Pages

Monday, June 24, 2013

மெல்லிசை மாமன்னனுக்கு வயசு எண்பத்தைந்துஜூன் 24 இன்றைய தினம் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய எண்பத்தைந்தாவது வயதை எட்டியிருக்கின்றார். தமிழ்திரையிசைச் சாதனையாளர்களில் மூன்று முக்கியமான ஆளுமைகளான மெல்லிசை மன்னர் எம். எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆ.ரஹ்மான் ஆகியோர் இயங்குகின்ற சூழலில் நாமும் இருக்கின்றோம் என்பதில் ஒரு பெருமை தானாக வந்து சேர்கின்றது. இன்றைக்கு கணினி யுகத்தில் ஏராளம் டெஸ்ட் டியூப் பேபிகள் இசையமைப்பாளர்களாகக் குவிந்து விட்டார்கள் ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசையுலக மாமன்னன் எவ்வளவு பெரிய சாதனையை தசாப்தங்களைக் கடந்து செய்து காட்டிவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் பார்க்கின்றார் என்னும் போது சாதாரணர்களாகிய நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொன்றையும் அந்த அடக்கம் காட்டி நிற்கின்றது.

இன்றைக்குப் பன்மடங்கு பெருகிவிட்ட தொழில் நுட்ப முன்னேற்றத்தின் பல படிகள் பின்னோக்கிய காலகட்டத்தில் தான் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏராளம் பாடல்களை விதவிதமான சூழலுக்கேற்ப விதையாக்கிக் கொடுத்தார், இன்றைக்கும் பட்டுப்போகாத நல் விரூட்சம் போல அந்தப் பாடல்கள் ரசிகர் மனதில் எழுந்து நிற்கின்றன. ராமமூர்த்தி அவர்களோடு இணைந்து கூட்டாகப் படங்கள் கொடுத்த போதும், தனித்து இயங்கிய போதும் தன் அடையாளத்தை மிகக் கச்சிதமாக நிறுவியவர். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்துப் பாடல்களைக் கேட்கும் போது எம்.எஸ்.வி தனம் இருக்குமளவுக்கு அடுத்த சகாப்தத்திலும் கொஞ்சப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டவர். மெல்லிசை மாமன்னர் விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்கள் லேசுப்பட்டவர்களல்ல, ஒவ்வொருவருக்கும் தனிப்பாணி, இவர்கள் எல்லோருக்கும் ஏற்ற பாடல்களைப் பண்ணுவதோடு மட்டுமல்ல கவியரசு கண்ணதாசனோடு போராடியும், சந்தோஷித்தும் மெட்டுக் கட்டிய கதைகளைப் புத்தகம் ஆக்குமளவுக்கு அந்தப் பாடல்களுக்குப் பின்னால் ஏராளம் கதைகள். இவையெல்லாம் ஒரு மாமூல் கலைஞனுக்கு கிட்டாத அனுபவங்கள். அந்த வகையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் முழுமையான வரலாறு எவ்வளவு தூரம் பதிவாகியிருக்கின்றது என்பது கேள்விக்குறி.

படத்தின் கதையோட்டத்தோடு மாறுபடும் காட்சியமைப்பு வரும்போது ஒரு கட்டியக்காரனாகவும், அசரீரியாகவும் பல படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் ஒரு பாடகராகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுதவிர காதல் பாடல்கள் சிலவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் பாங்கே தனி. அதற்கு உதாரணமாக மூன்று பாடல்களை இங்கே பகிர்கின்றேன்.

"சொல்லத்தான் நினைக்கிறேன்" படத்தில் வரும் "சொல்லத்தான் நினைக்கிறேன்" பாடலை எஸ்.ஜானகியோடு பாடுகின்றார்.
"நிலவே நீ சாட்சி" பாடலில் "நீ நினைத்தால்" பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியோடு பாடும் பாங்கைக் கேளுங்கள், இவர்தான் பாடியிருக்கிறார் என்று ஊகிக்கமுடியாத அளவுக்கு மிகவும் கட்டையான சுருதியில் பாடுவார். "முத்தான முத்தல்லவோ" படத்தில் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு பாடும் போது எப்படி அநாயசமாக  போட்டு வாங்குகிறார் பாருங்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் அளவுக்கு மற்றைய இசையமைப்பாளர்களோடு நேசம் கொண்டு, அவர்களின் படங்களிலும் கெளரவப்பாடகராக வந்துகாட்டும் போது அவரின் இன்னொரு பரிமாணம் வெளிப்படுகின்றது. இவர் அளவுக்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு தொகை இசையமைப்பாளர்கள் இசையில் பாடிய இன்னொரு இசையமைப்பாளரை அடையாளம் காட்டுவது மிகக்கடினம், இரண்டாவது இடத்தில் கங்கை அமரனைச் சேர்த்துக் கொள்ளலாம், அந்த வகையில் தமிழ்த்திரையுலக முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எம்.எஸ்.வி பாடிய பாடல்கள் சில இங்கே,

இளையராஜா - தாயே மூகாம்பிகையே (தாய் மூகாம்பிகை) நல்ல காலம் ( கருவேலம் பூக்கள்)
ஏ.ஆர்.ரஹ்மான் -  ஆலாகண்டா (சங்கமம்), விடை கொடு எங்கள் நாடே (கன்னத்தில் முத்தமிட்டால்)
ஜி.வி.பிரகாஷ்குமார் - "மேகமே ஓ மேகமே ( மதராசப்பட்டணம்)
வி.குமார் - உனக்கென்ன குறைச்சல் (வெள்ளி விழா)
பரத்வாஜ் - மெட்டுத் தேடித் தவிக்குது  (காதல் மன்னன்)
தேவா - கதிரவனை முத்தமிட்டு கடல் மேலே வித்தை செய்து (வைதேகி வந்தாச்சு)
சந்திரபோஸ் - எந்த வழி போவது (குற்றவாளி)
கங்கை அமரன்  இசையில் இனி ஒரு சுதந்திரம் படத்தில் ஒரு பாடல்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் -  நட்பு நட்பு (உன்னைச் சரணடைந்தேன்)

சினிமாத் தயாரிப்பாளராக கலைக்கோயில் படம் உட்படக் கையைச் சுட்டுக் கொண்டாலும், குணச்சித்திர நடிகராக ஏற்ற பாத்திரத்தில் வாழ்ந்து காட்டியவர் இவர்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இசைஞானி இளையராஜாவும் தனித்தே சாதித்துக் காட்டியவர்கள் ஆனாலும் இவர்கள் இருவரும் புதுமையான முயற்சியாக ஜோடி கட்டி இசையமைத்த படங்கள்
மெல்லத் திறந்தது கதவு ( சிறப்புத் தொகுப்பைப் பார்க்க)
என் இனிய பொன் நிலாவே ( சிறப்புத் தொகுப்பைப் பார்க்க)
செந்தமிழ்ப்பாட்டு
செந்தமிழ்ச் செல்வன்
இரும்புப்பூக்கள்
விஸ்வதுளசி

மெல்லிசை மாமன்னரின் பாடல்கள் ஒவ்வொன்றும், பயன்படுத்திய வாத்திய வகையறாவில் இருந்து பல்வேறு காட்சிமைப்புக்களுக்கேற்ப என்னவெல்லாம் புதுமையான மெட்டையும், குரல் அமைப்பையும் புகுத்தியிருக்கிறார் என்பதையும் ஒரு பெரிய ஆய்வுக்குட்படுத்திப் பார்க்கவேண்டும், ஆண்டுக்கணக்கில் எடுக்கும் ஆய்வாக இது அமைந்து விடும் அளவுக்கு அள்ள அள்ள ஏராளம் புதையல்கள் அவர்தம் பாடல்களுக்குள்ளே ஒளிந்திருக்கின்றன.

மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வாழிய பல்லாண்டு

8 comments:

Anonymous said...

மெல்லிசை மன்னர் என்னும் மாமேதைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெரிய பெருமை.

ஒன்றா இரண்டா... அவருடைய பாடல்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க முயற்சிக்கிறோம். நிறைய பாடல்கள் குறித்தும் படங்கள் குறித்தும் தகவல்களே கிடைக்கவில்லை. தமிழில் மட்டும் 3700 திரைப்படப் பாடல்களின் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. பட்டியலில் விடுபட்டுப் போன திரைப்படங்களைப் பற்றி நண்பர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவை போக மலையாளம் தெலுங்கு கன்னடத் திரைப்படப் பாடல்கள் வேறு. முழுமையான பட்டியலும் சிறந்த ஒலித்தரத்தில் பாடல்களும் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்.

ஓ மஞ்சு என்றொரு படம். ஸ்ரீதர் இயக்கி மெல்லிசை மன்னர் இசையமைத்து வந்த படம். பாடல்கள் ஹிட். படம் தோல்விப் படம். ஆனால் இந்தப் படத்தின் டிவிடியோ பாடல்களோ கிடைப்பதில்லை. நேற்று கூட ஏவிஎம் சவுண்ட்சோனில் கேட்டேன்.

இது போல இன்னும் எத்தனையெத்தனையோ!

maithriim said...

மெல்லிசை மன்னரைப் பற்றிய சிறப்புப் பார்வை அருமை. அவரின் எல்லா திறமைகளின் சிறப்பையும் சுட்டிக் காட்டி பகிர்ந்தமைக்கு நன்றி. அவர் வாழ்க பல ஆண்டு!

amas32

நண்பா said...

மெல்லிசை மன்னருக்கு அருமையான ஒரு வாழ்த்து.

கோமதி அரசு said...

மெல்லிசை மன்னருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அவரின் இசை பணி பெரிய சாதனைதான்.
அவரின் பாடல்கள் இசைக்கு பொற்காலம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வணக்கம் கா.பி

ஒரு இசைக் கடலின் தண்ணியைக், குப்பியில் நிரப்பி, கொஞ்சமே கொஞ்சம் soap bubbles விட்டது போல் பதிவு எழுதி இருக்கீங்க!

குளம் வத்தும்!
(காவிரி) ஆறு கூட வத்தும்!
கடல் வத்துமா?

MSV = கடல் போல!
அந்தக் கடலுக்கே தெரியாது, தன் கிட்ட எப்படி அவ்ளோ தண்ணி சேந்துச்சு?-ன்னு!

(இப்பல்லாம் MSV க்கே தான் செய்த பல பழைய அபூர்வப் பாடல்கள்/ தகவல்கள் மறந்து போய் விடுகிறார்)

எவ்ளோ பெரிய கடலா இருந்தாலும், அந்தப் பெருமையெல்லாம் ரொம்ப அளக்காமல்..
வெறுமனே soap bubbles விடுவது ஒரு பிள்ளை இன்பம்!

அந்தப் பிள்ளை அழகா இருக்கு, இந்தக் குறும் பதிவு:)

//பிற இசையமைப்பாளர்களின் இசையில் எம்.எஸ்.வி பாடிய பாடல்கள் சில இங்கே//

Of all the bubbles, I like this bubble!
----

விஸ்வநாத-கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
(இருவரும் Jun 24 தானே! Why u forgot Kavignar?:)

Sorry, just came back home from hospital & seeing this post..
Or else, wud have pointed out on Jun 24th itself:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

"அத்தான் பொத்தான்; மயிரு மட்டை
-ன்னு காதல் பத்தி ரொம்ப எழுதியாச்சே;

என்னடா விஸ்வநாதா?
தத்தகாரம் நீ தரியா? இல்ல நான் சொல்லட்டுமா?"
----

பொதுவா,
பெரும் இசையமைப்பாளருக்கு.. பாட்டின் வரியை விடத்,
தான் கருவில் போட்ட இசையின் மேல் தான் அதிக பாசம் இருக்கும்!

பெருங் கவிஞருக்கோ, இசையை விட, தமிழ் எழுத்தின் "வீரியம்" மேல் தனிக் கவனம்!
அம்மா-அப்பா, குழந்தை உருவாக்கும் வித்தை போல-ன்னு வச்சிக்குங்களேன்:)

MSV = அம்மா போல!

குழந்தையின் மேல் அம்மாக்குத் தான் அதிக உரிமை என்றாலும்..
MSV = கவிஞரின் தமிழுக்கே முன்னுரிமை குடுத்து, அப்பா Initial-யே போட்டுடுவாரு:)

இன்று = மீட்டருக்கு மேட்டரு;
அன்று = மேட்டருக்கு மீட்டரு!
-----

அப்படிப்பட்ட MSV அவர்களே, ஒரு முறை, கண்ணதாசனை மீறி..
தன் மெட்டே பிரதானம்; தன் மெட்டுக்கே பாட்டு எழுதணும் -ன்னு அடம் புடிச்சாரு-ன்னா நம்ப முடியுதா?:)

அப்போ, கண்ணதாசன் சொன்னவையே அந்த முதல் வரிகள்!
"என்னடா விஸ்வநாதா?
தத்தகாரம் நீ தரியா? இல்ல நான் சொல்லட்டுமா?"


