தேடிச் செந்நெல் வெத போட்டு கோடிச் செல்வம் ஆடச்சம்பா பயிராச்சு
தைப்பொங்கல் என்றாலே உலகத் தமிழ் வானொலிகள் வருஷம் 16 படத்தில் வரும் "பூப்பூக்கும் மாசம் தை மாசம்" பாட்டைத் தேயத் தேயப் போட்டு ஒரு வழி பண்ணி விடுவார்கள். அந்தப்பாடலில் வரும் முதல் மூன்று அடிகளைத் தவிர, காட்சி அமைப்பில் கூட ஒருவித ஒற்றுமையையும் தைப்பொங்கலோடு பொருத்திப் பார்க்கமுடியாத பாடல் அது.
இதை விட அபத்தம் தீபாவளி தோறும் ஒலிபரப்பும் " நான் சிரித்தால் தீபாவளி" அந்தப் பாடலில் தீபாவளி என்ற சொல்லைத் தவிர, மீதியெல்லாம் விரகதாபத்தைப் பழைய பாடல் மெட்டில் கண்ணியமாகக் கொண்டு வந்த பாட்டு. காட்சியமைப்பே கமல்ஹாசன் விலைமாதர் வீட்டிற்கு வரும் போது தோன்றும் பாட்டு. ஆனால் தீபாவளிக்கு "பட்டாசு சுட்டுச் சுட்டுப் போடட்டுமா" பாடல் எவ்வளவு கச்சிதமாக இருக்குமோ (அதிலும் வரும் கதையோட்டம் சார்ந்த வரிகளைக் கழித்து) அதே போல மகா நதி படத்தில் வரும் "தைப்பொங்கலும் வந்தது" பாடல் ஏக பொருத்தமாகத் தைப்பொங்கலுக்கு அமையும் பாடல்.
"மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு ஓ ஹோய் நாளைக்குத்தான் தை பொறக்கும் தேதியாச்சு ஓ ஹோய் போகியிது போகியிது நந்தலாலா ஹோய் பொங்க வைப்போம் நாளைக்குத்தான் நந்தலாலா ஓ ஹோய்" எவ்வளவு அற்புதமாகக் கொண்டாடக் கூடிய போகிப் பண்டிகைக்கான தளபதி படப்பாடல்.
இசைஞானி இளையராஜாவின் பாடல்களும் பண்டிகைகளும் என்று கட்டுரை போடுமளவுக்கு மதம் கடந்து ஒவ்வொரு முக்கிய பண்டிகைக்கும் ஒரு பாட்டைக் காட்டமுடியும். அதிலும் குறிப்பாக தை பிறந்து விட்டால், தைப்பொங்கல் தினத்தில் முழுமையாக ராமராஜன் நடித்த படங்கள் உட்பட கிராமத்தின் மகிமை போற்றும் பாடல்களை அள்ளலாம். குறிப்பாக புதுப்பாட்டு படத்தில் வரும் இந்த பூமியே எங்க சாமியம்மா பாடலைக் கேட்கும் போது வேட்டி கட்டிக் கிராமத்து மண்ணைக் கால்கள் ஆசை தீர அளந்த திருப்தி வரும்.
இவையெல்லாம் தாண்டி என் மனசுக்கு நெருக்கமாகப் பொங்கல் நாளில் வானொலி நிகழ்ச்சி செய்ய வாய்ப்பு அமையும் போது நான் பகிரும் பாடல் "ஆடிப் பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு" என்ற பாடல். இந்தப் பாடல் மைக்கேல் மதன காமராஜன் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் மனோ, சித்ரா பாடியது. இந்தப் பாடலை எந்தக் காட்சிக்காக எடுத்திருப்பார்கள் என்று நானும் பல தடவை மண்டையைப் போட்டு உடைத்ததுண்டு. ஆனால் இந்தப் படத்தில் அப்படியொரு களமே இருப்பதாகத் தெரியவில்லை. துரதிஷ்டவசமாக இந்தப் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெறாமையால் இந்தப் பாடலுக்கான பரவலான அறிமுகம் கிடைக்காமல் போயிற்று. அந்த ஆதங்கமும் கூட என்னுள் இருப்பதால் நான் செய்யும் வானொலி நிகழ்ச்சியிலாவது பிரபலப்படுத்த வேண்டும் என்று பகிருவேன்.
// ஃபேஸ்புக் வழியாக நண்பர் Saravana Kumar பகிர்ந்த அரிய தகவல் இதோ: இந்த பாடல் அபூர்வ சகோதரர்களுக்கு பிறகு கமல் மற்றும் கௌதமி நடிப்பில் ''தென் மதுரை வைகைநதி'' என்கிற கிராமத்து கதைக்காக தயார் செய்த பாடல். அந்த படம் பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரிக்க வேண்டிய படம். ஏதோ சில காரணங்களால் படம் எடுக்க படாமல் போய் விட்டது. அதில் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் இந்த பாடல். அதற்க்கு பிறகு தான் மைக்கேல் மதன காமராஜன் படம் எடுத்தார்கள். அதில் இந்த பாடல் சேர்ந்து விட்டது. அந்த கிராமத்து படத்தின் நாளிதழ் விளம்பரம் இன்னும் என் கண்ணில் காட்சியாக இருக்கிறது.// இப்படிச் சொல்லியிருக்கிறார்.
இந்தப் பாடலின் வரிகளை உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள். ஒரு கிராமத்து இளம் விவசாயியும் அவன் ஜோடிப் பொண்ணும் ஒவ்வொரு வரிகளிலும் கைக்கெட்டிய வேளாண்மையைப் போற்றிப் பாடும் துதியாக இருக்கும். அடுத்த சரணத்தில் கிராமத்துக் காதலர்களின் ஆபாசம் கலக்காத காதல் மொழி வந்து கலக்கும். உறுத்தலில்லாத மெல்லிசையில் இடையிடையே புல்லாங்குழல் கொடுக்கும் சங்கதி, கிளை தாவி பறக்கும் குருவியோசையோடு பொருந்திப் போகும்.
மண்ணை நேசிக்கும் உழவருக்குப்
பொன்னாய் விளையும் பயிர் போலே, நல்லிசையைத் தேடும் ரசிகர்க்குத் தேனாய்க் கிட்டியது இப்பாடல்
11 comments:
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
அருமையான பாடல் பகிர்வு
அருமையான பாடல் பகிர்வு.
நன்றி, வாழ்த்துக்கள்.
அன்பின் வவ்வால்
மிக்க நன்றி நண்பா உங்களுக்கும் உரித்தாகட்டும்
அன்பின் பாண்டியன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது அன்பு நிறைந்த வாழ்த்துகள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நேசன்
மிக்க நன்றி கோமதி அரசு
உங்களுக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்
"ஆடிப் பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு" என்ற பாடலை எந்தக் காட்சிக்காக எடுத்திருப்பார்கள் என்று நானும் பல தடவை மண்டையைப் போட்டு உடைத்ததுண்டு. same blood.
இந்த படத்தில் இடம் பெறாத இன்னொரு பாடலான "மத்தாப்பூ" பாடலின் சூழ்லை உங்களால் யூகிக்க முடிகிறதா?
மிகச்சிறந்த பாடல்...ஏனோபடத்தில் இடம்பெறவில்லை....
மனசு சந்மோசமா இருந்தா இந்தப் பாட்டை என் வாய் முனுமுனுக்கும்.
இப்படியொரு சுகம்!
அண்ணா ❤️
Post a Comment