Pages

Thursday, February 10, 2011

பாடகி சித்ராவின் பிஞ்சுக்குரல்



காதலிக்கும் பருவத்தின் ஆரம்ப நாட்களைப் போலத் தொடர்ந்து வரும் காலங்கள் இருக்காது போல ஒரு சில பாடகர்களின் ஆரம்பகாலத்துப் பாடல்களைக் கேட்கும் சுகமே தனிதான். ஒரு பாடகர் அனுபவம் மிக்கவர் ஆகிவிடும் போது குறித்த பாடகரின் பாடல்களைக் கேட்கும் போது மிதமிஞ்சிய தன்னம்பிக்கை உணர்வோடு பாடுவது மாதிரி இருக்கும். இப்போதெல்லாம் ஓரிரண்டு பாடல்களைப் பாடி விட்டு அடுத்த முதல்வர் கனவில் இருக்கும் இளைய நடிகர்கள் போல ஆர்ப்பாட்டம் பண்ணும் இளம் பாடகர்கள் சிலரின் பாடல்களைக் கேட்கும் போது வெறுப்புத் தான் மிஞ்சும். எல்லோரும் எஸ்பிபி ஆகிவிடமுடியுமா என்ன?

எஸ்.ஜானகியின் ஆரம்ப காலத்துப் பாடல்களில் "உள்ளம் தேடாதே என்று சொல்லுதே" (எதையும் தாங்கும் இதயம்), "மலரோடு விளையாடும் தென்றலே வாராய்" (தெய்வபலம்),எஸ்.பி.சைலஜாவின் அறிமுகக் குரலில் "சோலைக்குயிலே" (பொண்ணு ஊருக்கு புதுசு), "மலர்களில் ஆடும் இளமை புதுமையே" (கல்யாண ராமன்), சுஜாதா அறிமுகமான வேளை "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" (காயத்ரி) இப்படியாக இந்த முன்னணிப் பாடகர்களின் அன்றைய பின்னணிப் பாடல்களைக் கேட்பதே தனி சுகம்.

இப்படியான அரிதான பாடல்களைப் பற்றிப் பேசும் போது அதே அலைவரிசையில் இருந்து ரசித்துக் கேட்கும் நண்பனோ, ரசிகனோ கூட இருந்து என்னளவில் சிலாகித்துப் பேசாவிட்டால் அது துரதிஷ்டமாகிவிடும். வானொலியில் பாடல்களை ஒலிபரப்பும் போதும் ஜனரஞ்சக அந்தஸ்துக் கிட்டிய பாடல்களைக் கேட்டால் தான் வானொலிப் பக்கம் நேயர்கள் வருவார்கள் என்ற கள்ளத்தனத்தால் இப்படியான அரிய பாடல்கள் மனசுக்குள் மட்டுமே முடங்கிவிடும். அப்படியான பாடல்களை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொருவர் சிலாகித்துப் பேசும் போது வரும் கிளர்ச்சி தான் இந்தப் பதிவாக வெளிப்பட்டிருக்கின்றது. ட்விட்டரில் நண்பர் கிரிஷ்குமார் என்னிடம் சித்ராவின் ஆரம்பகாலப் பாடல்களைப் பற்றிச் சிலாகித்த போது என் பங்கிற்கும் அவற்றைப் மீளப் புதுப்பிக்கக் கூடியதாக இருக்கிறது.


1984 ஆம் ஆண்டில் தமிழில் அறிமுகமாகிய சித்ராவின் ஆரம்ப காலப்படங்களில் குருவை மிஞ்சாத சிஷ்யை போல ஒரு அடக்கமான தொனியிலேயே அவரின் பாடல்கள் இருப்பது போலத் தென்படும். அந்த ஆரம்பப் பாடல்களைக் கேட்டாலே போதும் தானாக ஆண்டுக் கணக்கு வெளிவந்து விடும். வருஷங்கள் நான்கைக் கடந்த பின்னர் தான் ஒரு முதிர்ச்சியான தொனிக்கு அவரின் குரல் மாறிக் கொண்டது, அதாவது இன்றிருப்பதைப் போல.சித்ராவின் வருகை பூவே பூச்சூடவாவில் ஆரம்பிக்கிறது. அந்தக் காலத்து முன்னணி நாயகிகள் நதியா, ராதா, அம்பிகா, சுஹாசினி என்ற பட்டியலுக்குக் குரல் இசைத்தாலும் நடிகை ரேவதியின் குரலுக்கும் குணாம்சத்துக்கும் பொருந்தி வரக்கூடியாதான பாங்கில் அமைந்திருக்கின்றது.

எங்களூரில் 80 களின் மையப்பகுதியில் வீடியோப் படப்பிடிப்புக்காரர்கள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருந்த வேளை அது. பெண் பூப்படைந்ததைக் கொண்டாடும் நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கல்யாணக் காட்சி என்று வீடியோக்காரருக்கும் புதுத் தொழில்கள் கிட்டிக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாள் விழாக்களை எடுக்கும் வீடியோக்காரருக்கு அந்தக் காட்சிகளுக்குப் பொருத்தமான பாடல்களையும் பின்னணியில் பொருத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது தவறாமல் பயன்படுத்தப்படும் பாடல்களில் ஒன்று டிசெம்பர் பூக்கள் படத்தில் வரும் "இந்த வெண்ணிலா என்று வந்தது எந்தன் பாடலை நின்று கேட்டது". சித்ராவின் ஆரம்பகாலக் குரலில் ஒன்று இது, இசைஞானி இளையராஜா இசையமைத்த பாட்டு. அளவான மேற்கத்தேய இசையும் சித்ராவின் அடக்கமான குரலும் சேர்ந்து இப்போது கேட்டாலும் அந்தப் பிறந்த நாள் வீடியோக்காலத்தைச் சுழற்றும்.



மனிதனின் மறுபக்கம் என்றொரு படம். இசைஞானி இளையராஜாவை எண்பதுகளில் அதிகளவில் பயன்படுத்திய இயக்குனர்களில் முதலிடத்தில் இருப்பவர் என்று சொல்லக்கூடிய கே.ரங்கராஜ் இயக்கத்தில் வந்த படம். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றையும் எழுதத் தனித்தனிப் பதிவுகள் தேவை. அவ்வளவுக்கு வித்தியாசமான கலவையாக இருக்கும். அப்படியானதொரு பாடல் தான் சித்ராவின் குரலில் ஒலிக்கும் "சந்தோஷம் இன்று சந்தோஷம் இந்தப் பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்". ராஜாவுக்கே உரிய ஒழுங்குபடுத்தப்பட்ட வாத்தியக் கலவைகளின் நேர்த்தியான அணிவகுப்பில் இருக்கும் இசை, பாடலின் சரணத்திற்குப் பாயும் போது "மாலை சூடிடும் முன்னே இவள் காதல் நாயகி" என்று இன்னொரு தடத்துக்கு சித்ரா மாறுவார் அப்போது பின்னால் வரும் ட்ரம்ஸ் வாத்தியத்தின் தாளக்கட்டும் இலாவகமாக மாறி வளைந்து கொடுக்கும். பாட்டின் பின் பாதியிலும் "உன்னைக் கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம்" என்னும் இடத்திலும் முந்திய பாங்கில் இருக்கும். ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அளவான மேக்கப்பில் இருக்கும் காதலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சுகம் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.



எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அகப்பட்டு அவஸ்தைப்படும் நடிகர்கள் போல இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் பலதும் அவரின் படங்களுக்கு இரையாகியிருக்கின்றன. அப்படியொன்று தான் "எனக்கு நானே நீதிபதி" படமும். இந்தப் படத்தில் சித்ரா பாடும் "திருடா திருடா" என்ற பாடல் அதிகம் கேட்காத பாடல்களுக்குள் அடங்கும். ஆனால் இசைஞானியின் பாடல்களைத் தேடிக் கேட்கவேண்டும் என்ற முனைப்பில் இருப்போர் தவறவிட்டிருக்காத பாடல். நீங்கள் தவற விட்டிருந்தால் இதோ கேளுங்களேன்

18 comments:

RVS said...

அச்சச்சோ இவ்ளோ நாளா இந்த ப்ளோகை தவற விட்டுட்டேனே!! அட்டகாசம்.. அதுவும் கடைசி பாடல்... சான்சே இல்லை.. மிக மிக நன்றி. ;-)

S Maharajan said...

நான் தவறவிட்ட பாடல் தான்
இது தல!
இன்று தான் கேட்கின்றேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சூப்பர் பாடல்கள் ..நிஜம் அந்த ஆரம்பகாலத்துல இருந்த குளிர்ச்சி குரல் கேக்க ரொம்பவுமே சுகமானது..

அது சரி அந்த முதல் வரியில் என்ன சொல்லறீங்க :)) அப்ப இப்ப ந்னு எதோ சொல்லவர்ரீங்க போலயே..

கோபிநாத் said...

தல எல்லா பாட்டுமே எனக்கு புதுசு ;)

குறையொன்றுமில்லை. said...

