Pages

Thursday, January 16, 2014

பாடல் தந்த சுகம்: ராத்திரியில் பாடும் பாட்டு

போகியோடு தொடங்கி பொங்கல், மாட்டுப் பொங்கல் என்று காணும் பொங்கல் வரை கண்டாச்சு. கூடவே ராஜாவின் பாடல்களும் இந்தத் தினங்களோடு கூடவே வருகின்றது. அந்த வகையில் இன்று "ராத்திரியில் பாடும் பாட்டு" பாடலைப் பகிர்கின்றேன்.

அருண்மொழி, மின்மினி ஜோடிக்குரல்கள் மென்மையாக ஒரே அலைவரிசையில் இயங்கும் சிறப்பம்சம் பொருந்தியவை என்பதற்கு "தென்றல் வரும் முன்னே முன்னே" (தர்மசீலன்) படத்தின் பாடலோடு இந்தப் பாடலையும் சேர்த்துக் கொள்ளலாம். மின்மினியைப் பொறுத்தவரை இந்தப் படத்திற்காக இசைஞானி கொடுத்த பலாச்சுளையான ஏழு பாடல்களில் மூன்றைக் கைப்பற்றியிருக்கிறார். உண்மையில் ஒன்பது பாடல்கள் பதிவாகி ஏழுதான் பயன்படுத்தப்பட்டது மீதியோடு இசைத்தட்டில் காணலாம். "அம்மன் கோயில்" பாடலை சுவர்ணலதாவோடும் "அடி பூங்குயிலே பூங்குயிலே" பாடலை மனோவுடனும் பாடிய மின்மினி "ராத்திரியில் பாடும் பாட்டு" பாடலை அருண்மொழி, மலேசியா வாசுதேவனோடு இணைந்து பாடியிருக்கிறார். தொண்ணூறுகளிலே மினி ஜோசப் ஐ மின்மினியாக்கி மீரா படத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தியிருந்தார் இசைஞானி. சமீபத்தில் ஒரு ஆய்வாளர் (!) ரஹ்மான் கண்டுபிடித்த குரல்களில் மின்மினியையும் வாரி வழங்கிச் சந்தோஷப்பட்டுக் கொண்டார். அடிக்கடி வரலாற்றை நினைவுபடுத்த வேண்டும் போல. 

அரண்மனைக்கிளி படத்தின் பின்னணி இசையை முன்னர் றேடியோஸ்பதியில் பகிர்ந்திருந்தேன். அரண்மனைக்கிளி படத்துக்காக முன்பே பாடல்களை வாங்கிக் கொண்டுதான் முழுக்கதையையும் மெருகேற்றியதாக படம் தயாரிப்பில் இருந்த வேளை ஒரு செய்தியும் வந்திருந்தது.

அந்த நிலவொளியில் குளித்து தம் நேசத்தைப் பகிர்ந்து கொள்ளும் காதலர்களாக அருண்மொழி, மின்மினி குரல்கள் இணைய, இன்னோர்புறம் தன் மண வாழ்வின் கசப்பைப் பகிரும் சோக ராகத்தை மீட்டுகிறார் மலேசியா வாசுதேவன். இவ்விதம் ஒரே பாடலில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து கட்டிக் கொடுத்த பாடல்களின் பட்டியலை வைத்து ஒரு வானொலி நிகழ்ச்சியும் செய்திருந்தேன். உதாரணத்துக்கு ஆனஸ்ட் ராஜ் படத்தில் வரும் "வானில் விடிவெள்ளி மின்னிடும் தங்கிடும் நேரம்" பாட்டில் நாயகிக்குக் குரல் கொடுத்த ஜானகிக்கு சந்தோஷம், அதே பாட்டில் மனோ தன் நண்பனின் துரோகத்தை எண்ணி மறுகும் சோக வடிவமும் பொருந்தியிருக்கும். இன்னோர் உதாரணம் அரங்கேற்ற வேளை படத்தில் "தாயறியாத தாமரையே" இதில் மனோவின் குரல் கடத்தப்பட்ட சிறுமியின் மன ஓட்டத்தின் அசரீரியாகவும், சமகாலத்தில் கோரஸ் குரல்களோடு எஸ்.பி.சைலஜாவின் களியாட்டக் குரலும் ஒலிக்கும். இப்படியாக இருவேறு மன நிலையை ஒரே பாடலில் பாடகர்களது குரல்கள், வாத்திய இசை இவற்றையெல்லாம் ஒருமிக்கப் பொருத்தி அந்த உணர்வு வெளிப்பாடுகளைக் கெடுக்காமல் கேட்கும்/பார்க்கும் ரசிகனுக்குக் கொடுக்கும் சவால் நிறைந்த பணியைக் கடப்பது எளிதன்று. அந்த விஷயத்தில் ராஜாவின் இன்னொரு வெற்றியாக இவ்வாறான உத்திகளை உதாரணப்படுத்தலாம்.

ராஜ்கிரண் நடித்த படங்களில் அவருக்கான வாயசைப்புப் பாடல்களோ பில்ட் அப் பாடல்களோ இல்லாது கவனித்துக் கொள்வார். அரண்மனைக் கிளியில் வரும் இன்னொரு ஜோடிப்பாடல் "அடி பூங்குயிலே" பாடலைக் கூட துணைப் பாத்திரங்கள் மூலம் அழகாகப் பயன்படுத்தியிருப்பார். ராத்திரியில் பாடும் பாட்டு பாடலில் ராஜ்கிரணுக்கான குரலாக மலேசியா வாசுதேவன் குரல் ஒலித்தாலும் அது காட்சிக்கு அவதூறு விளைவிக்கால் அடக்கமாக ஆள்கிறது. 

ஜோடிக்குரல்களிலிருந்து மலேசியா வாசுதேவனின் தனிக்குரலுக்கு நகரும்போது இணைப்பாக வரும் அந்தப் புல்லாங்குழல் ஒலியை நிறுத்தப் புள்ளியிலிருந்து கேட்கும் போது புல்லரிக்கும். 


1 comments:

தனிமரம் said...

பாடல் வந்த காலத்தில் வர்த்தகசேவையில் இதுவும் ஒரு சக்கை போடுபோட்டது. இன்றும் ராஜாவின் இசைக்கோர்ப்பு தாலாட்டுது.பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி.