எழுபதுகளின் இறுதிக் காலகட்டத்தில் இளையராஜாவின் காலத்திலும் டி.எம்.செளந்தரராஜனின் பங்களிப்பு அன்னக்கிளி தொடங்கி தியாகம், நான் வாழ வைப்பேன் போன்ற படங்களில் சிவாஜிக்கான குரலிலும் பைரவியில் ரஜினிக்காக "நண்டூருது நரியூருது" என்றும் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் "தாயில்லாமல் நானில்லை" படத்தில் கமலுக்காக டி.எம்.எஸ் ஐப் பாடவைத்த "வடிவேலன் மனசு வைத்தான்" என்று அடுத்த தலைமுறை நடிகர்களுக்காகவும் தன் குரலைக் கச்சிதமாகப் பொருத்தி வைத்தார். இவைகளையெல்லாம் கடந்து அந்த எண்பதுகளிலும் "பாசமலர்" ஆகவும் "பாலும் பழம்""ஆலய மணி" ஆகவும் நீக்கமற வானொலிப்பெட்டியை நிறைத்தார் டி.எம்.செளந்தரராஜன்.
அற்ப வாழ்நாள் கொண்டிருந்தாலும் அற்புதக் கவியாற்றல் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் எழுச்சி மிகு பாடல்களுக்கு உணர்வு வடிவம் கொடுத்தது இன்னும் உயர வைத்தது டி.எம்.எஸ் இன் குரல். கண்ணதாசனின் காதலில் இருந்து எல்லா உணர்வையும் அசரீரியாகக் கொடுத்ததில் டி.எம்.செளந்தரராஜனின் குரலே முதன்மையானது. தமிழ்த்திரையின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ஜெய்சங்கர், சிவக்குமார் வரையான நாயகர்களுக்கு ஏற்ற விதத்தில் பாடிச் சென்றவரின் பாடல்களை வெறுமனே ஒலி வடிவில் கேட்கும் போதே இது யாருக்கானது என்று கண்டுபிடித்துச் சொல்லுமளவுக்கு நுணுக்கம் நிறைந்தவர். அவருக்குப் பின்னர் தான் திரைப்படத்தின் நாயகனின் பாத்திரத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு பாடும் வல்லமையைத் தமிழ்த்திரையிசையுலகம் பதிவு செய்து கொண்டது. அந்த நிலையை இழந்து சோரம்போய் நிற்கின்றது இன்றைய தமிழ்த்திரையிசையுலகம்.
அவர் ஒரு கடல், கம்பன் சொல்லுவது போல "ஆசையினால் பாற்கடலை நக்கிக் குடித்துவிட முனையும் பூனை" போன்றது டி.எம்.செளந்தராஜனின் முழுமையான திரையிசைப் பங்களிப்பைப் பற்றி அலசி ஆராயும் பணி. என்னளவில் எண்பதுகளில் அவரின் பாடல்கள் எவ்வளவு தூரம் எம்மை ஆட்கொண்டன என்பது குறித்த சில நினைவுத்துளிகளை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.
"எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ" லவுட் ஸ்பீக்கர் பூட்டிய ஒ ரு பழைய மொறிஸ் மைனர் காரில் இருந்து வெளிக்கிளம்புகிறது மலேசியா வாசுதேவன் குரல். அந்தச் சத்தம் வந்த திசை நோக்கிக் கூட்டம் கூடுகிறது காரை ஓரம் கட்டிவிட்டு, காருக்குள் இருக்கும் போராளி தாயக விடுதலை குறித்த கோஷத்தை எழுப்புகிறார். கூடவே துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன. கார் மெல்லக் கிளம்புகின்றது, இம்முறை டி.எம்.எஸ்
பாடுகின்றார் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்"
இன்னும் பல கிராமங்களைக் கடக்கவேண்டும் அந்தக் கார், புழுதியைக் கிழித்துக் கொண்டு போகின்றது. புழுதி வளையம் மட்டும் கொஞ்ச நேரம் நிற்க கார் எங்கோ கடந்து விட்டது, தூரத்தே
"ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறதே" என்றும், "அச்சம் என்பது மடமையடா" என்றும் சில்லென்று காதை ஊடுருவுகிறது டி.எம்.எஸ் இன் கணீர்க்குரல், அந்தக் காலகட்டத்தில் இளைஞர்களின் எழுச்சிக் குரல் அது. அப்போதெல்லாம் ஈழ விடுதலை இயக்கங்கள் தமக்கான போர்க்கால எழுச்சிப்பாடல்களைத் தாமே உருவாக்காத காலகட்டம். அப்போதெல்லாம் செளந்தரராஜன் என்றோ ஏதோ ஒரு படத்துக்காகப் பாடிய பாடல்களே அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் பதிவாகிய வீரமூட்டும், நம்பிக்கை கொடுக்கும் விடுதலைத் தீயை மூட்டப் பயன்படுத்த உறுதுணையாக அமைந்தன.
