Pages

Wednesday, April 16, 2008

சிறப்பு நேயர் "அய்யனார்"


"தனிமையின் சிறகுகளை
விடுவித்துக் கொண்டது
காலம்
பாலை மணலுதறி
பசுஞ்சமவெளியில் தடம் பதிக்கிறேன்
நெடுகிலும் நின்று கொண்டிருக்கும்
துளிர்க்காத மரங்களிலெல்லாம்
நேரடியாய்ப் பூக்களைப் பிரசவிக்கின்றன
நானொரு பெண்ணின் விரல்களை
இறுகப் பற்றிக்கொள்கிறேன்......."

மேற்கண்ட கவிதையையே தன் திருமணச் செய்தியில் கொடுத்திருந்த நம்ம நண்பர் அய்யனார் விஸ்வநாதன் இன்று கல்பனாவை தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்கின்றார்.
இவர்கள் இருவரும் மணமேடையில் இருக்கும் இந்த நேரம் சரியாக இந்தப் பதிவும் போடப்படுகின்றது.
முதலில் அய்யனார் - கல்பனா தம்பதிகள் நீடூழி காலம் நிலைக்கும் இன்பம் பொங்கும் இல்லற வாழ்வில் இனிதாய்க் கழிக்க வாழ்த்துகின்றோம். இவர்களுக்காக நாம் தரும் சிறப்புப் பாடல்
"நூறு வருஷம் இந்த
மாப்பிளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்"




றேடியோஸ்பதியின் இவ்வார சிறப்பு நேயராக வலம் வருபவர் நண்பர் அய்யனார்.
தனிமையின் இசை என்னும் வலைப்பதிவில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இலக்கியப் படையல் கொடுத்து வருபவர். பின்நவீனத்துவக் கவிதைகள், உலக சினிமா, நூல் விமர்சனங்கள் என வலைப்பதிவுலகில் இனம்காணக்கூடிய சிறந்த இலக்கியக்காரர் இவர். விமர்சனம் என்று வரும்போது தீப்பொறி கனக்கும் வரிகளை இவரது தட்டச்சு பொறிக்கும். இவரது எழுத்துக்களில் செறிவான கருத்துக்கள் எந்தவித நெகிழ்வுக்கும் ஈடுகொடுக்காது இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக தனிப்பட்ட ரீதியில் மிகவும் இயல்பாகப் பேச, பழகக்கூடிய இனிய நண்பர் இவர்.

நண்பர் அய்யனாரின் இசை மீதான நேசிப்பு எவ்வளவு தூரம் இருக்கின்றது என்பதற்கு தொடர்ந்து அவர் பேசுவதைக் கேட்டால் அதை விட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது.


திரைப்பட பாடல்களின் மீது 95 களில்தான் ஈர்ப்பு ஏற்படத் துவங்கியது அது மெல்ல பெரும் பைத்தியமானது. ஒரு கட்டத்தில் இரவில் பாடல்களைக் கேட்காமல் தூங்குவதில்லை,காலை எழுந்தவுடன் பாடல்களை கேட்டேயாகவேண்டும் என்பது போன்ற நிர்பந்தங்களில் என்னைத் தள்ளியது.எல்லாரையும் போல இளையராஜா வின் பாடல்கள்தான் எனக்கும் மிகப்பெரிய கிறக்கமாக இருந்து வந்தது/கிறது.

கல்லூரிக் காலங்களில் பிடித்தமான பெண்களைப் பார்க்கும்போதே மனதிற்குள் பாடல்கள் தானாய் உயிர்ப்பெறும்.வரிகளை முணுமுணுத்தபடி பகல் கனவுகளில் மூழ்குவது என் பெரும்பாலான பகல்களின் வேலையாய் இருந்தது.பாடல்களை விரும்பும் நண்பர்களாகவே சேரத் துவங்கினர்.அரிய பாடல்களை தேடி தேடி கேசட்டுகளில் பதிவித்து அதற்காக ரெக்கார்டிங்க் சென்டர் வாசலில் காத்திருந்து மிகுந்த ஆசைகளோடு பாடல்கள் கேட்ட மிகவும் அற்புதமான காலங்கள். எங்களுடைய பிடித்தமான பொழுது போக்கே எந்த பாட்டு எந்த படத்தில் என்பதை கண்டுபிடிப்பதாகத்தான் இருந்தது.இந்த பாடல்களின் மீதிருந்த காதல் என்னையும் என் அண்ணனையும் ஒரு இசைப்பதிவுக் கூடத்தை தொடங்கமளவிற்குத் தள்ளியது 98 களின் இறுதி வாக்கில் ஓசூரில் ஸ்ருதி மியூசிக்கல்ஸ் என்ற கடையைத் தொடங்கினோம் அப்போதுதான் குறுந்தட்டுக்களிள் பதிவது துவங்கியிருந்தது நாங்கள் குறுந்தட்டுக்களிள் பதியும் உபகரணங்களை வாங்கினோம் இருப்பினும் கிராமபோன் பிளேயர்கள் தட்டுக்களையும் விடவில்லை மிக மிக அரிதான பாடல்களயெல்லாம் கைவசம் வைத்திருந்தோம்.

என் வாழ்வின் மிக அழகான நாட்களாக அவற்றை சொல்லலாம் தூங்கும் நேரம் தவிர்த்து எப்போதும் பாடல் கேட்டபடியே திரிந்த நாட்கள் அவை. தூக்கத்திலும் ஏதாவது ஒரு பாடல் மண்டைக்குள் ஓடியபடி இருக்கும் கனவுகளும் பாடல்களாகவே வரும்.ஒரு கட்டத்திற்கு மேல் எங்களால் அக்கடையை தொடர்ந்து நடத்த இயலவில்லை.சில ஆயிரங்களை இழந்திருந்தாலும் எங்களிருவருக்கும் கிடைத்த மகிழ்வும் நிறைவும் வார்த்தைகளால் சொல்ல இயலாதது. வாழ்வு முழுக்க வரும் அய்ந்து பாடல்களை தாங்களென பிரபா கேட்டபோது எதைத் தவிர்க்க எனத்தான் குழம்பிப் போனேன் இப்போதைய மனநிலையில் தோன்றும் பாடல்களாக இவற்றைச் சொல்லலாம்.

1.புத்தம் புது காலை
அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல். இது அத்திரைப்படத்தில் இடம்பெரவில்லை. எஸ் ஜானகியின் ரம்மியக் குரலில் மிகவும் நெகிழ்வாக,ஆத்மாவை தொடும் பாடலாக இதை உணர்கிறேன். என் பெரும்பாலான காலைகளை நிரப்பிய பாடல் . ஒரு கட்டத்தில் காலை எழுந்தவுடன் இந்த பாடலைக் கேட்காவிடின் அந்த நாளே நிறைவு பெறாதோ எனத் தோன்றியதும் உண்டு.




2.தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நிழல்கள் படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல் இதுவும் அத்திரைப்படத்தில் இல்லையென நினைக்கிறேன் (நான் தொலைக்காட்சியில் பார்த்தேன் அதில் இல்லை) அதிர்வுகளை ஏற்படுத்தும் பாடலென்று சொல்லலாம் தனிமையும் ஏக்கமும் காத்திருப்பும் ததும்பி வழியும் ஒரு மாதிரி பித்துப் பிடிக்க வைக்கும் பாடலிது.அதிர்வது இசையா ஜானகியா என பல முறை குழம்பிப் போயிருக்கிறேன் தனிமை மனநிலையில் இப்பாடலைக் கேட்டால் கிடைக்கும் திருப்தி வேறுமாதிரியானது.




3.ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாள்
காற்றினிலே வரும் கீதம் திரைப்படத்தில் வரும் பாடலிது மென்மையான பாடலென இதைச் சொல்லலாம் அழகான வரிகள் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் எனும்போது நம்து இதயமும் உருகத் துவங்கும்.மகிழ்வும் காதலுமாய் கிறங்க வைக்கும் பாடல்.




4.கனா காணும் கண்கள் மெல்ல
அக்னிசாட்சி திரைப்படத்தில் வரும் பாடல் பரிவும் தவிப்புமான பாடல் உங்களுக்கு சுமாராய் பாட வருமெனில் அருகில் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு பாடுவது கைமேல் பலன்களைத் தரலாம்.இதைக் கேட்கும் பெண்கள் உடனடியாய் மயங்குவர்.குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ தலைவன் மடியில் மகளின் வடிவில் உறங்கும் சேயோ எனும்போது இன்ம்புரியாத பரிவு மெல்ல வந்து படரும் .




5.நதியிலாடும் பூவனம்
காதல் ஓவியம் திரைப்படத்தில் வரும் பாடல் எனக்கு மிகமிகமிக மிகப் பிடித்த டூயட். மந்திரங்களோடு துவங்கும்போதே மனம் உருகத் துவங்கும் எத்தனை முறை கேட்டாலும் எஸ்பிபி மற்றும் ஜானகி குரலில் வழியும் ஆத்ம திருப்தியை உணர முடியும்.




