Pages

Sunday, December 30, 2018

❤️ 2018 தமிழ்த் திரை இசை அலசல் ❤️ பாகம் மூன்று ❤️ 96

❤️ 2018 தமிழ்த் திரை இசை அலசல் ❤️

பாகம் மூன்று

Attachment.png

🎸💚 96 💚 🥁

கரை வந்த பிறகே.....

பிடிக்குது கடலை......

நரை வந்த பிறகே

புரியுது உலகை

நேற்றின் இன்பங்கள்

யாவும் கூடியே

இன்றை இப்போதே

அர்த்தம் ஆக்குதே

இன்றின் இப்போதின்

இன்பம் யாவுமே

நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

இப்போதெல்லாம் ஏதோவொரு பண்பலை வானொலி வழியே இந்தப் பாடல் வரும் போதெல்லாம் சிலிர்த்து விடுகிறது. இப்பேர்ப்பட்ட மன நிலையோடு வாழ்ந்து கழித்தவர்கள் இந்தப் பாடலை இதேயளவு நெருக்கமாக உணர்வர். அது விரக்தியோ, சந்தோஷமோ அன்றிக் கவலையோ இல்லாத மோன நிலை. இந்த நிலையிலேயே, இந்த உலகிலேலேயே அப்படியே தங்கி விடுபவர்கள் தான் மேதைகளாக இருக்கிறார்கள். கலைத்துறையில் உச்சம் கண்டோரை உதாரணம் காட்டலாம்.

நம் போன்ற சாதாரணர்கள் ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெட்டவெளி காணப் பறந்து திரிந்து இலக்கற்றுப் பயணிப்போம். 96 திரைப்படம் என்னை இன்றளவும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் இந்தப் பாடல் தான். இது வெறும் Life of Ram https://youtu.be/psi5C9WM3i0 உடன் மட்டுமே அடக்க முடியாத ஒன்று.

2018 ஆம் ஆண்டிலே ஒரு திரைப்படத்தின் பாடல்களும் வெற்றி கண்டு, படமும் உச்ச பட்ச வெற்றி கண்டதென்றால் அதற்கான ஒரே தகுதி 96 திரைப்படத்துக்கே சாரும்.

ஒரு தமிழ்த் திரைப்படத்தை எப்படி வேண்டுமானாலும் எடுத்து விடலாம். ஆனால் ஒரு காதல் சார்ந்த படைப்பைப் பாடல்கள் இன்றி எடுக்கவே முடியாது.

ஆனால் பாருங்கள் இதுவும் காதல் திரைப்படம் தான் ஆனால் கொண்டாடிக் களிக்கும் ஒரு ஜோடிப் பாடல் உண்டா? அழுது வடியும் பாடல் காட்சி தானும் உண்டா? இந்தப் படத்தில் தான் எட்டுப் பாடல்கள் இருக்கின்றன. அவற்றைத் தனியே பாடல்களாக வகைப்படுத்தலாமே ஒழிய இவை எல்லாமே படத்தோடு இழைக்கப்பட்டிருக்கின்றன. ராம் இற்கும் ஜானுவுக்கும் இடையில் எழும் மெளனங்களை மட்டும் பாடல் என்ற உணர்வோட்டத்தால் நிரப்புகின்றன.

இவற்றை வெறுமனே பாடல்கள் என்றும் சொல்ல முடியாது. எல்லாவற்றிலும் இசையைப் பிரித்து விட்டு வரிகளை மட்டும் படித்தால் அது வாழ்வியலைக் கவிதையாய்க் காட்டும்.

பால்ய சினேகிதம் குறித்துப் பேசிய அழகி, ஆட்டோகிராஃபில் கூடப் பாடல்களில் சமரசம் உண்டு. கல்லூரிக் காதலைப் பேசிய இதயம் படத்திலும் கூட நாயகனைத் தாண்டி விடலைகளுக்கான கொண்டாட்டப் பாடல்கள் இருக்கும். ஆனால் பரமாத்மா மேல் ஜீவாத்மா கொள்ளும் பற்றைக் காதல் வடிவமாக்கியகுணாவில் ஓரளவு தான் சமரசம் இருக்கும். இங்கே காதலன், காதலி உரையாடலேகண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமேஎன்று பாடும்.

