நிவாஸ் கே பிரசன்னா 🎺
ஷான் ரால்டன் 🎻
லியோன் ஜேம்ஸ் 🎸
அஜீஸ் 🎷
"கொஞ்சிப் பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா" https://www.youtube.com/shared?ci=U2ZZRzXUiwE இந்தப் பாடலைப் பற்றி எழுதும் போது உலகத்தின் ஏதோவொரு மூலையில் ஏதோவொரு வானொலி இந்தப் பாட்டை ஒலிபரப்பிக் கொண்டிருக்கலாம். அவ்வளவுக்கு இந்த ஆண்டு ஏகோபித்த ஜனரஞ்சக அந்தஸ்து பெற்ற பாட்டு.
சிங்கப்பூர் ஒலி வானொலியில் 35 வாரங்களைக் கடந்து முதலிடத்தைத் தக்க வைத்த பாட்டு. ஏலவே மற்றைய வானொலிகளின் இசை அணித் தேர்வுகளிலும் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கும் பாட்டு. இப்படியான கெளரவமெல்லாம் எடுத்த எடுப்பில் ஒரு புதுமுக இசையமைப்பாளருக்குக் கிடைப்பது வரம். அந்த வரம் இந்த ஆண்டு "சேதுபதி" படத்தின் வாயிலாக நிவாஸ் கே பிரசன்னாவுக்குக் கிட்டியிருக்கிறது.
"உன்னால காக்கிச் சட்டை கலரு ஆச்சு" https://www.youtube.com/shared?ci=-qkeK-gryiU பாடலும் கூட சேதுபதி படத்தின் வெற்றியில் பங்கு போட்ட பாடல்களில் ஒன்றாக அடுத்து அமைந்தது.
அனுருத் குரலில் "ஹே மாமா" https://www.youtube.com/shared?ci=tm6EA6xDOs8 ஒரு அட்டகாசத் துள்ளிசை. போலீஸ் படங்களுக்கு இம்மாதிரியான நிறம் கொண்ட துள்ளிசை கொடுத்தால் அதன் கெத்தே தனி தான். சூப்பர் போலீஸ் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் "சுந்தரா நீ யாரடா" என்ற பாடலைக் கொடுத்து இன்பக் கலவரம் ஏற்படுத்தியது நினைவுக்கு வருமளவுக்கு "ஹேய் மாமா" பாடல் சிறப்பு மிகுந்ததாக இருக்குறது.
சேதுபதி படத்தைத் தயாரித்த மெல்பர்ன் வாழ் நண்பர் ஷண் சுதர்சனுக்குப் படத்தின் வெற்றியை விட இந்தப் பாடல்களின் வெற்றி இன்னும் இனிப்பாக அமைந்திருக்கும்.
"தெகிடி" படம் மூலமாக அறிமுகமான நிவாஸ் கே பிரசன்னாவுக்கு ஒரு ஆண்டு இடைவெளி கொடுத்து
2016 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றியைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார் சேதுபதி.
"விண்மீன் விதையில்" https://www.youtube.com/shared?ci=acJj0nBKhwY (தெகிடி) பாடலின் நீட்சியோ எனப்பட்டது நிவாஸ் கே பிரசன்னா இந்த ஆண்டு கொடுத்த இன்னொரு படமான "ஜீரோ" படப் பாடல்கள். சேதுபதி படப்பாடல்கள் அளவுக்குப் பிரபலமாக இல்லாவிட்டாலும் "உயிரே உன் உயிரென நானிருப்பேன்" https://www.youtube.com/shared?ci=tKeHrDuf8nQ பாடலைக் கேட்டால் சேதுபதிக்கு சற்றும் சளைத்ததல்ல என்று சொல்ல வைக்கும். இந்தப் படத்தின் பாடல்களில் You are in my heart https://www.youtube.com/shared?ci=64vfg25cJ6g ஒரு ஆங்கிலப்பாட்டும் இருக்கிறது. பாடலைக் கேட்டுக் கொண்டே போங்கள். பாடல் முடிவில் ஒரு வயலின் ஆலாபனை இருக்கும். அப்படியே நெஞ்சைக் கிள்ளி விடும்.
ஜீரோ படத்தின் ஒட்டுமொத்தப் பாடல்களைக் கேட்ட போது இந்த இசைத் தொகுப்பு முழுவதுமே மென் மெலடியாக இருக்கவேண்டும் என்று முடிவு கட்டி இசையமைத்தது போல் இருக்கும்.
கேட்டுப் பாருங்கள் https://www.youtube.com/shared?ci=QW0nYoo04i0
இளம் இசையமைப்பாளர்கள் தமக்குள் ஒற்றுமையாக ஒருவர் இசையில் இன்னொருவர் என்று பாடகராகவும் பங்களிக்கிறார்கள். "அடியே அழகே" பாடலை ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடிய ஷான் ரால்டன் அடிப்படையில் ஒரு இசையமைப்பாளர். அவருக்கு இந்த ஆண்டு வரவாக "ஜோக்கர்" படம் இசையமைக்க வாய்த்தது. இந்தப் படத்தின் கதையோட்டத்தை வைத்துக் காட்சிச் சூழலுக்கு இவர் கொடுத்த இசையில் "செல்லம்மா" மனதில் நிற்கிறது.