பின்னாளில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொண்ணூறுகளில் கூட புலிகளின் குரல் வானொலியில் விதிவிலக்காக அமைந்த திரையிசைப்பாடல்கள் என்றால் அங்கே டி.எம்.செளந்தரராஜனின் பாடல்களே இடம்பிடித்திருந்தன. கூடவே பி.பி.ஶ்ரீனிவாஸ் குழு பாடிய "தோல்வி நிலையென நினைத்தால்".
டி.எம்.செளந்தரராஜன் குரல் போர்க்கால இலக்கியமாகக் கொண்டாடப்பட்ட அதே சமயம் ஆலயங்கள் தோறும் கொடியேறிக் கொண்டாட்டம் நடக்கும் போதும் இன்னும் முக்கிய திருவிழாக்களிலும் "உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே" என்றும் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே" என்றும் "தில்லையம்பல நடராஜா" என்றும் அந்தந்த ஆலய மூல மூர்த்தியின் பெருமைதனைக் கூறும் பக்திப்பாடல்களிலும் இடம்பிடித்தவர் இன்னும் தொடர்கின்றார்.
"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே" என்ற பாடலை எங்களூர் வீரமணி ஐயர் அவர்கள் கபாலீஸ்வரர் கோயில் உறையும் அன்னை மீது எழுத அதை டி.எம்.செளந்தரராஜன் குரல் வடிவம் கொடுத்து ஈழத்தமிழகத்துக்கும், இந்தியத்தமிழகத்துக்கும் உறவுப்பாலம் அமைத்ததை இன்றும் பெருமையாகச் சொல்லிக்கொள்வோம்.
அன்றைய காலகட்டத்தில் நாங்கள் சிறுசுகளாக இருந்த போது, மாமன், மச்சான் உறவுகளும் சரி ஊரில் தோட்டவேலை செய்து களைத்து விழுந்து வீடு திரும்பும் உழைப்பாள சமூகமும் சரி இடம், பொருள் ஏவல் பாராமல், டி.எம்.எஸ் இன் குரலைத் தம்முள் ஆவாகித்துக் கொண்டு பாடியபோதெல்லாம் வேடிக்கை பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அந்தக் கலைஞன் எவ்வளவு தூரம் எல்லாத்தளங்களிலும் நின்று தன்னை நிறுவியிருக்கிறான் என்ற ஆச்சரியமே மேலோங்குகின்றது,
எண்பதுகளின் திரையிசைப்பாடல்களிலே டி.எம்.செளந்தரராஜனுக்கான கெளரவத்தை மீளவும் நிலை நிறுத்தியவர் டி.ராஜேந்தர். அவரின் ஒரு தலை ராகம் படத்தில் வரும் "நானொரு ராசியில்லா ராஜா" அன்றைய அண்ணன்மாரின் காதலுக்கான தேசிய கீதமாகவும், "என் கதை முடியும் நேரமிது" காதலின் விரக்தியில் நின்றோரின் உள்ளத்து ஓசையாகவும் அமைத்துக் கொடுத்தார் டி.ராஜேந்தர். இளையராஜா காலத்தில் புதுமையைத் தேடி எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ் என்று மும்முனைப் போட்டியிருக்க, அங்கும் தன்னை நிலை நாட்ட வைத்தது ஒரு தலை ராகம் திரைப்படப் பாடல்கள். டி.ராஜேந்தரின் அடுத்த படைப்புக்களிலும் குறிப்பாக "ரயில் பயணங்களில்" படத்தில் "அமைதிக்குப் பெயர் தான் சாந்தி" என்றும் "நெஞ்சில் ஒரு ராகம்" திரைப்படத்தில் "குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன" என்றும் டி.எம்.செளந்தரராஜனின் குரலை அடுத்த தலைமுறையும் ஆராதிக்கும் வண்ணம் செய்தார். இதில் முக்கியமாக டி.ராஜேந்தரின் கவியாழமும் சிறந்ததால் இன்னும் ரசிக நெஞ்சங்களில் இடம்பிடிக்க முக்கிய ஏதுவாக அமைந்திருந்தன.
