Pages

Saturday, January 25, 2014

கேட்டதில் இனித்தது : புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு

இன்றைய காலைப்பொழுதில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வேலைகளுக்கு இடையில் எனக்கு கிடைத்த நேரம் வழக்கம் போல காரில் இசையை இயக்கிவிட்டுக் கேட்டுக் கொண்டே போகிறேன்.
"புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு" சாதாரணமாக தான் ஆரம்பிக்கிறது, ஆனால் பல்லவி முடிந்து சரணத்துக்குப் பாயும் நேரம் கண்களில் முட்டி திடீர்க் குளம் ஒன்று, ஸ்டியரிங் பிடித்திருக்கும் இரண்டு கைகளிலும் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. இந்த மாதிரி அனுபவமெல்லாம் எனக்குப் புதிதல்ல, அதிலும் குறிப்பாக இசைஞானியின் பாடல்கள் குறிப்பாக ஸ்வர்ணலதாவின் "என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" எல்லாம் இந்தமாதிரி என்னைக் கோழையாக்கி அழ வைக்கவே படைக்கப்பட்டது. ஆனால் ஒரு புதிய பாடல் இம்மாதிரியானதொரு சாகசத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டதுதான் எனக்கே புரிபடாத ஆச்சரியம்.

வெளியே வாகனங்களின் போட்டா போட்டியோடு அந்தப் பெருஞ்சாலையில் இறுக மூடிய கார்க்கண்ணாடிக்குள் என் இசை உலகத்தில் கார் தன் வழி பயணிக்க, நானோ இரட்டைச் சவாரி.என்னைக் கயிற்றால் இறுகக் கட்டிவிட்டு கார் சீட்டில் பயணிக்க வைத்தது போன்றதொரு பிரமையை உண்டு பண்ணுகிறது.

எனக்கு நினைவு தெரிந்து சமீப ஆண்டுகளில் கேட்டதும் உடனேயே என் வசமிழந்த புதிய பாடல்களில்  மொழி திரைப்படத்தில் வந்த "காற்றின் மொழி இசையா" பாடல் தான் இதே மாதிரியான அனுபவத்தை விளைவித்திருந்தது. அதை அப்போது நான் பதிவாக்கியும் இருந்தேன்.

காற்றின் மொழி.....! http://www.madathuvaasal.com/2007/02/blog-post_13.html


 "புதிய உலகை புதிய உலகைத் தேடிப்போகிறேன் என்னை விடு" இந்த மாதிரிப் பாடல்களெல்லாம் இயந்திர கதியில் ஓடிக் கொண்டிருப்பவரின் திடீர் சுகப்பிரசவம் ஆகியிருக்காது. இசையமைப்பாளர்
டி.இமானின் மனதின் மூலையில் அவருக்குத் தெரியாமலேயே எங்கே ஒளிந்து கொண்டிருந்திருக்கும். செலுலாயிட் மூலம் "காற்றே காற்றே" என்று அறிமுகமான வைக்கம் விஜயலட்சுமியின் வருகைக்காகக் காலம் காத்துக் கொண்டிருக்கும். இவர்களை இணைத்து வைத்த பாலமாய் அமைந்த மதன் கார்க்கியின் வரிகள் கூட இந்த அற்புதத்துக்காகப் பொறுத்துக் கொண்டிருந்திருக்கும்.
அடிக்கடி சொல்லுவேன் சில பாடல்கள் இன்னார்க்கென்றே எழுதி வைத்தது என்று அப்படியானதொன்றுதான் இது. அந்த இசையைக் கேட்டுப் பாருங்கள் எவ்வளவு அன்னியோன்யமாகப் பாடல் வரிகளைச் சீண்டாமல் அரவணைத்துப் பயணிக்கிறது. தமிழ்ப் பாடல்களை வேற்று மொழிப்பாடகர் பாடக்கூடாது என்று கொடி பிடிக்கும் வீரர்களையும் தலை குனிய வைக்கிறது விஜயலட்சுமியின் மொழியாடல். இசையமைப்பு என்பது ஒரு உயர்ந்த தவத்தின் மிகச்சிறந்த வரமாக அமையவேண்டும்.

ரசிகனின் மனதுக்கு நெருக்கமாய்ப் பாடலைக் கொண்டு சேர்ப்பதில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மூவரின் பங்கும் முழுமையாக இருக்க வேண்டும் என்பதில் சமரசம் செய்து கொள்ளாத எனக்கெல்லாம் இம்மாதிரிப் பாடல்கள் தான் ஆதரவுக் குரல் கொடுக்கின்றன.

டி.இமானைப் பற்றித் தனியே நிறையப் பேசவேண்டும், ஆனால் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் இந்த இரண்டு ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்திருக்கும் கச்சிதமான வாய்ப்புகள் இன்னும் பெருக வேண்டும். இதே மாதிரிப் பாடல்களைக் கேட்கத் தான் நாம் இருக்கிறோம் என்று ஆதரவுக் குரலைக் கொடுத்துக் கொண்டே இருப்போம்.

