சினிமாத்துறையில் உச்சத்துக்கு வருவது சுலபமில்லை, அப்படியே வந்தாலும் அதைத் தொடர்ந்து சில வருஷங்கள் தக்க வைத்துக் கொள்வது என்பதும் சவாலான காரியம். இதையெல்லாம் தாண்டித் தங்களது தனித்துவத்தினால் முன்னேறி நின்று நிலைத்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிச் செய்திக்குப் பின்னால் பல இரகசியங்கள் இருக்கும், திறமையானதொரு இயக்குனரின் நெறிப்படுத்தலில் வளர்ந்தவர்கள், தமக்கு ஏற்ற பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தம்மை நிரூபித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் நடிகர் ராமராஜன் எண்பதுகளின் மிக முக்கியமானதொரு நாயகனாகக் கொள்ளப்படுகின்றார்.
சினிமாவை வணிக சினிமா, வணிகம் சாரா சினிமா என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாமே வணிக சினிமா தான், போட்ட முதலுக்கு மேல் இலாபம் வரவேண்டும் என்று தானே எல்லாத் தயாரிப்பாளரும் படத்தயாரிப்பில் இறங்குவார்கள்? ராமராஜனைப் பொறுத்தவரை எண்பதுகளில் ரஜினி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் ஒரு பக்கம் கொடிகட்டிப் பறக்க, இவரோ மாமூல் கதையம்சம் கொண்ட, அதிக சவால் இல்லாத பாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்தித் தானும் ஒரு முக்கியமான குதிரை என்று நிரூபித்தவர். ஆரம்பத்தில் தியேட்டரில் வேலை செய்தும், பின்னாளில் இராம. நாராயணனிடம் உதவி இயக்குனராக இருந்தும், பின்னர் தானே இயக்குனராக மாறியதும் என்று இவரின் பாதையே சற்று வித்தியாசமாகத் தான் ஆரம்பித்தது. ராமராஜனுக்கு "நம்ம ஊரு நல்ல ஊரு" திரைப்படத்தின் மூலம் அரிதாரம் பூசவைத்து நாயகனாக்கிய இயக்குனர் வி.அழகப்பனை நன்றியோடு இன்றும் நினைவுகூருவார். அந்தப்படத்தின் வெற்றியே அவரைத் தொடர்ந்தும் கதாநாயகனாக்கி இருத்தியது. கங்கை அமரனே இந்தப்படத்தின் இசையமைப்பாளர்.
ராமராஜன் இயக்கிய படங்களில் இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக்கியும் பாட்டுக்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஆனால் இவரின் அடுத்த சுற்றில் நாயகன் ராமராஜன் என்ற கலைஞன் நீடித்து நிலைத்து நிற்க இளையராஜாவின் பங்கு பெரும்பங்கு என்பதைக் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ராமராஜனின் படங்களில் ராஜாவின் பாடல்கள் விஷேசமாக இருக்கும், குறிப்பாக நகரம் சார்ந்த கதைக்களனைக் கொண்டு அமைந்த மோகன் படங்களில் ராஜா என்றும், கிராமம் சார்ந்த கதைக்களனைக் கொண்ட ராமராஜன் படங்களில் ராஜா என்றும் இரட்டை சவாரி ஆனால் இரண்டு நாயகர்களுக்குமே இந்த இசை தான் அவர்களின் கலையுலக வாழ்வை நீட்டித்து வைத்தது. கே.எஸ்.ரவிக்குமார் வகையறா உருவாக்கி வைத்த ஆண்டான் அடிமைச் சமுதாயம் சார்ந்த நாட்டமைக் கதைகளல்ல ராமராஜன் படத்தின் கதைகள், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் இயல்பான சிக்கல்களை வைத்துப் பாட்டாலே பின்னிப்பிணைத்து வெற்றிகரமான படைப்பாக்கி விடுவார். ராமராஜனின் சினிமாக்காலம் என்பது தனியே ஆராயப்படவேண்டியது என்று மனசுக்குள் வைத்திருக்கிறெஎன். இங்கே நான் கொடுக்கவிருப்பது, ராமராஜன் என்றதொரு வெற்றிகரமான நாயனோடு கூட்டுச் சேர்ந்த இயக்குனர் கங்கை அமரன், இசைஞானி இளையராஜாவும் சேர்ந்த திரைக்காவியங்கள் குறித்த பார்வை.
இன்றைக்கும் கிராமியப்படங்கள் வந்து கொண்டு தானிருக்கின்றன, ஆனால் கிராமியம் என்றாலே "செண்பகமே செண்பகமே" என்று முணுமுணுக்கும் எண்பதுகளின் திரைப்பிரியர்களைத் தாண்டி எல்லார் மனசலும் இருக்கிறான் "எங்க ஊரு பாட்டுக்காரன்" . கோழி கூவுது படத்தின் பெரு வெற்றியை கங்கை அமரனாலேயே ஜீரணிக்க முடியாமல் தடுமாறித் தோல்விப்படங்களாகக் கொடுத்தவருக்கு பாட்டுக்காரன் மீண்டும் கைதூக்கி உயர்த்தி விட்டான். பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தயாரிப்பில் வந்த அந்தப் படத்தில் ராமராஜனோடு ரேகா, நிஷாந்தி (அறிமுகம்) என்று ஜோடிகள், மொத்தம் எட்டுப்பாடல்கள், அத்தனையும் முத்துக்கள். கங்கை அமரனே பாடல்களை எழுதி அண்ணனிடம் கொடுக்க, அந்தநாள் நாடகக்காரர் சங்கிலி முருகனின் பழைய நட்பும் சேர்ந்து கொள்ள ராஜா குஷியாகிப் போட்ட பாடல்கள் இன்றும் தேன், " பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு ... பட்டுன்னு சேலையை கட்டி எட்டு வச்சு நடந்துகிட்ட"
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் வெற்றியால் எங்க ஊரு காவக்காரன் படத்தை சங்கிலி முருகன் எடுத்திருந்தாலும் ஏனோ கங்கை அமரன் இல்லை டி.பி.கஜேந்திரனே இயக்கம். "செண்பகமே செண்பகமே" பாடல் பாடாத தமிழ் பேசும் ஊர்களே இல்லை என்றாகிவிட்ட பின்னர் அதே தலைப்பில் மீண்டும் கங்கை அமரன், ராமராஜன் இணைந்த படம். "வெளுத்துக் கட்டிக்கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி" என்று பாடலை எழுதி அண்ணன் இளையராஜா ஆரம்பிக்க, தம்பி கங்கை அமரன் மிச்சப்பாடல்களைக் கவனித்துக் கொண்டார். மஞ்சப்பொடி தேய்க்கையிலே பாட்டின் மெட்டு தெலுங்கும் தாவியது, எல்லாப்பாடல்களிலும் உச்சம் "வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்ட வச்சுப்புட்டா" தமிழ் சினிமாவில் ஓராயிரம் படங்கள் வந்திருக்கலாம், இதில் சில நூறை உச்சம் என்று கொண்டாடவும் செய்யலாம் ஆனால் ஏனோ எனக்கு "கரகாட்டக்காரன்" போன்ற படங்கள் கொடுக்கும் போதை ஏனென்று புரியாத புதிர். படத்தின் வீசிடி வாங்கி அதுவும் தீராமல் ஒரிஜினல் டிவிடி வாங்கி, இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் பிலிம் சுருள் கிடைத்தால் கூட வாங்கிச் சொந்தம் கொண்டாத் தோன்றுமளவுக்குப் பித்துப் பிடிக்க வைத்தது. படத்தின் பின்னணி இசையை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிய பின்னரும் தீரவில்லை இந்தப் படம் மீது கொண்ட மோகம். ஒருமுறை கனவில் கூட ஏதோ ஒரு ஊர்க்கொட்டகையில் கரகாட்டக்காரன் படம் பார்ப்பது போலக் கண்டு அடுத்த