"இளமைக்காலம் எங்கே என்று திரும்பும் இங்கே" என்று மீண்டும் டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா கூட்டணியை வைத்து "உன்னை ஒன்று கேட்பேன் சேதி சொல்ல வேண்டும்" பாடலை மீள் இசை கொண்டு 1986 இல் வெளிவந்த "தாய்க்கு ஒரு தாலாட்டு" என்ற படத்திற்காகக் கொடுத்திருந்தார் இளையராஜா.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மலேசியா வாசுதேவனைப் பொருத்திய எண்பதுகளிலே கங்கை அமரன் இசையமைத்த "நீதிபதி படத்துக்காக அமைந்த "பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே" பாடலைக் கேட்கும் போது திருமணக்கோலத்தில் நிற்கும் மகளை கொண்டாடி அனுப்பும் தந்தையாக மாறி உருகும் போது மீண்டும் டி.எம்.செளந்தரராஜன் கட்சியிலேயே ஒட்டிக்கொள்ளத்தோன்றும்.
எண்பதுகளிலே திரைப்படக்கல்லூரி வழியாக வந்து பிரமாண்டத்தைத் திரையில் புகுத்தும் பரம்பரையில் மூத்தவர் ஆபாவாணன் வருகையும் டி.எம்.செளந்தரராஜனை மீள நிறுவுவதற்கு உசாத்துணையாக அமைகின்றது. மனோஜ் கியான் இசையில் "உழவன் மகன்" திரைப்படத்தில் "உன்னைத் தினம் தேடும் தலைவன்" என்று அன்றைய முன்னணி நாயகன் விஜய்காந்துக்கான குரலாகப் பயன்படுத்திக் கொண்டார். இதற்கெல்லாம் மணிமகுடமாக அமைந்தது மனோஜ் கியான் மீண்டும் இசையமைக்க ஆபாவாணன் உதவி இசையை வழங்கிய 1989 இல் வெளிவந்த "தாய் நாடு" திரைப்படம். இந்தப் படத்தின் ஐந்து பாடல்களிலும் டி.எம்.செளந்தரராஜனைப் பாடவைத்துக் கெளரவம் சேர்த்தார் ஆபாவாணன். அந்தக் காலகட்டத்து சென்னை வானொலியின் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் "தாய் நாடு" படத்தில் வந்த "ஒரு முல்லைப்பூவிடம் கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா" பாடல் நிரந்தர சிம்மாசனம் போட்டிருந்தது. அந்தப் பாடல் வந்த போது தன் வயதில் அறுபதுகளின் விளிம்பில் இருந்தவர் குரலில் 1960 ஆம் ஆண்டுகளின் இளமையைக் காட்டியிருந்தார். மின்சாரம் இல்லாத தொண்ணூறுகளில் பற்றறியை நிரப்பியும், சைக்கிள் தைனமோவைச் சுழற்றியும் பாட்டுக் கேட்டஅந்தக் காலகட்டத்து என் போன்ற ஈழத்து இளையோருக்கு "ஒரு முல்லைப்பூவிடம்" பாடலை இன்று போட்டுக் காட்டினாலும் ஒரு முறுவல் தொனிக்கும் முகத்தில்.
தமிழ்த்திரையுலகின் கம்பீரங்களில் ஒன்று டி.எம்.செளந்தராஜன் குரல், அன்றைய றேடியோ சிலோனில் இருந்து இன்று உலகை ஆளும் தமிழ் வானொலிகளிலும் சூப்பர் ஸ்டார் டி.எம்.செளந்தரராஜன் தான் அவருக்குப் பின் தான் மற்றெல்லோரும், நாளையும் நம் சந்ததிக்குச் சென்று சேரும் "தமிழ்"பாடல்களில் அவர் இருப்பார்.
பதிவை எழுதத்தூண்டியதோடு தலைப்பையும் பகிர்ந்த நண்பர்
18 comments:
அருமையானப் பதிவுங்க காபி சார்...யாராவது “உன்னை தினம் தேடும் தலைவனையும்”, “ஒரு முல்லைப் பூவிதழ்” பாடல்களையும் குறித்து பதிவு எழுத மாட்டாங்களானு எதிர்பார்த்துட்டு இருந்தேன்.நன்றிகள்
ஒரு முல்லைப்பூவிடம் கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா...
மறக்க முடிந்த பாடலா இது! மிகப்பெரு வெற்றி பெற்ற கடைசி டி.எம்.எஸ்-சுசீலாம்மா டூயட் பாடல். எம்.எஸ்.வியின் சாயல் பாடல் முழுவதும் இருக்கும்.
அருமையான பதிவு. தமிழர்களின் பண்பாட்டோடு மூன்று தலைமுறைகளாகக் கலந்து விட்ட ஒரு உன்னதக் கலைஞர் டி.எம்.எஸ். காலம் யாருக்காகவும் நிற்பதில்லை என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.
முருகப்பெருமான் திருவடிகளில் அவர் ஆன்மா அமைதி பெறட்டும்.
இவ்வுலகம் இருக்கும் வரை அவரின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்... சிறப்பித்தமைக்கு நன்றி...
//எண்பதுகளின் திரையிசைப்பாடல்களிலே டி.எம்.செளந்தரராஜனுக்கான கெளரவத்தை மீளவும் நிலை நிறுத்தியவர் டி.ராஜேந்தர். அவரின் ஒரு தலை ராகம் படத்தில் வரும் "நானொரு ராசியில்லா ராஜா" அன்றைய அண்ணன்மாரின் காதலுக்கான தேசிய கீதமாகவும், "என் கதை முடியும் நேரமிது" காதலின் விரக்தியில் நின்றோரின் உள்ளத்து ஓசையாகவும் அமைத்துக் கொடுத்தார் டி.ராஜேந்தர்.//
இல்லை. இதைப்போன்ற பாடல்களை டி.எம்.எஸ். வாயாலையே பாடவைத்து அவரை சிறுமை படுத்தியதாக அவரே புலம்பியதாக எங்கோ படித்தது உண்டு...
இலங்கை வானொலி தந்த இவரின் குரல் பாடல்கள் எல்லாம் இன்னும் காதில் ஒலிக்கும் கீதங்கள்§ அன்னாரின் புகழ் நீண்டு நிலைக்கும் பாடல்களில் ஊடாக !
//அன்றைய றேடியோ சிலோனில் இருந்து இன்று உலகை ஆளும் தமிழ் வானொலிகளிலும் சூப்பர் ஸ்டார் டி.எம்.செளந்தரராஜன் //
சுப்பர் ஸ்டார்- மறுப்புக்கு இடமில்லை.
செறிவான தொகுப்பு.
உங்கள் கண்ணோட்டத்தில் அவரைப் பற்றிய இந்தப் பதிவு அருமை. எத்தனை எத்தனைப் பாடல்களில் அவரின் குரல் வண்ணம் பாடலை எட்டாத உயரத்திற்கு மேன்மை படுத்தியுள்ளது. அவர் பாடுவதில் இருந்தே அவர் சிவாஜிக்குப் பாடுகிறாரா அல்லது MGRக்கா முத்துராமனுக்கா ஜெய்சங்கருக்கா என்ற முதல் வரியிலேயே கண்டுப்பிடித்து விடலாம்.
amas32
TMS = அவனுக்கென்ன?
* மரணமும் இல்லை - அவனுக்கென்ன?
* முருகனின் குரல் - அவனுக்கென்ன?
* ஆண்மையின் தமிழ் - அவனுக்கென்ன?
* இளகிய மனம் - அவனுக்கென்ன?
* உயிருள்ள வரை தொடர்ந்து வரும்.....
Well said, very nice
பதிவின் தலைப்பு = "திரு"க்குரல்
இது தான் என் மெளனத்தை உடைச்சி, என்னை உள்ளே இழுத்து வந்தது;
* எத்தனையோ வாசகம்; ஒன்னை மட்டும் தான் "திரு"-வாசகம் -ன்னு சொல்லுறோம்
* எத்தனையோ வாய்மொழி; ஒன்னை மட்டும் தான் "திரு"-வாய்மொழி -ன்னு சொல்லுறோம்
ஏன்?
திருக்-கம்ப ராமாயணம்
திருச்-சிலப்பதிகாரம்
-ன்னு சொல்லுறதில்லை!
