Pages

Saturday, December 5, 2009

"பா (Paa)" ர்த்தேன், பரவசமடைந்தேன்!

இசைஞானி இளையராஜாவுக்காக மட்டுமே தியேட்டர் படியேறிய இன்னொரு ஹிந்திப் படம் "பா". முந்தியது ""சீனி கம்". பா படம் நேற்றே வெளியாகியும் பதிவர்களின் அதிரடி விமர்சனங்கள் இன்னும் வராதது ஆச்சரியம்.

இன்று மதியம் 1 மணி காட்சிக்குப் போவோம் என்று நினைத்து தியேட்டருக்கு காரை விட்டேன். போகும் போது கூட்டம் அதிகமாக இருக்கும் , படம் பார்க்கும் கொடுப்பினை இருக்குமா என்ற நினைப்போடு மட்டுமே இருந்தேன். அந்த மல்டிபிளக்ஸ் தியேட்டரில் டிக்கட் வாங்கி "பா" வரப்போகும் திரையரங்குக்குள் சென்றேன். பின் வரிசையில் இரண்டு ஜோடிகள். முன்னே தனியே நான். ஆக மொத்தம் ஐந்தே பேர் பார்க்கப் போகும் ஸ்பெஷல் ஷோ "பா (Paa)" குறித்த நேரத்துக்கே ஆரம்பமானது.

"பா" என்று ஒலித்துக் கொண்டே ஒரு பெண் குரல், அட அது ஜெயா பச்சன். படத்தின் கலைஞர்களையும் அவர் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டே ஒரு சின்ன இடம் விட்டு அறிமுகம் "அமிதாப் பச்சன்" என்று சொல்லி ஆரம்பக் காட்சியை புதுமையாகப் படைத்த போதே அதீத எதிர்பார்ப்பு ஒட்டிக் கொண்டது.

ஒரு தூய அரசியல்வாதியாக வரவேண்டும் என்ற நினைப்பில் கேம்பிரிட்ஜில் மேற்படிப்பு படிக்கும் Amol Arte (அபிஷேக் பச்சன்) க்கும், டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கும் வித்யா (வித்யா பாலன்)க்கும் திடீர்க் காதல், அதனால் விளைவது திடீர்க்கர்ப்பம். குழந்தை வேண்டாம் என்ற கொள்கையோடு இருக்கும் அபிஷேக், ஆனால் இவரின் முடிவுக்கு முரண்டு பிடிக்கும் வித்யா பாலன் உறவை அறுத்து விட்டு அபிஷேக்க்கின் கண்களில் இருந்து காணாமல் போய் விடுகிறார். Progeria என்ற மூப்பு நோய் கண்ட Auro (அமிதாப்) 12 வயசில் எம்பி அபிஷேக் பச்சனைத் தன் பள்ளி விழாவில் சந்திக்கிறார். பல ஆண்டுகள் கழித்து அபிஷேக் தன்னுடைய குழந்தை தான் அது என்று தெரியாமலேயே நட்புப் பாராட்டி நேசம் வளர்க்கிறார். அபிஷேக் தன் மகனை எப்படிக் கண்டு பிடித்தார். வித்யா பாலனின் முடிவு என்ன என்பது தான் கதை.
படத்தின் முழுக்கதையையும் சொல்லி சுவாரஸ்யத்தைக் கெடுக்க விரும்பவில்லை.

பள்ளி விழாவில் சிறந்த கண்காட்சிப் பொருளுக்குப் பரிசு அறிவிக்கப்படுகிறது. அதைத் தேர்ந்தெடுத்தவர் எம்பி Amol Arte. கழிப்பறையில் இருந்து தன் பேண்டை இழுத்துக் கொண்டே இழுத்து இழுத்து நடந்து கொண்டே வருகிறான் Auro. ஆயிரத்துக்கு மேல் பள்ளிச் சிறுவர்கள் கூடியிருக்கும் அந்த பள்ளி மண்டபமே அவன் பேர் சொல்லிக் குதூகலிக்கிறது. அவனோ அமைதியாக வந்து மேடையில் பரிசுக் கிண்ணத்தை வாங்குகிறான். என்னடா இது மூடியாக இருப்பானோ என்று நினைப்பை மாற்றி விடுகிறது. தன் இரு பின் பக்கங்களையும் ஒரே சமயத்தில் தட்டி கூக்குரல் இட்டு ஆரவாரிக்கிறான் மாணவர்களோடு. இதுதான் உண்மையான Auro.

