"தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க" https://youtu.be/5TZ6afX_ZJ8
ஏதோவொரு பண்பலை வானொலியோ அல்லது என் ஊர் போகும் பஸ்வண்டியோ இந்தக் கணம் எடுத்து வரக் கூடும் இதை. தொண்ணூறுகளின் சுகந்தமாகப் பரவிய இந்தப் பாட்டு இலங்கையின் பண்பலை வானொலிகளால் இன்றும் மெச்சப்பட்டு வானலையில் தவழவிடப்படுகிறது. "புதிய தென்றல்" படத்துக்காக இடம்பெற்ற பாடல் என்ற அடையாளத்துடன் தொக்கி நின்று விடுகிறது.
சிலவேளை ஆர்வக்கோளாறு ஒலிபரப்பாளர்களால் தேனிசைத் தென்றல் தேவா என்றோ சந்திரபோஸ் என்றோ இல்லை இசைஞானி இளையராஜா என்றோ கற்பிதம் செய்து அறிவிக்கப்படுவதுமுண்டு.
ஆனால் இந்தப் பாடலைப் பிரசவித்த ரவி தேவேந்திரன் என்ற அற்புதமான இசையமைப்பாளர் அடையாளம் மறைக்கப்பட்டு விடும். இந்த மாதிரியான மழுங்கடிப்பை இந்த ரவி தேவேந்திரன் "வேதம் புதிது" காலத்தில் "தேவேந்திரன்" ஆக இருந்த காலத்திலும் அனுபவித்திருக்கிறார். அண்மையில் கூட ஒரு வானொலி "கண்ணுக்குள் நூறு நிலவா" வை இளையராஜாவுக்கு எழுதி வைத்திருந்தது. ராமர் அணைக்கு அணில் போல என்னால் இயன்ற அளவுக்கு ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனை எழுத்துச் சிறைக்குள் அடக்கி வைக்கும் பணியில் இந்தக் குறுந்தொடரை ஆரம்பிக்கிறேன்.
ஒரு இயக்குநர் பாசறையில் குரு பாரதிராஜா முதல் சிஷ்யர்கள் மனோஜ்குமார், ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் என்று ஒரே இசையமைப்பாளருடன் சம காலத்தில் அல்லது குறுகிய கால இடைவெளியில் பணியாற்றும் அபூர்வம் நிகழ்த்தப்பட்டது இளையராஜாவுக்குப் பின் தேவேந்திரனுடன் தான்.
அது மட்டுமா 1987 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை கார்த்திகை 27 தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் கூறும் "பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே" பாடலைத் தவற விட்டிருக்குமா ஈழம் கடந்த தமிழுலகம்? அங்கேயும் தேவேந்திரன் இருக்கிறார். இவையெல்லாம் குறித்து விரித்துச் சொல்லவே இத்தொடர்.
மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்? அதுவே தேவேந்திரனுக்கும் நேர்ந்தது அந்த வாய்ப்பை எப்படி அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பதைத் தொடரப் போகும் முதல் பாகத்தில் பார்ப்போம்.
- கானா பிரபா -
(தொடரும்)
#தமிழ்த்திரையிசைஅரசர்கள் #தேவேந்திரன்
0 comments:
Post a Comment