Pages

Friday, January 6, 2017

ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்ததில் பிடித்த ஐந்து


வலைப்பதிவு யுகம் பீறிட்டுப் பூரிப்போடு இருந்த காலத்தில் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாகச் சங்கிலிப் பதிவுகள் வந்து கொண்டிருக்கும். அப்போது அடிக்கடி சக வலைப்பதிவர் கையைப் பிடிச்சு இழுப்பதால் நானும் சங்கிலி போடுவேன்.
இப்போது பேஸ்புக்கில் "ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்ததில் பிடித்த ஐந்து" உலாவுகிறது. ராஜாவின் கொலவெறி ரசிகன் என்பதாலோ என்னமோ என் கையைப் பிடிச்சு யாரும் இழுக்கல (வாயில் துண்டைப் பொத்தி அழும் சுமைலி) ஆனாலும் பங்காளி வீட்டில் கையை நனைச்சுப் போட்டுத்தான் சண்டை போடுற பழக்கம் நம்மளோடது என்பதால் நாமளும் போடுறோம் அஞ்சு :-)
இது எடுத்த எடுப்பிலேயே கொடுப்பதால் தான் ஐந்தோடு கையை அடக்கிக்கொண்டேன் இல்லாவிட்டால் ஐம்பதாக நீளும்.

1. என்னுயிர்த் தோழியே என்னுயிர்த் தோழியே
https://www.youtube.com/shared?ci=q4m098aen0M

உன்னிமேனன் தமிழில் விஜய் என்ற பெயரில்  "பொன்மானே கோபம் ஏனோ" (ஒரு கைதியின் டைரி)  பாடல் வழியாக ரசிகர்களிடம் ஓரளவு அடையாளப்பட்டிருந்தாலும் அவருக்கு "புதுவெள்ளை மழை இங்கு பொழிகின்றது"என்று  ஏ.ஆர்.ரஹ்மான் தான் புனர்ஜென்மம் கொடுத்திருக்கிறார்.  ரஹ்மான் மட்டும் ஒரு இசையமைப்பாளராக வராவிட்டால் உன்னிமேனன் என்ற அற்புதமான பாடகரை இழந்திருப்போமோ என்று எண்ணுவதுண்டு. ரஹ்மான் கொடுத்த பாடல்களில் முதலில் உன்னிமேனன் பாடல்களை அடுக்கி விட்டுத்தான் மீதியை நிரப்புவேன்.
பழகிய விதத்தில் உன்னிமேனன் அருமையான மனிதரும் கூட. 

"என்னுயிர்த் தோழியே என்னுயிர்த் தோழியே" பாடல் சிறு துண்டு பியானோ இசையோடு சேர்ந்து இசைத்தட்டில் வரவில்லை. அதைத்தான் இங்கே கொடுத்திருக்கிறேன். ஒழுக்கமும், அமைதியும் நிரம்பிய பள்ளி மாணவனைச் சுற்றி அவனின் தோழியர் மனம் விட்டுப் பேசி மகிழ்வர். அங்கே எந்தச் சலனமும் இருக்காது. அப்படிப்பட்டவனுக்குக் காதல் வந்தால் எப்படியிருக்கும், அதைத் தான் உன்னிமேனன் குரல் பிரதிபலிக்கும். இந்தப் பாடலிலும் அப்படியே.
துள்ளிக்குதிக்கும் அந்தப் பெண் குரலைப் (சின்மனியி) போலவே தானும் பாடிப் பார்க்கும் அந்தத் துடிப்பு இரண்டாவது சரணத்தில் வெளிப்படும்.

ஒரு வாத்தியக்காரனே பாடகனாகவும் இரட்டைச் சவாரி செய்வதை மேடையில் பார்த்திருக்கிறோம். அப்போது தான் இயக்கும் வாத்தியத்தை நிதானம் தப்பாமல் வாசிப்பதோடு, பாடல் வரிகளையும் கவனமாகக் கையாளுவான். அப்படியானதொரு கற்பனை உலகில் இருந்து தான் இந்தப் பாடலை ரசிப்பேன்.

உன்னிமேனனைப் பற்றி நிறையப் பேசுவோம் இன்னொரு சந்தர்ப்பத்தில்.

