Pages

Sunday, April 6, 2008

சிறப்பு நேயர் "துளசி கோபால்"

ஸ்ரீராமின் விருப்பத்தைத் தாங்கி முத்தான ஐந்து பாடல்களோடு கடந்த வார சிறப்பு நேயர் விருப்பம் அமைந்திருந்தது. அவர் கேட்ட பாடல்கள் வரும்போது அவர் இலங்கையை விட்டு குடும்பமாக ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டார். புது இடம் அவர்களுக்கு செளகரிகமான வாழ்வைக் கொடுக்கட்டும்.

சரி, இனி இந்த வார நேயர் பகுதிக்குச் செல்வோம்.
இந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்கவிருப்பவர் கடந்த நான்காண்டுகளாக வலையுலகில் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே கலக்கலான பதிவுகளை அளித்துவரும் டீச்சரம்மா "துளசி கோபால்".
நகைச்சுவை இழையோடும் சொற்கட்டுக்களோடு வித விதமான அனுபவ, ரசனைப்பதிவுகளைக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே தான். தொடர்ந்து பதிவுகளை அள்ளிவிட்டாலும் ஒன்றுமே விலத்தி வைக்கமுடியாத அளவிற்கு சுவாரஸ்யமான எழுத்து நடையை அளிப்பவர். அதனால் தான் ஒவ்வொரு நாளும் மட்டம் போடாத கணிசமான மாணவர் கூட்டம் இவர் பதிவுக்கு எப்போதுமே உண்டு.
துளசி தளம் என்பது இவரின் தனித்துவமான வலைத்தளமாகும்.சாப்பிட வாங்க, விக்கி பசங்க,சற்று முன் ஆகிய கூட்டுத் தளங்களில் இவரின் பங்களிப்பு உண்டு. தொடர்ந்து துளசிம்மாவின் முத்தான ஐந்து தெரிவுகளைப் பார்ப்போம்.

நேயர் விருப்பமாக சில பாட்டுகளைக் கேட்டுருக்கேன். விருப்பமான பாட்டுக்கள்னு பார்த்தால் நூத்துக்கணக்கில் வருது. அதில் சமீபத்தியக் காலப் பாட்டுக்களை நண்பர்கள் ஏற்கெனவே விரும்பிக்கேட்டு, அதையெல்லாம் அனுபவிச்சாச்சு.

தமிழ்ப்பாட்டுக்களை இந்தப் பட்டியலில் சேர்க்கலைன்னா தமிழ்த்துரோகியா நினைச்சுக்குவாங்களோ என்ற ஒரு பயத்தில்(???) ரெண்டு தமிழ்ப்பாட்டுக்கள், ஒரு மலையாளம், ஒரு ஹிந்தி & ஒரு கஸல்னு என் தெரிவு இருக்கு இப்போ:-))))
இரைச்சலான இசைக்கருவிகள் ஓசையும், என்னென்றே புரிபடாத சொற்களும் நிறைஞ்சிருக்கும் பாட்டுக்களை எப்போதுமே விரும்பியதில்லை.

அழகா...மெல்லிய இசையில் மனசுக்குப் பக்கத்துலே வந்து பாடும் பாட்டுக்களைத்தான் மனம் விரும்புது.

1.விஜய் ஆண்ட்டனி இசையில் 'டிஷ்யூம்' என்ற படத்தில் எங்களுக்கு(!!) பிடிச்சது இது. பாடியவர்: ஜெயதேவ் & ராஜலக்ஷ்மி
பாடல்: "நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்"





இப்பாட்டின் வீடியோ வடிவம்


2. அடுத்த பாட்டின் இசை அமைப்பாளரும் இவரேதான். படம்: நினைத்தாலே
அநேகமாக அதிகம் பேர் பார்க்காத படமாக இருக்கலாமுன்னு நினைக்கிறேன்.
வெட்டு, குத்து, ரத்தம்ன்னு தேவையில்லாத காட்சிகள் ஒண்ணும் இல்லாம யதார்த்தமா இருக்கும் கதைதான். ஒருவேளை இப்படி இருக்கறதாலேயே படம் ஓடலையோ?
இந்தப் பாடலைப் பாடியவர்கள்: ராஹுல் நம்பியார் & சாதனா சர்கம்
பாடல் "நாந்தானா இது நாந்தானா"





3. இந்தப் பாட்டு நம் யேசுதாஸ் பாடியது. பாடல் இடம் பெற்ற படம் செம்பருத்தி.
படம் வந்தே 36 வருசமாகுது. மனசை அப்படியே வருடிக்கொண்டுபோகும் இசை. இப்பாடலை எழுதியவர் வயலார்.
பாடல்:"சக்ரவர்த்தினி நினக்கு ஞான் என்ற சில்ப கோபுரம் துறந்நு"





இப்பாட்டின் வீடியோ வடிவம்

4. இது என்ன வகையைச் சேர்ந்த பாட்டுன்னு தெரியாமலேயே இதை எங்கியோ கேட்டு மனசைப் பறி கொடுத்தேன். சில வருடங்களுக்குப்பிறகு டெல்லி போனப்ப, அங்கே ஒரு ம்யூசிக் ஷாப்லே இந்தப் பாட்டை 'ஹம்' செஞ்சு காமிச்சுக் கேஸட்டை வாங்கிவந்தாச்சு. அதுக்கப்புறம் ஜக்ஜீத் சிங்கின் எத்தனையோ கஸல்களைக் கேட்டாலும், இந்தப் பாட்டு மனசுலே தங்குனதுமாதிரி வேற எதுவும் தங்கலை. அவருடைய ஒரே மகன் விபத்துலே இறந்துபோனதுக்குப் பிறகு, அவருடைய குரலில் அவ்வளவான குதூகலம் இல்லாமப்போச்சுன்னு கேள்விப்பட்டேன்.
பாடல்: "கல் செளதினிகி ராத் தி"





இப்பாட்டின் வீடியோ வடிவம்

இது அதே பாட்டுக்கு மக்கள்ஸ் யாரோ எடுத்த ஹோம்வீடியோ ஒரே சிரிப்புத்தான் அந்த தபேலா வாசிக்கிற பொடியன். fun. கேலி கலாட்டான்னு எடுத்துக்கலாம்:-))))
வீடியோ வடிவம்

5. இப்போதைக்குக் கடைசியா விரும்பிக்கேட்ட பாட்டு பஜன் வகையைச் சேர்ந்ததாவும் இருக்கலாம். கண்ணனைப் பார்க்க மனம் உருகிப்பாடும் பாட்டு.
எப்போ கேட்டாலும் கண்ணுலே நீர் கோத்துக்கும்.
பாடல் இடம்பெற்ற படம் நார்ஸி பகத்
ரொம்பப் பழைய படம்(நான் பார்க்கலை)51 வருசப் பழசு.
பாடுனவுங்க ஹேமந்த் குமார், மன்னாடே, சுதா
பாடல்: "தர்ஷன் தோ கனுஷ்யாம் நாத்......."
ரவியின் இசையில்





விரும்புன பாட்டை வச்சுக் கேக்குறவங்க வயசைக் கண்டுபிடிக்கலாமுன்னு யாராவது சொன்னா
நம்பாதீங்க:-))))
வாய்ப்பளித்ததற்கு நன்றி பிரபா

அனைவருக்கும் அன்பான உகாதிப் பண்டிகை
வாழ்த்து(க்)கள்.
என்றும் அன்புடன்,
துளசி கோபால்


10 comments:

கோபிநாத் said...

