Pages

Friday, September 8, 2017

என் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻

இன்று காலையில் இருந்து மத்யமாவதியைச் சுற்றி அலைகிறது மனசு. யாராவது எதிர்ப்பட்டு தன் பெண் குழந்தைக்குப் பெயர் சூட்டச் சொன்னால் கூட"மத்யமாவதி" என்று வைத்து விடுவேனோ என்று கிறுக்குப் பிடிக்குமளவுக்கு இந்த ராகத்தில் அமைந்த "என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்" பாடலோடு தான் இன்று முழுக்கப் பயணம்.
காலையிலேயே இதைக் கிளப்பி விட்டார் அன்பின்
Tesla Ganesh
புதுமை இயக்குநர் ஶ்ரீதர் படங்களில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு 
https://youtu.be/eabZ8MVA9UU
எனும் அட்டகாசமான பகிர்வு வழியாக.

மங்கலமான குரல் என்றாலேயே வாணி ஜெயராம் எனும் அளவுக்கு "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலால் எழுபதுகளில் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். பிடித்த பாடகி என்றால் P.சுசீலாம்மா, S.ஜானகி அளவுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதபடி வாணி ஜெயராம் அவர்களிடம் ஒரு கண்டிப்பான சங்கீத சாதகர் போன்ற தொனி இருப்பதே அதற்குக் காரணம். 
"பூவான ஏட்டத் தொட்டு", "ஏபிசி நீ வாசி" போன்ற
ஜனரஞ்சகம் தழுவிய பாடல்களில் அந்தக் கண்டிப்புத் தூக்கலாகத் தெரியும்.
ஆனால் வாணி ஜெயராமை மீறி யார் இதைக் கொடுக்க முடியும் எனும் அளவுக்கு "மேகமே மேகமே", "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" என்று நியாயம் கற்பிக்கும் இன்னொரு முகம் அவருக்குண்டு.

"என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்" https://www.facebook.com/kana.praba/posts/10203610960819936 பாடலைப் பற்றி முன்னர் எழுதிய போதும் இதே சிந்தையோடே வாணி ஜெயராமின் குரலை ஆராதித்திருக்கிறேன்.

வாணி ஜெயராம் அவர்களை நான் பேட்டி கண்ட போது மனதுக்குள் "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" படப் பாடல்கள் தான் ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில் மட்டும் சுளையாக ஐந்து பாடல்களைப் பாடினாரே. ஆனால் அந்தப் பேட்டியில் இசைஞானி இளையராஜா இவருக்குக் கொடுத்த அருமையான பாடல்கள் அளவுக்கு மெச்சாது கடந்து போனது உள்ளூர வருத்தம் தந்தது. அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தின் ஐந்து பாடல்களில் "குறிஞ்சி மலரில்" பாடலில் வாணி ஜெயராமை மீறி கீச்சு தென்படுவதால் அது இன்னோர் பாடகிக்குப் போயிருக்கலாமோ என நினைப்பதுண்டு. ஆனால் "நானே நானா யாரோ தானா" பாடலும் "என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்" பாடலும் அவருக்கு மட்டுமா எமக்கும் கூடப் பொக்கிஷமாகக் கிட்டியவை ஆச்சே. ஒரு பக்கம் "நானே நானாவில்" போதையேற்றியும் இன்னொரு பக்கம் "என் கல்யாண வைபோகம்" பாடலில் குடும்பக் குத்துவிளக்காகவும் மிளிரும் வாணியின் குரல்.

"மல்லிகை முல்லை பூப்பந்தல்" பாட்டு https://youtu.be/dmx2gkelEnc மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் "அன்பே ஆருயிரே" படத்துக்காகக் கொடுத்தது. அந்தப் பாட்டை எவ்வளவு ரசித்துக் கேட்பேனோ அதன் தங்கை போலவே இந்த "என் கல்யாண வைப்போகம்" பாடலையும் பரிவு காட்டுவேன்.
இந்த இரண்டு பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி என்பது கொசுறுத் தகவல்.

தொண்ணூறுகளில் சன் தொலைக்காட்சியின் சப்தஸ்வரங்கள் வழியாகவே இந்தப் பாடல் எனக்குப் பல்லாண்டுகளுக்கு முன் அறிமுகமாகி நேசிக்க வைத்தது. அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில் சுபாஸ் கஃபே றோல்ஸ், நியூ விக்டேர்ஸ் றெக்கோர்டிங் பார் போன்ற நினைவழியாச் சுவடுகள் மங்கலாகத் தெரியும் என் பால்யத்தில் உறவினர் காரில் படமாளிகைகளுக்குப்  போனதை நினைவு கொள்ளும் போது இந்தப் பாட்டுத் தான் பின்னணி வாசிக்கும்.

"என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்" பாடல் எழுபதுகளில் இறுதியில் தமிழ்த் திரையிசை எவ்வளவு பூரிப்போடு நிறை மாதக் கர்ப்பிணியின் சந்தோஷத்தில் இருந்தது என்பதைக் காட்டும் ஒரு சின்ன உதாரணம். இந்தப் பாடலை உற்றுக் கேட்கும் போது சரியாக 1.12 நிமிடத்தில் ஒரு கிட்டார் துளிர்த்து விட்டுப் போகும் அரை செக்கனுக்குள் அடக்கும் இசைத் துளியே சான்று இந்தப் பாடல் எவ்வளவு பரிபூரணம் நிறைந்ததென்று.

மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்
மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர்கூட்டம் எதிர்பார்க்கும் இளவேனிற் காலம்
பூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ...

https://youtu.be/diwhdy3vQfE

0 comments: