Pages

Tuesday, July 9, 2013

இயக்குனர் இராசு மதுரவன் நினைவில்

இயக்குனர் இராசு மதுரவன் நினைவில் 

தமிழ் சினிமாவுலகில் மிகப்பெரும் இயக்குனர்களாக உச்சத்தில் இருப்பவர்களின் படங்களோடு ஒப்பிடும்போது எனக்கு எப்போதும் அதிகம் ஆர்ப்பாட்டமில்லாது சிறுமுதலீட்டில் எடுக்கப்படுகின்ற படங்களை எடுக்கும் இயக்குனர்களின் படைப்புக்களிலேயே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் சமீப வருடங்களில் இராசு மதுரவன் படங்கள் வரும்போதெல்லாம் இந்த எதிர்பார்ப்பு தொடர்ந்தது. பூமகள் ஊர்வலம் என்ற நல்லதொரு திரைப்படத்தைக் கொடுத்துத் தன்னைத் திரையுலகில் அறிமுகப்படுத்திக் கொண்டாலும் பாண்டி படம் மூலம் மீண்டும் திரையுலகில் மறுவாழ்வு பெற்று, மாயாண்டி குடும்பத்தார் மூலமே பரவலான அறிமுகத்தைப் பெற்றிருந்தார். 
குடும்ப உறவுகளைக் கொண்டு உணர்வுபூர்வமான, எளிமையான கிராமியக் கதைக்களனைக் கொண்ட படங்கள் தான் இவரது அடுத்த சுற்றில் கைகொடுத்த சூத்திரம். இவருக்கெல்லாம் முன்னோடிகள் வி.சேகர் காலம் வரை இந்தச் சூத்திரத்தால்  வெற்றி கண்டவர்கள். ஆனால் இப்படியான படங்களுக்கு ஒப்பீட்டளவில் பெண் ரசிகர்களே அதிகம் என்பதால் சின்னத்திரை தன் பங்கிற்கு அவர்களை உள்வாங்கிக்கொண்டது.
ஆனாலும் திட்டமிட்ட குறைந்த செலவில், அதிகம் பிரபலமில்லாத நடிகர்களைத் தேர்வு செய்து சபேஷ் முரளி போன்ற மாமூல் இசையமைப்பாளர்களை வைத்து தன்னால் மீண்டும் இதே பாங்கான படங்களைக் கொடுத்து வெற்றியைக் காட்டமுடியும் என்று நிரூபித்தார் இராசு மதுரவன். இதனாலேயே இவரை வைத்து ஒரு வானொலிப்பேட்டி செய்யவேண்டுமென்று நினைத்து இவரின் பேஸ்புக் முகவரியைத் தேடிப்பிடித்து நண்பராக்கிக் கொண்டேன். பரபரப்பாக இயங்கும் இவரை சமயம் வாய்க்கும்போது பேட்டி எடுத்துக்கொள்ளலாம் என நானும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அதே பரபரப்போடு புற்று நோய் இவரக் ஆட்கொள்ள போய்ச் சேர்ந்து விட்டார் நிரந்தரமாக. அந்த ஏமாற்றம் கலந்த வருத்தம் இன்னும் அதிகப்படியாக எனக்குள்.இதே போன்றதொரு நிலைதான் சின்னதாயி இயக்குனர் கணேசராஜ் இற்கும் நிகழ்ந்தது.

சினிமா ஊடகத்தில் அறிவுசாலிகளாகக் காட்டிக்கொள்ள முனைபவர்களை ரசிகர்கள் தாமாகவே புறங்கையால் ஒதுக்கியிருக்கிறார்கள். மக்களுக்கு எது பிடிக்கும் அல்லது பிடிக்க வைக்கும் படைப்புக்களைக் கொடுத்த சாதாரண இயக்குனர்கள் அசாதாரணமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இராசு மதுரவனை அறியாத தமிழகத்தின் கடைக்கோடி ரசிகன் கூட அவர் படைப்புக்களைப் பார்க்கும் போது உளமார நேசிப்பான், இதைவிட வேறென்ன கெளரவமும் அங்கீகாரமும் வேண்டும் ஒரு படைப்பாளிக்கு!

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பிரபலமில்லாத நடிகர்களைத் தேர்வு செய்து சபேஷ் முரளி போன்ற மாமூல் இசையமைப்பாளர்களை வைத்து//

Yes!
பல பாங்கான (எளிய) படங்களின் வெற்றிச் சூட்சுமம் இதுவே!

//சினிமா ஊடகத்தில் அறிவு சாலிகளாகக் காட்டிக் கொள்ள முனைபவர்களை ரசிகர்கள் தாமாகவே புறங்கையால் ஒதுக்கியிருக்கிறார்கள்//

உண்மை!
இன்றைய இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்..
அதீத "அறிவு"த் தளத்தில் இயங்குவதாக ஒரு நினைப்பு;

ஆனால் "உணர்வெனும் பெருந் தளத்தில்" தான் எந்த இலக்கியமும் இயங்குகிறது; அங்கு அதீதங்களுக்கு அவசியமில்லை!

//இராசு மதுரவனை அறியாத தமிழகத்தின் கடைக்கோடி ரசிகன் கூட அவர் படைப்புக்களைப் பார்க்கும் போது உளமார நேசிப்பான், இதைவிட வேறென்ன கெளரவமும் அங்கீகாரமும் வேண்டும் ஒரு படைப்பாளிக்கு!//

இராசு மதுரவனுக்குக் கரம் கூப்பிய அஞ்சலி!
அவர் பாதியிலேயே விட்டுப் போன சொகுசுப் பேருந்து கட்டாயம் வெளிவர வேண்டும்! இயக்குநர் சங்கம் முனைய வேண்டும்!

நண்பா said...

அவருடைய எல்லா படங்களையும் விருப்பி பார்த்தேன். குடும்ப உறவுகளின் வலிமையையும், அருமைகளையும், அவசியத்தையும் சமீப காலத்தில் நன்று சொன்னவர் இவர்தான்..

அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்..