் முத்துலிங்கம் ஐயாவுக்கு

தன்னன்னா தானே தன்னன்னா

ஆனாலும் அவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்னும் இன்னும் சிலாகிக்கப்பட்டுக் கொண்டாடப்பட வேண்டியவை.

அதெப்படி ஒரு பக்கம் 

“கன்னம் வெக்க வந்த மச்சான்

கன்னத்துல கன்னம் வச்சான்”

https://youtu.be/PV6anej5Ik8

என்று ஒரு பக்கம் துள்ளிசையிலும், இன்னோர் பக்கம்

நீலமேக குழலிலே 

பூவைச்சூடும் பொழுதிலே.......

வெள்ளைத்திரை போல் நெற்றிமீது 

வண்ணத்திலகம் இடுகிறேன்

பார்வை இசைக்கோர்வை 

புதுப்பாடல் ஒன்று படிக்குமோ.......

https://www.youtube.com/watch?v=n8p9NnrBpjY

என்று இன்னோர் பக்கம் உருகி உருகிக் காதலிக்க முடிகிறது இந்த மெட்டுகளை என்று வியப்பேன். சந்திரபோஸ் அவர்களது இந்தப் பாடல்களைக் கேட்கும் போது.

ஒரு பாட்டு ஹிட் அடித்து விட்டால் ஆ ஊவென்று அதே நகலில் சந்திரபோஸ் பாடல்களைக் கேட்டதுண்டா? கிடையாது.

அவர் ஒருபோதும் “பாதுகாப்பு வளையத்தில்” இருந்து கொண்டு இசைத்தவர் அல்ல.

ஒரு பக்கம் ஏவிஎம், பாலாஜி, தாணு என்று பெரும் பெரும் நிறுவனங்களுக்கும் படம் பண்ண முடியும். இன்னொரு பக்கம் புதிதாக வந்தவர்களுக்கும் தலைவாழை இலை விருந்து படைக்க முடியும் அறுசுவை இன்னிசை விருந்தாக. அதனால் தான் சந்திரபோஸ் என்றால் வகை தொகையில்லாமல் ரசித்து அனுபவிக்க ஏராளம் இன்னிசைப் பாட்டுகளைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்.

தொண்ணூறுகளில் தொடங்கிய இலங்கையின் கை கொள்ளாப் பண்பலை வானொலிகள் அன்று தொட்டு இன்று வரை ஒதுக்கி வைத்திருக்கும் பாடல்களில் ஒன்று

“என் ராசாத்தி நீ வாழணும்” 

https://youtu.be/EIOmWNSDX7A

வாரத்தில் ஒரு தினமேனும் அவர்கள் இதை ஒலிபரப்பாவிட்டால் அடங்காத தாகம் போல. வானொலிக்கார் விட்டாலும் நேயர் விருப்பம் கேட்கும் ரசிகர்கள் விட்டால் தானே?

ஊமைக்குயில் படத்துக்காக கே.பாக்யராஜின் நகல் ஆக அறிமுகமான யோகராஜின் பட வெற்றிக்கு இந்தப் பாடலும் துணை போனதில் வியப்பில்லை.

இதே படத்தில் வந்த இன்னொன்றை அந்தக் காலத்து ரெக்கோர்டிங் பார் காரர் பழக்கப்படுத்திக் கொண்ட, இதே படத்தின் இன்னொன்று

பூ முடிக்கணும் உன் தலையிலே

https://www.youtube.com/watch?v=ylVEm402cfA

ராமானந்த் சாகர் வழங்கிய "ராமாயணம்" அந்தக் காலத்து தூரதர்ஷன் தொலைக்காட்சியின் இதிகாச பிக் பாஸ் தொடர். அதில் நடித்த உப பாத்திரங்கள் பின்னாளில் சினிமாவில் கரையேற சீதையாக நடித்த தீபிகாவையும் கோடம்பாக்கம் சிறைப்பிடித்தது.

