Pages

Sunday, July 26, 2015

"இலங்கை சூரியன் எஃப் எம்" - வாழ்த்தும் நன்றியும்

இலங்கையின் முன்னணிப் பண்பலை வானொலியான சூரியன் எஃப்.எஃம் தனது பதினேழு அகவையை நிறைத்திருக்கின்றது.

உலக வானொலிப் பிரியனான என் வானொலி நேரத்தில் சூரியனுக்கும் தனித்துவமான இடமுண்டு.
குறிப்பாக "பொற்காலப் புதன்" என்று நாள் முழுக்க 80கள், 90கள் என்று அந்தக் காலகட்டத்துப் பாடல்களைக் கொண்டாடி மகிழும் புதன்கிழமைகள் என்னளவில் தைப்பொங்கல், வருஷப் பிறப்பு, தீபாவளிக்கு ஈடான சந்தோஷம் தருபவை. 

"கள்ள மனத்தின் கோடியில்" என்ற சுறுக் நறுக் பேட்டி வழியாக பத்து நிமிடத்துக்குள் தமிழகத்தின் திரையுலக, கலையுலக ஆளுமைகளின் முழு வரலாற்றைத் தெரிந்து கொள்ள வைத்திருப்பது தேர்ந்த வானொலித் திறனுக்கு எடுத்துக் காட்டு. எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட பிரபலங்களில் இருந்து "உன்னைத் தானே தஞ்சம் என்று" பாடிய பாடகி மஞ்சுளா போன்ற புகழ் வெளிச்சம் படாத கலைஞர் வரை இதில் கலக்குவார்கள். தொகுத்து வழங்கும் டிஜே அஷ்ராப் கேள்விகளிலும் காரசாரம்
இருக்கும். 

"ஹலோ யாரு பேசுறீங்க", "மாளிகாவத்தை சின்னக் கொமாண்டோ" எல்லாம் நான் டவுன்லோட் பண்ணித் திரும்பத் திரும்பக் கேட்டு வரும் நகைச்சுவைப் பகிர்வுகள்.

சகோதரன் காஸ்ட்ரோவை ஊடகத்துறை மாணவனாக இருக்கும் போதே பழக்கம். இன்று காலை காரில் பயணிக்கும் போது காலை நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தார். என் மனைவியிடம் அவரைப் பற்றிப் பெருமையாகச் சொன்னேன். அந்த அளவுக்குச் சூரிய வெளிச்சத்தில் அவர் புடம் போடப்பட்டிருக்கிறார்.

சந்த்ரு, மேனகா ஏட்டிக்குப் போட்டிக் கூட்டணியின் கல கலா கலக்குற நிகழ்ச்சிப் பகிர்வையும் சிரித்துக் கொண்டே ரசிப்பேன்.

லோஷனுடன் பயபக்தியோடு நிகழ்ச்சி செய்யும் தம்பி டிஜே டிலான் மற்றும் பிரஷா, பிரசந்தா, தரணி, கோபிகா, நிஷாந்தன் - வர்ஷி கூட்டணி (ரஜினிகாந்த் பாடல் பிரியர்கள் போல ஒரு பாட்டாவது சூப்பர் ஸ்டார் பாட்டு வரும்) என்று நீளும் நிகழ்ச்சிப் படைப்பாளிகளின் நிகழ்ச்சிகளை அவுஸி நேரத்தில் கேட்க வாய்ப்புக் கிடைப்பதால் பலமுறை கேட்டு ரசித்ததுண்டு. மற்றைய உறவுகளின் நிகழ்ச்சிகளை இன்னார் பெயர் என்று தெரியாமல் கேட்டதால் அவர்களையும் கண்டிப்பாக வரவு வைக்க வேண்டும்.

"நேற்றைய காற்று" என்றொரு நிகழ்ச்சி முன்னர் சூரியன் எஃப் எம் இல் படைக்கப்பட்டு வந்தது. இப்போது வருகுதோ தெரியவில்லை. ஆனால் ஒரு வானொலி நிகழ்ச்சியின் தலைப்பு எவ்வளவு தூரம் உள்ளார்த்தம் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தத் தலைப்பு உலக வானொலி வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டியது.

சூரியன் எஃப். எம் தன் விடிகாலை வாடிக்கையாளர்கள் பெரும்பலும் இரவு நேரப் பணியாளர்கள் என்பதாலோ என்னமோ கும்மாங்குத்துப் பாடல்களைப் போட்டுத் தாக்குவார்கள். அது ஏற்கக்கூடிய பணியாக இருப்பினும் நல்ல மென் மெட்டுகள் பொருந்திய பாடல் கோப்பு நிகழ்ச்சிக்காகவும் காத்திருக்கிறேன்.  
பொற்காலப் புதனில் வரும் ஒரே பாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும். சில நேரம் ஒரே நேரத்திலேயே சொல்லி வைத்தால் போல வரும் அவ்வ்வ்.
 இதெல்லாம் நான் இந்த வானொலியை நேசிக்கும் நேயர் என்ற உரிமையோடு  சொல்பவை.

மற்றப்படி "தலைவர் எவ்வழி சனமும் அவ்வழி" (என்ன விளங்குது தானே ;-) ) என்று லோஷன் அண்ணையோடு சேர்ந்து பெட்டி, படுக்கையோடு நாங்கள் பயணப்படக் காரணமே அவரின் திறம்பட்ட வானொலி முகாமைத்துவம் தான்.  எந்த நேரம் எது செய்ய வேண்டும் என்று கால நேரத்துக்கேற்பத் தன் படைப்புகளை வழங்குபவர். எங்கிருந்தாலும் தன் கூட்டணியின் சிறப்பான பணியில் லோஷனின் பங்கும் இருக்கும். மைக் இருக்கோ இல்லையோ அண்ணை Cricket Bat ஐ நிலையக் கலையகத்துக்குத் தப்பாமல் கொண்டு போவாரோ என்ற சந்தேகம் நெடு நாளாக இருக்கு. நிகழ்ச்சிப் படைப்பாளராக, தயாரிப்பாளராக, மேலாண்மைப் பணியாளராக அவரின் தேரின் பல குதிரைகள் எல்லாமே நிதானம் தப்பாமல் பயணிக்கும்.  வானொலி உலக ஆளுமை சானாவின் பேரன் ஆச்சே இதெல்லாம் ரத்தத்தின் ஒவ்வொரு செல் இலும் ஊறியிருக்குமே.

சூரியன் எஃப் எம் சேவை இன்னும் பல தசாப்தங்கள் இன்று போல் என்றும் நீடித்து நிலைத்து நிற்க என் வாழ்த்துகளும், நன்றிகளும்.

2 comments:

Umesh Srinivasan said...

இலங்கைத் தனியார் பண்பலைச் சேவைகளின் முன்னோடியான சூரியன் பற்றிய ஒரு சிறப்பான பதிவு. ஆரம்ப காலத்தில் நிகழ்ச்சித் தொகுப்பில் இடம் பெற்ற ஹர ஹர சுதனையும் சற்று நினைவுகூர்ந்திருக்கலாம்.

தனிமரம் said...

ஆரம்பகால சூரியன் பண்பலையில் நடராஜாசிவம். அபர்ணாசுதன் ,வெள்ளையன், சிவானிஜா, முகுந்தன் மஹரூப் போன்றோரின் பங்களிப்பை என்றும் மறக்கமுடியாது! நேற்றைகாற்று முதலில் வெள்ளையன், மஹரூப் என நிகழ்ச்சி செய்யும் போது இருக்கும் சுகம் இன்று நான் அறியேன் ஆனால் குதிரை ஓட்டம் போல ஆர்ஜேக்கள் பின்னாலில் தடம் மாறி தனியார் வானொலிக்கு ஓடும் குதிரை விளையாட்டு ஒரு அறிவிப்பாளர்/ளிகளையும் வானொலியில் அதிக நேசிப்பை கொடுத்திருக்குமா என்பதை பலர் ஆய்வு செய்ய வேண்டும்! ஆனாலும் ஆரமபகால சூரியன் என்னையும் நேற்றையகாற்றில் கவிதை மீட்டவைத்த சுகம் தனிச்சுகம் !சூரியனுக்கு என் வாழ்த்துக்கள்.