ஊரெல்லாம் அலைந்து வீடு வந்து சற்று முன்னர் தான் இந்தப் பாடல் உருவாக்கத்தின் காணொளியைப் பார்க்கிறேன். பாடல் ஒலிப்பதிவு முடித்த தறுவாயில் டி.இமானும் தன் கண்ணாடியை மெதுவாகத் தூக்கிக் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். மீள வராது போன அவர் தாயைக் கூட இந்தப் பாடல் நினைவுபடுத்தியிருக்கக் கூடும். பாடலை அனுபவிக்க ஆரம்பித்துவிட்ட பிறகு காரணங்களைத்தேடி செல்கிறது அல்லது காரணங்களை நினைப்பூட்டி விடுகிறது.

புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!
இந்த நிமிடம் வரை தாலாட்டுத் தொடர்கிறது. இந்தப் பாடல் இன்னும் நெடு நாள் என்னிடம் தங்கிவிடும் என்று மனசு சொல்கிறது.





முழுப்பாடலையும் கேட்க



புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!

விழியின் துளியில்
நினைவைக் கரைத்து
ஓடிப் போகிறேன்
என்னை விடு!

பிரிவில் தொடங்கிப் பூத்ததை
பிரிவில் முடிந்து போகிறேன்!
மீண்டும் நான் மீளப் போகிறேன்
தூர நான் வாழப்போகிறேன்

மார்பில் கீறினாய்
ரணங்களை வரங்களாக்கினாய்
தோளில் ஏறினாய்
எனை இன்னும் உயரமாக்கினாய்

உன் விழி போல மண்ணில் எங்கும் அழகு இல்லை என்றேன்
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த விலகி எங்கே சென்றேன்
மேலே நின்று உன்னை நானும் காணும் ஆசையில்


புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!

யாரும் தீண்டிடா இடங்களில்
மனதைத் தீண்டினாய்
யாரும் பார்த்திடா சிரிப்பை
என் இதழில் தீட்டினாய்

உன் மனம் போல விண்ணில் எங்கும் அமைதி இல்லை என்றேன்
உன் மனம் இங்கு வேண்டாம் என்று பறந்து எங்கே சென்றேன்
வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா

புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!

11 comments:

தனிமரம் said...

பாடல் பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி.

Komalan Erampamoorthy said...

//தமிழ்ப் பாடல்களை வேற்று மொழிப்பாடகர் பாடக்கூடாது என்று கொடி பிடிக்கும் வீரர்களையும் தலை குனிய வைக்கிறது விஜயலட்சுமியின் மொழியாடல்//

அடிப்படையில் விஜயலட்சுமி தமிழ் நாட்டில் பிறந்த தமிழ் பெண். கேரளாவில் வளர்ந்தவர்.................

கானா பிரபா said...

கோமளன்

விஜயலட்சுமி வைக்கம் என்ற கேரள ஊரில் பிறந்தவர் தமிழ் நாட்டில் வளர்ந்தவர்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி பிரபா.அந்தப் பெண்ணின் முக பாவமும் பாடலும் இழைந்து மனதை நெகிழ வைத்தன.

கானா பிரபா said...

மிக்க நன்றி தனபாலன்

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி வல்லியம்மா

மனுஷி said...

வணக்கம். புதிய உலகைத் தேடிப் போகிறேன்... பாடல் குறித்த உங்களின் பதிவு அருமை. 5 நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் இந்தப் பாடலின் சுட்டியை எனக்கு அனுப்பி, “இந்தப் பாடலைக் கேளு உனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார். பொதுவாக பாடல் மேக்கிங் செய்வது போன்ற வீடியோ பதிவுகளை நான் விரும்புவதில்லை. திரைப்படத்தை நோக்கி மக்களைக் கட்டி இழுத்து வருகிற வேலையைச் செய்யவே இப்படி யூடியூப்பில் பாடல் மேக்கிங் வீடியோவை பதிவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். (ஒய் திஸ் கொலைவெறி பாடலின் மேக்கிங் வீடியோ பார்த்தது முதல், வெகுஜன வெளியில் அது உண்டாக்கிய மாயையான போதையை நான் அடியோடு வெறுத்தேன்)ஆனால், புதிய உலகை... பாடலின் சுட்டியை அன்றைக்குக் காலையில் கேட்க ஆரம்பித்தவள் இன்னமும் அந்தப் பாடலிலிருந்து, அந்தப் பாடலின் இசையிலிருந்து, அது கிளர்த்துகின்ற ஒருவித வலியிலிருந்து விடுபட முடியாமல் தான் இருக்கிறேன்... என் அறையில் தினமும் ஓயாமல் மீண்டும் மீண்டும் அந்தப் பாடலை ஒலிக்கச் செய்து கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்... பாடலின் வரிகளில் சுயம் தேடுகின்ற பெண்ணின் குரலைக் கேட்க முடிந்தது. எத்தனைமுறை கேட்டாலும் சலிக்கவே இல்லை. இமான், விஜயலட்சுமி, மதன் கார்க்கி கூட இத்தனை முறை கேட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. இதற்கு முன்பு வரை முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் கவிஞர் தாமரையின் வரிகளில் “கண்கள் நீயே... காற்றும் நீயே” என்ற பாடலைத் தான் இப்படி மெய் மறந்து மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தேன்...

கானா பிரபா said...

வணக்கம் மனுஷி

உங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, நான் இதை மதன் கார்க்கியிடம் பகிர்ந்திருக்கிறேன்.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி நேசன்

சுகணா said...

உங்கள் பதிவை மிகவும் வரவேற்கிறேன். சுகமான பாடலை அளித்த குழுவினருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

My Blog said...

Thanks... very nice