கடந்த ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இசையமைப்பாளர் அனிருத், "நானும் ரவுடி தான்" படத்தில் கொடுத்த சிறப்பான பாடல்களால் கவரப்பட்டார். ஆனால் இந்த ஆண்டைப் பொறுத்தவரை "ரெமோ" என்ற வெற்றிப்படத்தில் அவரின் பங்களிப்பு இருந்ததோடு "செஞ்சுட்டாளே" https://www.youtube.com/shared?ci=F5hc4BXoHLo பாடலை ஹிட் பட்டியலில் சேர்த்திருந்தாலும் அந்தப் படப் பாடல்கள் ஏதோ தனித்த இசை ஆல்பங்களுக்குண்டான தகுதியோடு இருப்பதாகவே பட்டது. எனவே அடுத்த ஆண்டு அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை வைத்துத் தான் மீளத் தன்னை நிரூபிக்க வேண்டியது அவசியம்.
அனிருத் போலவே Hip Hop தமிழாவுக்கும் ஒரு பெரிய வாய்ப்பைக் கடந்த ஆண்டு "தனி ஒருவன்" பாடல்களில் சாதித்துக் காட்ட முடிந்தது. இந்த 2016 இல் கிடைத்த வாய்ப்புகளில் அதைத் தக்க வைக்க முடியவில்லை.
இசையமைப்பாளர் தர்புகா சிவாவைக் கவனிக்க வைத்தது கிடாரி பாடல்கள். குறிப்பாக "வண்டியிலே நெல்லு வரும்" https://www.youtube.com/shared?ci=qBVh2in1BJw இந்த ஆண்டின் ஹிட் பட்டியலில் அடங்கும்.
வன வாசத்துக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்த ஆண்டு "தர்மதுரை" "சென்னை 28 - பாகம் 2" படங்களின் வெற்றியோடு அவரும் கவனிக்கப்பட்டார். அவருக்கு இன்னமும் பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதை "யாக்கை" படத்தின் நீ" https://www.youtube.com/shared?ci=jtPF9ElkLP0 என்ற தனிப்பாடலை காதலர் தினத்தன்று வெளியிட்ட போது கிட்டிய கவனயீர்ப்பு நிரூபித்தது. அத்தோடு "நெஞ்சம் மறப்பதில்லை" படத்துக்காக மீண்டும் இயக்குநர் செல்வராகவனோடு இணைந்த போதும் அதேயளவு மகிழ்ச்சி உணர்வைப் பகிர்ந்து கொண்டனர் இணைய ரசிகர்கள்.
"இடம் பொருள் ஏவல்" படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து ஓராண்டைக் கடந்தும் படம் வெளிவராத நிலையில் "தர்மதரை" படத்தை சீனு ராமசாமி இயக்கவும், அந்தப் பாடல்கள் அவசரகதியில் வெளியிட்டது போன்றதொரு உணர்வு. ஆனால் விஜய் சேதுபதியின் சினிமா வாழ்வில் "தர்ம துரை" கொடுத்த உச்ச வெற்றியோடு யுவனின் பாடல்களும் கவனிக்கப்பட்டன. "ஆண்டிப்பட்டி" https://www.youtube.com/shared?ci=mFyVT-H2ZHs பாடல் அடிக்கடி சின்னத்திரையில் வலம் வந்தது. இதிலும் நான்கு பாடல்களை வைரமுத்து எழுதினார்.
தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு பாடல் அதிரி புதிரி வெற்றியாகும் ஆனால் அந்தப் பாடலில் அப்படி என்ன இருக்கிறதென்று தேடிக் கொண்டே இருப்போம். அப்படியொன்று தான் "மக்கா கலங்குதப்பா" https://www.youtube.com/shared?ci=sJKFe8INiFo பாடல் (பாடல் வரிகள் மதிச்சியம் பாலா). 2016 ஆம் ஆண்டில் தேநீர்க் கடைகளில் இருந்து கடைக்கோடி ரசிகன் வரை இந்தப் பாடல் சாம்ராஜ்ஜியம் நடத்துதுகிறது.
"நெஞ்சம் மறப்பதில்லை" பாடல்கள் வருவதற்கு முன் இருந்த எதிர்பார்ப்பு பாடல்கள் வந்த பின் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். கலவையான விமர்சனங்களோடு பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். படம் வந்த பின் தான் இந்தக் குழப்பம் தீரும்.
நடிக்க வந்து தன் பிழைப்பைக் கெடுத்த வகையில் மூன்றாவது வெற்றிகரமான ஆண்டில் நுளைகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். கடந்த ஆண்டு பாடல்கள் வெளியாகி 2016 இல் திரைக்கு வந்த "தெறி" பாடல்கள் அனைத்தும் கேட்கும் தரம் என்ற ஒன்றே போதும் என்று நினைத்து விட்டார் போலும். "மீண்டும் ஒரு காதல் கதை" படம் போல அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளிலாவது இன்னும் உழைத்திருந்தால் இந்த ஆண்டு திகழ்ந்திந்திருப்பார்.
நடிக்க வந்து வெற்றியைக் காட்டிய வகையில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனிக்கு "பிச்சைக்காரன்" படம் கொடுத்த பணக்கார வெற்றி அவருக்குத் திருப்தியாக இருந்திருக்கும். அந்தப் படத்திற்காக அவர் இசையில்' "நெஞ்சோரத்தில்" https://www.youtube.com/shared?ci=veILFv0bxLA பாடல் கலக்கல் ரகம். "நூறு சாமிகள்" https://www.youtube.com/shared?ci=mEemB2K1fZA பாடலும் ரசிக்கும் தரம்.
ஆனால் தொடர்ந்து வந்த சைத்தான் படத்தின் பாடல்களில் முன்னதை விடத் தாண்டிக் கொடுக்கக் கூடிய இசை கிட்டவில்லை.
இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படம் "தாரை தப்பட்டை" இந்த 2016 ஆண்டு வெளியாகியிருந்தாலும் பாடல்கள் ஏற்கனவே முந்திய ஆண்டில் வெளியாகிக் கவனத்தை ஈர்த்தன. ஆனால் படம் வெளியாகி அதன் மோசமான படமாக்கத்தால் புதைந்து போயின.
அம்மா கணக்கு, ஒரு மெல்லிய கோடு, அப்பா, ஓய், எங்க அம்மா ராணி படங்களின் பாடல்கள் பரவலாகப் போ ய்ச் சேராது பத்தோடு பதினொன்றா கின.
"குற்றமே தண்டனை" படத்தின் பின்னணி இசை இளையராஜாவின் பேர் சொல்லும் பிள்ளையானது இந்த ஆண்டு.
"நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்" https://www.youtube.com/shared?ci=QjtJZ-rZsWw 24 படத்துக்காக, மதன் கார்க்கியின் வரிகளில் அமைந்த இந்தப் பாடல் தான் 2016 இல் வெளிவந்த பாடல்களில் மெட்டுக்குக் கச்சிதமாக வந்தமர்ந்த வரிகளைச் சுமந்த பாடலாகச் சொல்வேன்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 24 மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் இந்த 2016 இல் கிட்டி, இரண்டில் அச்சம் என்பது மடமையடா பாடல்கள் ஒப்பீட்டளவில் பரவலாகப் போ ய்ச் சேர்ந்தவை.
குறிப்பாக "தள்ளிப் போகாதே" இளசுகளின் இன்னொரு தேசிய கீதம். இது தாமரையின் வரிகளுக்காகவும் கொண்டாடப்பட்டது.
"ராசாளி", "அவளும் நானும்" பாடல்களும் வெற்றி முகம் கொண்டவை.
ஆனால் ஒரு விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்களுக்கு நிகராக இந்தப் பாடல்களை ஒப்பிட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அச்சம் என்பது மடமையடா படம் வெளியான பின்னர் படத்தையும் அவ்வாறே ஒப்பிட்டு விண்ணைத் தாண்டி வருவாயா தான் விண்ணை முட்டியது.
ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்த இரு முகன் பாடல்கள் சிறப்பானவை. அதிலும் "கண்ணை விட்டு" https://www.youtube.com/shared?ci=kYZlWoMUOgc பாடல் 2016 இன் சிறந்த பாடல்கள் வரிசையில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியது. "சிங்கம் 3" பாடல்களைக் கேட்ட போது இந்த சிங்கங்களுக்கு ஹாரிஸோ இல்லை தேவி ஶ்ரீ பிரசாத்தோ யார் இசையமைத்தாலும் ஒரே அமைப்போ என்று எண்ண வைத்தது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு 2016 இல் கிட்டிய வாய்ப்புகளால் திக்கு முக்காடிப் போயிருப்பார். அது பாடல்களிலும் தெரிகிறது.
மனிதன் படத்திற்குச் சத்தமே இல்லாமல் கொடுத்த பாடல்கள் தான் இந்த 2016 இல் அவர் கொடுத்ததில் முதல் தரம் என்பேன். அதிலும் "அவள் குழல் உதித்திடும்" https://www.youtube.com/shared?ci=1AJFcPVVaCg பாடல் வெகு பிரமாதம். "முன் செல்லடா" https://www.youtube.com/shared?ci=PSvFJ48lMpo அட்டகாசமான தன்னம்பிக்கைப் பாட்டு. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததோ என்றெண்ணணத் தோன்றும். கபாலி பாடல்கள் கடைக்கோடி வரை சென்றாலும் ரஜினி என்ற உச்ச நட்சத்திரத்துக்கு இது போதாது என்றே ரஜினியின் தீவிர ரசிகர்கள் இன்றும் ஆதங்கப்படுகிறார்கள்.
"மாய நதி இன்று" பாடல் பரவலாகப் போய்ச் சேர்ந்த பாடல்களில் ஒன்றாக அமைந்தது.
இறைவி பாடல்கள் அக்மார்க் சந்தோஷ் நாராயணன் தனமாக அமைந்தன.
இறுதிச் சுற்று படத்தின் "ஏ சண்டக்காரா" கவனிக்கப்பட்டது.
"தகிட தகிட" என்ற ஒற்றைப் பாடல் "காஷ்மோரா" வின் பாடல்களில் தனித்து விளங்கினாலும் இந்தப் படப் பாடல்கள் கால நேரத்தோடு படத்தின் வெளியாக்கத்துக்குச் சில மாதங்களுக்கு முன் வந்திருந்தால் இன்னும் பரவலாகப் போ ய்ச் சேர்ந்திந்திருக்கும் முத்திரைகள் உண்டு.
' கொடி" பாடல்களும் சந்தோஷ் நாராயணனுக்கு ஓரளவே பெயர் கொடுத்தவை.
இந்த 2016 ஆம் ஆண்டில் தன்னுடைய தனித்துவத்தை விடாது கொடுத்த பாடல்கள், விட்டுக் கொடுத்த பாடல்கள் என்ற வகையில் இரண்டாவது நிலையில் தற்போது வந்த "பைரவா" பாடல்கள் அமைந்திதிருக்கின்றன.
தமிழ் சினிமா வில் காலத்துக் காலம் ஒரு இசையமைப்பாளர் காட்டில் மழை பொழிந்து கொண்டிருக்கும். மள மளவென்று படங்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அதற்கு உதாரணமாக ஒரு காலத்தில் தேவா இப்போது டி.இமான்.
"முன்னாள் காதலி' https://www.youtube.com/shared?ci=QkfwyZ3kW8k என்று வெறி பிடித்துப் பாடும் பாடல் வகையறாவில் இருந்து , "மிருதா மிருதா' https://www.youtube.com/shared?ci=jG6Frsf5Eu0 என்று மென் சோகப் பாடல்கள் வரை இந்த 2016 ஆண்டு டி.இமானுக்கான இன்னொரு கல்யாண மேள ஆண்டு.
"கண்ணைக் காட்டு போதும்" https://www.youtube.com/shared?ci=aX93o5hCthU (றெக்க) பாடலைக் குமுதம் அரசு கேள்வி பதிலில் வாசகர் கேள்வியாக அமை ந்ததில் இருந்தும், ஹன்சிகாவின் பேட்டியில் தனக்கு "செந்தூரா" https://www.youtube.com/shared?ci=zy8CTiowjC4 (போகன்) பாடல் பிடிக்கும் என்று சொல்லியதில் இருந்தும் டி.இமான் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறார் என்று புரியும்.
தனக்கு மறுவாழ்வு அளித்த பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவான தொடரிக்காக
"போன உசிரு வந்திருச்சு" https://www.youtube.com/shared?ci=F-7IH8sZUFE பாடல் இந்த ஆண்டின் ஹிட் ரகத்தில் சேர்ந்ததது.
பிரபு சாலமன் இயக்கினாலோ தயாரித்தாலோ ஒரே மாதிரித் தான் கொடுக்க வேண்டும் என்று டி.இமான் கங்கணம் கட்டியிருப்பார் போல. பிரபு சாலமன் தயாரிப்பில் "ரூபாய்" திரைப்படத்துக்காகக் கொடுத்த "உன் கூடப் பேசத் தானே" https://www.youtube.com/shared?ci=ynu5rJmo1lw பாடலைக் கேட்ட போது அவ்வாறே தோன்றியது.
"அடடா இது என்ன" (தொடரி), "கண்ணம்மா கண்ணம்மா" (றெக்க), "அடியே உன்னைப் பார்த்துட நான்" (வெற்றிவேல்) போன்ற பாடல்களும் 2016 இல் டி.இமான் இசையில் கவனத்தை ஈர்த்த பாடல்கள்.
2016 ஆம் ஆண்டின் திரையிசைப் பாடல்களைப் பொறுத்தவரை இந்தக் கட்டுரையில் தொட்டுச் செல்லாத பாடல்கள், இசையமைப்பாளர்கள் இன்னும் உண்டு. இங்கே கோடிட்டுக் காட்டியவை முக்கியமான சிலதுகள் தான்.
இது இளையவர்களின் காலம், வளர்ந்து வரும் இளம் இசைமைப்பபாளர்களும், பாடலாசிரியர்களுமாக இளையவர்களே அதிகளவில் வெற்றியைப் பங்கு போட்ட காலமாகவே 2016 இன் தமிழ்த் திரையிசையைப் பார்க்க முடிகிறது.
2017 ஆம் ஆண்டின் திரையிசை எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்போம்.
(நிறைந்தது)
கடந்த பதிவுகள்
பாகம் 1
http://www.radiospathy.com/2016/12/2016.html
பாகம் 2
http://www.radiospathy.com/2016/12/2016_21.html
பாகம் 3
http://www.radiospathy.com/2016/12/2016_22.html
2 comments:
அட்டகாசமான அலசல். பல பாடல்களை நான் இன்னும் கேட்கவே இல்லை . அந்த அறிமுகத்திற்கு நன்றி!
நன்றி மாம்ஸ்
Post a Comment