Auro என்ற குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் அமிதாப்பை படம் முடியும் வரை தேடவேண்டியிருக்கிறது. ஆகா என்னவொரு குழந்தைக்கேற்ற தனித்துவமான நடிப்பு அது. அவருக்குப் பண்ணியிருக்கும் மேக் அப் கூட செயற்கையாகத் திரையில் தெரியாதது ஒளிப்பதிவின் இன்னொரு சிறப்பு. பொதுவாக இப்படியான நோய் கண்ட குழந்தைகளை வச்சு எடுக்கும் படங்களில் அநியாயத்துக்கும் செயற்கையாக அந்தப் பாத்திரம் அனுதாப மூட்டையை கட்டி வைத்திருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு துளி கூட படம் முழுதும் அதை நிரவாமல் அதே நேரம் ஒரு கேலிக்குரிய பொருளாக இந்தப் பாத்திரத்தைக் காட்டாததும் இயக்குனர் பால்கி இன் சாமர்த்தியம் பிளஸ் வல்லமை. சீனி கம் இல் சில காட்சிகளில் தடுமாறிய பால்கி அடுத்த 2 ஆண்டுகளில் இந்தப் படம் மூலம் ஒரு தேர்ந்த இயக்குனராகி விட்டார்.

ஒரு முறை "கற்றதும் பெற்றதும்" தொடரில் சுஜாதா சொல்லியிருப்பார். ஒரு நல்ல சினிமாவில் முக்கிய பாத்திரங்கள் அனைத்துமே முதல் 15 நிமிடங்களுக்குள் ஏதோ ஒரு வகையில் பார்வையாளனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று. அதைத் தான் இந்தப் படமும் பின்பற்றியிருக்கிறது. mudi midi பாடலிலேயே வித்யா பாலன் அபிஷேக் காதல் ஆரம்பமாகி அந்த ஐந்து நிமிடத்துக்குள்ளேயே விடைபெற்றுக் கொள்ளும் வகையில் காட்சியமைப்பு இருக்கின்றது. படத்தின் எந்த ஒரு காட்சியும் அநியாயத்துக்கு நீளமாக இல்லாதது திறமையான எடிட்டிங்கை காட்டுகிறது.

பி.சி.ஸ்ரீராம் இன்னமும் மெளன ராகம் காலத்திலேயே இருக்குமாற் போல தன் ஒளிப்பதிவை இளமையாக வைத்திருக்கிறார். இவருக்குப் பின்னால் ஒரு ஒளிப்பதிவு பள்ளியே உருவாக்கி நல்ல கலைஞர்களை வளர்த்து விட்டாலும் இன்னமும் பி.சி.ஸ்ரீராமின் இடம் தனித்துவமானது என்பதைக் காட்டுகிறது காட்சி அமைப்புக்களும், ஒளிப்பதிவு நேர்த்தியும்.

"ஏன் நீங்க வெள்ளைச் சட்டை போடுறீங்க" சிறுவன் அவுரு கேட்கிறான்.
"அரசியல்வாதிகள்னா வெள்ளைச் சட்டை போடுவாங்க" எம்பி அமோல் சொல்கிறார்.
"துக்கத்துக்கும் கூட வெள்ளைச் சட்டை போடுவாங்க, இல்லையா" மீண்டும் அவுரு
"ஆமா" எம்பி அமோல்
"ஓ நாட்டைச் சாவடிச்சுட்டோமே என்ற துக்கத்தில் தானே வெள்ளைச் சட்டை போடுறீங்க, ஹோ ஹோ ஹோ" அவுரு நையாண்டி பண்ணிச் சிரிக்கிறான்.

குழந்தைகளுக்கான பள்ளிக் காட்சிகளில் வருகின்ற வசனங்களில் அதி மேதாவித்தனம் இல்லாத குழந்தைகளின் மொழி நடையும் உணர்வும் பேசப்படுகின்றன.
அபிஷேக் - வித்யா ஊடல், வித்யா - தாய் சம்பாஷணைகள் சினிமாத்தனமில்லாத எளிமை.
உண்மையிலேயே வசனகர்த்தாவும் "பா" வின் உயிரோட்டத்தில் பங்கு போடுகிறார். ஹிந்தி வகையறாப் படங்களைப் பார்க்கும் போது ஆங்கில சப்டைட்டில்கள் படத்தைக் கொன்று குழி தோண்டிப் புதைத்து விடும். அந்த வேலையை இங்கே செய்யாத புண்ணியவானைக் கூடப் பாராட்ட வேண்டும்.

