Pages

Tuesday, September 14, 2021

மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் ❤️

வேலைக்குப் பயணித்துக் கொண்டிருக்கும் போது என் காதில் அடிக்கடி அமர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் பாட்டு இது.

ஆகச் சிறந்த நினைவுக் கிளப்பிகளில் ஒன்று.

யாழ்ப்பாணத்தில் இருந்து நிரந்தரமாகப் பிரிகின்றோம் என்று தெரியாமல் அப்போது கொழும்புக்கு மேற்படிப்பின் நிமித்தம் வந்தவேளை சம காலத்தில் இந்தப் பாடலும் அப்போது வெளிவந்த காரணத்தால், எப்போது இதைக் கேட்கும்போதெல்லாம் வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகை மாளிகையின் மேல்

அடுக்கு மாடியில் நண்பர்களோடு குடியிருந்ததை நினைப்பூட்டும். 

ராஜாவின் பாடல்கள் ஏதோதோ சினிமாவின் காட்சிக்களனுக்குப் பயன்படும் நோக்கில் இசையமைத்திருந்தாலும் குறித்த பாடல்களுக்கு நம் பசுமையான நினைவுகளைத் தட்டியெழுப்பும் வல்லமை உண்டு.

சதிலீலாவதி திரைப்படம் கமல்ஹாசனும் பாலுமகேந்திராவும் நீண்ட வருஷங்களுக்குப் பின் இணையக் காரணமான படம். ராஜ்கமல் என்ற கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமே தயாரித்திருந்தது. வசனத்தை கிரேஸி மோகன் எழுதியிருந்தார். அப்போது ஒரு சஞ்சிகை பேட்டியில் கிரேஸி மோகனின் துணுக்குத் தோரணம் என்ற விமர்சனத்தை  பாலுமகேந்திரா மிகவும் எரிச்சலோடு எதிர்கொண்டார்.

இந்தப் படம் கன்னடத்தில் மீளவும் நாயகன் ரமேஷ் அர்விந்த் இயக்க, கமல்ஹாசன் தமிழில் கோவை வட்டார வழக்கில் பேசி நடித்தது போலவே கன்னடத்தின் ஹூப்ளி வட்டார வழக்கில் பேசி நடித்தார். ராமா பாமா ஷியாமா என்பது கன்னட வடிவத்தின் தலைப்பு.

சதிலீலாவதி படத்தின் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். 

"மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜயோகம் காலம் தோறும் வாழும்" இந்தப் பாடல் வந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசை அதுவரை பயணித்த இசை வடிவத்திலிருந்து மாற்றம் கண்டது. இளையராஜாவின் ஆரம்பகாலம், எண்பதுகள், தொண்ணூறுகள் என்று பிரிக்கும் போது அவரின் இசை வடிவம் ஒவ்வொரு தளங்களிலும் மாறியிருப்பதை அவரின் தீவிர ரசிகர்கள் உன்னிப்பாக அவதானித்திருப்பர். என்னைப் பொறுத்தவரை இந்த "ராஜனோடு ராணி வந்து சேரும்" பாடல் இருபது வருடங்களுக்கு முன்பே தன்னுடைய அடுத்த தலைமுறையான யுவன் ஷங்கர் ராஜா காலத்துக்கு முன்னோடியாக அமைந்ததாகவே எண்ணிக் கொள்வேன்.

தான் கொண்ட கலையைத் தீவிரமாக நேசிக்கும் கலைஞன் என்பவன் தான் வெற்றி பெற்ற அம்சத்தில் இருந்து விலகி, காலத்துக்குக் காலம் புதுமையான படைப்புகளைக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்போடு இருப்பான். ஜனரஞ்சக ரீதியான வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம் தான்.

"எப்படி ஹிட் பாடல்களை அமைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு

"பாடல்களை ஹிட் ஆக்குவது நீங்க தானே" என்று சொன்ன ராஜாவின் பதில் தான் இதை முன்மொழியும்.

இந்தப் பாடலின் உருவாக்கம் குறித்து அப்போது உதவி இயக்குநராக இருந்த சுகா ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் வாத்தியக்கலைஞர் விஜி இம்மானுவேல் இந்தப் பாடலுக்குக் கையாண்ட சாகித்தியத்தையும் சிலாகித்திருப்பார்.

பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கும் இதுதான் 

இளையராஜாவின் இசையில் முதல் பாடல்.

இது மன்மத சாம்ராஜ்யம் எனும் போது அதை அழுத்திக் காட்டும் வயலின் மிதப்பு,

அந்த பித்தளைக் கருவிகள் இடையிசையைத் தங்கமாக உருக்கும் ஜாலம்,

“இன்பக் கனாவைத் தந்தான் அவன் தந்தான்” புல்லாங்குழல் ஓகோ என்று கேட்டு வைப்பது,

“பக்கத் துணை வாய்க்காமல்

பெண் வாடினாளோ

“பக்கம் வந்து கை சேர

பண் பாடினாளோ”

இரண்டுக்கும் இடையில் அணையாக மேவிப் போகும் இசை ஜாலம்,

அப்படியே இரண்டாவது சரணத்தில் சாக்ஸபோனை மிதக்க வைத்து ஒரு ஜலக்கிரீடை,

என்று இந்தப் பாட்டில் மூழ்கினால் ஆழ் கடலுக்குள் முக்கி முத்தெடுக்கும் சுகம்.

இந்த ராஜ யோக இசைக்கு வாலியாரின் வைர வரிகள் நாண் பூணும்.

பாடல்களுக்கு நினைவுகளை உறைய வைக்கும் சக்தி உண்டு. 

இந்த மாதிரிப் பாடல்களைக் கேட்க்கும் போது அந்த நினைவுகளை  உருக்கிக் கொண்டு வரும்.  

அந்தத் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் எந்த வீதியில் எந்தச் சோதனைச் சாவடியில் பொலிஸ்காரன் மறிப்பானோ? 

மறித்து அடையாள அட்டை பார்த்து தமிழன் என்றால் மேற்கொண்டு கேள்வி இல்லாது பொலிஸ் நிலையம் கொண்டு போய் விடுவானோ?

என்ற கழுகும், கோழிக் குஞ்சும் வாழ்க்கையில் தப்பிப் பிழைத்து அந்த அடுக்கு மாடிக் கட்டடத்துக்குள் புகுந்து, மொட்டை மாடியில் 

சாரம் (லுங்கி) கட்டி பெடியளாக இருந்து இளையராஜாவின் பாடல்களை அசை போட்டு மகிழ்வதந்தக் காலத்து இனிய நினைவுகளைச் சொல்லிப் போகும் பாட்டு இது.

தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அந்தக் கட்டடத்தின் பக்கம் வலிந்து நடை போட்டுப் போய்ப் பார்த்து விட்டு வருவேன். என் தாயகப் பயணங்களே இம்மாதிரியான பழையதைத் தேடிப் போய்ப் பார்த்து விட்டு வருவது தான்.

அப்போது

"கங்கைக்கொரு வங்கக் கடல் போல் 

வந்தான் அவன் வந்தான்" 

சித்ரா பாடும் வரிகளாக வங்கக் கடலாய் நெஞ்சில்  கிளர்ந்து எழும் அந்த நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டே பயணிக்கும் பாட்டு.


https://www.youtube.com/watch?v=H2uDThYyUFM&list=RDH2uDThYyUFM&start_radio=1

0 comments: