மோகன ராகம் பாடும்
இளங்குயில் நானெல்லோ......
குயிலு பாடும்
பாட்டுக்குப் பல்லவி நானெல்லோ.....
https://www.youtube.com/watch?v=9fLEPI5bmT4
அக்மார்க் ஆந்திர மசாலா வீசும் பாட்டு, அந்த மெட்டின் மேல் உட்காரும் வரிகளே கொஞ்சம் அசூசையாக நகரும்.
இந்த மாதிரி மொழி மாற்றுப் பாடல்கள் தமிழில் ஏராளம் குவிந்து கிடந்தாலும் இன்றைய நாள் பிறந்த நாள் நாயகர் “ஆஸ்கார்” அள்ளிய விருதாளர் M.M.கீரவாணி என்ற மரகதமணி என்ற M.M.கரீம் என்ற இசையமைப்பாளர்களின் மொழி மாற்றுப் பாடல்களைத் தூக்கி வந்து படைக்கிறேன்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த படங்களில் விசேஷமாகக் கவனிக்கப்பட்டதொன்று "அஸ்வினி".
தடகள விளையாட்டு வீராங்கனை அஸ்வினி நாச்சப்பா நாயகியாக நடித்த அந்தப் படம் வெற்றி பெற்றது ஒரு புதிய சாதனை. ஏனெனில் விளையாட்டுத் துறையும் கலைத்துறையும் இரு வேறு கோணங்களில் இயங்குபவை. என்னதான் விளையாட்டை மையப்படுத்திய கதையாக இருந்தாலும் இந்தப் படத்தின் வெற்றி தொடர்ச்சியாக அஸ்வினியை அதிரடி நாயகியாக்கி அழகு பார்த்தது.
தெலுங்குத் திரையுலகில் தமிழகத்தில் இருந்து படையெடுத்த மெளலி அவர்கள் இயக்கிய படமிது.
அஸ்வினியில் தோன்றிய “மோகன ராகம்”
எம்.எம்.கீரவாணி என்ற மரகதமணி வழக்கம் போலத் தன் ஜோடிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ராவுடன் கொடுத்த இந்தப் பாட்டு வந்த காலம் தொட்டு என் உயிரோடு ஒன்று கலந்தது.
அஸ்வினி படத்தின் தமிழ்ப் பதிப்புப் பாடல்களைக் கேட்க
https://www.youtube.com/watch?v=loaGMD8FqY0
கன்னட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மன்னன் படத்தின் நதிமூலம் கன்னட சூப்பர் ராஜ்குமாரின் "அனுராக அரலிது" அந்தப் படம் அப்படியே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் "கரண மொகுடு" (புத்திசாலிக் கணவன்) ஆனது. தெலுங்குத் திரையுலக வெற்றிகளை முப்பது வருடத்துக்கு முன் வெறியோடு அடித்துப் புரட்டிப் போட்ட வெற்றியைக் கொடுத்தது அது. படத்தைப் பார்த்தால் தெலுங்குக்கே பண்ணியது போன்ற செம விறுவிறுப்பு.
தெலுங்கில் கீரவாணி தான் இசை, அந்தப் படத்தில் வரும் "பங்காரு கோடி பெட்டா" பாட்டு இன்று வரை பால்குடி வரை எழுந்து ஆட்டம் போட வைக்கும் கும்மாங்குத்துப் பாட்டு.
ஆனால் "தப்புப் பண்ணீட்டீங்கண்ணே தப்புப் பண்ணிட்டீங்கண்ணே" என்று கதற வைத்தார் இந்தக் கீரவாணி, இதே பாடலைத் தமிழுக்குக் கொண்டு வந்த போது.
கல் நாயக் படத்தை ரகுமான், சுகன்யா (விளங்குமா) ஜோடியோடு தமிழில் "ஹீரோ" என்று எடுக்கும் போதே அது வில்லன் ஆகிப் பழி வாங்கி விட்டது வசூலில்.
இந்தப் படத்தில் "பங்காரு கோடி பெட்டா"
https://www.youtube.com/watch?v=hxvUiz6s4Gk
பாட்டை
"கண்ணாடி பார்க்க வந்தேன் உன் கண்ணிரண்டில்"
https://www.youtube.com/watch?v=3beWhfHOQ0E
என்று தெலுங்கில் பாடிய அதே எஸ்.பி.பி & சித்ரா ஜோடி கட்டிக் கலக்கியிருப்பார்கள்.
தெலுங்கில் வெற்றிப்படமாக அமைந்த டாக்டர் ராஜசேகரின் நடிப்பில் வந்த திரைப்படமான "அல்லாரி பிரியுடு" , தமிழில் "யாருக்கு மாப்பிள்ளை யாரோ" என்று மொழிமாற்றப்பட்டபோது அருமையான பாடல்களை இவர் தமிழில் மொழிமாற்றித் தந்திருந்தார்.