2. ஓ வெண்ணிலா இரு வானிலா நீ 
https://www.youtube.com/shared?ci=k-Q0WeIy4oI

ஒரு சாஸ்திரிய இசை பயின்ற பாடகர் திரையிசைக்கு வரும் போது எவ்வளவு தூரம் அந்தச் சங்கதிக் கலப்பின்றித் தனித்து நிற்கின்றார் என்பதிலேயே அவரின் தனித்துவம் தங்கியிருக்கிறது. திரையிசையிலேயே தன் சுயத்தை இழக்காது பாடிய பாடகர்களில் அந்த சாஸ்திரிய சங்கீத முத்திரை தான் முகவரியாக இருக்கும்.  அந்த வகையில் உன்னி கிருஷ்ணனுக்கும் இப்படியொரு வாய்ப்பு வந்த போது அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பாடலின் சாரமுணர்ந்து வேறுபடுத்திப் பாடியிருப்பதைக் காணலாம். "நறுமுகையே நறுமுகையே" போன்ற உதாரணப் பாடலில் சாஸ்திரிய சங்கீதம் தழுவிய பாடலில் அந்த முத்திரையையும் காட்டத் தவற மாட்டார். 

"ஓ வெண்ணிலா இரு வானிலா நீ" என்ற காதல் தேசம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலைப் பாருங்கள். காதலில் தொய்வுற்றவன் ஜன்னலருகே நின்று தன் மனக்குவியலைக் கொட்டவும், அவனின் அழுகுரலின் பிரதிபலிப்பாய் ஜன்னல் கண்ணாடியில் வழிந்து கீழிறங்கி நகரும் மழைத்துளியாய் உணரும் தருணம் இது. இந்தப் பாடலின் சூழல் இப்படித் தான் இருக்க வேண்டும். இசை மட்டுமே வலியைப் பகிரல் கூடாது. "தருகின்ற பொருளாய்க் காதல் இல்லை" என்று தொடங்கி "தந்தாலே காதல் காதல் இல்லை" என்று அழுத்தம் கொடுக்குமிடம் காதல் தோல்வியின் வலி உணர்ந்தவனின் பிரகடனமாக அமையும். இந்தப் பாடலை உன்னிப்பாகக் கேட்கும் போது தன் சாஸ்திரிய முத்திரை எங்கும் விழுந்து விடக் கூடாது என்ற கவனமும், பொறுப்பும் உன்னி கிருஷ்ணனிடம் இருக்கும்.

இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்ட வாத்தியங்களின் கஞ்சத்தனம் தான் தேர்ந்த இசையமைப்பாளனின் அணிகலன்.

3. மானூத்து மந்தையில மான் குட்டி பெத்த மயிலே
https://www.youtube.com/shared?ci=67ZE8YEoccw

இளையராஜாவுக்குக் கிராமிய இசை தான் இலாயக்கு என்ற பேச்சு எழுந்த போது ப்ரியா படத்தை உருவாக்கி அதில் கொடுத்த மேற்கத்தேய இசையால் அந்த நினைப்பை மாற்றியதாக பஞ்சு அருணாசலம் சொல்லியிருக்கிறார். ரஹ்மானுக்கும் அப்படியொரு நிலை ஆனால் இங்கே மாறி நடந்திருக்கிறது. "உழவன்" மற்றும் "கிழக்குச் சீமையிலே" சம நேரத்தில் வந்த படங்கள். தனிப்பட்ட ரீதியில் எனக்கு உழவன் பாடல்களை வந்த நாள் தொட்டுப் பிடிக்காது, "கண்களில் என்ன ஈரமோ" மட்டும் விதிவிலக்கு. ஆனால் "கிழக்குச் சீமையிலே" பாடல்கள் எல்லாமே எங்கள் வீட்டு முற்றத்தில் விளைந்த பலாச்சுளைகளின் இனிப்பு. 
"கத்தாழங்காட்டு வழி", "தென்கிழக்குச் சீமையிலே" பாடல்களை நினைத்தாலே மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும்.
எதைச் சொல்ல எதை விட? எல்லாப் பாடல்களுமே கதையோட்டக் காட்சிகளோடு இழைத்துப் பண்னியவை ஆயிற்றே.

