Pages

Friday, September 8, 2017

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼

ஒரு பாடல் என்ன மாதிரியான ஜாலமெல்லாம் செய்யும், தன்னைச் சுற்றியுள்ள சஞ்சாரங்கள் மறந்து ஏகாந்த உலகத்துக்கு அழைத்துப் போய்விடும். அப்படியானதொரு ஆகச் சிறந்ததொரு உதாரணம் இந்த "மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட".

"நா நன நன ந நா நன நன நன நா" என்று ஜானகி கொடுக்கும் ஆலாபனையோடு ஆமோதிக்கும் இசைஞானி இளையராஜாவின் அந்த ஒத்திசைக்கும் கணம் அந்த யுக மாற்றம் நிகழ்ந்து விடுகிறது. அதுவும் அந்தப் பல்லவிக்குக் கொடுக்கும் சங்கதியில் இருந்து வழுக்கிக் கொண்டு போய் தபேலாவுக்குள் விழும் ஆரம்ப வரிகள் எந்த விதமான நெருடலுமில்லாத நெருடலாகத் திரும்பும் கணம் அந்த இசைவியக்கம் இன்னொரு இசையமைப்பாளர் சிந்தையில் உதித்திருந்தால் உடைத்துக் கொடுத்திருப்பார்.

பல்லவியோடு சேரும் போது வயலின் அந்த நளினம் இருக்கிறதே ஆகா அதற்குள் சின்னதொரு காதல் ஹைகூ. வயலினைச் சீண்டும் காதலனாகக் கற்பனை செய்தால் வெட்கப் புன்னகையோடு பேசுமாற் போலப் புல்லாங்குழலின் சிருங்காரம். 
ஒரு அற்புதமான மெட்டு, அதற்குக் கிட்டிய அழகிய கவிதைத் தனமான கங்கை அமரன் வரிகள் இரண்டையும் மெச்சிப் போற்ற வாத்தியங்களைத் துணைக்கழைக்கின்றார் ராஜா பாடல் நெடுக. இந்தப் பாடலில் அணிவகுத்திருக்கும் வாத்தியங்களின் உணர்வுப் பரிமாறலை ரசிக்க மட்டும் இன்னொரு தரம் கேட்க வேண்டும்.
தன்னுடைய தோழன் கிட்டார் இந்த உபசாரத்தைக் கண்காணித்துப் பயணிக்கும் பின்னால்.

"ஆஆஆ ஆஆஆஆ" இரண்டாவது சரணத்தில் ஆர்ப்பரிக்கும் ஜானகி அப்படியே தன்னைச் தானே சுற்றுச் சுற்றி வானில் மிதக்கும் அனுபவத்தை எழுப்புமே அது போல் இருக்கும்.

இசைஞானி இளையராஜாவோடு எத்தனை பாடகிகள் ஜோடி சேர்ந்தாலும் எஸ்.ஜானகியோடு சேரும் போது கிட்டும் மந்திர வித்தையை அந்த ஒவ்வொரு பாடல்களையும் ஆராய்ச்சி செய்து தேடினால் தகும். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு பக்கம் "சிறு பொன்மணி அசையும்" என்று சொல்ல இன்னொரு பக்கம் "பூமாலையே தோள் சேரவா" என்று மனம் சொல்லுகிறது. இவ்விரண்டு பாடல்களும் போதுமா என்ன?
இங்கே இந்த "மெட்டி ஒலி காற்றோடு" பாடலில் காதலர்களின் உலகில் வேறு யாருக்கும் இடமில்லை அதனால் காதோடு பேசுவது போல நிதானம் தப்பாமல் மெதுவாகப் பாடிக் கொள்கிறார்கள்.

எங்கள் வீட்டில் ஒரு வேடிக்கை நிகழ்ந்தது நேற்று முன் தினம். இந்தப் பாடலை நான் பெருந்திரையில் போட்டு ஒலியை மட்டும் தவழ விட்டேன். பாட்டு முடிந்ததும் இன்னும் இன்னும் என்றொரு குரல் அது வேறு யாருமல்ல மூன்று வயது நிரம்பாத என் வாரிசு தான். அந்தக் குழந்தை உலகத்திலும் குடி கொண்டு விட்டது இந்த இதமான இசை, அதனால் இது காலத்தைத் தாண்டிய பாட்டு இன்னும் அதைத் தாண்டும்.

மெட்டி ஒலி காற்றோடு 
என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக
மெல்லிசையின் பா ஆக

1 comments:

Anonymous said...

Yes. its my favorite.

Raj.