சிறுவனாக வரும் அமிதாப் முதல் இடத்தில் இருந்தால், அடுத்த இடத்தில் நடிப்பில் கலக்குபவர் வித்யா பாலன். இவ்வளவு நாளும் ஒரு நோய்வாய்ப்பட்ட பிள்ளையை வைத்துக் கொண்டு நான் கஷ்டப்பட்ட கதை உனக்குத் தெரியுமா என்று பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் தன் கண்களாலும் முக பாவனைகளாலும் உணர்ச்சிகளைக் காட்டியிருக்கும் வித்யாபாலனுக்கு இந்தப் படம் பெரிய வரம். அமிதாப்பின் நடிப்புலக இளமைக் காலம் முழுமையான மசாலாவோடு போய்விட்டது. ஆனால் அபிஷேக்கிற்கு இப்படியான நேர்த்தியான கதைகளில் எல்லாம் வாய்ப்புக் கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதம். இவரின் தந்தையாக வந்து வழக்கம் போல் இயல்பாகச் செய்கிறார் பர்வேஷ் ராவால். வித்யா பாலனின் அம்மாவாக நடிக்கும் அருந்ததி நாக் உம் அளவாகச் செய்து சிறப்புச் சேர்க்கிறார்.

இளையராஜா எங்கே போனாலும் துரத்திச் சென்று கேட்டுப் பரவசமடையும் ரசிகர் கூட்டம் உண்டு. இந்த ஆண்டு இளையராஜாவுக்கு இந்திய அளவில் கிடைத்த ஆஸ்கார் இந்த "பா". இசைஞானிக்கு மாற்றீடாக இந்தப் படத்தில் இன்னொரு ஜீவனை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

"புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை " என்ற பாடல் அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக மெட்டுக் கட்டி இசையமைத்து ஆனால் படத்தில் வராத பாடல். ஆனால் 28 வருஷங்களுக்குப் பின்னர் "Halke se bhole" என்று குழந்தைகள் கூட்டம் கோரசாகப் பாடும் பாடலாக எடுக்கப்பட்டு திரையில் அதைக் காணும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அளவுக்கு அந்தச் சூழ்நிலை அமைக்கப்பட்டிருக்கும்.

"மூடி மூடி" பாடல் உட்பட எல்லாப் பாடல்களையும் தேவையில்லாமல் நுழைக்காது இலாவகமாகக் காட்டி அந்தப் பாடல்களின் சூழ்நிலையோடு பொருத்திப் பார்க்கும் போது மெய்சிலிர்க்கின்றது. இளையராஜாவின் பாடல்களை குப்பனும் சுப்பனும் ரீமிக்ஸ் ஆக்கிக் கொல்லும் இந்தக் காலத்தில் தானே விதவிதமான படையலாக மீளத் தரும் போது அதன் சுகந்தமே தனி தான்.

படத்தின் மெயின் தீம் இசையான அந்த வயலின்களின் ஆவர்த்தனத்தை மகிழ்ச்சி, சோகம் என்று விதவிதமாகக் கலவையாகக் காட்டியது ஒரு பக்கம். பாத்திரங்கள் மெளனிக்கும் போது மெளனித்து, பீறிடும் போது ஆர்ப்பரித்துக் கலக்கியிருக்கிறது இசைஞானியின் பின்னணி இசை. அம்பேத்கர் நகர் என்ற வறியோர் பகுதியில் நடக்கும் அரசியல் பரப்புக் காட்சியில் தளபதியில் கலெக்டர் அரவிந்த்சாமிக்குப் பின்னணியில் ஒலித்த அதே இசை மீளவும் வந்து நிரப்புகிறது. படத்தின் ஒரு காட்சியில் அபிஷேக்கின் மொபைல் போன் ஒலிக்கும் ரிங் டோன் இசை "பல்லவி அனுபல்லவி" படத்தில் வரும் பாடலின் இசைவடிவமாகத் தந்து கிடைத்த சந்து பொந்துகளையும் இசையால் நிரப்பி விடுகிறார். இசைஞானிக்குத் தேவை இப்படியான திறமையாக வேலை வாங்கக் கூடிய ஒரு நல்ல இயக்குனர்.

படத்தைப் பார்த்து முடிக்கும் போது ஒரு எண்ணம் வருவது தவிர்க்க முடியாதது. ஒரு திறமையான இயக்குனர் மட்டுமல்ல , சாமார்த்தியமாகக் கதை சொல்லிக் கட்டிப் போட வல்ல பால்கி என்ற இயக்குனர் பி.சி.ஸ்ரீராம், இளையராஜா என்ற ஜாம்பவான்களின் திறமையை அளவோடும் அழகாகவும் பயன்படுத்தி இப்படியான படைப்புக்களைக் கொண்டு வரவேண்டும், அதை ரசிகர்கள் முழுமனதாக ஆதரிப்பதன் மூலம் அந்த எண்பதுகளில் விரவிய இசைஞானத்தை அள்ளிப் பருகலாம்.

50 comments:

ஆயில்யன் said...

//Halke se bhole" என்று குழந்தைகள் கூட்டம் கோரசாகப் பாடும் பாடலாக எடுக்கப்பட்டு திரையில் அதைக் காணும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அளவுக்கு அந்தச் சூழ்நிலை அமைக்கப்பட்டிருக்கும்.//

கேக்கும்போதே ஒரு மாதிரி பரவசமான எண்ணம்தான்!

படம் பார்த்துட்டு வாரேன் பாஸ் :)

நாடோடி இலக்கியன் said...

படித்தேன் ரசித்தேன் பார்த்துட வேண்டியதுதான்.

Unknown said...

//ஆகா என்னவொரு குழந்தைக்கேற்ற தனித்துவமான நடிப்பு அது.//

"அப்(பா)!அப்படியா!பார்த்து
விடவேண்டியதுதான்.ஹிந்திதான் தெரியாது.

நல்ல விமர்சனம்.அருமையாக எழுதி
இருக்கிறீர்கள்.

குட்டிபிசாசு said...

படத்தை ஒருவழியா பார்த்துட்டு எழுதிட்டீங்க.

&
//இளையராஜாவின் பாடல்களை குப்பனும் சுப்பனும் ரீமிக்ஸ் ஆக்கிக் கொல்லும் இந்தக் காலத்தில் தானே விதவிதமான படையலாக மீளத் தரும் போது அதன் சுகந்தமே தனி தான்.//

இளையராஜா ஏன் ரீமிக்ஸ் போடுரார் என்பவர்களுக்கு, என் மனதில் உதித்த வார்த்தைகள்.

80களில் தமிழகத்திலும் சுற்றியுள்ள மாநிலங்களிலும் மட்டும் ஒளித்த இசையை இன்னும் மெறுகேற்றி உலகம் கேட்க வேண்டும் என்பது இளையராஜா ரசிகர்களாகிய நம்முடைய ஆவல்.

K.S.Muthubalakrishnan said...

நல்ல paaடம் .அருமையாக எழுதி
இருக்கிறீர்கள்.

mani said...

அருமை ; கானா ? இதைப் படிங்கள் // Everybody is raving about Amitabh Bachchan’s superb performance as a 13 year old Auro, suffering from progeria in Balki directed Paa. The film which released on Friday (Dec 4) has opened well all over the world including Chennai.
One of the factors for the film’s success is the music score of Ilayaraja, which is being appreciated by the North Indian audiences. Now the latest we hear is that Big B as a thanksgiving to Ilayaraja is coming to Chennai today evening (December 5) and holding a special show for the maestro.

The director of the film Balki has confirmed that Amitabh will be in Chennai on Saturday night for the special show. As per our sources Big-B has booked the entire Santham theatre for the night show of the film in Sathyam Cinemas.

The source added: “The show is for Raja sir who could not attend the premiere of the film on Thursday in Mumbai. Amitji will sit with Raja sir, Balki, PC Sriram and other celebrities from Kollywood and watch Paa, after that he will fly back to Mumbai”.

blogpaandi said...

நல்ல விமர்சனம். நன்றி.

☀நான் ஆதவன்☀ said...

நேத்தே பார்க்க வேண்டியது பாஸ். மிஸ் ஆகிடுச்சு. இந்த வாரம் பார்த்திட வேண்டியது தான்.

mani said...

இது ராஜாவின் புது கன்னட படம் ( http://www.youtube.com/watch?v=iFSOaLMIvd0&feature=player_embedded

Thamiz Priyan said...

நல்ல விமர்சனம் தல... கண்டிப்பா பார்க்க வேண்டும்..ஆசையை தூண்டி விட்டுட்டீங்க.. ;-))

கானகம் said...

அருமையான விமர்சனம். நல்ல விவரனைகள். விருப்பு, வெறுப்பின்றி செய்யப்படும் விமர்சனங்களே படம் பார்க்கத் தீர்மாணிக்க உதவும் அளவுகோல்கள். அந்த வகையில் உங்களுடையது ஒரு மிகச் சிறந்த விமர்சனம்

நன்றி.

ஜெயக்குமார்

pudugaithendral said...

நானும் படம் பார்க்கலை. பாத்துட்டு பதிவு போடறேன்.

Cable சங்கர் said...

இப்போதான் பார்த்துட்டு வர்றேன். ராஜா. கலக்கியிருக்கிறார். கும்சும் பாட்டில் ஆடியோவில் அவர் செய்திருக்கும் இம்பர்வைஷேசனை ரசித்தீர்களா..?

G3 said...

//படம் பார்த்துட்டு வாரேன் பாஸ் :)//

Repeatae :D

G3 said...

Indha postkku template muzhumaiya neranjirukka ilayaraja photos sema kalakkala sync aagudhu boss :D

சந்தனமுல்லை said...

சூப்பர்...நல்ல அறிமுகம்! கலக்கிட்டீங்க கானாஸ்! :-)

thamizhparavai said...

தலை முந்திட்டீங்களே...
நான் நாளைக்குப் போய் பார்க்குறதுக்கு ரிசர்வ் பண்ணியாச்சு...

நேற்றே விமர்சனம் படித்து ஆவலுடன் இருக்கிறேன்...
‘சீனிகம்’ இல் 2ம் பாதியில் கோட்டை விட்ட பால்கி இதில் கலக்கி இருக்கிறார் எனக் கேள்விப்பட்டேன்..
நாளை பார்த்துவிட்டு வருகிறேன்..
நல்ல தெளிவான விமர்சனம்.
மேலதிகத் தகவல் தந்த மணிக்கு நன்றிகள்...

கானா பிரபா said...

ஆயில்யன்

தியேட்டரில் பார்க்கும் போது இந்தப் படத்தின் ஒளிப்பதிவும் , இசையும் கொடுக்கும் வீச்சே தனி

நாடோடி இலக்கியன் said...

படித்தேன் ரசித்தேன் பார்த்துட வேண்டியதுதான்.//

"பா"த்து விடுங்கள் இலக்கியரே ;)

// கே.ரவிஷங்கர் said...
"அப்(பா)!அப்படியா!பார்த்து
விடவேண்டியதுதான்.ஹிந்திதான் தெரியாது.//

நீங்க இருக்கும் இடத்தில் எப்படியோ தெரியாது, வெளிநாடுகளில் சப் டைட்டிலோடு தான் போடுறாங்க, மிக்க நன்றி நண்பா

வாங்க குட்டிப் பிசாசு

நீங்க சொல்வதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு

// K.S.Muthubalakrishnan said...

நல்ல paaடம் .அருமையாக எழுதி
இருக்கிறீர்கள்.//

பதிவைப் paaர்த்துப் பதில் போட்டமைக்கு நன்றி ;)

கானா பிரபா said...

வணக்கம் மணி

மேலதிக தகவல்களோடு தந்த பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. அந்த கன்னடப்படத்து டைட்டிலை கவனிச்சீங்களா , நீண்ட நாட்களுக்குப் பிறகு "மேஸ்ட்ரோ" அடைமொழியோடு அதுவும் கன்னடத்தில் சிறப்பிக்கப்பட்டிருக்கார்.

வருகைக்கு நன்றி ப்ளாக் பாண்டி

ஆதவரே, மிஸ் பண்ணாமப் பாருங்க

தமிழ்ப்பிரியன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெயக்குமார்

உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். மிக்க நன்றி

ஜெட்லி... said...

உங்கள் விமர்சனத்தை படித்த
பின் படம் பார்க்க வேண்டும் போல்
இருக்கிறது... பார்த்து விடுவேன்..

அன்பேசிவம் said...

தலைவரே! புட்டு வச்சிட்டிங்க, பாத்துருவோம்... இளையராஜாவுக்காக, ஸ்ரீராமுக்காக, பால்கிக்காக ம்ம்ம்ம்ம் நிச்சயம் பார்க்கவேண்டியபடம்தான் என்று உங்கள் பதிவின் உத்திரவாதாம் வேறு,பாத்துருவோம்... :-)

கோபிநாத் said...

தலஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ;)))

அசத்தல் விமர்சனம்...போட சீக்கிரம் போடான்னு சொல்லுது உங்க விமர்சனம். ;))

எனக்கு இன்னும் அந்த அதிட்ஷம் கிடைக்கல தல...;(( இங்க வேலை+டிக்கெட் கிடைக்கல.

கோபிநாத் said...

\\புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை " என்ற பாடல் அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக மெட்டுக் கட்டி இசையமைத்து ஆனால் படத்தில் வராத பாடல். ஆனால் 28 வருஷங்களுக்குப் பின்னர் "Halke se bhole" என்று குழந்தைகள் கூட்டம் கோரசாகப் பாடும் பாடலாக எடுக்கப்பட்டு திரையில் அதைக் காணும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அளவுக்கு அந்தச் சூழ்நிலை அமைக்கப்பட்டிருக்கு\\


ஆகா...ஆகா...உங்களுக்கும் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்னுச்சா!!! எனக்கு பாட்டை கேட்கும் போதே ஆச்சே ;)))

அனுபவிக்கிறேன்...கண்டிப்பாக ;))

கோபிநாத் said...

\\இளையராஜா ஏன் ரீமிக்ஸ் போடுரார் என்பவர்களுக்கு, என் மனதில் உதித்த வார்த்தைகள்.

80களில் தமிழகத்திலும் சுற்றியுள்ள மாநிலங்களிலும் மட்டும் ஒளித்த இசையை இன்னும் மெறுகேற்றி உலகம் கேட்க வேண்டும் என்பது இளையராஜா ரசிகர்களாகிய நம்முடைய ஆவ\\

ரீப்பிட்டேய் ;))))

கோபிநாத் said...