ஆனா, திருக்-குறள் -ன்னு மட்டும் ஏன் சொல்லுறோம்???
அதுக்காக, கம்பனோ, இளங்கோவோ திறமையில் "குறைந்தவர்கள்" -ன்னு பொருள் இல்லை!
திறமை வேற! "திரு" வேற!
-----
சமய இலக்கியம் பக்கம் போக வேணாம்;
பின்னாளில் சிலர் "திரு" ன்னு வலிந்து ஒட்ட வைத்துக் கொண்டார்கள்; ஆனால் அதெல்லாம் நிலைக்கலை! வெறும் விளையாடலாவே போயிருச்சி;
சமய இலக்கியம் பக்கம் போக வேணாம்;
சங்க இலக்கியம் பக்கம் போவோம்!
எந்தச் சங்க இலக்கியத்துக்காச்சும், "திரு" இருக்கா?
திருப்-பரிபாடல்?
திருக்-குறுந்தொகை?
திரு-நாலடியார்?
-ன்னு சொல்வதில்லை; ஏன்?
ரெண்டே ரெண்டுத்துக்குத் தான் "திரு"!
1) திருக்-குறள்
2) திரு-முருகாற்றுப்படை!
அதுக்காக, மற்றதெல்லாம் Dummy ஆயீறாது;
திறமை வேறு; "திரு" வேறு!
-----
* வாழ்க்கையின் போக்கை மாற்றி விடுவது தான் = "திரு"
* காலம் கடந்து, தேசம் கடந்து நிற்பது தான் = "திரு"
எப்பவோ எழுதுன குறள்; எதுக்கு இந்த Facebook/ Twitter காலத்தில் கூட, இன்னமும் "லூசுத்தனமா" காலம் கடந்து நிக்குது?
நல்லவனும் குறளைச் சொல்லுறான்; அல்லவனும் குறளைச் சொல்லுறான் = ஏன்?
-----
முல்லை, குறிஞ்சி -ன்னு தேசத்துக்கு உட்பட்டு எழுதின காலத்தில்...
தேசம் கடந்து எழுதுனாரு ஒருத்தரு;
அவரு பேரு கூட நமக்குச் சரியாத் தெரியாது; அவர் தொழிலை வச்சி, "வள்ளுவர்" -ன்னு குத்து மதிப்பாச் சொல்லுறோம்;
அவர் காலத்தில் எழுதுன திறமை மிக்கவர்கள்...
நக்கீரர், கபிலர், வெள்ளிவீதி, இளநாகனார், இள எயினன்
= இவிங்க பேரெல்லாம் நமக்குத் தெரிஞ்சிருக்கு; ஆனா அவங்களை எல்லாம் திரு-நக்கீரர், திரு-கபிலர் -ன்னு சொல்லுறதில்ல!
= பேரு தெரியாத யாரோ ஒருத்தரை மட்டும், "திரு"-வள்ளுவர் -ன்னு சொல்லுறோமே? ஏன்??
-----
ஏன்-ன்னா,
* பேரு தெரியலீன்னாலும், பல தலைமுறை கழிஞ்சாலும், அவர் "குறள்", மனசை என்னமோ பண்ணும்
* அதே போல், இளைய தலைமுறைக்கு, TMS தெரியலீன்னாலும், பல தலைமுறைகள் கழிஞ்சாலும், அவர் "குரல்", மனசை என்னமோ பண்ணும்;
TMS = "திருக்" குரலே!
பல திறமையானவர்கள் காலம் தோறும் பொறந்துக்கிட்டே தான் இருப்பாங்க!
* காயாத கானகத்தே = அன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடிச்ச பாட்டு; ஆனா இன்றைய தலைமுறைக்கு??
* Why This கொலவெறி = இன்றைய தலைமுறைக்குப் புடிச்ச பாட்டு; ஆனா நாளைய தலைமுறைக்கு??
-----
ஆனா, இன்னும் 10 தலைமுறை, தலைமுறையாக் கடந்து போனாலும்...
"பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே"
* machi, who singing this song ya?
= dunno man; some guy, 5 centuries back;
* Heard this on Apple TV/ Orange TV! sema la? It sticks to the heart!
= Yes da! That f**ck b**** Nalini எனக்கு அல்வா குடுத்துட்டா-டா; இப்ப-ன்னு பாத்து, எனக்கு இருக்குற ஒரே ஆறுதல் இந்தப் பாட்டு தான் dude!
யாரு பாடுறா?-ன்னு கட்டாயம் தெரிஞ்சிக்கணுமா என்ன?
May be we can search in a very old historical site called radiospathy; They might have; But who cares ya?
இதப் பாடுறவன் குரல்-ல ஒரு நேர்மை இருக்கு-டா!
*** மனசை என்னமோ பண்ணுது ***; அது போதும்-டா!
அதான் "திரு"-க்குரல்!
திறமை வேறு! "திரு" வேறு!
"திரு" = மனசை என்னமோ பண்ணும்; பண்ணிக்கிட்டே இருக்கும்!
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே...
முருகு ஐயன் TMS திருவடிகளே சரணம்!
கா.பி,
நீங்க பதிவில் சொன்னதே தான்!
//டி.எம்.செளந்தரராஜன் குரல் போர்க்கால இலக்கியமாகக் கொண்டாடப்பட்ட அதே சமயம் ஆலயங்கள் தோறும் கொடியேறிக் கொண்டாட்டம் நடக்கும் போதும்//
= இது தான் TMS!
*சீர்காழியார், கோயில் பாடகராகவே கருதப்பட்டு விட்டார்
*PBS, Romantic பாடகராகவே கருதப்பட்டு விட்டார்
*கலைவாணர் NSK, புரட்சிப் பாடகராவே கருதப்பட்டு விட்டார்
இன்னும் எத்தனையோ திறமை மிக்க கலைஞர்கள்
= TR Mahalingam, AL Ragavan, பாலமுரளி கிருஷ்ணா, CS Jayaraman, கண்டசாலா
ஆனால் TMS??
= ஒவ்வொரு பாத்திரமாகவே மாறிப் பாடிய "நேர்மை"/ உயிர்ப்பு
= புரட்சிக்கும் அவர் குரல்; கோயிலுக்கும் அவர் குரல்!
கர்னாடக சங்கீதம் கோலோச்சிய காலத்தில்,
வரும்படி மிக்க சினிமாவுக்காக, தமிழிசை இயக்கத்தில் குறை வைக்காத = TMS!
முருகன் கோயில் திருநீற்றைப் பட்டையாப் பூசிக்கிட்டு,
தந்தை பெரியார் கிட்ட விருது வாங்கச் சென்ற TMS!
= டி.எம்.எஸ்-ஐயே வச்ச கண்ணு வாங்காமப் பாத்த்துக்கிட்டு இருந்தாராம் பெரியார்!
-------
அன்னக்கிளி உன்னைத் தேடுதே -ன்னு, ராஜாவின் தமிழ்த் திரையிசைத் தேடலைத் துவங்கி வச்ச பொற் குரல்!
ராஜா காலத்தில், ரசனைகள் மாறி, பாடகர்கள் மாறி விட்டாலும்...
"பாட்டு" எனும் தொண்டைக் கருவியில், ஒரு சிறு துருவும் பிடிக்காமல் வாழ்ந்த ஒரு பாடகன்!
அவர் = இளைய-ராஜன்
இவர் = செளந்திர-ராஜன்
-------
SPB, Malaysia, Yesudass -ன்னு பாடல் அரசர்களுக்குப் பஞ்சமில்லை தமிழ்ச் சினிமாவில்!
ஆனா,
SM சுப்பையா நாயுடு/ ஜி.ராமநாதன் முதல்..
கே.வி. மகாதேவன், MSV, இளையராஜா, சங்கர் கணேஷ், டி. ராஜேந்தர், AR ரஹ்மான் -ன்னு..
பல தலைமுறைகளுக்கும், ஒரு பாட்டுச் செடி படரணும்-ன்னா, அது = TMS மட்டுமே!
இன்னும் சில இளைய தலைமுறைகளில், இவரு பேரு மறந்து போகலாம்;
ஆனா அந்தக் குரலின் "உயிர்ப்பு"? = அழிவில்லை!
எங்கே திடீர்-ன்னு கேட்டாலும், மனசு ஒரு கணம் நிக்கும்!
= பாட்டும் நீயே, பாவமும் நீயே!
ஆபாவாணனுக்கு தனிப்பட்ட நன்றி சொல்லணும்!
பின்னாளில் TMS -ஐ இழுத்து வந்தவரு அவரு தான்!
தாய்நாடு படத்தில், TMS & Malaysia combination!
இருவர் குரலுமே, எனக்குப் பிடிச்ச, "ஆண்மை" ஓங்கி உலகளந்த குரல்!
"ஓ கண்களே, தடுமாறும் கால்களே" -ன்னு செம பாட்டு!
Do u have it, kaa.pi? plz..
-------
ஒரு முல்லைப்பூவிடம்
கொஞ்சும் பூமணம்
தஞ்சம் ஆனது கண்ணா...
= மறக்க முடியுமா இந்தப் பாட்டை? நெஞ்சுக்குள் ஒரு மாதிரி குறுகுறுக்கும்:) TMS & Susheelamma!
அதே combination-இல், "வடிவேலன் மனசை வச்சான்" பாட்டும்!
Sema Kick Song for Kamal & Sridevi by TMS & Susheelamma!
சாமிப் பாட்டு இல்லீன்னாலும், I put in muruganarul:)
http://muruganarul.blogspot.com/2010/04/blog-post.html
ஏன்-னா, அப்பா, காசெட்டில் (TDK 90 & TDK 60), "உள்ளம் உருகுதைய்யா" தான் முதலில் பதிஞ்சி வைப்பாரு; எல்லாக் காசெட்டிலும் மொத பாட்டு இதுவாத் தான் இருக்கும்;
சின்னப் புள்ள எனக்கோ, "வடிவேலன் மனசு வைச்சான்" கேட்டதில் இருந்து, அதை Record பண்ண ஆசை!
(Not only for TMS, but for Sridevi also:)
ஒரு நாள் வானொலியில் ஒலிபரப்பும் போது, நான் Record Button அழுத்தி விட, அது "உள்ளம் உருகுதையா" மேல் பதிஞ்சி போயிரிச்சி;
அவ்ளோ தான்; அப்பா என்னை விளாசித் தள்ளிட்டாரு; பாட்டி தான் ஒன்னும் புரியாம..
"வடிவேலன் மனசு வச்சான்" கூட முருகன் பாட்டு தானேடா? எதுக்கு கொழந்தைய அடிக்கற? -ன்னு எனக்கு Support:)
-------
வாலிபன் சுற்றும் உலகம் -ன்னு ஒரு பட முயற்சி 2010இல்
அதில் TMS & Susheelamma, last combination!
எதுன்னாலும், "தமிழ்த் தாய் வாழ்த்து" - நீர் ஆரும் கடல் உடுத்த..
= அது ஒன்னே நிலைக்கும் TMS ஆண்மைத் தமிழ்க் குரலை!
அரு.ராஜேந்திரன்
மிக்க நன்றிகள்
ஜி,ரா
முல்லைப்பூவிடம் பாடலை நேற்றுமட்டும் இன்னும் ஆசை தீரக்கேட்டேன்
திண்டுக்கல் தனபாலன்
மிக்க நன்றி
சீனு
ராஜேந்தர் அப்போது திரையுலகிற்குப் புதியவர். சிறுமைப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்திருக்கும்?
தனிமரம்
உண்மை நீங்கள் கூறியது.
யோகன் அண்ணா
வருகைக்கு நன்றி
அமாஸ் அம்மா
மிக்க நன்றி
கேயாரெஸ்
ஆகா ஆகா எத்தனை நாளாயிற்று உமது தமிழைக் கண்டு பின்னூட்டத்திலேயே ஒரு அருமையான படையலைக் கொடுத்துவிட்டீரே. அருமை அருமை
தாய்நாடு பாடல்கள் இணையத்தில் இருக்கின்றன நீங்கள் கேட்ட "ஓ கண்களே, தடுமாறும் கால்களே" கூட raaga கிட்டுதே http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001962
எல்லோருமே அழகாகச் சொல்லி விட்டீர்கள் எங்கும் ஒலித்தன அவர்பாடல்கள்.
இனிமேலும் ஒலிக்கும்.
திரு கானா சார்
எதிரிகள் ஜாக்கிரதை என்ற படத்தில் மனோகர் குரலில் அவர் இணைந்து பாடும் பாடல் ஒன்று போதும் அவரின் குரல் வளத்திற்கு
அதிலும் அந்த 'சபாஷ்டா கண்ணா ' என்று சொல்லும் போது
'அப்பா பக்கம் வந்தா அம்மா முத்தம் தந்தா ' பாடல்
Post a Comment