96 படத்தின் வெற்றியில் பங்கு போட்டதில் பாடல்களின் பங்கு உச்சமானது. அதற்குக் காரணம் முன் சொன்னது போல பாடல்கள் வெறும் பாடல்களாய் ஒட்டி இராதது தான்.

எப்படி சுபாஷிணி என்ற பாத்திரம் முதிர் கன்னியாகவும் தேவதர்ஷினி ஆகவும், சின்ன வயதில் அதுவே நியாதி ஆகவும் ஒற்றுமை கண்டதோ அது போல ஜானுவின் பின்னணிக் குரலாகவும், அதுவே பாடலாக உருப் பெறும் போது பாடகியாக சின்மயியும் தோற்றம் கண்டது போலச் சின்ன வயசு ஜானுவுக்கு கெளரியின் பின்னணிக் குரலும், பாட்டுக் குரலுமாக எவ்வளவு அழகாக யோசித்து உண்டு பண்ணியிருக்கிறார்கள்.

அதுவும்ஏன் எதும் கூறாமல் போனானோ” https://youtu.be/SYv_jRJoWiE வரும் போது ஜானுவின் அசரீரி போலல்லவா இந்தப் பாட்டு அச்சொட்டாக ஒலிக்கிறது.

தாபங்களே மற்றும் இரவிங்கு ஆகிய பாடல்களை உமா தேவி எழுத மீதி எல்லாம் கார்த்திக் நேத்தா கவி வரிகள். ஆனால் எல்லாவற்றையும் கேட்கும் போது ஒரு பொதுத் தன்மையோடே ரசிக்க முடிகிறது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அடிப்படையில் தைக்குடம் பிரிட்ஜ் இசைக் கூட்டணியின் இசைக் கலைஞராக இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஆனாலும் ரஹ்மான் போலவே இவருக்கும் சம்பரதாய பூர்வமான சினிமாப் பாணி இசையில் விருப்பமில்லை என்று பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார். அதன் பிரதிபலிப்பாக 96 படத்தின் பாடல்களைக் குறிப்பிடலாம். இனி வரப் போகும் சீதக்காதி படத்தின் பாடல்கள் இதிலிருந்து முற்றிலும் மறுபட்ட பாங்கில் இருப்பதை அவதானிக்கலாம்.

கோவிந்த வசந்தாக் சின்மயி, கெளரி இவர்களோடு ராம் இன் குரலாய் ஒலிக்கும் பிரதீப்பின் புத்துணர்வான, பழகாத பாடகக் குரல் மேலும் இனிமை சேர்க்கிறது. கரை வந்த பிறகே பாடலில் தனி ஆவர்த்தனம் காட்டும் போதும், சின்மயியோடு சேர்ந்து பாடும் போது கரைந்தும் கலக்குகிறார்.

ஒரு படைப்பின் வர்ணத்தைத் தீர்மானிப்பது வெறும் ஒளிப்பதிவாளன் அல்ல அதன் இசையமைப்பாளனும் தான் என்பதை 96 மீள நிரூபித்திருக்கிறது மிக அழுத்தமாக. இந்தப் படத்தின் காட்சிகளற்ற ஒலி வடிவைக் கேட்டாலேயே படத்தில் சொல்லப்பட்ட உணர்வுகளின் பரிபாஷையை ஊய்த்துணரலாம்.

படத்தை இயக்கிய பிரேம்குமார் கூட எதிர்பார்த்திருப்பாரோ இவ்வளவு நெருக்கமாக இசை வந்து ஒட்டிக் கொள்ளுமென்று.

காதலே காதலே

தனிப்பெரும் துணையே

கூட வா கூட வா

போதும் போதும்

காதலே காதலே

வாழ்வின் நீளம்

போகலாம் போகவா நீ ...

ஆஆஆஆஆ

திகம்பரி ....

வலம்புரி....

சுயம்பு நீ....

பிரகாரம் நீ.....

பிரபாவகம் நீ.....

பிரவாகம் நீ.....

ஸ்ருங்காரம் நீ....

ஆங்காரம் நீ.......

ஓங்காரம் நீ........

நீ......

அந்தாதி நீ....

கானா பிரபா

13.12.2018


0 comments: