தமிழ்த் திரையிசை வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு சகாப்தம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். இந்த மிகப் பெரிய மீடியாவில் தன் காலூன்றுவதற்காக எத்தனையோ சவால்களையும் போராட்டங்களையும் சந்தித்த அவர், தொடர்ந்தும் நின்று நிலைக்க வேண்டி சாதித்துக் காட்டியவை எம்.எஸ்.வி அவர்கள் திரையிசையில் போட்ட பல்லாயிரம் மெட்டுக்கள் தான்.
காதல், வீரம், சோகம், நகைச்சுவை, கோபம், விரகதாபம், சிந்தனை, பொறாமை, வஞ்சனை, வெட்கம் என்று மனிதரது எத்தனையோ குணாதிசயங்களை எத்தனையோ வகை வகையான மெட்டுக்களால் வகைப்படுத்திக் காட்டியவர் இவர்.
பாரம்பரிய இசையை உள்வாங்கித் தரும் இசைப் பாட்டு, மேற்கத்தேயப் பாணியை உள்வாங்கித் தரும் இசைப்பாட்டு, கீழத்தேயத்தின் தாக்கத்தில் ஒரு பாட்டு என்று எத்தனையோ புதுமைகளைச் செய்தவர் எம்.எஸ்.வி.
இந்தச் சாதனைத் திலகத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் பின்னால் பல சுவையான சங்கதிகள் தொக்கி நிற்கும். ஓவ்வொரு இயக்குனரின் சிந்தனையோடும் , ஒளிப்பதிவாளரின் காட்சிப் பகிர்வோடும் முரண்படாது கைகோர்த்துப் பயணிக்கும் எம்.எஸ்.வியின் இசைப் பயணம்.
ஒவ்வொரு பாடகரிடம் இருந்தும் எதைப் பெறவேண்டும் என்பதையும், அதே நேரத்தில் எந்தச் சந்தர்ப்பத்தில் புதுக்குரலை அறிமுகப் படுத்தவேண்டும் என்பதையும் நன்கே தெரிந்தவர் இவர்.
"உனக்கென்ன குறைச்சல் நீயொரு ராஜா" என்று விட்டுவிடமுடியாது. இந்த எம்.எஸ்.வி என்னும் சகாப்தம் தான் வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்பட வேண்டும். இந்த முனைப்பில் முதலில் சர்வேசன் தன் சிந்தனையை முதலில் தட்டிவிட்டார். தொடர்ந்து நெல்லை சிவாவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர்களோடு இணைந்து நானும் குரல் கொடுக்கின்றேன்.
இந்திய மத்திய அரசின் அங்கீகாரம் இதுவரை கிடைக்காத எம்.எஸ்.வி இற்கு பெட்டிஷன் மூலம் குரல் கொடுப்போம் வாரீர். உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்குங்கள். இதுவரை 312 வாக்குகள் கிடைத்திருக்கின்றது. இது பல்லாயிரம் ஓட்டுக்களாகக் குவியவேண்டும் என்பதே எம் அவா.
http://www.petitiononline.com/msv2008/petition.html
இந்த வார நீங்கள் கேட்டவை பாடல்கள் அனைத்துமே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் மலரும் பாடல்களாக, சர்வேசன் மற்றும் நெல்லை சிவாவின் பதிவுகளில் மேற்கோள் காட்டிய பாடல்கள் சர்வேசனின் வேண்டுகோளுக்கிணங்க மலர்கின்றன.
முதலில் வருவது "கிருஷ்ண கானம்" என்னும் இசைத் தொகுப்பில் இருந்து "ஆயர் பாடி மாளிகையில்" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடக் கேட்கலாம்.
|
தொடர்ந்து எனக்கு எப்போதும் பிடித்த All time favourite MSV பாட்டு "முத்தான முத்தல்லவோ" திரையில் இருந்து எம்.எஸ்.வியும் , எஸ்.பி,பாலுவும் பாடும் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்". இந்தப் பாடலில் ஸ்வர ஆலாபனை செய்வாரே எம்.எஸ்.வி அந்தப் பாகம் இவரின் சாகித்யத்துக்கு ஒர் சான்று.
|
அடுத்த பாடல் "பூக்காரி" திரையில் இருந்து எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸாக வந்த மு.க.முத்துவுக்காகக் குரல் கொடுக்கும் T.M.செளந்தரராஜன், எஸ்.ஜானகி "காதலின் பொன் வீதியில்" என்று பாடுகின்றார்கள்.
|
M.S.V யும் கே.பாலச்சந்தரும் இணைந்த Musical hit ஆன "நினைத்தாலே இனிக்கும்" திரையில் இருந்து அதே வரிகளை மட்டுமே நிறைத்துப் பாடல் பண்ணியிருக்கும் அற்புதக் கலவையில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் குரல் ஜாலம் காட்டியிருக்கின்றார்கள்.
|
அடுத்ததாக "சிம்லா ஸ்பெஷல்" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "உனக்கென்ன மேலே நின்றாய்" என்ற பாடல் வருகின்றது.
|
நிறைவாக ஒரு போனஸ் பாட்டு,பாடல் இடம் பெற்ற திரைப்படம் "கீழ் வானம் சிவக்கும்" , T.M செளந்தரராஜன் பாடும் "கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான், வாழ்க்கை உண்டானதே"
இந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே http://www.petitiononline.com/msv2008/petition.html">ONLINE PETITION னில் கீ நாட்டு வையுங்க.
வட்டா ;-)))
|
15 comments:
நல்லதொரு முயற்சி. :-)
நன்றி, ஆனா நீங்க ஓட்டு போட்டீங்களா? சொல்லலியே ;)
பிரபா, ஒவ்வொரு பாட்டும் முத்துக்கள்.
"காதலின் பொன் வீதியில்" புல்லரிக்க வைக்கும் பாடல்.
தன்யனானேன். நன்றி.
இதைப் பற்றி வவ்வாலின் பதிவு இங்கே: http://vovalpaarvai.blogspot.com/2007/06/blog-post_21.html
எல்லாரும் சேர்ந்த்து குரல் எழுப்பினா, கேக்க வேண்டியவங்களுக்கு கேக்காமலா போயிடும். 312, ஆயிரமாவது வெகு தொலைவில் இல்லை.
நன்றி! நன்றி! நன்றி!
சர்வேசரே
உங்களின் இந்த நல் முயற்சிக்கு என் சிறு பங்களிப்பு இது
அருமையானதொரு கலைஞரைக் கௌரவிக்கும் அருமையான முறை. ஒரு தலைமுறைக் கலைஞனை அடுத்த தலைமுறைக் கலைஞர்தான் கௌரவிக்க வேண்டும். எஸ்.எம்.சுப்பையாநாயுடுவுக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே கௌரவம் செய்த பெருமை மெல்லிசை மன்னருக்கு உண்டு. அவருடைய மறைவுக்குப் பின் நாயுடு அவர்களின் துணைவியாரைத் தன் வீட்டிலேயே வைத்துக் காப்பாற்றினார் மெல்லிசை மன்னர்.
ஆனால் அவருக்கு அடுத்த தலைமுறைக் கலைஞர்கள் மெல்லிசை மன்னருக்குக் கௌரவம் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் மிகமிக வருத்தத்திற்குரிய விடயம். நிச்சயமாக இசைஞானியோ இசைப்புயலோ இதை முன்னெடுத்துச் செய்யலாம். தாங்கள் மதிப்பதாகச் சொல்லப்படும் ஒரு கலைஞனுக்கு இதைச் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையா. எஸ்.பி.பாலசுப்ரமணியம் கோதண்டபாணி ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்தார். கண்டசாலாவுக்குச் சிலை வைத்தார். மெல்லிசை மன்னருக்கு ஒரு மேடையில் மட்டும் ஏதாவது செய்யுங்க மக்களே என்று கோரிக்கை வைத்தார். கலைஞர்களே உங்கள் கலைத்திறமையை மதிக்கிறேன். ஆனால் அதற்கு மேலும் நீங்கள் செய்ய வேண்டியதுண்டு. உங்கள் கடமையை நினைவுபடுத்திப் பாருங்கள்.
கவியரசருக்கும் ஒருத்தரும் ஒன்றும் செய்யவில்லை. மெல்லிசை மன்னர் முன்னெடுத்துத்தான் சிலை வைத்தார். வாழும் போதே உங்களுக்கு முந்தைய தலைமுறையைக் கௌரவிக்க என்னய்யா தயக்கம் உங்களுக்கு!!!!
அற்புதமான ஒரு கலைஞனுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ;)
\\அவர்களோடு இணைந்து நானும் குரல் கொடுக்கின்றேன்.\
தல நானும் தான்...எப்போவே ஒட்டு போட்டாச்சி ....
\\M.S.V யும் கே.பாலச்சந்தரும் இணைந்த Musical hit ஆன "நினைத்தாலே இனிக்கும்" \\
படமும் சரி...பாடல்களும் சரி மிக மிக அருமையாக இருக்கும்....எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் ;)
நன்றி பிரபா.
அருமையான பாடல்கள். 'கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான்' - Autograph படத்தில் கடைசி காட்சியில் வரும். அந்தப் பாடலை அதன் பின் மிகவும் சிரமப்பட்டு ஒரு இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்தேன். அருமையான பாடல். I have signed the petition.
M.S.V யின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று 'பயணம் பயணம் பத்து மாதச் சித்திரம் ஒன்று பயணம் அது எத்தனை நாளோ எங்கெங்கோயோ பயணம்'- அதை எப்போது கேட்டாலும் வாழ்க்கைப் பயணத்தை விட எமது இடம்பெயர்வுகளும் அதனால் சீர் அளிந்த எமது வாழ்க்கையும் தான் நினைவு வரும்.
வாங்க ராகவன்
கலைஞர்கள் அவர் தம் வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்படல் வேண்டும். அதற்கான சிறு முயற்சியே இது. இந்தப் பாடல் தொகுப்பில் சர்வேசன் மற்றும் சிவாவின் பதிவில் குறிப்பிட்ட பெரும்பாலான பாடல்களை இட்டிருக்கின்றேன். இதை விட எம்.எஸ்.வி தொகுப்பில் எதை எடுப்பது என்பதில் திணறிவிடுவோம்.
//கோபிநாத் said...
அற்புதமான ஒரு கலைஞனுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ;)//
வாங்க தல
ஓட்டுப் போட்டு உங்க கடமையைச் செய்ததுக்கு நன்றி
323 வாக்குகள் இதுவரை.
சூடு பறக்குது.
அடி தூள் !!!!!!!
//Sabes said...
I have signed the petition.
M.S.V யின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று 'பயணம் பயணம் பத்து மாதச் சித்திரம் ஒன்று பயணம் அது எத்தனை நாளோ எங்கெங்கோயோ பயணம்'- அதை எப்போது கேட்டாலும் வாழ்க்கைப் பயணத்தை விட எமது இடம்பெயர்வுகளும் அதனால் சீர் அளிந்த எமது வாழ்க்கையும் தான் நினைவு வரும்.//
வணக்கம் சபேஷ்
தங்கள் பங்களிப்பைக் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி. பயணம் பாட்டு உண்மையிலேயே ஊருக்கு கொண்டு சென்று விடும். எம்.எஸ்.வியின் தனிப்பாடல்கள் பலவற்றை ஒரு தொகுப்பாகப் பின்னர் தருகின்றேன்.
நல்ல தொகுப்பை தருகின்றீர்கள். எனக்கும் ஒரு பழைய பாடல் கேட்க விரும்புகின்றேன். TMS இன் குரலில் முதலாளி திரைப்படத்தில் வந்த பாடல். என் தந்தைக்கும் பிடித்த பாடல் " ஏரிக்கரையின் மேல போறவளே பெண் மயிலே" என்று ஆரம்பிக்கும் பாடல்.
முற்கூட்டிய நன்றிகள். உங்கள் முயற்சிகள் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கா.பி,
இம்முறை நான் விரும்பிக் கேட்கும் பாடல் ஒரு ஈழப் பாடல். அது உங்களிடம் இருக்குதோ என எனக்குத் தெரியாது. இருந்தால் தயவு செய்து அப் பாடலை வலையேற்ற முடியுமா?
இப் பாடலை பல வருடங்களுக்கு முன் நண்பன் ஒருவன் வீட்டில் கேட்டது. இன்றும் சில வரிகள் நினைவில் நிற்கிறது.
இப் பாடல் ஒரு கர்நாடக சங்கீதப் பாடல். யார் பாடினார்கள், யார் வெளியிட்டார்கள் என்ற விபரம் எல்லாம் தெரியாது.
பாடலின் தொடக்கம் இப்படி இருக்குமென நினைக்கிறேன்[சரியாகத் தெரியாது]
ஏழு கோடி உலகத் தமிழா...
இப் பாடலில் வரும் சில வரிகள் கீழே:
[நினைவில் இருந்து எழுதுகிறேன், வரிகளில் சொற்பிழை, பொருட்பிழை இருக்கலாம்]
வீராதி வீர இராவணன் புதல்வா!
வீணாக நீயும் அழுவது நலமா?
மதவெறி யானை வருவதைப் பாரடா
தினம் ஒரு போர்ப்பறை நீ பறைவாயடா
எது வரை நம்மை இவன் அழிப்பானடா
இனி ஒரு புதுயுகம் நீ படைப்பாயடா..
மிக்க நன்றி.
காரூரன்
தங்கள் வருகைக்கு நன்றி, பாட்டும் சீக்கிரமே வரும்
வெற்றியண்ணை
புதிர் போட்டுப் பாட்டுக் கேட்கிறியள், தேடிப்பார்க்கிறன்
Post a Comment