மூன்று நாட்களில் எழுதித் தருகிறேனென கிட்டத் தட்ட இரண்டு மாதங்கள் இழுத்தடித்த என் சுறுசுறுப்பை இங்கே வெட்கத்தோடு நினைத்துக் கொள்கிறேன் பொறுமையாய் காத்திருந்த தல பிரபாவிற்கு நன்றிகளும் அன்பும்
================
Ayyanarviswanath
அய்யனார் விஸ்வநாத்
http://ayyanaarv.blogspot.com

16 comments:

MyFriend said...

வாழ்த்துக்கள் அய்யனார் - கல்பனா தம்பதிக்கு. :-)

MyFriend said...

1- புத்தம் புது காலை
சூப்பர் சாங். எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்க தூண்டும் ஒரு பாடல்

2- தூரத்தில் நான் கண்ட உன் முகம்
மறந்து விட்ட பாடல். ஞாபகப் படுத்தியதுக்கு நன்றி. :-)

3- கனா காணும் கண்கள்
இந்த பாடல் நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். கானா அண்ணா, இந்த பாடல் எனக்கு மின்னஞ்சல் மூலமா அனுப்பி வைக்கவும். :-)

5- நதியிலாடும் பூவனம்
சூப்பர் சாங் அகேயின். :-)

துளசி கோபால் said...

அய்யனார் கல்பனா ஜோடிக்கு மனமார்ந்த இனிய திருமண வாழ்த்து(க்)கள்.

நதியிலாடும் பூவனம்....

ஹைய்யோ சூப்பர் பாட்டு. இதுக்காகவே காதல் ஓவியம் வாங்கிவந்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இனிமையான பாடல்கள்..
நல்லதேர்வு...

அப்படியே இங்கேயும் ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேன்.. நலம்பலபெற்று வாழ்கவளமுடன்.. அய்யனார்

சினேகிதி said...

வாழ்த்துக்கள் அய்யனார் & கல்பனா!!

Radha Sriram said...

அய்யனாருக்கும் கல்பனாவிற்கும் திருமண வாழ்த்துக்கள்..:)

பாட்டுக்களும் அருமை:)

M.Rishan Shareef said...

நண்பர் அய்யனார்,திருமதி.கல்பனா அய்யனார் ஆகிய இருவருக்கும் எனது இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

அனைத்து செல்வங்களும் பெற்று,சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

கிருத்திகா ஸ்ரீதர் said...

அய்யனார் கல்பனா தம்பதியர்க்கு வாழ்த்துக்கள். பிரபா உங்கள் அன்பும் ஊடார்ந்த அக்கறையும் பிரமிக்க வைக்கிறது.

Anonymous said...

வாழ்த்துக்கள் அய்யனார், கல்பனா இணையிற்கு.

pudugaithendral said...

"புத்தம் புது காலை" மிக அருமையான பாடல். ஜானகியின் குரலில் மயக்கும்.

கனா காணும் கண்கள் மெல்ல பாடலும், காட்சியும், வரிகளும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நதியிலாடும் பூவனம் கண் மூடி ரசிக்க மத்தது மறந்து போகும்.

ஒரு வானவில் போல மிக அருமையான பாடல் தெஇரிவுகள்.

இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அய்யனார்-கல்பனா தம்பதியர்க்கு மனமார்ந்த இல்லற வாழ்த்துக்கள்! இசை பட வாழ, இசைப் பதிவில் தொடங்குதா உங்க திருமணக் கச்சேரி? :-)) கானா அண்ணாச்சிக்கு ஒரு ஓ! :-))

//எங்களால் அக்கடையை தொடர்ந்து நடத்த இயலவில்லை.//

அதான் கடையின் நினைவுகளை இன்றும் நடத்துகிறீர்களே அய்யனாரே! நினவோ ஒரு சுகந்தம் அல்லவா!
என்னாலும் முன் போல் புதுஜெர்சி FM ஸ்டேஷனுக்குச் செல்ல முடிவதில்லை! ஆனா அங்கு தொகுத்து வழங்கிய ஒவ்வொரு பாட்டும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லுவேன்! :-)

புத்தும் புது காலை is a great morning refresher!
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ, இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ-ன்னு பூவை, பூ வை-ன்னு வரிகள் வரும்! இனிய பாட்டு!
ஜானகி-இளையராஜா கூட்டணியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று! லா-லல-லா லா-ன்னு முடியும்! இதை மட்டுமே பல நேரம் ஹம் பண்ணிக்கிட்டு இருப்பேன்!

