🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁
பாகம் ஐந்து
🎹 D.இம்மானுக்கு 100, யுவனுக்கு பத்தோடு பதினொன்று 🎸
பாடலையும் கேட்க வேண்டும் அதே நேரம் அந்தப் பாடல் அதிகம் மெனக்கெடாமல் சட்டென்று மனதில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு வகை ரசிகர் கூட்டம் உண்டு. இம்மாதிரி ரசிகர்களுக்காகவே தொண்ணூறுகளில் தேவா வரமளித்தார். ஏற்கனவே கேட்ட பாடலின் சாயலிலேயே பாடல்களைத் திரும்பத் திரும்பக் கொடுப்பதால் கேட்பவருக்கும் அந்த டியூனைப் பழகவெல்லாம் அதிக காலம் பிடிக்காது. இதே நூலைப் பிடித்து இன்றைய யுகத்தில் இசையமைப்பவர் D.இம்மான். உதாரணத்துக்கு 2018 இல் ஜனங்களைத் தியேட்டர் பக்கம்
அள்ளிய “கடைக்குட்டி சிங்கம்” பாடல்கள் உதாரணத்துக்கு
அட வெள்ளக்கார வேலாயி https://youtu.be/ay92dzwAHZc
சண்டைக்காரி வாடி வாடி https://youtu.be/XtD3KDmstzg
தண்டோரா கண்ணால
https://youtu.be/J1QMVBGuhZs
சான்று பகிரும்.
அது போலவே சிவகார்த்தியேன் படங்களுக்கு இசையமைக்கும் போதும் சிவகார்த்திகேயனின் முந்திய படங்களில் கொடுத்ததையே மறு சுழற்சி செய்து போட்டு விடுங்கள் என்று இயக்குநர் கேட்பார் போல. “வர்ரும் ஆனா வர்ராது”, “ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல”, “மச்சக்காரி” என்று சீமராஜாவுக்குக் கொடுத்ததெல்லாம் சூடாக்கிய பழைய பலகாரங்கள். இந்த நெடியே “பஞ்சு மிட்டாய்” பாடல்களிலும் அடித்தது. “My wife உ ரொம்ப beautiful லு” பாடல் பஞ்சு மிட்டாய் படம் வழியாக பண்பலை வானொலிகளுக்குக் கிட்டிய ஒரு மாமூல் பாட்டு.
இருப்பினும் D.இம்மானுக்குக் கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தால் விண்வெளியைத் தொடும் இசையைக் கொடுப்பார் என்பதற்கு உதாரணமாக அமைந்தது “டிக் டிக் டிக்” பாடல்கள். அவரது நூறாவது படம் என்பதால் சொல்லி அடித்திருக்கிறார். “குறும்பா” பாடல் வெளியான நாளில் இருந்தே ஹிட்டடித்தது. அது போல யுவன், சுனிதா சாரதி, யோகி B இன் டிக் டிக் டிக் முகப்பிசைப் பாடலும் சுதி ஏற்றும்.
பாடலாசிரியராக மதன் கார்க்கிக்கும், இசையமைப்பாளர் D.இம்மானுக்கும் இவர்களின் திரையிசைப் பயணத்தில் “குறும்பா” பாடல் (சித் ஶ்ரீராம் இன் குரல் வடிவம்) மிக முக்கியமானது என்பேன்.
டிக் டிக் டிக் படப் பாடல்கள்
https://www.youtube.com/playlist?list=PLqXIK460qsCeZPC3P7z9G3UJhN-pKCbt8
இந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்திருக்கும் “விஸ்வாசம்” பாடல்களும் D.இமானின் மாமூல் இசையில் வந்திருப்பது ஏமாற்றம். படத்தில் சொல்லக் கூடிய ஒரே மெலடியான “கண்ணான கண்ணே” பாடல் “கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை”யைக் கொஞ்சம் தட்டி நெட்டிப் போடப்பட்டிருக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா காலம் என்றொன்று இருந்தது என்று சொல்லுமளவுக்கு யுவனின் நிலை. அவருக்குத் தோதான இயக்குநர்களும் இல்லாதது அல்லது தோதான இயக்கு நர்களுடன் சேர்ந்ததும் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லாதது 2018 இலும் தொடர்ந்தது.
“ஏ பெண்ணே” https://youtu.be/IGI4jnKn6IU
என்ற பியார் பிரேமா காதல் தான் யுவனின் பாடல்களில் இந்த ஆண்டு அதிக வெளிச்சம் பட்டது.
பேரன்பு, பலூன், செம போதை ஆகாதே, சண்டக் கோழி 2, ராஜா ரங்குஸ்கி, இருமபுத் திரை ஆகிய படங்களில்
“வான் தூறல்” (பேரன்பு)
https://youtu.be/tAOu6n4ygHY
உயிரிலே உயிரிலே (பலூன்)
https://youtu.be/0nTu7Ih8r_k
அழகே (இரும்புத் திரை)
https://youtu.be/Ut8FGRsCZI8
ஆகிய பாடல்களில் யுவன் தெரிகிறார்.
தாவணி போட்ட தீபாவளி காலத்துச் “சண்டக் கோழி” யோடு ஒப்பிடும் போது சண்டக் கோழி 2 இன்னொரு ஏமாற்றமே.
Zee தமிழ் சரிகமப இசை போட்டியில் வெற்றி கண்ட ரமணியம்மாவுடன், செந்தில் தாஸ் பாடிய “செங்கரத்தான் பாறையிலே” பாடலைப் பண்பலை வானொலிகள் கடனே என்று தள்ளிக் கொண்டிருக்கின்றன.
மாரி 2 பாடல்கள் வந்த எடுப்பிலேயே “ரவுடி பேபி”
https://youtu.be/3nauk_scj9U பாட்டு “இந்தாடி கப்பக்கிழங்கே” (தூள்) படப் பாடலின் தழுவல் என்று கலாய்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இளையராஜா மீண்டும் யுவன் இசையில் பாடியிருக்கிறார் என்ற செய்தி மட்டும் மாரி 2 பாடல்களில் ஒரு செய்தி. மற்றப்படி 2019 இலும் பழைய யுவனுக்காகக் காத்திருக்க வேண்டியது தான்.
இளையராஜாவின் பாடல்களை நகல் எடுத்துத்தான் பாடல் போட்டிருக்கிறேன் என்று வெள்ளாந்தியாக வாக்கு மூலம் கொடுத்த பிரேம்ஜி அமரனின் இசையில் பார்டி படப் பாட்டு “கொடி மாங்கனி” https://youtu.be/RRaPCY7drqc
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா குரல்களில் கேட்டுப் பழகிய ராஜாவின் தொண்ணூறுகள் போலவே இனிக்கிறது.
நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ் கணேஷ் நோகாமல் நொங்கு எடுத்த கதையாக “ஏ சின்னப் புள்ள” https://youtu.be/O3tnbbUvFpE என்ற செந்தில் & ராஜலட்சுமி சூப்பர் சிங்கர் (நிஜ) ஜோடியின் பாடலையே உருவி கொஞ்சம் மிளகாய்த் தூள் போட்டுக் கொடுத்த சார்லி சாப்ளின் 2 பாடலும் வானொலிகளின் சம்பிரதாய ஹிட் ஆகி விட்டது.
தொடர்ர்ர்ர்ரும்
0 comments:
Post a Comment