\\இசைஞானிக்குத் தேவை இப்படியான திறமையாக வேலை வாங்கக் கூடிய ஒரு நல்ல இயக்குனர்\\

சூப்பரு ;))

இசை தெய்வத்தின் கோடான கோடி ரசிகர்களில் பால்கியும் ஒருவர்.அப்படிபட்டவர் சும்மா விடுவாரா நம்ம இசைஞானியை பிழிஞ்சிடுவாருல்ல ;0))))

கோபிநாத் said...

இளையராஜாவுடன் சென்னையில் ‘பா’ பார்த்த அமிதாப்!

http://www.envazhi.com/?p=14109

:)

கானா பிரபா said...

புதுகை பாஸ், படத்தை சீக்கிரமே பாருங்க

வருகைக்கு நன்றி சுவாசிகா

//Cable Sankar said...
கும்சும் பாட்டில் ஆடியோவில் அவர் செய்திருக்கும் இம்பர்வைஷேசனை ரசித்தீர்களா..?//

இந்தப் பாட்டை நான்கு மொழிகளில் வித விதமா பண்ணி கலக்கிட்டார் இல்லையா

G3

வாங்க, டெம்ப்ளேட் இந்தப் பதிவுக்காச்சும் சரியா வந்துச்சே ;)

வருகைக்கு நன்றி சந்தமுல்லை

Anonymous said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... காதுல புகை! :))

பாவம் அனுபவிச்சிட்டுப்போங்க பாஸ்! 15 வருஷம் கழிச்சு ஒரு படத்துக்கு நல்ல மியூசிக் போட்டிருக்கார் அதனால நீங்கெல்லாம் அனுபவிக்கலாம் :))

-டைனோ

Anonymous said...

பாத்துறவேண்டியதுதான்.

மீன்துள்ளியான் said...

அண்ணே பாத்துட்டு வந்து சொல்லுறேன் . ஹிந்தி புரியாத காரணத்தால் துணைக்கு ஆள் தேடிகிட்டு இருக்கிறேன் .. கிடைச்சதும் போய்ட வேண்டியதுதான் .

இளையராஜா இசை பற்றிய ஒரு பதிவு
http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_04.html
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

geethappriyan said...

ஆகா தல,
மிக அருமையான விமர்சனம், கோபி கூட படத்துக்கு கூப்பிட்டிருந்தார், படம் அவசியம் பார்ப்பேன், ராஜா ராஜா தான்.
மீண்டும் ஒரு கலக்கலான படைப்பு உங்களிடமிருந்து.

SurveySan said...

///"Halke se bhole" என்று குழந்தைகள் கூட்டம் கோரசாகப் பாடும் பாடலாக எடுக்கப்பட்டு திரையில் அதைக் காணும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அளவுக்கு அந்தச் சூழ்நிலை அமைக்கப்பட்டிருக்கும்.////

இதை படிக்கும்போதே எனக்கு அப்படி ஆவுது. வாவ்! :)

SurveySan said...

'curious case of benjamin button' படத்தின் கதையம்சம் இது.

எந்தளவுக்கு resemblance இருக்கு?

title cardல கதை யாருதுன்னு போடறாங்க? :)

SurveySan said...

அடக் கொடுமையே, இது மகா புழுகா இருக்கே.. ஏந்தான் இப்படி இருக்காங்களோ...

http://www.abhishekbachchan.org/news-full.php/2009/12/01/paa-inspired-by-curious-case-of-benjamin-button.html
////Though the industry is abuzz with the talk of Big B’s character taking its inspiration from the above Hollywood biggies, the director of the film strongly denies the same. Balki, who has directed the ‘Paa’, vehemently denies any connection with Hollywood films and says that he got the inspiration from Amitabh Bachchan and Abhishek Bachchan themselves when he had gone for a meeting in their office.
////

mani said...

'curious case of benjamin button' படத்தின் கதையம்சம் இது.// சர்வேசன்? 'curious case of benjamin button' படத்திற்கும் பா படத்திற்கும் சம்மந்தம் ஏதும் இல்லை Progeria என்ற கருவை தவிர; முதலில் படம் பாருங்கள் புரியும்;

Anonymous said...

"kattu vazhi" endru avar athu oru kanaa kaalam padathirkku pottathai thaan theme music-a pottullar..

raaja thalaivar eppothum ippdi thaan 10 years kazhichu podavendiyathellaam ippove pottruvaaru

Sorry i dont have tamil fonts in this computer.

~Ravisankaranand

mani said...

இது பால்கி கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி ;
A number of critics have drawn a parallel between ‘Paa’ and ‘The Curious Case of Benjamin Button’. Any comments?

It’s very simple. When you can get a DVD for Rs200, they must be foolish to think I will make Amitabh Bachchan go through 5 hours of make-up every day and spend Rs20 crore to remake a Rs200 crore film. You would rather put subtitles on Benjamin Button and sell it. Why would anyone spend two years remaking anything?

How can you say what the movie is without seeing it, first of all? Some people have told me it resembles Benjamin Button, some people have said Jack, someone told me Blade Runner. And I was like wow, that’s a new one! Why Jack? Because it’s got progeria. Why Benjamin Button? Because it’s got a bald head. Why Blade Runner? Because it’s got a character that’s got a progeria family. I have not discovered progeria. It’s like saying that every film with cancer is Love Story

பினாத்தல் சுரேஷ் said...

கானாபிரபா,

படம் பார்த்துவிட்டு அவசரமாக ஊருக்கு மூட்டை கட்ட வேண்டி இருந்ததால் சுருக்கமாக 4 ட்விட்டோடு நிறுத்திக்கொண்டேன். விரிவாக எழுதி இருந்தால் இதைப்போலத்தான் இருந்திருக்கும். ரசித்துப் பார்த்தேன், அதே அளவு ரசித்து படித்தேன் இப்பதிவை.

நான் இளையராஜாவுக்காக மட்டும் போகவில்லை. சீனி கம் டீமுக்காகத்தான் போனேன். சீனி கம்மில் இருந்த சிற்சில குறைகளையும் உதறிவிட்டு கலக்கலாக நின்றிருக்கிறார் பால்கி.

இழுக்க ஆயிரம் சந்தர்ப்பம் இருந்தாலும் எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு நேரடியாக கதை மட்டும் சொன்ன திறமை. (நீங்கள் சொன்னது போல முடிமுடி பாட்டு படமாக்கல் - இடித்துக் கொள்கிறார்கள், ரயிலில் இடம் தேடுகிறார்கள், ப்ரக்னன்ஸி கிட்டைப் பார்க்கிறாள், பாட்டு முடிகிறது, பேச ஆரம்பிக்கிறார்கள்)

தவிரவும், தல போல வருமா.. மொட்டத் தல போல வருமா!

சர்வேசன்,

இரண்டையும் பார்த்தவன் சொல்கிறேன், பெஞ்சமின் பட்டனுக்கும் இதற்கும் எந்தச் சம்மன்தமும் இல்லை. கிழத்தோற்றமுல்ல இளைஞன் என்ற ஒருவரியைத் தவிர.

mani said...

கானா? ‘சீனிகம்’ படத்திற்கு பிறகு ராஜா இசைஅமைத்த இந்தி படம் Chal Chalein ;இது பட்ஜெட் படமாதலால் அவ்வளவாக அறிமுகமில்லாமல் போய்விட்டது; இதில் முன்று பாடல் , இரண்டுபாடல் அருமையாக இருக்கும்; அதிலும் ஹரிஹரனின் குரலில்(Tum Bhi Dhoondna ) என்ற பாடலை கேட்டுப்பாருங்கள்; http://www.youtube.com/watch?v=_w8nDCZXcHc

கானா பிரபா said...

தமிழ்ப்பறவை, ஜெட்லி, முரளிகுமார், தல கோபி,


வருகைக்கு மிக்க நன்றி

டைனோ,

குசும்பு ;)

சின்ன அம்மிணி, மீன் துள்ளியான், கார்த்திகேயன், ரவிசங்கர், பினாத்தல் சுரேஷ், சர்வேசர்

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

சர்வேசர்

உங்களுக்கான பதிலை மணியும், சுரேஷும் தந்துட்டாங்க ;)

வணக்கம் மணி

நான் Chal Chalein பாட்டுக்களை இது நாள் வரை கேட்கவில்லை, மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு

வஜ்ரா said...

கும் சும் கும் என்ற பாடல், எங்கோ கேட்ட பாடல் போலே உள்ளதே...தமிழில் வந்த பாடல் எது?

கோபிநாத் said...

\\நான் Chal Chalein பாட்டுக்களை இது நாள் வரை கேட்கவில்லை, மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு\\

தல..ஒரு பெரிய கிர்ர்ர்ர்ர்ர்..இன்னுமா கேட்டகல...முதல்ல கேளுங்க அட்டகாசமாக இருக்கும் ;)

@ மணி

பின்னூட்டம் எல்லாம் கலக்குது ;))

\\ இதில் முன்று பாடல் , இரண்டுபாடல் அருமையாக இருக்கும்; அதிலும் ஹரிஹரனின் குரலில்(Tum Bhi Dhoondna ) என்ற பாடலை கேட்டுப்பாருங்கள்; http://www.youtube.com/watch?v=_w8nDCZXcHc\\

பகிர்வுக்கு நன்றி தல ;) ஆனா 7 பாட்டு தல அதுல...எனக்கு Jhoom Jhoom So Ja பாட்டு ரொம்ப பிடிக்கும் ;)

http://ragadhevan.blogspot.com/2009/08/2009.html

பாருங்கள் ;)

அப்புறம் நாளை படம் ஓகே ஆகிடுச்சி ;)))

SurveySan said...