நடிகர் தனுஷ் ஜோக்கர் படத்தைப் பார்த்த பின் ட்விட்டரில் வெகுவாகப் பாராட்டியிருந்தார். அதன் தொடர்ச்சியோ என்னமோ ஜோக்கர் பட இசையமைப்பாளர் ஷான் ரால்டனைத் தனது இயக்கத்தில் வரும் "பவர் பாண்டி" படத்துக்கு இசையமைக்க வைத்திருக்கிறார். இதன் மூலம் கிட்டிய பெரிய வாய்ப்பைத் தக்க வைப்பாரா என்று அடுத்த ஆண்டு வரை காத்திருந்து அறிவோம்.
இன்றைய திரையிசைச் சூழலில் ஏகத்துக்கும் இசையமைப்பாளர்கள் இறைந்து கிடப்பதால் வாய்ப்புக் கிடைத்தால் போதும் என்ற நிலை நல்ல திறமைசாலிக்கு ஒரு சவாலை ஏற்படுத்துகிறது. அதாவது என்னதான் தன் திறமையைக் கொட்டி இசையமைத்தாலும் கிடைக்கும் படைப்பு சேதாரமாக இருந்தால் அந்த நல்லிசையும் சேர்ந்து ஒடுங்கி விடும் அபாயம் உண்டு. அந்த மாதிரியான ஒரு இடர் தான் லியோன் ஜேம்ஸ் இற்கு.
ஏ.ஆர்.ரஹ்மானின் பாட்டுக் குழுவில் இருந்த நோயல் ஜேம்ஸ் இன் மகன் லியோன் ஜேம்ஸ் "காஞ்சனா" படத்தில் "வாய்யா என் வீரா" என்ற ஒற்றைப் பாடலில் அறிமுகமாகிய இவருக்கு
"கோ 2" படம் முழுமையான பாடல்களைக் கொடுத்த வகையில் இசையமைப்பாளராக அறிமுகமாக்கியது. கடந்த ஆண்டு இறுதியில் பாடல்கள் வெளியாகிய நிலையில் இந்த ஆண்டு தான் "கோ 2" படம் வெளியானது. இதில் "கண்ணம்மா" https://www.youtube.com/shared?ci=q42z9sLfkK8 பாடல் பரவலாக இசை ரசிகர்களைச் சென்றடைந்தது.
அதைத் தொடர்ந்து "கவலை வேண்டாம்" பட வாய்ப்பு . "உன் காதல் இருந்தாப் போதும்"
https://www.youtube.com/shared?ci=Rc8SqP-gN4I என்ற பாடல் வானொலிகளால் புகழடைந்தது. லியோன் ஜேம்ஸ் தான் இசையமைக்கும் படப் பாடலில் ஒன்றை எடுத்து இரண்டு வடிவில் கொடுப்பது வழக்கம். இந்தப் பாடலையும் வந்தனா ஶ்ரீனிவாசனை வைத்து இன்னொரு அழகிய மெலடியைக் https://www.youtube.com/shared?ci=YCBV_U00Kos கொடுத்திருக்கிறார். இருந்தும் என்ன இந்த இரண்டு படங்களும் லியோன் ஜேம்ஸ் கொடுத்த பாடல்கள் அளவுக்கு உழைக்கவில்லை.
"நீ உறவாக ஆசை" https://www.youtube.com/shared?ci=fCcfp8D7vKA இந்தப் பாட்டை முதலில் கேட்ட போது ஐஸ்கிரீம் திரளையை வாயில் போட்டது போல ஒரு குளிர்மையை மனதில் உணர்ந்தேன். யாரோ ஒரு பெரிய இசையமைப்பாளராக இருக்கும் என்று நினைத்துப் பாடலின் பின்னணியை நோண்டினால் இசையமைப்பாளர் அஜீஸ் என்று அறிந்து பிரமிப்பு. அற்புதமான மெலடிப் பாடலை ஸ்ரேயா கோசல், ஹரிச்சரண் குரலில் படவைத்தது இன்னும் வெளிவராத "பாம்புச் சட்டை" படத்துக்காக. விஜய் டிவி சூப்பர் சிங்கர் வெற்றியாளர், பின்னர் கோவா படத்தின் "இதுவரை இல்லாத" பாடல் மூலம் இதுவரை பயணப்பட்ட அஜிஸ் இற்கு பாம்புச் சட்டை படத்தில் கிட்டிய இசையமைப்பாளர் பணியைச் சிறப்பாக எடுத்திருப்பது இந்தப் பாடலில் தெரிகிறது. இதே படத்துக்காகக் கொடுத்த "நீயும் நானும்"
https://www.youtube.com/shared?ci=vF27ra8I-Oc
பாடலும் அழகாக வந்திருக்கிறது.
நிவாஸ் கே.பிரசன்னா, லியோன் ஜேம்ஸ், அஜிஸ் போன்றோர் சின்னத்திரை இசைப் போட்டிகளில் தம்மை வெளிப்படுத்திப் பெரிய வாய்ப்பைப் பிடித்திருப்பது சிறப்பு.
(தொடரும்)
முந்திய பதிவுகள்
தமிழ்த் திரையிசை 2016 அலசல் அறிமுகம்
http://www.radiospathy.com/2016/12/2016.html
இசை இளவல் ஜஸ்டின் பிரபாகரன்
http://www.radiospathy.com/2016/12/2016_21.html
0 comments:
Post a Comment