இன்று காலை எழுந்ததுமே எனக்காகக் காத்திருந்தது போல மனசு முணுமுணுத்தது இந்தப் பாட்டை. இச்சாதாரிப் பாம்பு போல விடுவதாயில்லை, அப்படியே அந்தப் பழைய உலகத்தில் நுழைந்து இந்தப் பாடலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
பி.சுசீலா & எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூட்டணி கொடுத்த இன்னொரு எழுபதுகளின் ஹிட் பாட்டு, வாலி ஐயா வரிகளுக்கு “கவிஞர் வழங்கிய தேவரின்” சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசை.
இந்தப் பாட்டு எழும் காட்சியே அசாத்தியமானது.
படத்தின் இறுதிக் காட்சியின் பரபரப்புக்கு முன்னோட்டமாக இருக்கும். இச்சாதாரிப் பாம்பு ஜோடிகளாக (ராஜா) சந்திரமோகன் & ஶ்ரீப்ரியா (நாகராணி (ஶ்ரீப்ரியா) காதலனைக்கொன்ற கமலின் நண்பர்கள் ஒவ்வொருவராக வஞ்சம் தீர்க்கும் நாகராணி கடைசியாகக் கமலைக் குறிவைக்கும் நேரம். அந்த நாகராணியை அழிக்க ஏவப்படும் பாம்பால் துரத்தப்பட்டு கமல் வீட்டிலேயே அடைக்கலமாகும். அப்போது கமலின் காதலி லதா ரூபத்துக்கு மாறும் நாகராணி தன்னை இச்சாதாரிப் பாம்பு கொல்ல வருகிறது என்று “நல்ல” பாம்பைக் காட்ட அது கமலின் துப்பாக்கிக்கு இரையாகும்.
அப்படியே படுக்கையறைச் சல்லாபத்துக்கு லதாவை அழைத்துப் போன பின்னர் தான் தன் படுக்கையறையில் லதா ரூபத்தில் இருப்பது இச்சாதாரிப் பாம்பு என்று கமலுக்குத் தெரியும், அது தெரியாத பாம்பு அவரைத் தீர்த்துக் கட்டத் தருணம் பார்க்க, எழுகிறது இந்தப் பாட்டு.
அந்த ஆரம்ப சித்தார் இசை பாம்பு வளைந்து நெளியுமாற் போல எழ
“நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா”
https://www.youtube.com/watch?v=ftj71Uv-LMk
என்று எஸ்பிபி பாடும் பாங்கைப் பாருங்கள். அப்படியே அந்த வரிகள் தாவிப் பட்டு மெத்தைக்குப் போவது போன்ற பாங்கில் இருக்கும்.
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா பின்னணியில் டுக்கு டுடுடு டுக்கு டுடுடு அக்மார்க் சங்கர் – கணேஷ் முத்திரைத் தாள லயம். இடையில் வரும் அந்த கிட்டார் எல்லாம் எழுபதுகளின் பொற்கால இசை நுட்பத்தை அழகாகக் கோடிட்டுக் காட்ட அந்த 2.58 வது நிமிடத்தில் ட டுடுடடக்கு டு டுடுட டக்கு டு மீண்டும் சங்கர் கணேஷ் தாள வாத்திய முத்திரை பீறிடும்.
இந்த வேளை வாலியாரின் குறும்பைப் பாருங்கள். வந்திருக்கிறது தன் காதலி அல்ல பாம்பு தான் என்றும் சொல்ல வேண்டும். அதே நேரம் அந்தக் காதல் களியாட்டத்துக்கும் பொருத்த வேண்டும்.
இப்படி எழுதுவார் குறும்புக்கார வாலி
விழிகளில் தாபம் “படம் எடுத்தாடும்”
ஓ..ஓஓ ஓஓ ஓஓ
வேளையில் நான் வர “சீறுது” சிணுங்குது ஏன்
படம் எடுப்பதும், சீறுவதும் பாம்பின் கலையல்லவா
அத்தோடு விட்டுவிடவில்லை இச்சாதாரிப் பாம்புக்கும் இரட்டை அர்த்தம் இப்படி
“காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
“கதை முடிக்க” நன் நாளைப் பார்த்திருந்தேன்”
மீண்டும் கமலுக்கு
அது புரியாததா நான் அறியாததா
என்று இந்தப் பாடலுக்கு உச்ச பட்ச நியாயம் வாலியாரிடமிருந்து.
நீயா படத்தின் மூலம் “நாகின்” என்ற ஹிந்திப் படம். அந்தப் படத்துக்கு லஷ்மிகாந்த் – பியாரிலால் இரட்டையர்கள் இசை.
ஹிந்திப் படத்தின் பாடல்களை அப்படியே பாவிக்காமல்
“ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்” https://www.youtube.com/watch?v=OqMKSFrHO4g
பாடலின் மூலப் பாடலான “தெரே சங்கு பியார் மெய்ன்” https://www.youtube.com/watch?v=5tUvq5mKpdI பாடலை மட்டும் எடுத்து அதையும் அப்படியே ஒற்றியெடுக்காமல் பின்னணியில் தமிழ்ச் சூழலுக்கான இசை பொருத்தியது சங்கர் – கணேஷ் இரட்டையர்களின் சாமர்த்தியம்.
“ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்” பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் குரலில் உச்சம் பெற்று விளங்கிய பாடல்களில் ஒன்று.
அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே
அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்
இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே
கண்ணதாசனின் ஜீவன் மிகு வரிகளைப் பாட்டு முடிந்ததும் முணு முணுத்துக் கொண்டிருப்போம்.
அப்படியே புலமைப் பித்தன் பி.சுசீலா & எஸ்பிபி ஜோடி சேர்ந்த “உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை”
https://www.youtube.com/watch?v=1ADyU50yhh0
என்று கூட்டிக் கொண்டு போய் விடுவார். இந்தப் பாட்டைக் கேட்டால் எம்.ஜி.ஆருக்குப் போட்ட பாட்டோ என்று நினைக்கத் தோன்றும் கவி வரிகளும், இசை ஜாலமும்.
பழம் பெரும் பாடலாசிரியர் ஆலங்குடி சோமுவுக்கு ஒரு துள்ளிசைப் பாட்டு “ஒரு கோடி இன்பங்கள்” https://www.youtube.com/watch?v=FMVWGhhL1Hc
எஸ்பிபி & எஸ்.ஜானகி என்றாலேயே துள்ளிசை ஏரியாவில் கலக்குக் கலக்குவார்கள் என்பதற்கான முன்னோடிப் பாட்டுகளில் ஒன்று.
ஆக பி.சுசீலா, வாணி ஜெயராம், எஸ்.ஜானகி ஆகியோரோடு எஸ்பிபி கொடுத்த ஒவ்வொன்று வித விதமான இன்ப ரசங்கள்.
நீயா படம் போல முன்னணி நடிகர்களை, நடிகைகளை மிகவும் கச்சிதமாக ஒரு படத்தில் கொண்டு வந்ததை நான் அறியேன். கமல்ஹாசன் தொட்டு ஒரு குறும் பாத்திரத்தில் வரும் முத்துராமன் வரை எல்லோருமே வெகு சிறப்பாகப் பயன்பட்டிருப்பார்கள்.
ஶ்ரீப்ரியாவின் குடும்பத் தயாரிப்பு. அந்தக் காலத்தில் “பசி” போன்ற கலைப் படங்களை இயக்கினாலும், “ஆயிரம் ஜென்மங்கள்” என்ற மலையாளத்தில் (யக்ஷகானம்) இருந்து தமிழ் வடிவம ஆக்கிப் பெரும் சூப்பர் ஹிட் படம் ஆக்கியதால் இயக்குநர் துரை நீயா படத்தை எடுக்கத் தேர்வாகியிருக்கலாம். ஶ்ரீப்ரியா தான் உறுதிப்படுத்த வேண்டும்.
அந்தக் காலத்தில் புதுப் பட விளம்பரங்கள் இலங்கை வானொலியில் “திரை விருந்து” என்று ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். இப்படியான ரேடியோ வழி பட விளம்பரங்களுக்கு நமக்கு சிலோன் ரேடியோ ஒன்று தான் கதி என்று போன வாரம் சாய் வித் சித்ராவில் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் தயாரித்த பழம் பெரும் தயாரிப்பாளர் ஈ.வி.ராஜன் (நடிகை ஈ.வி.சரோஜாவின் தம்பி) கூடக் குறிப்பிட்டிருந்தார்.
நீயா படத்தின் பாடல்கள் அப்போது “றேடியோ சிலோனில்” சக்கை போட்டுக் கொண்டிருந்தன. நீயா பட விளம்பரத்தை கே.எஸ்.ராஜா திரை விருந்து என்று செய்வார். அவரின் அந்தத் திரை விளம்பரப் பாணியே அலாதியானது.
“போகாதீங்க ராஜா” என்று ஶ்ரீப்ரியாவின் அழுகுரலைக் கச்சிதமானத் தன் நிகழ்ச்சி முடிவில் பொருத்தி விட்டு, தன் அக்மார்க் சிரிப்புடன் நான் மீண்டும் வருவேனம்மா என்று சொல்லும் கே.எஸ்.ராஜாவை அந்தக் காலத்து வானொலிப் பிரியர்கள் அவ்வளவாக மறந்து விட மாட்டார்கள்.
கானா பிரபா
18.09.2021
0 comments:
Post a Comment