இலங்கையில் பண்பலை வானொலிகளின் ஆரம்ப காலத்தில் அவற்றுக்குத் தீனி கொடுத்த பாடல்கள் இந்தப் படத்தில் இருந்து தான். பின்னாளில் என் வானொலி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி நான் ஒலிபரப்பினேன். அந்த வகையில்
"அன்னமா உன் பேர் என்பது அன்னமா"
https://www.youtube.com/watch?v=YNCkXQtmaNw
அட்டகாஷ் காதல் பாட்டு எஸ்.பி.பி அதைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகத் தனித்தனி வடிவத்தில் கொடுத்திருப்பார்.
"ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே"
https://www.youtube.com/watch?v=ToFO_966wqw
தமிழிலும் தெலுங்கிலும் காதலர்கள் நெஞ்சில் ஹிட் அடிச்ச எஸ்.பி.பி & சித்ரா ஜோடிப் பாட்டு.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "அன்னமா! உன் பேர் என்பது அன்னமா?" மரகதமணி/M.M. கீரவாணி இசையமைத்த பாடல்களிலேயே எனக்குப் பிடித்தமான பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இதுவே.
ஶ்ரீதேவியை மீள அடையாளப்படுத்த, அர்விந்த்சாமியுடன் அவர் நடிக்க மலையாளத்தின் மகோன்னத இயக்குநர் பரதன் இயக்கிய படம் “தேவ ராகம்”. அங்கேயும் இணை பிரியாக் கூட்டாக எஸ்பிபி & சித்ரா “ய ய யா யாதவா உன்னை அறிவேன்” பாடினார்கள்.
ஒரு மாறுதலுக்காக சுஜாதாவோடு எஸ்பிபி பாடிய “சின்னச் சின்ன மேகம்” பாடலும் அங்கே சேர்ந்து கொண்டது.
இங்கே ஶ்ரீதேவியைப் பற்றிய பேச்சு வரும் போது, அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாட்டு என்ற புகழைத் தெலுங்கு தேசத்தவர் கொண்டாடிக் கொண்டிருக்கும் பாட்டு “கோ அந்தே கோடி” https://www.youtube.com/watch?v=ZnfkBgf5Ye0
ஷண ஷணம் என்ற படத்தில் எம்.எம்.கீரவாணி இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு இந்தப் பாடலை ஶ்ரீதேவி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீரவாணியை ஒரு மிகப் பெரிய இசையமைப்பாளராக உயர்த்தியது இந்தப் படத்தை இயக்கியவர் ஶ்ரீதேவி வெறியர் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தில் ஒரு பாட்டு மனோவுக்குச் சேர மீதி எஸ்பிபிக்காக.
ஸாமு ராத்திரி
https://www.youtube.com/watch?v=4n9MM7ooKSs
பாடல் தெலுங்கு தேசத்தவரின் மறக்க முடியாத மெல்லிசையாக இன்று வரை விளங்க, கீரவாணிக்கும் அப்போது பிலிம்பேர் சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுத்துக் கெளரவித்தது.
“என்னமோ நடக்குது” என்று தமிழில் மொழி மாற்றம் கண்டு இவ்வகை அரிய பாடல்களை ரசிக்கும் இசை ரசிகர்களுக்குத் தீனி போட்டது.
என்னமோ நடக்குது பாடல்களைக் கேட்க
https://www.youtube.com/watch?v=dRT4kOfPnjk
இப்படியாகத் தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களோடு கீரவாணி போட்ட கூட்டில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் காந்தமாக ஒட்டிக் கொண்டு தொடர்ந்தார்.
தெலுங்கு நடிகர் ஶ்ரீகாந்தின் “பெல்லி சந்தடி” என்ற வெற்றிப் படம் கூடவே கீரவாணிக்கு பிலிம்பேர் விருதையும் சிறந்த இசையமைப்பாளர் என்ற பிரிவில் கொடுத்து அழகு பார்க்க, இந்தப் படம் தமிழில் நினைத்தேன் வந்தாய் ஆக விஜய் நடிப்பில் உருவான போது “பொட்டு வைத்துப் பூமுடிக்கும் நிலா” பாடலின் மூலப் பாட்டு கிலா கிலா கிலா https://www.youtube.com/watch?v=sI6_5ie7jwU மற்றும் “ஹிருதயமனே” https://www.youtube.com/watch?v=n3XrtX7ZETc உனை நினைத்து நான் எனை மறப்பது பாடலும் அப்படியே தமிழாகிய போது எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சித்ராவும் கூட அப்படியே வந்தனர்.
பெல்லி சந்தடி படத்தின் பெரு வெற்றிக்குத் துணை போன பாடல்களில் முக்கியமானவற்றை அப்படியே அல்லது சிறிய மாற்றம் செய்து தமிழில் தேவாவை வைத்துக் கொடுத்தற்குப் பதில் மூல இசையமைப்பாளர் கீரவாணியையே இங்கும் இசைக்கப் பணித்திருந்தால் விஜய் இன் திரைப் பயணத்தில் வெற்றிக் கூட்டணிகளில் ஒருவர் என்று அடையாளப்பட்டிருப்பார்.
பெல்லி சந்தடி பாடல்கள்
https://www.youtube.com/watch?v=yTDiiTPYoTI
ஶ்ரீகாந்த் வரிசையில் ஜெகபதிபாபுவுக்கும் அடையாளம் சேர்த்த “அல்லாரி பிரேமிகுடு” (தமிழில் போக்கிரிக் காதலன்) படத்திலும் கீரவாணி & எஸ்பிபி இசை மழை தான். இதில் இடம் ஆறு பாட்டும் எஸ்பிபி & சித்ரா ஜோடிக் குரல்கள்.
கே.வி.மகாதேவன், இளையராஜா போன்ற மகோன்னதம் கொண்ட இசையமைப்பாளர்களோடு இணைந்த கே.விஸ்வநாத் அவர்களது பயணத்தில் கீரவாணியும் சேர்ந்து கொள்கிறார். மீண்டும் கமல்ஹாசனோடு சேரும் விஸ்வநாத் கூட்டணியில் ஏழு பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களே பாடுகிறார். கூடவே இந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும் அவரே விளங்கினார் என்பது மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது. தன் சகோதரி எஸ்.பி.சைலஜா, மகள் பல்லவி ஆகியோரோடும் கூடச் சேர்ந்து பாடிய இசை வேள்வியாக “சுப சங்கல்பம்” அமைகின்றது.
“நருடி ப்ரதுக்கு நடனா” https://www.youtube.com/watch?v=cRSxytPyi-w பாடல்
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா என்ற சாகர சங்கமம் (சலங்கை ஒலி) பாடலின் அடியொற்றி அமைய,
“சீதம்மா அந்தாலு” பாடல் ஆகப் பெரிய ரசிக அங்கீகாரத்தைக் கொடுக்கின்றது.
தமிழில் இதை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கமல்ஹாசனே “பாசவலை” என்ற பெயரிலும் வெளியிடுகின்றார். சிறந்த பாடகிக்கான நந்தி விருதை சைலஜாவுக்குக் கொடுத்ததோடு, பிலிம்பேரின் சிறந்த இயக்குநர் கே.விஸ்வநாத், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இவர்களோடு எம்.எம்.கீரவாணி சிறந்த இசையமைப்பாளர் விருதையும் அள்ளுகின்றார்.
சுப சங்கல்பம் பாடல்கள்
https://www.youtube.com/watch?v=rSBL-n_1jW0
இன்னும் சில மொழி தாவியவை
அர்விந்த்சாமி & நக்மா நடிப்பில் “மெளன யுத்தம்”
https://www.youtube.com/watch?v=ZlJvxI102-k
நாகார்ஜூவையும் விட்டு வைக்கவில்லை எம்.எம்.கீரவாணி அலை.
கிரிமினல் என்ற பெயரில் தெலுங்கு, ஹிந்தியில் சம காலத்தில் பிரபல பாலிவூட் இயக்குநர் மகேஷ் பட் இயக்கிய திரைப்படத்தில் எஸ்பிபி & சித்ரா பாடும் “தெலுசா மனசா” https://www.youtube.com/watch?v=_8gBbOdQ2Jw பாடல் இன்றைய இசை மேடைகள் வரை பின்னணி இசை நாதமாய் விளங்குகின்றது.
இந்தப் படம் பின்னர் தமிழுக்கும் “எல்லாமே என் காதலி” ஆகியது.
“உயிரே உயிரே” பாடலெல்லாம் மறக்க முடியுமா?
இதோ அனைத்துப் பாடல்களையும் கேட்க
https://www.youtube.com/watch?v=J-O-OoPKYQo
தமிழில் இசைஞானி இளையராஜாவுக்குப் பின் தொண்ணூறுகளில் எழுந்த அடுத்த கட்ட இசையமைப்பாளர்கள் போன்றே தெலுங்குச் சூழலிலும் புதிய புதிய இசையமைப்பாளர்கள் உருவெடுத்தனர். இவர்களில் தமிழில் மரகதமணி ஆகவும், தெலுங்கில் எம்.எம்.கீரவாணியாகவும் சம காலத்தில் இசை ரசிகர்களை ஆட்கொண்ட இவரது இசைப் பயணத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் எவ்வளவு தூரம் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்து காணப்படுகின்றார் என்பதும், கீரவாணி எஸ்பிபிக்கான பொன் விழா ஆண்டுப் புகழ்ப் பாடலை எழுதிப் பாடிய பான்மையில் தெரிந்து கொள்ளலாம்.
கானா பிரபா
#MMKeeravani #Maragathamani
0 comments:
Post a Comment