//சர்வேசன்,

இரண்டையும் பார்த்தவன் சொல்கிறேன், பெஞ்சமின் பட்டனுக்கும் இதற்கும் எந்தச் சம்மன்தமும் இல்லை. கிழத்தோற்றமுல்ல இளைஞன் என்ற ஒருவரியைத் தவிர.//

நன்றி பினாத்தல்.

அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி :)
கண்டிப்பா படம் பாக்கறேன்.

அறியாமல் செய்த பிழையை மன்னிக்க.

கானா பிரபா said...

வணக்கம் வஜ்ரா

அந்தப் பாடல் தமிழில் சந்தத்தில் பாடாத கவிதை, மலையாளத்தில் தும்பி வா , தவிர தெலுங்கிலும் வந்திருக்கிறது.

தல கோபி

சரி விடுங்க தல ;)

mani said...

இது இயக்குனர் திரைதுறைக்கு வருவதற்கு முன்பு குடுத்த பேட்டியின் ஒரு பகுதி படிக்கவும் ... The jingle is a mixture of Ilayaraja's (who else!) 1989 classic track, Jhallantha and Maniratnam's Telugu debut, Geetanjali. Does the agency get the copyright to use such songs from the past? If they do, is there some way to offer credits to the original composer?
Of course, we have a copyright. You can't add a credit because we have borrowed and composed the whole thing, we have written our own lyrics. We have not used the same song, only the melody. Like we did for the Bajaj Chetak's gadi boola rahi hain. We bought the rights of the track and recomposed it. Because the words might not exactly fit the requirements.

Is it true that you are one of Ilayaraja's biggest fans?
I have always said in all my interviews that Ilayaraja is the God of music even if we all live for another 5000 years to compose music, we won't get as melodious as him. And I believe in using good music for advertising or anything else. Even if I had to make a feature film, I would still buy Ilayaraja's old songs and recompose them

mani said...

இது ராஜாவை பற்றி அமிதாபின் பார்வை ;;;
The great Ilaiyaraja, pristine in white and just off from Balaji at Tirupati, conducts me at Prasad Studios for the song from PAA. I did it once when he was not around. I did it today when he was around. The world seemed different. The quality improved. The reason for his hand gestures as he conducted the rhythms poetic and his demeanor and expressions synonymous with the flow of the notes he had composed in his private room just behind and beyond the studio.

His eyes wild and bright. His language measured and pointed. His reason behind every note definite and pure and his decision final on the output. The master, the maestro, the magician the ‘little Raja’.

I am struck with emotion. It works its way up the belly through to the chest and heart and waits to explode into the eye lids. And I return back to the Hotel and I believe that I will wait till the morrow for the senses to dissolve before I can go any further …

Good night, my dears ..

I shall return before the morrow is over ..

Amitabh Bachchan

mani said...

பகிர்வுக்கு நன்றி தல ;) ஆனா 7 பாட்டு தல அதுல...எனக்கு Jhoom Jhoom So Ja பாட்டு ரொம்ப பிடிக்கும் ;)
ஆனால் படத்தில் 3 பாடல்தான் என்று நினைவு; மற்ற பாடல்கள், சிறு சிறு பாடல்களாக கடந்திருக்கலாம்!!!

கரவெட்டியான் said...

//இசைஞானிக்கு மாற்றீடாக இந்தப் படத்தில் இன்னொரு ஜீவனை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.//
-என்னாலும்...

இந்தப் படத்தின் ஒரேயொரு Still ஐ மட்டும் பார்த்துவிட்டு, எப்படியும் திரையரங்கிலேதான் பார்ப்பதென்று முடிவெடுத்திருந்தேன். பார்த்தும்விட்டேன்.

KARTHIK said...

தல படம் பாத்துட்டுவரும் போது இப்படம் பத்தி உங்க பதிவு நிச்சையம்வரும்னு எதிர்பாத்தேன் :-))
ஏமாத்துல நீங்க
பகிர்தலுக்கு நன்றி தல.

KARTHIK said...

இங்க ஈரோட்டுல படம் வரல
சேலத்துல பிக் தியேட்டர்ல தான் பாத்தோம்
மொத்தம் ஒரு 20 பேர்தான் இருந்திருப்போம்
நல்ல படம் வர்ரதில்லைனு சொல்லுராங்க வந்தா யாரும் பாக்குரதில்லை
என்னத்த சொல்ல