P.B.ஶ்ரீனிவாஸ் என்ற பாடகரே இல்லாதவொரு உலகம் எப்படியிருந்திருக்கும்? தீராத் தாகம் கொண்ட ஒருவன் பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட நிலை போல என்றே அதை எடுத்துக் கொள்வேன்.
P.B.ஶ்ரீனிவாஸ் அற்புதமான பாடகர், மெல்லிசைக் குரலில் அடித்துக் கொள்ள அவரை விட்டால் ஆளே இல்லை, ஜெமினி கணேசனுக்கு இவர் பாடினால் அச்சொட்டாக அமைந்து விடும், தமிழில் மட்டுமா? கன்னடத்தில் இன்றும் கோயில் கட்டாத குறையாகக் கொண்டாடி வருகிறார்களே என்றெல்லாம் புகழ்மாலை சூட்டலாம். ஆனால் இவையெல்லாம் கடந்து ஆத்மார்த்தமாக மனசுக்குள் ஊடுருவும் குரல் அல்லது எமது மனம் பேசினால் அது எந்தவிதமான ஆற்றுப்படுத்தலை உண்டு பண்ணுமோ அப்படியொரு மகா சக்தி இந்தக் குரலில் இருக்கிறது அது தான் முன்னது எல்லாம் கால வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனாலும் இதையே அவரின் சாகித்தியத்துக்கான ஆகச் சிறந்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள முடியும்.
“வாடி நின்றால் ஓடுவதில்லை” என்று ஒரு அடியை எடுத்துக் கொடுக்கிறார் மனம் சொல்கிறது
“இல்லை இதை என்னால் ஏற்க முடியவில்லை இன்னும் மனம் சஞ்சலம் கொள்கிறது தாங்கெணாத் துன்பம் மேலெடுகிறது”
இதோ அடுத்த கணமே அதே அடியை இன்னும் கனிவாக எடுத்துக் கொடுக்கிறார் அதுவே முதுகில் வருடி ஆறுதல் சொல்லுமாற் போல
“வாடி நின்றால் ஓடுவதில்லை”
அழுது ஆறுதல் கொள்கிறது மனம். மயக்கமா கலக்கமா? இனி அது வருமா? ஏழை மனதை மாளிகையாக்குகிறது அந்த இரண்டு நிமிடம் 41 விநாடிகள் ஒலிக்கும் பாட்டு
https://youtu.be/KrnntpGzTy4
தாங்கெணாத் துன்பத்தில் துவண்டு போயிருப்பவன் ஆழ்கடலில் சிக்கித் தனக்கொரு துடுப்பு கிட்டாதா என்று ஆறுதல் தேடும் போது ஆதரவாய் நாலு வார்த்தை பேசாத நண்பன், உற்றார், உறவினர் இன்ன பிறவெல்லாம் கடந்து இந்த ஶ்ரீனிவாஸ் குரல் இங்கே வா அதை நான் தருகிறேன் என்றழைக்கும்.
தூக்கமற்ற பின்னிரவுகளில் ஆறுதல் தேடி வானொலிப் பெட்டியைக் காதுக்கருகே வைத்திருந்தவர்கள் முகமறியாது அவர் உளமறிந்து அதிகாலை ஒன்று இரண்டு, மணிக்கெல்லாம்
P.B.ஶ்ரீனிவாஸை துணைக்கழைப்பேன். அப்போது அவர் “தேவி ஶ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே ” https://youtu.be/xYOUZeTMwjM
என்று பாடி விட்டுப் போவார்.
காதலியின் கரு வளையக் கண்மணியை வைத்த கண் வாங்காது பார்ப்பது போன்ற சுகம் தர வல்லது ஏகாந்த இரவின் நிறத்தைத் தனிமையில் அனுபவிப்பது. அந்த நேரத்தில் எழும் பாட்டு இப்படியிருக்குமோவென ஒலிபரப்புவேன் இதை,
“தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது”
https://youtu.be/o7ghy77qPNk
அதன் பின்னால் வரும்
“மெளனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாட வேண்டும நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்”
https://youtu.be/-uUZo5GPhwM
அந்தரத்தில் தவிக்கும் மனசு உள்ளே புழுங்கும் ஆற்றாமையை அணை போட்டு நிலவை அவளாக உருவகப்படுத்தி நிராசையாக்கிப் பாடும் அவனின் உள் மனப் போராட்டம் இத்தனை யுகங்கள் கடந்தும் இன்றைய காதலர் நெஞ்சிலும் நிலைத்திருக்கும்
“நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை”
https://youtu.be/F0xW0-EfOrQ
“உங்கள் சனங்களின் மன உறுதியைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது” என்றார் தமிழகத்து நண்பர் ஒருவர்.
“ஏன்” என்று கேட்டேன் சிரித்துக் கொண்டு
“ஒரு தலைமுறையையே எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரேயொரு குடும்பத்தை எடுத்துப் பாருங்கள் இந்த நாற்பது ஆண்டுகளில் எத்தனை இடப் பெயர்வுகளை அந்த மனிதன் சந்தித்திருப்பான்?
அதையும் விடுங்கள், இதோ ஒரு சில நிமிடங்களுக்கு முன் தன் முன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த தகப்பனை, தாயை, உடன் பிறந்தவரை, மகனை, மகளை சட்டென்று வந்து குண்டு போட்டு விட்ட வானூர்திக்கோ, பாய்ந்து வந்த ஷெல்லடிக்கோ தின்னக் கொடுத்து விட்டு, ஒரு சொட்டுக் கண்ணீர் தானும் அந்த இடத்தில் விட முடியாது செங்குருதியை வழித்துத் துடைத்து விட்டு, தன்னைச் சுற்றி இருப்பவர் உயிர் நாடி பார்த்து அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுகிறானே அவனைப் பாருங்கள், ஒரு ஆண்டுக்குள்ளேயே தன்னைப் புதுப்பித்து விட்டு
தன் உரிமைக்காகப் போராட வருகிறானே அவனைப் பாருங்கள்
என்னால் முடியாதய்யா உங்கள் சனங்கள் மாதிரி வாழ, அந்த இடத்தில் தற்கொலை செய்திருப்பேன்” என்றார்.
அவருக்கு நான் என்ன சொன்னாலும் அது இந்த ஒற்றைப் பாடலின் மொழி பெயர்ப்பாகத் தான் இருக்கும்.
“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?”
https://soundcloud.com/manimekalai-tamil/tholvi-nilyena-ninaithaal
தம் உரிமைக்காகப் போராடும் ஈழத்துச் சகோதரர்களை மனதில் நினைத்தே இதை எழுதினேன் என்றார் ஆபாவாணன் நான் கண்ட வானொலிப் பேட்டியில். ஆபாவாணனோடு P.B.ஶ்ரீனிவாஸ் பாடிய இந்தப் பாடல் வந்த காலத்தில் போராட்டக் களத்திலும்
முப்பது வருடங்கள் கடந்து முள்ளி வாய்க்காலிலும் முள்வேலி முகாம்களிலும் யாரோ ஒருவரின் மன உறுதியின் முணு முணுப்பாயும் ஆகுமென்று அவர் அப்போது அறிந்திருப்பாரா? “தோல்வி நிலையென நினைத்தால்” ஐ சுவீகாரம் எடுத்துக் கொண்டது ஈழம்.
இன்று எண்பத்தேழு வயது காணும் P.B.ஶ்ரீனிவாஸ் ஐயா என்றும் நீங்கள் எங்களோடு உயிர்த்திருப்பீர்.
0 comments:
Post a Comment