எல்லாமெ நல்ல பாடல்கள்தான் அதிகமா கேட்க முடிந்ததில்லை. உங்க பக்கம் வந்ததால கேட்க்க முடிந்தது.

Prem said...

//ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அளவான மேக்கப்பில் இருக்கும் காதலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சுகம் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.//
அட நான் கூட இப்படி தான் feel பண்ணினேன்!
உண்மையில் இசைஞானியின் இசையைப்பற்றி, இப்படி சில downplayed பாடல்கள் பற்றி பேசுவதே ஒரு ஆனந்தம்!

Riyas said...

superb,,

கானா பிரபா said...

RVS

வாங்க நண்பா நல்வரவு ;)

தல மகராஜன்
புதுசா கேட்கிறீங்களா ;) பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்

முத்துலெட்சுமி

ஆரம்ப வரிகள் புதுப்பாடகர்களுக்கான குட்டு ;)

IKrishs said...

Prem said...
//ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அளவான மேக்கப்பில் இருக்கும் காதலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சுகம் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.//
அட நான் கூட இப்படி தான் feel பண்ணினேன்!
உண்மையில் இசைஞானியின் இசையைப்பற்றி, இப்படி சில downplayed பாடல்கள் பற்றி பேசுவதே ஒரு ஆனந்தம்!

நாம் ரசிக்கும் விசயங்களை பற்றி பேசிப்பேசி மகிழும் இன்பம் பற்றி சிந்து பைரவியில் சிவகுமாரின் வசனமே உண்டு !

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. சித்ராவின் குரலில் எல்லா பாடல்களுமே இனிமையானது. ”இந்த வெண்ணிலா என்று வந்தது” எனக்கும் பிடித்த பாடல்.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி தல கோபி

மிக்க நன்றி அன்பின் லஷ்மி

வாங்க ப்ரேம் மிக்க நன்றி

வருகைக்கு நன்றி ரியாஸ்

கிருஷ்குமார்

பகிர்வுக்கு நன்றி

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வு.//

நன்றி நண்பரே

IKrishs said...

//எஸ்.ஜானகியின் ஆரம்ப காலத்துப் பாடல்களில் "உள்ளம் தேடாதே என்று சொல்லுதே" (சுகம் எங்கே), "மலரோடு விளையாடும் தென்றலே வாராய்" (தெய்வபலம்),எஸ்.பி.சைலஜாவின் அறிமுகக் குரலில் "

//

Ullam thedathy is actually from "yethaiyum thanngum idhyam"

கானா பிரபா said...

கிருஷ்குமார்

திருத்திவிட்டேன் மிக்க நன்றி

Venkatesh Balasubramanian said...

Dear Prabha,

Wonderful collection. Have never heard this songs before. Thanks for sharing such great melodies. great work.

Venki

காத்தவராயன் said...

// சித்ராவின் வருகை பூவே பூச்சூடவாவில் ஆரம்பிக்கிறது//

கானா,

அப்போ நீதானா அந்தக்குயில் " பூஜைக்கேத்த பூவிது" ???

அமரும், சித்ராவும், இதுதான் முதல்பாடல் என்று பலமேடைகளில் கூறியுள்ளார்களே!

பூவே பூச்சூடவாவில் அறிமுகம்-சித்ரா என்ற டைட்டில் கார்டையும் பார்த்துள்ளேன்.

ஒரு குழப்பம்தான்.

************

சித்ரா பிஞ்சுக்குரலில் பாடிய பாடல்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும், அவர் பின்னாளில் பாடியதை விட!

ஒரு ஜீவன் அழைத்தது,
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்,
மலரே பேசு,
.
.
.
etc..

Amirthanandan said...

"சந்தோஷம் இன்று சந்தோஷம் இந்தப் பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்".
இந்த வரிகளையே இந்த வலைப்பூவிற்குக் காணிக்கையாக்குகின்றேன். சக தோழனுடன் அமர்ந்து பாடல்கள் கேட்டு, சிலாகித்தது போன்ற உணர்வுகள் கொடுத்த எழுத்தாளருக்கு நன்றிகள் பல.

Amirthanandan said...

"சந்தோஷம் இன்று சந்தோஷம் இந்தப் பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்".
இந்த வரிகளையே இந்த வலைப்பூவிற்குக் காணிக்கையாக்குகின்றேன். சக தோழனுடன் அமர்ந்து பாடல்கள் கேட்டு, சிலாகித்தது போன்ற உணர்வுகளைக் கொடுத்த எழுத்தாளருக்கு நன்றிகள் பல.

கானா பிரபா said...

மிக்க நன்றி நண்பரே தங்களைப் போன்ற நண்பர்களைக் காண்கையில் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது