Pages

Tuesday, July 14, 2015

"எரிகனல் காற்றில்" மெல்லிசை மாமன்னர் நினைவில்

மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது உற்ற தோழமை கவியரசர் கண்ணதாசன் சந்நிதி தேடி இன்று போய் விட்டார்.

இன்று எம்.எஸ்.விஸ்வநாதன்  அவர்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்வுகள் வருவது வெறுமனே கண் துடைப்பல்ல அந்த மாபெரும் கலைஞனுக்கான மானசீக அஞ்சலி என்பதை அதே உணர்வோடு பார்ப்பவர்கள் உய்த்துணர்வார்கள்.

மெல்லிசை மாமன்னர் குறித்த வரலாற்றுப் பகிர்வையோ அல்லது அவரின் பாடல்கள் குறித்த ஆழ அகலத்தையோ பேச இன்றொரு நாள் போதாது. அவர் தந்தது இசைப் பாற்கடல் அல்லவோ?

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்த இறப்புச் சேதி கேட்ட போது என் மனத்தில் இருந்த இசைத்தட்டு இந்த "எரிகனல் காற்றில் உள்ளம் கொள்ளும் போலே" பாடலைத் தான் மீட்டியது.
இசைஞானி இளையராஜா இசையில் "ஒரு யாத்ரா மொழி" படத்துக்காக மலையாளத்தின் மறைந்த பாடலாசிரியர் கிரிஷ் புத்தன்சேரி வரிகளில் ஒலித்த பாடல் இது.
 https://soundcloud.com/raja4ever/yerikanalkaattil
இதே பாடலை இளையராஜா பாடும் இன்னொரு வடிவமும் உண்டு.  அந்த வகையில் ஒரே பாடலை இரு வேறுபட்ட இசையமைப்பாளர் பாடிய புதுமையும் இந்தப் பாடலில் நிகழ்ந்திருக்கிறது.


தமிழ்த் திரையிசையில் அசரீரிப் பாடல்கள் என்று சொல்லக் கூடிய, கதையோட்டத்தின் பின்னணியில் ஒலிக்கும் பாடலாகவோ அல்லது கதை மாந்தரின் அவலத்தைப் பிரதிபலிக்கும் குரலாகவோ கொணர்ந்தளிக்கும் சிறப்பு எம்.எஸ்.விஸ்வநாதன் குரலுக்கு உண்டு.

"எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே" என்று சிவகாமியின் செல்வன் படத்தில் தன்னுடைய இசையிலாகட்டும், "உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா" என்று வெள்ளி விழா படத்தில் வி.குமாரின் இசையிலாகட்டும் "விடை கொடு எங்கள் நாடே" என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலாகட்டும் மெல்லிசை மன்னரின் குரல் தன்னிசையில் மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களின் இசையிலும் தனித்துவமாக மிளிர்ந்திருக்கிறது இம்மாதிரியான அசரீரி என்று நான் முன்மொழிந்த பாடல்களில். இங்கே நான் கொடுத்தது சில உதாரணங்கள் தான்.
இந்தப் பாடல்களின் எம்.எஸ்.வி அவர்களின் குரலைத் தாண்டிய உணர்வு ரீதியான பந்தம் தான் நெருக்கமாக இருக்கும். அந்தந்தப் பாடல்களை அவர் கொடுத்த விதத்தை மீளவும் மனத்திரையில் அசை போட்டு உணர முடியும் இதை.

பிற இசைமைப்பாளர் இசையில் நிறையப் பாடிய இசையமைப்பாளர் என்று புகழ் வாய்த்த எம்.எஸ்.வியின் குரல் இளையராஜாவின் இந்த "எரிகனல் காற்றில்" பாடலாக வெளிப்படும் போது இன்றைய அவரின் இன்மையைப் பிரதிபலிக்கும் அசரீரிப் பாடலாகவே என் மனம் உள்ளார்த்தம் கொள்கிறது.

மெல்லிசை மாமன்னருக்கு என் இதய அஞ்சலிகள்
அந்தப் பாடலைக் கேட்க







புகைப்படம் நன்றி : மாலைமலர் 

5 comments:

Anonymous said...

மிக அருமையான பதிவு.

ஒரே பாடலை இரண்டு இசையமைப்பாளர்கள் பாடிய நிகழ்வு இதற்கு முன்னும் கேட்டதில்லை. பின்னும் இதுவரை கேட்கவில்லை. அந்த வகையில் மிக அபூர்ப நிகழ்வு இது.

இளையராஜாவின் மிகச் சிறந்த கம்போசிஷன்களில் இந்தப் பாடலும் ஒன்று என்பதே என் கருத்தும்.

கானா பிரபா said...

ஆமாம் ஜிரா அதே வேளை எந்த இசையமைப்பாளர் இசை என்றாலும் அங்கே தனித்துத் துலங்குவார் மெல்லிசை மன்னர் என்பதைக் காட்டவே இந்தப் பதிவு. உங்களிடமிருந்து தொடர்ந்தும் எம்.எம்.வி ஐயா குறித்த பகிர்வுகளைப் போட்டி மற்றும் தனிப்பதிவுகள் வாயிலாக எதிர்பார்க்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தமிழ்த் தாய் வாழ்த்து உள்ளளவும்..
எழாதாரும், MSV இசைக்கு எழுந்து நிற்கத் தான் வேண்டும்.. எத்தனை தலைமுறையானாலும்!

எத்தனை தலைமுறையானாலும், அழிவு உன்னை அண்டாது! வாழி நீ விஸ்வநாதா..
--

கா.பி
உங்க "எரிகனல் காட்டில்" பாட்டு, MSV க்கு மிக்கதொரு நினைவேந்தல்!
அதில் வரும் ஒரு வரி, "ரெண்டு சமுத்திரங்கள் ஒன்னாயி சேரும் போலே.."
அப்படி அரபிக் கடல் + வங்காளக் குடா = MSV + Raja ; ஒன்னாயிச் சேர்ந்த அபூர்வ குமரிக் கடல் தான் இது!

பாட்டுல, ரெண்டு பேரும் "ஓஓ" -ன்னு "ஆதங்கம்" ஒலிச்சிப் பாடுவதை நிறுத்திக் கூர்ந்து கேளுங்க..
* ரெண்டு சமுத்ரங்கள், ஒன்னாயிச் சேரும் போலே.. ஓஓ
* நெஞ்சில் விங்கிப் பொங்கும், தீரா நும்பரம்.. ஓஓ
MSV Style & Raja Style-ன்னா என்ன?-ன்னு ரெண்டுமே பிடிபடும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒரு இசையமைப்பாளர் இசையில், இன்னொரு இசையமைப்பாளர் பாடுவது என்பது ஆங்காங்கே நடந்துளது;

ஒரே பாடலை, இரு வேறு கவிஞர்கள் எழுதுவது என்பதும் நடந்துளது! (மருதகாசி & கண்ணதாசன்)
ஆனா, ஒரே பாடலை, இரு பெரும் இசையமைப்பாளர்கள் பாடுவது.. என்பது அரிதிலும் அரிதான இந்தப் பாடலே!
--

பொதுவா, மிகத் தேர்ந்த இசையமைப்பாளர் ஒருவர், இன்னொருவர் இசையில் பாடுவது என்பது கொஞ்சம் கடினம் தான்! அவங்கவங்க Style/நடை என்பது வேறுபடும்;

ஒங்க அலுவலகத்தில், ஒங்க மேலாளரே, உங்க Seat க்கு வந்து, Code எழுத முற்பட்டா, ஒங்க நிலைமை எப்படியிருக்கும்? -ன்னு கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க!

அதே போல், பிறர் இசையில் பாடும் போது, இன்னும் இழைக்கலாமோ? அப்படி இருந்தால் நல்லாருக்குமே?-ன்னு திருத்தம் சொல்லத் தான் புத்தி அலையும்!
ஒன்னும் இல்லாத நமக்கே கருத்து பேசாம இருக்க முடியுதா பொது வெளிகளில்?
ஆனா, இசைக்கு உள்ளேயே ஊறிக் கிடக்கும் இசையமைப்பாளர், தன் சுயத்தையே "உதறி", இன்னொருவர் இசையில் பாடணும்-ன்னா..?

அப்படிப் பாடும் போதும், ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையிலும், இவரும் தனியாகத் துலங்கி நிற்பார் (நேற்று வந்திட்ட ஜிவி பிரகாஷ் வரையிலும்)
அப்படிச் சுயம் உதறி, பலரின் இசையிலும் பணி செய்தவர் = இந்தியத் திரையிசையில் MSV யாகத் தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்; (உறுதிபடத் தரவுகள் கைவசம் இல்லை)

அப்படிச் சுயம் "உதறுதல்" வெகு அபூர்வம்!
அதான் MSV என்ற ஆத்மாவும் வெகு அபூர்வம்!
அவருக்கு, உங்கள் நினைவேந்தல் பாடலும் மிக்க அபூர்வம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

*Various Murugan Songs of MSV
= http://muruganarul.blogspot.com/search/label/MSV?m=1

*Various Kannan songs of MSV
= http://kannansongs.blogspot.com/search/label/MSV?m=1

--

//மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது உற்ற தோழமை கவியரசர் கண்ணதாசன் சந்நிதி தேடி இன்று போய் விட்டார்//

"தோழன்" என்றதொரு வரம்!
"தோழமை" என்பதொரு தவம்!

தோழன் கண்ணதாசன், தோழன் MSV-யைக் கிண்டல் செய்து, ரஷ்யாவில் பேசிய பேச்சின் ஒலித்துண்டு, தனி மடலில் அனுப்பி வைக்கிறேன். பிறர் அறியவாவது பயன்படட்டும்;