"மானூத்து மந்தையிலே மான் குட்டி பெத்த மயிலே" பாடல் எனக்கு மிகவும் பிடிக்கக் காரணமே அது பீறிட்டுக் கொடுக்கும் உற்சாக அலை தான். பாடலைக் கேட்டு முடித்ததுமே எனக்குள் அந்தப் பாட்டின் துள்ளிசையும் ஊறி விடும். தன் தங்கை பெற்ற குழந்தையைக் காண. அண்ணன் தன் பரிவாரங்களோடு சீர் கொண்டு போகிறான். இங்கே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் போன்ற மேதையால் தான் அந்தக் காட்சி தரும் உணர்வைக் தன் குரலின் வழி மனக்கண்ணில் கொண்டு வர முடியும். 
"மானூத்து மந்தையிலே மான் குட்டி பெத்த மயிலே பொட்டப் புள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவுங் குயிலே" என்று ஆர்ப்பரிப்புடன் போகும் அண்ணன் அந்தச் சூழலில் கிடைக்கும் இரண்டு பந்துகளை எதிர்கொண்டு எப்படிச் சிக்சர் அடிக்கிறார் பாருங்கள். 
"பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச் சொல்லுங்க" இந்த வரிகளை அவர் கையாளும் இடத்தைப் பாருங்கள், எவ்வளவு அக்கறை கனிந்த யாசிப்பு இருக்கும். அதே போல் "மச்சானைத் திண்ணையில போத்திப் படுக்கச் சொல்லு இஃஹ்ஹ்ஹ்ஹு" என்று நையாண்டிண்டித் தனம் காட்டுவாரே இங்கே தான் ஒரு திரையிசைக் கலைஞனின் முழுமையும் வெளிப்பட்டு நிற்கிறது. கூட்டுக் குரல்களையும் இணைத்துக் கொடுத்தது பாடலை இன்னும் மெருகேற்றி அழகுபடுத்தியிருக்கிறது. இங்கே தான் இசையமைப்பாளன் நிற்கிறான்.

4. செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
https://www.youtube.com/shared?ci=XDc-Yl7_hto

ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்பகாலப் பாடல்களில் இப்போதும் தேடி ரசிப்பது என்னமோ அன்றைய காலகட்டத்தில் அதிகம் ஆர்ப்பாட்டம் பண்ணாது அடக்கமாக இருந்த இம்மாதிரிப் பாடல்கள் தான். அப்போது வரிசையாக ஒவ்வொரு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியவிதத்தில் பவித்ரா படத்தில் கே.சுபாஷ்
உடன் கை கோர்த்திருந்தார் ரஹ்மான். 
படத்தில் "உயிரும் நீயே" , "அழகு நிலவே" பாடல்களோடு "கோயம்முத்தூர் கோயம்முத்தூர் தாண்டி" என்ற எள்ளல் பாடல் அளவுக்குக் கூட செவ்வானம் பாடல் அப்போது பிரபலமாக இருக்கவில்லை. இந்தப் பாடல் வந்த நேரம் நான் கொழும்பில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த நேரம் எப்போதாவது அரிதாக இலங்கை வானொலி இந்தப் பாட்டைக் கொடுக்கும் போது நின்று கேட்டுவிட்டுப் போவேன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சகோதரி எஸ்.பி சைலஜாவிற்கு இளையராஜாவால் ஆரம்பத்திலிருந்து பாடும் வாய்ப்புகள் அதிகம் கிட்டியது போல, எஸ்.பி.பி மகள் பல்லவிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாய்த்திருக்கிறார். காதலிக்கும் பெண்ணின் கைகள் (காதலன்) படப்பாட்டில் தந்தையுடன் சேர்ந்து பாட வாய்ப்புக்கிட்டியது இவருக்கு. ஜீன்ஸ் படத்தில் உன்னிகிருஷ்ணனுடன் "ஹைர ஹைர ஐரோப்பா" வரிசையில் பவித்ராவில் இந்தப் பாட்டு. ஏ.ஆர்.ரஹ்மான் அதிகம் முன்னுறுத்தியும் தொடர்ந்தும் நிறையப் பாடவில்லை இவர். ஶ்ரீராம் சிட்ஸ் அதிபரின் மகனைக் காதலித்துத் திருமணம் முடித்து அமெரிக்கா சென்றதாக ஞாபகம். 

நீல மலர்கள் படத்தில் வந்த இது இரவா பகலா நீ நிலவா கதிரா பாடலைப்போலவே இந்தப் பாடலின் வரிகளும் அமைக்கப்பட்டிருக்கும்.
எஸ்.பி.பல்லவியை திரையிசையில் தனித்துவமான பாடகி என்றெல்லாம் உயர்த்த முடியவில்லை என்றாலும், அப்பாவித்தனம் ஒட்டிய அந்தக்குரலில் ஏனோ ஈர்ப்பு இருக்கிறது. குறிப்பாக "செவ்வானம் சின்னப்பெண் சூடும்" பாடல் அவருக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு. மனோவை முந்திக் கொண்டு இவர் பாடும் போது கொடுக்கும் நுணுக்கமான சங்கதிகளைக் கவனித்தால் நீங்களும் என் கட்சியில் சேர்ந்துகொள்வீர்கள்.

5. பக்கா ஜென்டில்மேன்னா சொந்த பந்தம் இல்லா ஆளா
https://www.youtube.com/shared?ci=e-1yG8ZUKko

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி ஜோடி சண்டித்தனம் மிகுந்த கூட்டு. காதல் பாடல்களில் அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காது பாடல் வரிகளை வைத்தே கில்லி ஆடி விடுவர். 
ஏ.ஆர்.ரஹ்மான் வருகையை ரோஜா வழியாக இந்தியாவே கொண்டாடிய போது தெலுங்குத் திரையுலகம் மட்டும் சும்மா இருக்குமா என்ன? அந்த நேரம் அவர் தெலுங்கில் பண்ணிய இரு படங்களில் டாக்டர் ராஜசேகரின் "மனிதா மனிதா"
மற்றும் வெங்கடேஷின் "சூப்பர் போலீஸ்" ஆகியவை தமிழ் பதிப்புப் பாடல்களாகவும் வந்தன. அப்த நேரம் ராஜ் - கோட்டி தெலுங்குக் குத்து ரசிக உலகம் ரஹ்மானின் நேரடி வரவைப் பெரிதாக ரசிக்கவில்லைப் போலும் 
அந்த நேரம் பாரதிராஜாவும் ராஜசேகரை வைத்து "தமிழா தமிழா" படம் இயக்கவிருந்து தினத்தந்தியில் அரைப்பக்க விளம்பரமெல்லாம் கொடுத்துப் பின் கடாசி விட்டார்.
ரஹ்மான் கொடுத்த கொஞ்சூண்டுப் படங்களையெல்லாம் எறும்பு மொய்ப்பது போலக் கேட்டுப் பிரபலப்படுத்தி விடுவர். சூப்பர் போலீசும் அதில் சேர்ந்து கொண்டது. "சுந்தரா நீ யாரடா" பாடலில் ஸ்வரணலதா & சுரேஷ் பீட்டர்ஸ் அதகளம் பண்ணியிருப்பர்.

"பக்கா ஜென்டில்மேன்னா சொந்த பந்தம் இல்லா ஆளா" பாடலை நான் விரும்பி ரசிக்கக் காரணமே இந்தப் பாடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி ஒரு பக்கம் தம் தனித்துவ முத்திரைகளைக் காட்ட, இன்னொரு பக்கம் ரஹ்மானிசம் மெல்லத் தன் இசையால் உள்ளொழுத்து வேலையைக் காட்டும். தமிழ் திரையிசையின் போக்கு மெல்ல மெல்ல அடுத்த யுகத்துக்குள் பயணிப்பதை இம்மாதிரியான பாடல்கள் தான் அப்போது சாத்திரம் சொல்லியவாறிருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆரம்பித்து மெல்ல அதை வாங்கி "ஆஆஆ பூக்கள் எனக்குப் புதுசா" என்று ஒரு வகையாகவும்  "ஏ ஹே ஹே யேய்ய் பூக்கள் என்னும் போதும் எஸ்.ஜானகி காட்டும் குரல் பாவம் ஒரு சோறு. இது போல இருவரும் இந்தப் பாட்டில் ராஜாங்கமே (ஹப்பாடா ராஜாவைக் கொண்டு வந்துட்டேன் 😂) நடத்தியிருப்பர்.

தனி அழைப்பாக ஏற்று இதுவரை ஐந்து போடாதவர்கள் பதிவோடு வாங்க மக்கா 😀

0 comments: