“தாய் அழுதாளே
நீ வர
நீ அழுதாயே
தாய் வர”
தாய்மையின் இதய ஓலமாய் ஒரு பாட்டு
உணர்வோட்டம் மிக்கதொரு காட்சி,
உச்சபட்ட நடிகர்கள் எல்லாவற்றையும் மேவி ஈரடியில் அதை அப்படியே உயிரோட்டம் பொதிந்த வரிகளில் கொடுத்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார், அவர் தான் வாலி.
கவியரசு கண்ணதாசனிடம் படத்தின் கதையைச் சொல்லி விட்டால் போதும் அதை அப்படியே கிடைக்கும் ஒரு பாடலின் ஈரடிக்குள் அடக்கும் அற்புதன் என்று பலர் சம்பவ உதாரணங்களோடு சொல்லியிருக்கிறார்கள்.
வாலியாரின் பாட்டுக் கிடங்கினுள் இவ்விதம் ஏராளம் வைடூரியங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
தமிழ் சினிமாவில் “பாசாங்கு இல்லாத” என்ன தேவையோ அதை அப்படியே கொடுத்து விட்டுப் போகும் பாடலாசிரியர்களில் கவிஞர் வாலி முதன்மையானவர் என்பேன். அவர் தன் பாடல்களில் தன்னைப் பற்றிச் சிந்திப்பதை விட, அந்தப் பாடலை வாங்கப் போகும் நுகர்வோன் பக்கம் தான் அதிகம் சிந்திப்பார்.
“இட ஒதுக்கீடு உனக்காக
இடை செய்வது”
“உன்னில் உருவான ஆசைகள்
என் அன்பே
அந்த வெங்காய விலைப் போல இறங்காதது” (தத்தியாடுதோ)
என்று அந்தந்தக் காலகட்டத்துப் பேசுபொருளைக் காதல் பாடலில் கூடக் கொண்டு வந்து விடுவார்.
“அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலை ஏறிப் போகுது மார்க்கெட்டுல
விலை ஏறி போகுது மார்க்கெட்ல
என்னாட்டம் ஏழைங்க அத வாங்கித்
திங்கதான் துட்டில்ல
சாமி என் பாக்கெட்ல”
“கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடல மாடசாமி”க்குக் கூட அந்தச் சிறுவர்கள் வழியாக வேண்டுகோள் வைப்பார்.
தன் காலம் முடிவதற்கு முன்னர் கூட
“மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே”
என்று ஒரு குறும்(பு)ப் பா படைத்தவர்.
“ஓரிடத்தில் உருவாகி
வேறிடத்தில் விலை போகும்
கார்களைப் போல் பெண் இனமும்” (ராஜா கைய வச்சா)
என்று காருக்குப் பாட்டெழுதியவர்,
Net Cafe காலம் வந்த போது
“இதயம் திறந்து பறந்தோடி வா
இருக்கு Net Cafe விரைந்தோடி வா”
என்றும் கொடுத்தார் காலச் சக்கரத்தின் புள்ளியாய்..
வாலிடா 😀 இப்போ இருந்தாலும் தக்காளிக்கு ஒரு பஞ்ச் போட்டிருப்பார்.
இவ்விதம் அந்தந்த நிகழ்வுகளின் காலக் கணக்கைத் தன் கவியில் நிரப்பியவர்.
“நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே”
இன்று அதிகாலைப் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு காரில் உட்கார்ந்த போது எழுமாற்றாக வந்து குதித்தது இந்தப் பாட்டு. சிலரை நினைக்கும் போதோ அல்லது அவர்களை நினைப்பூட்டவோ பாடல்களும் தூண்டுகோலாகின்றன. இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள் அவர் எழுதிய பாடல் முக விசேடம்.
கவிஞர் வாலியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,
தான் ஒரு படைப்பாளி நான் என்னுடைய நிலையில் இறங்கி வரமாட்டேன் என்று வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு இலக்கிய கர்த்தாவாக மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே இல்லை. ஒரு படத்தின் காட்சிச் சூழலுக்கான பாடல் எவ்வளவு பாமரத்தனமாக இருக்குமோ அவ்வளவுக்குக் கீழிறங்கி அடித்து ஆடுவார், அதே சமயம் கருத்தாழம் என்றால் கண்ணும் கருத்துமாக வரிகளைப் பூட்டுவார்.
அதனால் தான், சாஸ்திர சம்பிரதாயங்களால் மூடிக் கட்டபட்டவளுக்கு வாழ்வு கொடுக்கும் சூழலில் எழும் “நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தை இல்லையே”
பாடலும் பிடிக்கும்,
அதே சமயம் பிரபல பாட்டுக்காரி ரோட்டோர ரோமியோக்களுடன் பாடும்
“சின்ன ராசாவே.....
