Tuesday, June 4, 2013
இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ஒரு இசையமைப்பாளரின் பாடலுக்கு உயிர்கொடுப்பது மட்டுமன்றி, குறித்த பாத்திரமாகவே மாறி அந்தந்த நடிகர்களின் குணாம்சத்துக்கேற்பத் தன்னை ஆவாகித்துக் கொண்டு பாடும் தொழில் திறன் மிக்க பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு வாழும் உதாரணம் எனலாம். பாடகராக பொன்விழாக் காண இன்னும் இரண்டு ஆண்டுகளே மிச்சம் வைத்திருக்கும் இவர், இன்றைய தலைமுறை வரை அச்சொட்டாகப் பொருந்தக்கூடிய குரல் வளம் கொண்டு இயங்கிவருவது ஆண்டவன் கொடுத்த வரம் எனலாம். எண்பதுகளில் இசைஞானி இளையராஜா முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்ந்த போது, மற்றைய இசையமைப்பாளர்களின் பாடல்கள் பிரபலம் ஆகுவதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பங்கு பெரிது என்பதை, இசையமைப்பாளர் யாரென்றே தெரியாமல் வாய் முழுக்க முணுக்கும் பாடல்கள் ஒரு தொகை பெறும். அவ்வளவுக்கு முன்னணி, பின்னணி பாராது எல்லா இசையமைப்பாளர்களது பாடல்களையும் நேசித்து அந்தப் பாடல்களை உயிரோட்டம் நிறைந்ததாய் ஆக்கிவிடுவார். சங்கர் கணேஷ், சந்திரபோஸ் என்று நீண்டு செல்லும் இசையமைப்பாளர்களின் பாடல்களை இதற்கு உதாரணமாக அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னும் ஏன், என் போன்ற ரசிகர்களுக்கு பல இசையமைப்பாளர்களைத் தேடி அறிய வைத்ததே பாலசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த பாட்டுத்திறனே காரணம். தெலுங்கு மொழியைத் தன் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் எல்லா மொழிகளையும் மாற்றாந்தாயாக நினையாது அந்தந்த மொழிக்கு விசுவாசம் செய்தவர். எத்தனையோ பாடல்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நளினமான சிரிப்பும், ஏற்ற இறக்கமும் படம் வருவதற்கு முன்பே காட்சி இப்படித்தான் இருக்கும் என்று ஊகிக்கும் அளவுக்குக் கொடுத்திருப்பார், ஆனால் அந்தப் பாடல்களின் திறன் உணராத இயக்குனர்கள் கையில் சிக்குண்டு க்ளோசப் காட்சியில் அந்த நாயகன் காட்டவேண்டிய நுணுக்கமான முக உணர்வுக்குப் பதில் லாங் ஷாட் இல் வைத்துப் பழிவாங்கிவிடுவர்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனது 67 வது பிறந்த நாளைக்காணும் இந்த நாளில் அவரின் சாகித்தியத்தின் இன்னொரு பரிமாணமாக, இசையமைப்பாளராக வலம் வந்த படங்களில் இருந்து ஒரு சிறு தொகுப்பையே அவரின் பிறந்த நாள் பரிசாகக் கொடுப்பதில் மகிழ்கின்றேன். தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களுக்கும், தனிப்பாடல் தொகுப்புக்களுக்கும் இசையமைத்திருக்கும் இவரின் தமிழ்ப்படங்களின் பாடல்களையே இங்கு நீங்கள் காணலாம். இந்தப் பாடல் துளிகளே எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற மாபெரும் கலைஞனின் உள்ளிருக்கும் இசைத்திறமையை வெளிக்கொணரும் சான்றுகள்.
கண்ணை மூடிக்கொண்டே அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யாராகினும், இயக்குனர் ஶ்ரீதர் படம் என்றால் சொக்கவைக்கும் இசையைக் கொடுத்துக் கிறங்கடித்துவிடுவார். அதற்கு இயக்குனர் ஶ்ரீதர் கலைஞரிடம் எப்படியாவது தனக்குத் தேவையானதை வாங்கிவிடவேண்டும் என்ற முனைப்பும் முக்கிய காரணம். ஏ.எம்.ராஜா காலத்தில் இருந்து பல ஆளுமைகளைக் கண்ட ஶ்ரீதர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தைத் தனது துடிக்கும் கரங்கள் படத்துக்கான இசையமைப்பாளராக அமைத்துக் கொண்டார். அந்தப் படத்தில் வந்த "சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்" பாடல் அன்றைய றேடியோ சிலோன் என்ற இலங்கை வானொலியின் பிரபல பாடலாகச் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டது. பாடலை எஸ்.ஜானகியோடு பாடுகின்றார் இசையமைப்பாளர் எஸ்.பி.பாலு.
"சங்கராபரணம்" கொடுத்த மாபெரும் வெற்றி அலையால் அந்தக்காலத்தில் தொகையாய்க் குவிந்த சங்கீத, நாட்டியப்படங்களில் மக்கள் மனதில் இடம்பிடித்துக் கொண்டது என்னவோ "மயூரி" போன்ற ஒரு சில படங்கள் மாத்திரமே. கால் ஊனமுற்ற பெண் நடிகை சுதா சந்திரனுக்குப் பெரும்புகழையும் ஈட்டிக் கொடுத்த அந்தப் படம் தேசிய அளவில் அவருக்குச் சிறந்த நடிகையாக்கி அழகு பார்த்தது. இயக்கத்தை, கமல்ஹாசனின் நிழல் இயக்குனர் என்று சொல்லுமளவுக்கு அவரால் அறியப்பட்ட சிங்கிதம் சீனிவாசராவ் கவனித்துக் கொண்டார். இந்தப் படத்தின் இசையை வழங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர் விருதுகளை மாநில அளவில் பெற்றுக்க் கொள்ள உறுதுணை புரிந்தது "மயூரி". இந்த மொழிமாற்றுப்படத்தில் இருந்து "மெளனம் நாணம் மலரும் புது யெளவனம்" பாடல் இதோ
எஸ்.பி.பி ஒரு இசையமைப்பாளர் என்று பரவலாக உலகை அறிய வைத்த பெருமையை "சிகரம்" தட்டிக்கொண்டது. கே.பாலசந்தரின் உதவியாளர் அனந்து இயக்கிய முதல்படம். படத்தின் பாடல்கள் எல்லாமே பரபரப்பான வெற்றிவாகையைக் கொண்டாடின. கூடவே விருதுகளும் வந்து சேர்ந்தன சிறந்த இசையமைப்பாளர் என்று. இந்தப்படத்தின் எந்தப் பாடலை எடுப்பது எதை விடுவது என்று திணறும் அளவுக்கு "வண்ணம் கொண்ட வெண்ணிலவே", "அகரம் இப்போ சிகரம் ஆச்சு", "உன்னைக்கண்ட பின்புதான்" என்று வரிசைகட்டி நிற்கும். ஆனால் எல்லாவற்றிலும் இருந்து தனித்து அமைதியாக, நிதானமாக ஈர்த்தது என்னமோ "இதோ இதோ என் பல்லவி பாடல்" முந்திய பாடல்களை எல்லாம் கேட்டுத் தித்தித்த வேளை மெதுவாக வந்து மனசின் ஓரத்தில் இடம்பிடித்துக் கொண்டது. இசையமைப்பாளர் தாயன்பன் ஒருமுறை மேடையில் சொன்னது போல இந்தப்பாடலுக்கு அவ்வளவு ஸ்பெஷலைக் கொடுக்கலாம் என்பேன்.
"சிகரம்" பாடல்கள் கொடுத்த வெற்றியால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தமிழில் தொடர்ச்சியாக அப்போது இசையமைக்கும் வாய்ப்பு, அதில் முத்திரை இயக்குனர் மகேந்திரனின் "ஊர்ப்பஞ்சாயத்து" படமும் ஒன்று. கூடவே தயாரிப்புலகின் ஜாம்பவான் கலைப்புலி தாணு தயாரிக்க, இயக்குனர்மகேந்திரன் கதை வசனம் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்க, பார்த்திபன் நடித்த "தையல்காரனும்" பரபரப்பாகப் பேசப்பட்டது ஆனால் ஏனோ மனசில் ஒட்டுமளவுக்கு தையல்காரன் உழைக்கவில்லை. பாடல்களை எடுத்துக் கொண்டால் அந்தக்கால விவித்பாரதி விளம்பரங்களில் கொஞ்சூண்டு துளி பாடலைக் கேட்டு இன்னும் கேட்கமுடியாதா என்று ஆசை கொள்ள வைத்த பாட்டு "மை மை" என்ற பாட்டு, பின்னர் பல மாதங்களுக்குப் பின்னர் தலைநகர் கொழும்பில் இருந்த ஒரு ரெக்கார்டிங் பார் இல் ஒலிப்பதிவு செய்து கேட்கும் அளவுக்கு உயிர் வைத்து நேசித்த பாட்டு "மை மை மை"
"தையல்காரன்" படத்தில் இருந்து இன்னொரு நல்லதொரு தெரிவாக "உலகம் ஒரு வாடகை வீடு" பாடலைத் தவிர்க்க மனமின்றி அதையும் கொடுக்கிறேன், ரசியுங்கள்.