நாள் என்னையே நொந்துகொண்டேன் ;-) இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாளின் கொள்ளுப்பேத்தி கதை ஆனால் எல்லாமே அளவாகப் போட்டுச் சமைத்த அறுசுவை அரசு நடராசன் கைப்பதம். இந்தப் படம் ஒரு வருடம் ஓடியதில் வியப்பில்லை, ரசிகனுக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். "மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்" "எங்க ஊரு பாட்டுக்காரன்" வெற்றியால் அந்தப் படத்தின் "செண்பகமே செண்பகமே" பாடலை எடுத்துத் தலைப்பாக்கி வெற்றி கண்ட கங்கை அமரனுக்கு "கரகாட்டக்காரன்" கொடுத்த தாறுமாறு வெற்றியால் அந்தப் படத்தில் இடம்பெற்ற "ஊரு விட்டு ஊரு வந்து" பாடலின் தலைப்பை எடுத்து இயக்கிய படம் வெற்றிகரமானதாக அமையவில்லை. அண்ணன் என்னதான் பாடல்களில் சோடை போகாவிட்டாலும் தம்பிக்கோ கவுண்டர், செந்திலை வைத்து பேயாட்டம் ஆடலாம் என்று விளையாடிவிட்டார். ராமராஜன், கெளதமி என்ற வெற்றிக்கூட்டணிக்கும் ஒரு சறுக்கலான படம். கங்கை அமரனின் புதல்வர் இயக்கிய "கோவா" படம் போலத்தான் இந்தப் படம் தந்தைக்கு. ஆனாலும் என்ன இந்தப் படத்தில் வரும் " சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா" புலம்பெயர் தமிழருக்கு இன்னொரு தேசிய கீதம், எனக்கோ கடந்த பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்து என் வானொலி நிகழ்ச்சியின் முகப்புப் பாடல் என்ற கெளரவம். "தானா வந்த சந்தனமே" எப்போது கேட்டாலும் தேனா இனிக்குமெல்லோ "கொத்து மல்லி கொண்டையில் ஆட குளிர்ப்பார்வை வண்டுகள் ஆட புத்தம் புது செண்டுகள் ஆட
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அட்டகாசம் ;))
Arumai....thanks brother
சங்கிலிமுருகனின் சொந்த ஊர், எனது தாத்தாவின் (அம்மாவின் அப்பா)ஊரான பொதும்பு ( அல்லது சுற்றுவட்டார கிராமமாக இருக்கலாம். சரியா ஞாபகமில்ல)
அதனால் அவர் சம்பந்தப்பட்டப் படப்பிடிப்புகள் அடிக்கடி அங்கு நடக்கும்.அப்படித்தான் ராமராஜனுக்கோ,கங்கைஅமரனுக்கோ எங்க கிராமம் பிடித்திருக்கவேண்டும். “எங்க ஊரு பாட்டுக்காரன்”,”கரகாட்டக்காரன்” சூட்டிங்கல்லாம் அங்க நடந்தது தான். “எ.ஊ.பா”ல கங்கைஅமரன் முதல் காட்சியில் ராம்ராஜனிடம் “இந்த பொதும்புக்காரனுங்க குசும்பு புடிச்சவனுங்கப்பா”ன்னு சொல்லுவாரு.
உலகப்புகழ்பெற்ற கரக்காட்டக்காரன் திண்ணையும் அந்த ஊருல தான் இருக்கு :)))
ஞாபகத்தைக் கிளறிவிட்டது :))
//அதற்குச் சரிசமமாக வாலி எழுதிய "கலைவாணியோ ராணியோ பாடல்"//
வில்லுப்பாட்டுக்காரனில் வாலி எழுதிய பாடல் உதடுகள் ஒட்டாத "தந்தேன் தந்தேன்".
Post a Comment