🎧 2018 தமிழ்த் திரை இசை அலசல் 🎧
🎸 இசையமைப்பாளர் சாம் C.S 🥁
2017 ஆம் ஆண்டில் ஹிட்டடித்த படங்களில் “விக்ரம் வேதா”வுக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. அந்தப் படத்தின் பாடல்களோடு தக தக தக தா....தக தக தக தா என்று பின்னணி இசையையும் முணு முணுத்து ரசித்தனர் இசை ரசிகர்கள். இப்பேர்ப்பட்டதொரு வித்தியாசமான வரவேற்பைப் பெற்ற சாம் C.S இன் அடுத்த ஆண்டு எப்படி அமையப் போகிறது, இனிமேல் உச்ச நட்சத்திர நடிகர்களுக்குப் பிடித்தமானதொரு இசையமைப்பாளராக மாறி விடப் போகிறார் போன்ற பல்வேறு கணிப்புகளுடன் கூடிய எதிர்பார்பார்ப்பை உண்டு பண்ணியிருந்தார். அந்த வகையில் அவரின் திரையிசைப் பயணம் 2018 இல் எப்படி அமைந்தது என்று பார்ப்போம்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கான தொடர் கூட்டணி அமைத்து அழகான நல்ல பாடல்களை வாங்கியதில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இன் பங்கு சிறப்பானது. கிரீடம், மதராசப் பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம் என்று இந்த இசை வெற்றிக் கூட்டணியின் படைப்புகள் நீளும்.
இந்தக் கட்டை உடைத்துக் கொண்டு 2016 இலிருந்து பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இயங்கிய ஏ.எல்.விஜய் 2018 இல் தான் இயக்கிய இரண்டு படங்களிலுமே சாம் C.S உடன் இணைந்திருக்கிறார். இரண்டுமே வெவ்வேறு தளங்களை அடிப்படையாகக் கொண்டவை.
“கரு” என்ற பெயரில் எடுக்கப்பட்டு பாடல்களும் அதே படப் பெயரில் வெளியான பின் திரைக்கு வர முன்னர் “தியா” என்று பெயர் மாற்றம் கண்டது. இந்தப் படத்தில் இரண்டு பின்னணி இசைக் கீற்றுகள் மூன்று பாடல்கள் என அமைந்திருந்தது.
“ஆலாலிலோ” https://youtu.be/kHvw9J9eQwI என்றொரு அருமையானதொரு தாலாட்டுப் பாடல் இருக்கிறது. தன் சேய்க்கு நோகாமல் காதருகே பாடித் தாலாட்டும் பாங்கில் அமைந்த பாட்டை ஸ்வாகதா எஸ்.கிருஷ்ணன் பாடியிருக்கிறார். இந்தப் படம் இன்னும் பெரிய் அளவில் எடுபட்டிருந்தால் இந்தப் பாட்டு இன்னும் பரவலான ஈர்ப்பைப் பெற்றிருக்குமே என்றதொரு ஆதங்கம் எழுகிறது.
“எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே” என்று கல்கி படத்தில் பாடினாற் போலத் தன் கருவோடு பேசும் பாட்டாக சித்ரா இங்கேயும் ஒரு பாடல் “கருவே....”https://youtu.be/v4QsNAeA2GU என்று பாடியிருக்கிறார்.
“கொஞ்சாளி” https://youtu.be/gGBQUO_FBBI என்ற மணப் பாடல் கூட அதிக ஆர்ப்பட்டமில்லாத அடக்கமான துள்ளிசை கலந்து அமைந்திருக்கிறது. அனைத்துப் பாடல்களும் மதன் கார்க்கியின் கை வண்ணம்.
தியா படத்தின் பாடல்களுக்கு நேர்மாறு லஷ்மி படத்தின் பாடல்கள். ஜோடி நம்பர் 1 ஐ திரையில் காண்பது போல நடனப் பின்னணியுடன் மாமூல் உணர்ச்சி வசப்படும் காட்சிகள் கொண்ட இதில் மொத்தம் ஏழு பாடல்கள் சாம் இசையில். பிரபு தேவா நடித்த படமாச்சே. அனைத்தையும் எழுதியவர் மதன் கார்க்கி.
இந்தப் பாடல்களைக் கேட்கும் போது அமித் திரிவேதியின் ஏதோ ஹிந்திப் படப் பாடல்களைக் கேட்குமாற் போலொரு உணர்வு. உத்ரா உன்னிகிருஷ்ணனின் “மொட்றாக்கா மட்றாக்கா” https://youtu.be/ielNlsacdk8 பாடல் ஹிட் ரகம்.
சாம் C.S இன் இசையில் சந்தடியில்லாமல் வந்து போன படம் “வஞ்சகர் உலகம்”. இந்தப் படப் பாடல்களில் புதுமை என்னவென்றால் மொத்தம் மூன்று பாடல்களில் இரண்டு ஆண் குரல்களுக்கானவை. இரண்டும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், மற்றும் யுவன் சங்கர் ராஜா பாடியது. முக்கியமாகச் சொல்ல வேண்டிய பாட்டென்றால் “குழலூதும் கண்ணன் எழில் காணவே” https://youtu.be/zmrQBukJea8 பாட்டு. ஒரு சாஸ்திரிய இசையோடு மேற்கத்தேய முரட்டு வாத்தியங்கள் சேர்ந்த பாட்டு. ஆனால் வாத்திய ஆதிக்கம் அதிகமாக மேலெழுந்து பாடலை அமுக்கி விடுகிறது.
வஞ்சகர் உலகம் போன்றே “கடிகார மனிதர்கள்” படப் பாடல்களும் சாம் C.S இசையில் சந்தடியில்லாமல் வந்து போன பாடல்கள்.
தியா, லஷ்மி போன்று இரண்டு மொழிகளில் அதாவது தமிழ், தெலுங்கு என இரட்டைச் சவாரி செய்த படம் நோட்டா. தெலுங்கின் இளம் முன்னணி நாயகன் விஜய் தேவரக்கொண்டா நடித்த இப் படம் கனதியான அரசியல் பின்புலத்தோடு பயணிப்பதால் பாடல்களுக்கு அதிக வேலை இல்லை. 2018 இல்
பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய படங்களில் இதுவுமொன்று என்றாலும் சாம் தான் இசையமைப்பாளர் என்று பரவலான அடையாளத்தைப் பதிக்கத் தவறி விட்டது. இந்தப் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரின் இரு முகன் படப் பாடல்கள் குறித்த படம் தோல்வி கண்டாலும் இன்னும் இனிப்பது சொல்லி வைக்க வேண்டியது.
உயிர் உருவாத
உருகுலைக்காத
என்னில் வந்து சேர
நீ யோசிக்காத
திசை அறியாத
பறவையை போல
பறக்கவும் ஆச
உன்னோடு தூர
இன்று பண்பலை வானொலிகளில் ஹிட்டடிக்கும்
இந்தப் பாடலுக்குச் சொந்தம் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படம். சாம் இன் இசையில் 2018 இல் வெளிவந்த படங்களில் அவரின் முத்திரையை முழுமையாகப் பதித்த படம் என்றால் இது தான் என்பேன். “உயிர் உருவாத” https://youtu.be/2bhPfpBumZM பாடலுக்கான பாடகர் தேர்வு (சத்ய பிரகாஷ் & சின்மயி) கூடக் கச்சிதம். இந்தப் படத்துக்கான மைய இசைப் பாட்டு (theme song) “யேப்பா யெப்பா” பாடலிலும் உழைப்பு தெரிகிறது.
“ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆசை சேர்க்கிறாய்” https://youtu.be/c8Vh5Frko9Q இதே படத்தில் இன்னொரு ரம்யமான காதல் பாட்டு.
இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்றே சாமுக்கு இன்னொரு படப் பாடல் அதிக புகழைக் கொடுத்தது இந்த ஆண்டு. அந்தப் பாட்டு “ஏதேதோ ஆனேனே” https://youtu.be/IXCejoy1M9Y
Mr.சந்திரமெளலி படத்திற்காக சின்மயியுடன் இணைந்து சாம்.C.S பாடிய பாட்டு இன்னொரு எஃப் எம் ஹிட் ரகம். என் கல்லூளியே என்ற பாடலும் இதே படத்தில் இடம்பெற்றிருக்கும் இனிய பாடல்.
கார்த்திக்கின் அக்னி நட்சத்திர காலத்தை நினைவுபடுத்த ராஜாதிராஜா பாடல் கடந்து போகிறது.
வெளி வரப் போகும் “அடங்க மறு” படத்துக்காகக் கொடுத்த “ஓ சாயாளி ஓ சாயாளி” https://youtu.be/7KJscr5TdKc பாடல் இப்படத்தின் மற்றைய பாடல்களோடு ஒப்பிடும் போது சாம் C.S ஐ நம்பிக்கையோடு 2019 இற்கு எதிர்பார்க்க வைக்கிறது. கூடவே கொரில்லா படமும் வரிசையில் நிற்கிறது.
2018 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படப் பாடல்கள் தான் சாம் C.S இன் பேர் சொல்லும் இசை.
தனிப்பட்ட ரீதியில் எனக்குப் பிடித்த பாடல் “ஏதேதோ ஆனேனே” (Mr சந்திரமெளலி).
புதுமையாக மெட்டுக் கட்டிய விதமும் பாடலின் ஏற்ற இறக்கங்களில் காட்டும் நளின இசையுமாக இந்தப் பாடல் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.
இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் மோகன்லாலின் “ஒடியன்” மலையாளத் திரைப்படம் சாம் C.S இற்கு மிகப் பெரிய படைப்பாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தின் பின்னணி இசைப் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்போடு இந்த வாரம் உலகமெங்கும் திரையிடப்படுகிறது இப்படம்.
2018 இன் திரை இசை அலசல் தொடரும்
கானா பிரபா
11.12.2018
#2018TamilHits
0 comments:
Post a Comment