Kannabiran, Ravi Shankar (KRS) said...

போலீஸ்காரன் மகள் படத்துக்கு, ஒரு பாடல் காட்சியை, இயக்குநர் ஸ்ரீதர் சொல்றாரு..

ஸ்ரீதரின் ஒரு இந்திப் படத்தில், "ருக் ஜா ராத்" -ன்னு இந்திப் பாட்டு;
http://www.youtube.com/watch?v=t6f6sTCIRH4
அதுல வரும் சிதார் இசை போல, பாட்டு ரொம்ப மெள்ள நடை போடணும்;
ஆனா போரடிக்காம ரொம்ப நல்லாவும் இருக்கணும் -ன்னு Condition!

தம்பூரா இசை போலவே slow but magical ன்னு ஸ்ரீதர் சொல்ல..
"தம்பூரா" (எ) மந்திரச் சொல்லு, MSV-க்குள்ள போயி தங்கிருச்சி!

MSV, Keyboard-ஐ விட ஆர்மோனியம்/ தம்பூரா போன்ற ஒத்தை வாத்தியங்களின் மேல் ரொம்ப மோகம் கொண்டவரு-ன்னு பலருக்கும் தெரிஞ்சது தான்;
"தம்பூரா" போலவே பாட்டு வரணும்-ன்னா எப்படி?

உம்.. உம்.. உம் -ன்னு தம்பூரா ஸ்ருதி சத்தம்!
உம்உம்உம் = "பொன் என் பேன்" -ன்னு MSV மனசுல விழுந்து போச்சி!

மெட்டைப் போட்டுட்டாரு!
-----

கண்ணதாசன் வந்ததும் இதைச் சொல்ல,
என்னாங்கய்யா இது? நீங்களே போட்டுட்டு என்னைய வார்த்தைய மட்டும் நிரப்பச் சொன்னா எப்படி? உணர்ச்சியே இல்லாம..? -ன்னு எகிற..

பிடிவாதம் என்பதையே அறியாத MSV, அன்னிக்கி தம்பூரா மோகத்தால்...
பிடிச்ச பிடிவாதம் பாத்து, யூனிட்டே அசந்து போனதாம்; கண்ணதாசன் கூட அசந்து போயி மனச மாத்திக்கிட்டாராம்

என்னடா விஸ்வநாதா, தத்தகாரம் நீ தரீயா? நானே போட்டுக்கட்டுமா? -ன்னு கவிஞர் கேட்க...
MSV, "உம்-உம்-உம்" -ன்னு தம்பூரா மெட்டாவே, முழுப் பாட்டும் சொல்ல..
-------

அத்தான், பொத்தான், மயிரு, மட்டை -ன்னு
அதான் எல்லாச் சொல்லும் ஏற்கனவே காதல் பாட்டுக்குப் போட்டுட்டேனே,
இந்த விஸ்வநாதன் இப்படி உம் உம்-ன்னு மக்கர் பண்ணுறானே -ன்னு புலம்பிக்கிட்டே..

உம் உம் உம்
உம் உம் உம்

பொன் என் பேன் - சிறு
பூ என் பேன் - காணும்
கண் என் பேன் - வேறு
என் என் பேன்
-ன்னு ஒரு தம்பூரா போல அப்படியே தமிழ்ச் சொல்லாக் கொட்டினாராம் கண்ணதாசன்:)

Itz a great PB Srinivas & Janaki Magic!
http://www.youtube.com/watch?v=rFKnRR__fo8

பணியுமாம் என்றும் பெருமை - சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.. இந்தக் குறளின் மொத்த உருவமான MSV! அவரே அடம் புடிச்சா அது எப்படி இருந்திருக்கும்? கற்பனை பண்ணிப் பாருங்க!:)

= இதான் விஸ்வனின் நாதனும், கண்ணனின் தாசனும்!

உன்னை நான் அறிவேன்
என்னை நீ அறிவாய்!
நம்மை நாம் அறிவோம்
வேறு யார் அறிவார்!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Cudnt wish MSV-Kannadasan from hospital;
So re-posted an old post from 2008

MSV & இளையராஜா - "கூட்டாப் போட்ட பாட்டு"
http://kannansongs.blogspot.com/2013/06/msv.html