“தொட்டாச் சிணுங்கி” இந்தப் பெயர் மேல் ஒரு ஈர்ப்பு. அதுவும் இந்தப் பெயரில் ஒரு படம் வரப் போகிறது என்று தெரிந்ததுமே தலைப்பே கதையைக் கோடிட்டுக் காட்டியது. இந்த மாதிரி ஒற்றைச் சொல்லில் ஒரு படத்தின் முகவரியை நச்சென்று காட்டுவது மிக அரிதாகவே நிகழ்ந்திருக்கின்றது தமிழ் சினிமாச் சூழலில்.
தொட்டாச் சிணுங்கியை நம்மூரில் தொட்டச் சுருங்கி என்போம்.
நம் வீட்டு வேலியை அண்டிய சிறு பற்றைகளில் தொட்டாச் சிணுங்கி முளைத்திருக்கும். செருப்புப் போடாத காலோடு மண்ணை அளைந்த பருவத்தில் அந்தப் பற்றைப் பக்கம் முள் கிள் குத்தினாலும் பரவாயில்லை என்று இறங்கி கால்கள் முள் ஆணிகளில் மோதி கடுக்கக் கடுக்க அந்தத் தொட்டாச் சிணுங்கிப் பற்றைக்குப் போய், மெல்ல மெல்லப் பாதம் பதித்துப் போய், பரந்து விரிந்திருக்கும் அந்தத் தொட்டாச் சிணுங்கி இலைப் பரப்பில் காலால் ஒரே அமுக்கு. அப்படியே எல்லாம் போர்க்களத்தில் தன் படைக்கலங்களை இழந்து ராமன் முன் தலை குனிந்து நின்ற இராவணத் தலைகள் போலச் சுருங்கி விடும்.
ஆனால் ஒரு பக்கம் கையால் சீண்டி அது சுருங்கும் அழகைப் பார்ப்பதும் தனி சுகம்.
தாவடிப் பக்கம் அப்பாவின் தோட்டக் காணி, அவருக்குச் சாப்பாடு கொண்டு போகும் சாக்கில் வழி நெடுக இரு மருங்கும் ஆங்காங்கே விளைந்த தொட்டாச் சிணுங்கிப் பற்றைகளை அமுக்கிக் கொண்டே போவேன். சில சமயம் அதற்குள் மறைந்திருக்கும் வில்லன் முட் பற்றைகள் காலைப் பதம் பார்த்து இரத்தம் வடியும். புழுதி மண்ணில் காலைத் தேய்த்து விட்டு அடுத்த தொட்டாச் சிணுங்கிப் பக்கம் போவேன்.
சாய் வித் சித்ராவில் இயக்கு நர் கே.எஸ்.அதியமான் பேட்டியை 26 வருடங்களுக்கு முன் “தொட்டாச் சிணுங்கி” படம் வந்த போது எழுந்த அதே ஈர்ப்பிலேயே பார்க்கத் தொடங்கினேன்.
இந்தப் பேட்டியின் சாராம்சம் “கண்மூடித் தனமான தன்னம்பிக்கை” அல்லது “இளங்கன்று பயமறியாது”
அதியமான் சுரேஷ் மேனன் சார் பற்றிப் பேசும் போதெல்லாம் அவர் மீதான நன் மதிப்பு இன்னும் ஏறிக் கொண்டே போய் விட்டது. வைரமுத்துவிடம் முரண்பட்ட கதை நல்ல கலகல. ஆனால்
“ விடிகாலை விண் அழகு
விடியும் வரை பெண் அழகு”
இதற்கு வைரமுத்து கொடுத்த சப்பைக்கட்டை வைத்து இணையத்தில் இன்னொரு போராட்டம் கிளம்பும் என்று எதிர்பார்த்தேன். யாரும் கண்டுக்கவில்லைப் போல 😀
கார்த்திக், ரகுவரனின் இன்னொரு அழகான நல்ல பக்கம், ரேவதியின் அக்கா ஸ்தான பாசம் எல்லாம் நெகிழ வைத்தது.
இந்தப் பேட்டி வழியாக 23 வருடங்களுக்குப் பின் ஒரு உண்மையும் வெளிச்சிருக்கு.
தலைமுறை படம் வந்த போது அதில் அதியமான் அப்பட்டமாக நடிகர் பார்த்திபனைப் பிரதியெடுத்திருந்தார். அது எரிச்சலைக் கூடக் கிளப்பியது. அந்தப் படத்தில் தான் நடிக்கக் காரணமே பார்த்திபன் தான் என்று அவரோடு முரண்பட்ட கதையையும் சொல்கிறார் இந்தப் பேட்டியில்.
அந்தக் கால சஞ்சிகை ஒன்றில் பார்த்திபன் இந்த நகல் நடிப்பைப் பார்த்து அதியமானுக்கு டோஸ் விட்டதாகக் கூடச் செய்தி வந்தது.
விடுதலை படப்பிடிப்பில் ரஜினிக்கு வசனம் சொல்லிக் கொடுக்கும் போது ரஜினி மாதிரியே பேசி பதிலுக்கு அவர் அதியமானிடம் “சூப்பர் சூப்பர்” ஆனா நீங்க வசனத்தை மட்டும் சொல்லுங்க” என்று சொன்ன பாங்கை நினைத்துச் சிரித்தேன்.
தொட்டாச்சிணுங்கி படம் வந்த காலத்தில் நான் மெல்பர்னுக்குப் படிக்க வந்து விட்டேன். எனவே இதில் ஆஸி இசையமைப்பாளர்கள் பிலிப் & ஜெர்ரி பணியாற்றுகிறார்கள் என்ற போது பெருமை பிடிபடவில்லை. ஆனால் இன்று வரை அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டவில்லை.
படத்தை ஓட வைப்பதற்காக என்ன வித்தையெல்லாம் காட்டியிருப்பார்கள் போல.
மேக்னா சவுண்ட் புண்ணியத்தில் இலவச இசையாக எடுத்துக் கொண்டாராம் இப்படத்துக்கு.
படத்தில் நாகேந்திர பிரசாத் ரஜினி ரசிகன் ரஜினி புகழ்பாடும் பாட்டே இரண்டு இருக்கும்.
பெப்சி கோலா என்றொரு விளம்பரப் பாட்டு வேறு. இதே மாதிரி பின்னாளில் ஒளிப்பதிவாளர் சக இயக்குநர் தன் படத்துக்கு “உள்ளம் கேட்குமே ஃபெப்சி” என்று பெயர் வைத்து பிறகு ஃபெப்சி நிறுவனத்தோடு முட்டி அதைத் தூக்கியதும் வரலாறு 😀
தொட்டாச் சிணுங்கியோடு இன்று எனக்குள்ள பந்தம் அந்தப் படத்தில் வரும் “மனமே தொட்டாச் சிணுங்கி தானே” தான். அதியமானே எழுதியது..
தொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் ஹரிஹரனின் அலையில் மிக முக்கியமான பாட்டாக இதைச் சொல்வேன்.
பாடலின் பின்னணி இசை ஒரே திசையில் பயணிக்கும், அதன் மேல் ஹரிஹரன் நடந்து தன் நளினங்களைக் காட்டிப் பாடும் விதத்தை ஒவ்வொரு தடவையும் மெச்சி ரசிப்பேன். ஒரு காலத்தில் வானொலியில் நான் அதிகம் ஒலிபரப்பிய பாட்டுகளில் ஒன்று இது.
https://youtu.be/d-LhzUBqWSk
அதிகம் கேட்காவிட்டாலும் சித்ராவின் குரலில் இன்னொரு பரிமாணத்தில் வந்ததும் பிடிக்கும்.
https://youtu.be/sZ1boZNhXX4
நிழலே உன் பின்னால் நிலையில்லை
நிலவே இங்கு யாருக்கும் உறவு இல்லை
காற்றே தன் வழியது அறிந்ததில்லை
கட்லே தன் அலைகளை புரிந்ததில்லை
இதுதானே உலகின் நியதிய்டி
கானா பிரபா
0 comments:
Post a Comment