இன்னொரு சேதி! இதை இளையராஜா கிட்ட இருந்து காப்பி அடிச்சி, கிசான் விளம்பரத்துக்குப் பயன்படுத்திக்கிட்டாய்ங்க! ஜாகே ஜாகே தின் ஹை! ஜாகே ஜாகே மன் ஹை! -ன்னு வரும் அந்த Ad :-))

//கனா காணும் கண்கள் மெல்ல
உங்களுக்கு சுமாராய் பாட வருமெனில் அருகில் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு பாடுவது கைமேல் பலன்களைத் தரலாம்.//

அட, இப்படி எல்லாம் கெளப்பி விட்டா எப்படி மாப்ளே? :-)
சரி இருங்க! இந்தப் பாட்டு நம்ம மோஸ்ட் பேவரிட்! ஒரு வாய் பாடிட்டு, அப்பறம் வந்து மீதி பாட்டுக்குப் பின்னூட்டுகிறேன்!

கோபிநாத் said...

அய்ஸ்க்கு இங்கையும் ஒரு வாழ்த்துக்கள் ;))

அனைத்து பாடல்களும் அருமை அய்ஸ்....நீங்கள் பாடல்களை எந்த அளவிற்க்கு ரசித்திருக்கிறிர்கள் என்பதை உங்கள் ஒவ்வொரு பாடலை கேட்கும் போது தெரிகிறது :))

கோபிநாத் said...

1. 1.புத்தம் புது காலை

காலையில் வந்தவுடன் இந்த பாடலை கேட்கும் போது...ஆகா..ஆகா சொல்ல வார்த்தைகள் இல்லை போங்க...அந்த புல்லாங்குழலின் ஒலி...அருமை...நல்ல ரசிகன்ய்யா நீ ;))

2.தூரத்தில் நான் கண்ட உன் முகம்

என்ன சொல்ல இந்த பாடலை பத்தி...இப்போது தான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது...என்ன ஒரு அருமையான பாடல்.

\\அதிர்வுகளை ஏற்படுத்தும் பாடலென்று சொல்லலாம் தனிமையும் ஏக்கமும் காத்திருப்பும் ததும்பி வழியும் ஒரு மாதிரி பித்துப் பிடிக்க வைக்கும் பாடலிது.\\

உண்மை தான்...அய்ஸ் இசையும் குரலும்...ஆகா...உங்களுக்கும் தல கானாவுக்கும் ஒரு சிறப்பு நன்றி ;))

3.ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாள்


நல்ல பாடல்...;))


4.கனா காணும் கண்கள் மெல்ல
\\தலைவன் மடியில் மகளின் வடிவில் உறங்கும் சேயோ எனும்போது இன்ம்புரியாத பரிவு மெல்ல வந்து படரும் . \\

மம்ம்ம்ம்.....அழகாக சொல்லியிருக்கிங்க...எனக்கு பிடித்த பாடலும் கூட ;))

5.நதியிலாடும் பூவனம்
காதல் ஓவியத்தில் அனைத்து பாடல்களும் மிக மிக அருமையாக இருக்கும். பாடலுக்காவே ஓடிய படம் ஆச்சே அது ;))


அனைத்து பாடல்களும் அழகு அய்ஸ்...ரசித்தேன் ;)
தலைவருக்கு என்னோட நன்றிகள் ;)

கானா பிரபா said...

அய்யனாருக்கு வாழ்த்தைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. கூடவே அவர் சிலாகித்திருக்கும் பாடல்களைப் பற்றியும் சொல்லலாம்லே ;)

கண்ணபிரான்

பார்ட் 2 கொடுக்கிறதுக்கு வருவீங்க என்று சொன்னீங்க, ஆளையே காணல

தமிழன்-கறுப்பி... said...

நதியில் ஆடும் பூவனம் நான் விரும்பி ரசிக்கிற பாடல்களில் ஒன்று... ராதா ஒரு தேவதை போல இருப்பார் அந்த பாடலில்...

தமிழன்-கறுப்பி... said...

புத்தம்புது காலை பாடலும் பிடித்துப்போன பாடல்... மற்றய பாடல்களோடு அவ்வளவாக பரிச்சயம் கிடையாது... இன்னொரு முறை கேட்டுவிட்டு சொல்கிறேன்...