"உலகம் பிறந்தது எனக்காக" என்றதொரு மசாலாப்படம், ஏவிஎம் நிறுவனம் இளையராஜாவோடு ஊடல் கொண்டிருந்த காலகட்டத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடிக்க வெளிவந்திருந்தது. அந்தப் படத்தின் முக்கிய இசையமைப்பாளராக, பிரபல இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் அமைய, இணை இசையமைப்பாளர் பொறுப்பை எஸ்.பி.பாலு எடுத்துக் கொண்டார். அந்தப் படத்தின் பேரைக்காப்பாற்றிய இரண்டு பாடல்கள் இரண்டு இதோ
"நீ அழுத கண்ணீர் மழையாச்சு"
"மாங்காட்டு மயிலே நில் நில் நில்"
எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன் தனையன் எஸ்.பி.பி.சரணுக்கும் ஒரு நல்வழி காட்டவெண்ணி எடுத்த "உன்னைச் சரணடைந்தேன்" படத்தின் இசையமைப்பாளராக அமர்ந்துகொண்டார். அந்தப் படத்தின் பாடல்களிலே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, பாடும் நிலா பாலு ஆகிய மூன்று இசையமைப்பாளர்களும் கொடுத்த நட்புப் பாடல் அருமையிலும் அருமை.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
வாழ்த்துக்ககள் ;))
ஆகா...இம்புட்டு படம் இசையமைப்பாளரா அவரு?
இப்போ தான் தல எல்லாம் கேட்கிறேன்
உங்கள் பதிவுகளைப் படிப்பது பரமானந்தம் :-)இவ்வளவு அருமையான பாடல்களை இசையமைத்துள்ளார் என்று இன்று வரை தெரியாது. ஆனால் அவர் இசையமைப்பாளராக சோபிக்கவில்லை.probably நேரமின்மையே காரணமாக இருந்திருக்கும். பாடகராக இருப்பதற்கே நேரம் சரியாக இருந்திருக்குமே!
amas32
கா.பி
SPB க்கு தையல்காரன் தான் தமிழில் முதல் படம் அல்லவோ? (இசையமைப்பாளராய்)
அப்பறம் தானே துடிக்கும் கரங்கள் வந்துச்சி?
Glad it happened to be Director Sridhar & Rajini; Peak up!
உன்னைச் "சரண்" அடைந்தேன் -ன்னு முடிஞ்சி போயிருச்சி:(
* விதம் விதமா FastFood/ SlowFood ன்னு சமைக்கிறவங்க பலரும் = வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் "இதம்" ஆகி விடுவதில்லை
* நெறைய புத்தகம் எழுதறவங்க பலரும் = எழுத்தில் "ஆத்மார்த்தம்" வருவதில்லை
* நல்லாப் பிரசங்கம் பண்ணுற பலரும் = இறையருளில் "கனிவு" வருவதில்லை
நல்லாப் பாடுறவங்க பலரும்? = இசை அமைப்பில்??
---------
அதே இசை தான்; அதே நுணுக்கம் தான்;
ஆனா, அவங்களால் இசையை "அமைக்க’ முடியாது!
ஏற்கனவே அமைச்ச இசையை, வழிநடத்த மட்டுமே முடியும்!
இதுக்கு விதிவிலக்கு = SPB!
-------
சந்ந்-தனம் பூச
மஞ்-ஞ்சள் நிலாவும்
-ன்னு SPB/Janaki extra ஒரு எழுத்து அழுத்தும் போது,
அட, இசையமைச்சவரே, இப்படிப் பாடறாரே -ன்னு மனசுக்குள் புன் முறுவல் பூக்கும்!:)
அதே போல், சிகரத்தில், வண்ணம் கொண்ட வெண்ணிலவே-வை விட, இதோ இதோ என் பல்லவி-யில் நுணுக்கம் அதிகம்; I like it;
நீங்க குடுத்த காணொளியில், சைந்தவி is really trying hard to bring Chitra! Great!
ஆனா, "இசையமைப்பு" -ன்னா பாட்டு மட்டுமே -ன்னு இருந்துட்டாரோ SPB?
பின்னணி இசை = In my humble & personal opinion, he didnt concentrate I guess!
ஒரு வேளை, அதான் ரொம்ப சோபிக்க முடியலையோ என்னவோ?
அது சரி, இளையராஜா மாதிரியே இவர் கிட்டேயும் எதிர்பார்த்தா முடியுமா?:)
-------
தமிழை விடத் தெலுங்கில் தான் நெறய இசை அமைச்சிருக்காரு; பாட்டெல்லாம் கேட்கவே ரொம்ப "ஜா"லியா இருக்கும்:)
சந்தியா ராகம் -ன்னு ஒரு படம் -ன்னு நினைக்கிறேன்; East & West story!
அதுல கலக்கி இருப்பாரு நம்ம பாலு;
Life is shabby
without you baby
-ன்னு அவரே பாடுவாரு:)
அதே படத்தில், பிபரே ராம ராசம் -ன்னு கீர்த்தனை!
அதுக்கும் இசை அமைச்சிப் பாடுவாரு! சூப்பரா இருக்கும்!
"முத்து காரே யசோதா" -ன்னு அன்னமாச்சாரியர் பாட்டும் SPB Style-இல் உண்டு:)
-----
பாடும் நிலா பாலுவுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ஒன்னு சொல்ல மறந்துட்டேனே...
//தெலுங்கு மொழியைத் தன் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் எல்லா மொழிகளையும் மாற்றாந் தாயாக நினையாது அந்தந்த மொழிக்கு விசுவாசம் செய்தவர்//
Yes, Yes, Yes!!
Male = SPB
Female = Susheelamma
---------
இசைக்கு “ஆத்ம அர்ப்பணிப்பு” செய்பவர்கள்..
மொழிக்கும், “ஆத்ம அர்ப்பணிப்பு” செய்யணும்;
(applies to tamizh singers, singing in other languages too)
இசைக்கு மொழி இல்லை -ன்னு சொல்லுவாய்ங்க!
ஓரளவும் உண்மை தான்; ஆனா, முழு உண்மையும் சொல்லணும் -ன்னா...
** மனசில் இசை நிலைக்கணும் -ன்னா = இசைக்கு மொழி உண்டு! **
அம்மாவே தனியாக் குழந்தை பெத்துக்க முடியாது;
அப்பாவே தனியாக் குழந்தை பெத்துக்க முடியாது;
கூடல் தான் இன்பம்! = இசையும், மொழியும் “கூடணும்”!
thudikkum karangal
அருமையான பதிவு. தெரியாத பல தகவல்கள். மிகவும் நன்றி..
என் இனிய பாலுஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தாக அசத்தலான கட்டுரையை உங்களூக்கே உரித்த பாணியில் இனிய பாடல்களூடன் வழங்கியிருக்கிறீர்கள். நன்றி.. நன்றி..நன்றி. பா.நி.பா என் பாடல் பதிவை கூட அவருக்கு நான் அனுப்பவில்லை (அவரின் விருப்பத்துடன் வாழ்த்தும் அனுப்பவில்லை) இதோ உங்கள் பதிவை அவருக்கு தொடர்பு கொடுத்து விடுகிறேன் கானா சார்.
தல கோபி வருகைக்கு நன்றி ;)
அமாஸ் அம்மா
மிக்க நன்றி ;-)
கேயாரெஸ்
துடிக்கும் கரங்கள் தான் முதலில் வந்துச்சு, பின்னூட்டம் வழக்கம் போல செம ;-)
வருகைக்கு நன்றி சிவா
ரவி சார்
பாலு சார் குறித்து நீங்கள் எண்ணற்ற பதிவுகளைக் கொடுத்தீர்கள் நானெல்லாம் சிறு துளி.
என் பதிவை அவருக்குச் சேர்ப்பிப்பதற்கு மிக்க நன்றி சார்.
Post a Comment