வாங்க டீச்சர் வாங்க ;))


\\நகைச்சுவை இழையோடும் சொற்கட்டுக்களோடு வித விதமான அனுபவ, ரசனைப்பதிவுகளைக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே தான். தொடர்ந்து பதிவுகளை அள்ளிவிட்டாலும் ஒன்றுமே விலத்தி வைக்கமுடியாத அளவிற்கு சுவாரஸ்யமான எழுத்து நடையை அளிப்பவர். அதனால் தான் ஒவ்வொரு நாளும் மட்டம் போடாத கணிசமான மாணவர் கூட்டம் இவர் பதிவுக்கு எப்போதுமே உண்டு.\\

இவுங்க கையால அடிவாங்கியது இல்லை...

வெளியில் முட்டிகால் போட்டது இல்லை...

பரீட்சை இல்லை....

பரீட்சை பேப்பரில் அப்பாவோட கையெழுத்து கேட்க மாட்டாங்க...

இப்படி மாணவர்களுக்கு எந்தவித கஷ்டமும் கொடுக்காத ஒரே டீச்சர் எங்க துளசி டீச்சர் தான் ;))


பதிவுகளில் மட்டும் இல்லமால் பின்னூட்டத்திலும் நகைச்சுவையும், ஊக்கத்துடன் பின்னூட்டம் போடுவாங்க ;)

கோபிநாத் said...

வித்தியாசமான தொகுப்பு டீச்சர்...நன்றாக இருந்தது..மிக்க நன்றி ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சாதனா சர்கம் பாட்டு மட்டும் இன்னைக்கு கேட்டேன்.. சூப்பரு.. துளசி உங்க வயசு என்ன எல்லாருக்கும் தெரியுமே ... நீங்க என்றும் பதினாறுன்னு....

G.Ragavan said...

ஆகா இந்த வாட்டி துளசி டீச்சரா? சூப்பர்.

டீச்சர்னா எல்லாப் பாடமும் எடுக்கனும். அது மாதிரி நம்ம டீச்சரும் எல்லா மொழிப் பாட்டும் கேட்டிருக்காங்க.

ஆனா கடைசியில அவங்க சொன்னாப்புல பாட்டை வெச்சு வயசைக் கண்டுபிடிக்க முடியாதுங்குறது உண்மையாயிருச்சு. :)

துளசி கோபால் said...

மிகவும் நன்றி பிரபா.

வகுப்புக்கு வராதவங்களைப் பாட்டுப்பாடி இழுத்துவரணும்.
அதுதானே பாடற மாட்டைப் பாடிக்கறப்பது?:-))))

கோபி, கயல்விழி, ராகவன் டீச்சரைப் பத்திய நல்ல(!!) சொற்களுக்கு நன்றி. கிரேஸ் மார்க்கைக் கூட்டிப்போட்டுக்கலாம் பிரச்சனை இல்லை:-))))

கானா பிரபா said...

இறுதிப்பாட்டு இயங்கவில்லை என்று தல கோபி குற்றம் சாட்டியிருந்தார். அதை திருத்தி இட்டிருக்கின்றேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கஜலும் சரி அந்த கடைசிபாட்டும் சரி நல்ல பாட்டு தேர்ந்தெடுத்து நமக்கு கேட்க தந்த துளசிக்கும் கானாப்பிரபாவுக்கும் நன்றி.

சென்ஷி said...

:)

டிஷ்யும் படப்பாட்டு எனக்கும் மிகப்பிடித்தமான பாடல்..

நினைத்தாலே படப்பாடலா.. அந்த படத்துக்கு விமர்சனம் எழுதி ரொம்ப நாளாச்சு போல...

மத்த பாட்டு எல்லாம் எனக்கு ரொம்ப புதுசு.. அதனால கேட்டுட்டு சொல்றேன் :)

SP.VR. SUBBIAH said...

அசத்திட்டீங்க டீச்சர்!

pudugaithendral said...

paatunga kekka mudiyala. inga inernet slowva irukku. intha sirapu neyarana tulasi akkavuku ennoda vaalthukkal.

pudugaithendral