"பெரிய இடத்துப் பிள்ளை" இதில் அர்ஜீன், கனகாவோடு "சீதை" தீபிகாவும் நடித்தார். சந்திரப்போஸ் இசை வழங்கிய இந்தப் படத்தில் "உன்னைப் போற்றி எழுதப் புலவன் இங்கு அருகில் இல்லை" https://youtu.be/W4gaj_RyaHc

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா பாடியது ஒரு பக்கம் ரெக்கோர்டிங் பார் எல்லாம் ஹிட்டடிக்க,

இன்னொரு பக்கம் ஆகாசவாணியில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் வலம் வரும் தூரதர்ஷனின் "ஒலியும் ஒளியும்" வரை எட்டியது

"மனசுல என்ன நெனச்சே மழலையில் சொல்லிடய்யா" 

https://www.youtube.com/watch?v=bk_x4WAolYw

என்ற அற்புதமான பாட்டு பி.சுசீலா மற்றும் கே.ஜே.ஜேசுதாஸ் குரல்களில். எனக்கு இன்று வரை மனசுக்கு நெருக்கமானது. முந்தானை முடிச்சு படத்தில் வரும் "சின்னஞ்சிறு கிளியே" பாட்டின் பாங்கில் இது இருப்பது ஒரு அதிசயம்.

இந்தப் படத்தில் சந்தடியில்லாமல் ஹிட் அடிச்ச இன்னொன்று

“நாதஸ்வரங்கள் வாழை மரங்கள் நாளை வந்த பின்பு கல்யாணம் தான்” (எஸ்.ஜானகி & மனோ)

https://www.youtube.com/watch?v=q9I3GOurC8c

எப்படி இளையராஜாவின் பாடல்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனவோ அது போலவே சந்திரபோஸ் பாடல்களை நினைக்கும் போதெல்லாம் கூட அந்தந்தக் காலங்கள் நினைவுக்கு வரும்.

அப்படியொன்று தான் 

“பிள்ளை மனம் வெள்ளை மனம்”

https://www.youtube.com/watch?v=uXKZ5ClwN3c

பாட்டு. எண்பதுகளில் அப்போது வீடியோ படப்படிப்பு அறிமுகமான காலம். பிறந்த நாள் வீடியோக்களுக்கென்றே இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்றானது. உள்ளூர்த் தொலைக்காட்சிச் சேவையான விஜி அண்ணரின் எக்ஸ்போ தொலைக்காட்சி அப்போது தாங்கள் எடுத்த வீடியோக்களை நிதமும் போட்டுக் காண்பிப்பார்கள். ஊரே பார்க்கும். அப்படியாக ஒவ்வொரு பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோக்கள் வழி வாணி ஜெயராமும், ராஜ் சீதாராமனும் இந்தப் பாடல் வழியாக நம்மிடம் அறிமுகமாகிப் பழக்கப்பட்ட விருந்தாளிகள் ஆகி விட்டார்கள். பாடல் வரிகளுக்கு முழு அர்த்தம் தெரியாத அந்தக் காலகட்டத்தில் 

“கரைகளைத் தேடும் கடலலை பார்த்தேன்

அலைகளில் தோன்றும் இன்னிசை கேட்டேன்

வார்த்தையெல்லாம் வாழ்க்கை அல்ல

உன் முகம் பார்த்தே நான் வாழ்வேன்..”

என்று பாடமாக்கி முணுமுணுத்ததை இப்போதும் நினைத்துச் சிரிப்பேன்.

திருச்சி லோகநாதன் அவர்களின் மகன் T.L.தியாகராஜன் அவர்களுக்கு முகவரி கொடுத்த 

தேடும் என் காதல் கண்பார்வை”

https://www.youtube.com/watch?v=FzBo_XR9ytY

எல்லாம் அதே அதே ரெக்கார்டிங் பார் காரருக்குப் போதை ஏற்றியவை.

“அதோ வானிலே நிலா ஊர்வலம்” 

https://youtu.be/2fdUrm0dlMQ

வழியாக இன்றும் பிரபலமாக விளங்கும் சந்திரபோஸ் கொடுத்த “தண்டனை” படத்தில் வந்த

“கவிஞன் என்னைப் பாடலாம்”

https://youtu.be/XrgcK14J8EA

பாட்டை அந்தக் காலத்து சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சி ஒலி ஒளி என்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பாடிப் பிரபலமாக்கியது பின்னாளில் அது நம்மூருக்கு வீடியோ ஒளி நாடாவாக வந்து பார்க்கக் கிட்டிய போது புரிந்தது. கானா பிரபா

“ஓ.......

மேகமே

https://www.youtube.com/watch?v=PMEjTFfLjvw

அந்தக் காலத்து ஜேசுதாஸ், லலிதாசாகரியைக் காதலிக்க வைத்தது சென்னை வானொலியின் ஞாயிறு தோறும் நேயர் விருப்பம் கொடுத்த இந்தச் சின்னச் சின்ன ஆசைகள் படப் பாட்டு. 

எப்படி ஏவிஎம் நிறுவனம் தொடர்ச்சியாக சந்திரபோஸுக்கு அருமையான வாய்ப்புகளை வழங்கியதோ அது போலவே முக்தா சீனிவாசன் அவர்கள் இயக்கிய ஒரு மலரின் பயணம், வாய்க்கொழுப்பு, கதாநாயகன்  இவற்றோடு தனயன் முக்தா ரவி இயக்கிய “சின்னச் சின்ன ஆசைகள்” படமும் சேர்ந்து கொண்டது தனிச்சிறப்பு. Maya Srinivasan Muktha Ravi

வாய்க்கொழுப்பு படத்திலும் “ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே” 

https://youtu.be/Y7b2ypn_d4k

(T.L.தியாகராஜன் & லலிதா சாகரி) அந்தக் காலத் திரையிசை ரசிகர்களுக்கு நல்ல தீனி.

பின்னாளில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தொடர் எழுதும் போது இந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் இருந்து காதலில் விழுந்தேன் இந்தப் பாட்டு மீது.

“ம்ம்ம்ம்ம்ம் சந்தோஷ நேரங்கள் (பார்வையின் மறுபக்கம்)

https://youtu.be/_aV1ZE8xiSo

கொஞ்சம் வளர்ந்த காலத்தில் “புதிய பாதை” வழியே கொடுத்த

“பச்சப் புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம்”

https://www.youtube.com/watch?v=wFsRJOXJVRQ

அதன் ஆரம்ப இசை அருவிக்காகவே தேடித் தேடி ரசிப்பேன்.

அதில்

“முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா

இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா...”

பல்லவியில் சரணத்தின் சந்தத்தைக் கொணர்ந்து புதுமை படைத்திருப்பார்.

அதே காலகட்டத்து சோக ராக ஜேசுதாஸ் ஆக

“குடகுமலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு”

https://www.youtube.com/watch?v=De9O8MCbVsg

பாட்டையும் எழுதி வைத்து ஒலிப்பதிவு செய்து கேட்டதெல்லாம் தொடர்ந்த பயணம்.

வம்புல மாட்டி விடாதீங்கோ என் சின்னண்ணே

https://www.youtube.com/watch?v=Czx78Biw5Bg

பாட்டைக் கேட்கும் போது வெளிநாடு தேடிப் புறப்பட்ட என் உடன்பிறவாக சகோதரன் வழியில் பனிப்பாதையில் இறந்ததை நினைக்க வைத்து வருத்தும். இந்த வேடிக்கைப் பாடலை போர்க்கால இரவுகளில் சைக்கிள் டைனமோ சுழற்றிக் கேட்டுக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்துத் திரும்பத் திரும்பக் கேட்பான்.

வலியெழுப்பும் அந்த நினைவுகளை மீட்டிப் பார்க்கையில் அங்கும் வந்து ஒரு சூழ்நிலைப் பாடல் பாடுவார்.

“படத்தான் போறேன் பாட்டு

பலபேரு கதைய கேட்டு

அம்மாடி ஆத்தாடி பொல்லாத ஒலகமடா

பூஞ்சிட்டு குருவிகளா 

புதுமெட்டு கருவிகளா”

https://youtu.be/po6s62vUzxk

இப்படி ஒவ்வொரு பாடல்களை நினைக்குந்தோறும் சந்திரபோஸ் அவர்களுக்கும் நமக்குமான பாடல்களால் தொடர்ந்த பந்தம் காலம் கடந்தும் தொடர்கின்றது, அது பாடல்களோடே வாழ்கின்றது.

இசையமைப்பாளர் சந்திரபோஸ் 

அகவை 73 இல் இன்று ❤️

கானா பிரபா

#சந்திரபோஸ் #Chandrabose

0 comments: