Pages

Thursday, January 30, 2014

பாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

இந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும் அந்த அளவுக்கு போதையேற்றும் பாட்டு எனக்கு இது. இந்தப் பாடலை முணுமுணுக்கிறேன் என்றால் அந்த நேரம் ஏதோவொரு நல்ல செய்தியோடு மனம் குதூகலிக்கின்றது என்றும் அர்த்தம்.

மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் என்ற இந்தப் பாடல் சின்னப் பசங்க நாங்க என்ற திரைப்படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி மதுரக் குரல்களில் அமைந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் இலேசான முறுவலுடன் பாடல் முழுவதும் தன் சங்கதிகளை வெளிப்படுத்தியிருப்பார். இந்தக் கூட்டணி என்றும் சளைக்காது என்று நிரூபிப்பது போல ஒவ்வொரு வரிகளையும் வெகு இயல்பாகக் கடத்தியிருப்பார்கள்.

சிவாஜி புரடெக்‌ஷன் என்ற மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாக எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படமான "தாலாட்டு கேக்குதம்மா" என்ற படத்தின் வழியாக அறிமுகமானவர் இயக்குனர் ராஜ்கபூர். தொடர்ந்து ராஜ்கபூருக்கு இன்னொரு குறிப்பிடத்தக்க வெற்றிப்படமாக அமைந்தது சின்னப் பசங்க நாங்க. முரளி, சாரதா ப்ரீதா இவர்களுடன் துடுக்குத்தனமான கிராமத்துப் பெண் பாத்திரம் நடிகை ரேவதிக்குக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய பாத்திரங்களில் ஒன்று. இந்தப் படத்தில் பாவலர் வரதராஜன் மன்றம் என்ற பெயரில் முரளி குழுவினர் சங்கம் வைத்திருப்பதாக அமைக்கப்பட்டிருக்கும்.

படம் வெளியான நேரம் எங்கள் பிரதேசம் மின்சாரமில்லாத ஆண்டுகளில் இருந்த வேளை அது. திருநெல்வேலிச் சந்தியில் இருந்த ஒரு வீடியோ கடையில் அடையாள அட்டையை அடகு வைத்து வீடியோ காசெட்டை வாடகைக்கு எடுத்து வந்து மண்ணெண்ணை ஜெனரேற்றர் வழியாக மின்சாரம் பிறப்பித்துப் பார்த்த படம் இது.

இந்தப் படத்தில் மொத்தம் ஆறு பாடல்களைப் பங்கு போட்டு கவிஞர் வாலியும், கங்கை அமரனும் எழுதியிருந்தார்கள். கங்கை அமரன் எழுதிய "இங்கே மானமுள்ள பொண்ணு என்று மதுரையிலே கேட்டாக" மறக்கமுடியுமா ஜானகியின் குறும்புக் குரல் பாட்டை. இதே பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் சோகப்பாடலாகக் கொடுத்திருப்பார்.

"வெல்வெட்டு கன்னம் தொட்டு வைக்கின்ற முத்தம் எல்லாம்
கல்வெட்டுப் போலே நிற்கும் கண்ணே உன் காலம் எல்லாம்"
என்று வாலிப வரிகளில் வாலி பூந்து விளையாடிய பாட்டு "மயிலாடும் தோப்பில்"
ராஜாவின் மெட்டோடு அணி சேர்ந்த வாத்தியக் கலவையில் இரண்டாவது சரணத்துக்குப் போகும் முன் வரும் புல்லாங்குழலின் தனியாவர்த்தனம் கவிதை.

"யோசித்து ஒவ்வொன்றாகக் காதல் பாடம்
வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்" இந்த அடிகளிலே தபேலா இசை வழுக்கிக் கொண்டே அடுத்த அடிகளுக்கு மேலெழும்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த ராஜாவின் பாடல்களைக் கேட்கும் போது பெரும்பாலும் வாத்தியப் பயன்பாட்டில் ஒத்திசைவைக் காணலாம். இந்தப் பாடல் போன்ற சமகாலத்தில் வந்த காதல் பாடல்களிலும் இதே வாத்தியங்களை உற்சாகமாக விளையாட வைத்து சந்தோஷப்படுத்தியிருப்பார் ராஜா.

மயிலாடும் தோப்பில் எப்போது கேட்டாலும் இனிக்கும் எனக்கு.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடல்...

என்றும் இனிக்கும் பாடல்...

தனிமரம் said...

இனிமையான பாடல் வந்த காலம் இன்னும் மறக்க முடியாது நம்நாட்டு நிலையை!