சித்தெறும்பு என்னைக் கடிக்குது”
பாட்டும் பிடிக்கும் இரண்டுமே வாலி தான் இந்த இரண்டிலுமே மெட்டுக்குக் கட்டினாலும் தாளம் தப்பாத வரிகளைப் பொருத்தமாக இட்டுக் கட்டியிருப்பார்.
“அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே வந்ததே
நண்பனே.....”
என்று 68 இல் “உயர்ந்த மனிதன்” படத்தில் மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கொடுத்தவர் தான்,
“நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா.....”
என்று 38 வருடங்கள் கழித்து “சில்லுனு ஒரு காதல்” இற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கொடுக்க முடிந்தது. மற்றைய இசையமைப்பாளர்களையும் மனுஷர் விட்டு வைத்தாரா என்ன “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு ஏங்குது பாய் போட”, “எப்படி எப்படி சமைஞ்சது எப்படி” என்று விரகதாபப் பாடல்களையே துள்ளிசையிலும் தன் வரிகளால் இனம் பிரித்தார்.
“டாலாக்கு டோல் டப்பி மா” என்று புதுப் புதுச் சொற்களை ஜில்பான்சி மொழியில் 😀 போடுவது வாலியின் பண்பு.
ஒரு மனிதன் காலா காலாத்துக்கும் தன் மனசை இளமையாக வைத்துக் கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும்.
எப்படி ஒரு அழுத்தமான சூழலில் ரஜினியின் படமொன்றைத் தேடி எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறதோ அது போலவே எண்ணற்ற ஜாலியான வாலியின் பாடல்களும். “ஜானகி அம்மா பாடுறதைப் பார்” என்று எப்படி அவரை ஒரு முன்னுதாரணமாகச் சித்ராவுக்கு இளையராஜாவால் அடையாளப்படுத்த முடிந்ததோ அது போலவே ஆர்.வி.உதயகுமார் எழுதிய பாடல்களைப் பட்டி டிங்கரிங் செய்ய வாலியே தேவைப்பட்டார். இயக்குநர் கதிர் - இளையராஜா கூட்டணியில் இருந்து இயக்குநர் கதிர் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வந்த போதும் வாலியே தொடர்ந்தார். அதனால் தான் நமக்கும்
“யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ்ப் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக்காற்று....”
என்று இதயத்திலும்
“ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீ தான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..”
என்று காதல் தேசத்திலுமாகக் கிட்டியது.
“அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளை இது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது
காயத்ரி மந்திரத்தை
உச்சரிககும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா”
தாம்பத்திய பந்தத்தை அழகு மொழியில் வடித்தெடுத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை” ஆக்கித் தொடர்ந்த கவிஞர் வாலி - இசைஞானி இளையராஜா எனும் பந்தம், முரண்பட்ட மனங்களின் மணமேடையை
“தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?”
என்று மெளன ராகத்தில் கேள்வி எழுப்புகிறது. அதுவே இன்னும் கடந்த நிலையில்
“நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…”
எனத் தத்துவ விசாரம் கற்பிக்கிறது.
“மொத்தத்தில் வந்து கூடும்
பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே”
என்று சரணத்தில் தத்துவத்தைக் கலந்தெழுதும் வாலி இதெல்லாம் நான் சொல்லவில்லை முன்பே எழுதி வைத்தது தான் என்பது போல “எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப் பார்த்து” என்கிறார் முகப்புப் பல்லவியில்.
அபூர்வ சகோதரர்கள், தளபதி, மீரா, கிளிப்பேச்சு கேட்கவா, வருஷம் 16, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மகுடம், அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தாலாட்டுக் கேட்குதம்மா, ராசா மகன், மாமியார் வீடு என்று இளையராஜா இசையில்
முழுப் பாடல்களையும் ஒரே படத்தில் எழுத வைத்த சிறப்பை வைத்தே தனி ஆவர்த்தனம் வைக்கலாம்.
எண்பதுகளிலே பிற இசையமைப்பாளர்கள் எனும் போது வைரமுத்து தான் இதற்கும் பாட்டெழுதியிருப்பாரோ என்று எழுமாற்றாக மனதில் பதிந்த பாடல்கள் பலவற்றில் வாலியின் கைவண்ணமே இருக்கின்றது. குறிப்பாக “அண்ணா நகர் முதல் தெரு” படத்தில் வரும் “மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு” இசையமைப்பாளர் சந்திரபோஸின் இசைப் பயணத்தில் தலையாய நட்சத்திரப் பாடல் இதுவென்றால் மிகையில்லை.
“உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே”
இதை வெறும் வார்த்தைப் பிரயோகமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றும் ஆனால் இசை கூட்டி ரசித்தால் அசாதாரணம் காட்டும்.
இதைத்தான் இசைஞானி இளையராஜாவும்
“நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்” (சுந்தரி கண்ணால் ஒரு சேதி) வரிகளை உதாரணம் காட்டி இந்தச் சாதாராண வரிகள் எப்படி அசாதாரண வடிவம் பெறும் என்பது கவிஞர் வாலிக்குத் தெரியும் என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
அதே சமயம்
“நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா” (முன்பே வா என் அன்பே வா) என்று விண்ணை முட்டும் கற்பனைக்கும்
சென்று விடுவார் வாலியவர்கள்.
“மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ”
இந்தப் பாடலைக் கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவுக்காக வாலி எழுதிச் சமைத்ததை அறிந்து எம்.ஜி.ஆர் கூப்பிட்டு “ஓ அப்படியா” என்று தன் பாணியில் (!) விசாரித்ததாகச் சொல்வார்கள்.
“அந்தப் பக்கம் தினமும் அடிக்கும் காத்து
இந்தப் பக்கம் திரும்பும் ஒரு நாள் பாத்து”
என்று “போடு தாளம் போடு” புது வசந்தம் பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய் அந்தக் காலத்து இளையராஜாவின் ஏக போக இசை சாம்ராஜ்ஜியத்தையும் உரசிப் பார்க்கிறார்.
“சில நேரம் ஏதோதோ நடக்கும்” என்றொரு பாடல் வித்யசாகரின் ஆரம்ப காலத்துத் திரைப்படமான “பூமனம்”இற்கான வாலி எழுதியது. இதுவுமொரு தத்துவப் பாடல் தான். இன்னொரு சிறப்பென்னவென்றால் பாடியது பழம் பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஶ்ரீனிவாஸ்.
தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு நிலவியதை அவ்வளவு தூரம் மக்கள் மறந்து விடவில்லை.
வாலியின் பேனா எழுதுகிறது இப்படி
“மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே” எவ்வளவு காலச் சூழலுக்கேற்ற குறும்புத்தனமும் அதே சமயம் காட்சிச் சூழலுக்கு அதைப் பொருத்தும் வல்லமையும் இருக்கிறது பாருங்கள், அதான் வாலி. ஒரு செயற்கை ஒளியை “வெளிச்சப் பூ” என்ற கற்பனையில் வடித்த அவர் திறனை என்னவென்று சொல்ல.
இப்ப்டியாகப்பட்டவர் அதே படத்தில் “எதிர் நீச்சலடி” என்று துள்ளிசை ஆட்டம் போட்ட போது அவருக்கு வயசு 81. இந்த உலகை விட்டு அவர் பிரிந்த அதே ஆண்டு தான்.
இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் இன்னொன்று. வாலியின் ஆத்ம நண்பர் நாகேஷ் இற்குத் திருப்பு முனையாக அமைந்த எதிர் நீச்சல் படத்தின் அனைத்துப் பாடல்களும் வி.குமார் இசையில் வாலியின் கை வண்ணமே. அந்தக் காலகட்டத்தில் கே.பாலசந்தருக்கு எதிர் நீச்சலைத் தொடர்ந்து பூவா தலையா, இரு கோடுகள் என்று தொடர்ச்சியாக அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வாலியே.
“முத்து நகையே முழு நிலவே” பாடலையோ “கண்ணுல பால ஊத்த வந்த கண்ணம்மா” பாடலையோ கேட்கும் போது அடடா கங்கை அமரன் போலிருக்கிறதே என்றால் அங்கே கிராமியத் தெம்மாங்குக்கும் பாட்டுக் கட்டியது வாலியே. தேவாவின் இசையில் “சாமுண்டி” படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
“மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா”
சாமுண்டி வழியாக இன்றும் கிராமங்களில் துலங்குகிறார் வாலி.
கவிஞர் வாலியின் வரிகளை நுனிப் புல் மேய்ந்து இலக்கியத் தராதரம் பேசும் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளின் திரைத்துறையைப் பங்கு போட்ட வாலியாரின் அர்த்தம் நிறைந்த வரிகளைத் தேடுவதில்லை அல்லது கண்ணதாசன் கணக்கில் போட்டு விடுவார்கள்.
இன்னொரு பரிமாணமும் இருக்கிறது அது எளிமையான சொற்களின் கட்டு. இதைக்கூட விமர்சன நோக்கில் எடுத்து ஆய்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லும் திறன் கூடப் படைபிலக்கியத்தின் சிறப்பு அல்லது படைப்பவனின் வல்லமை என்றே கொள்ள வேண்டும்.
தாம் படைத்த இலக்கியங்களிலே தம் வாழ்வையும் காட்டியவர்கள் உண்டு. கவிஞர் வாலியின் பாடல்களில் அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் பங்கு போட்டு வைத்திருக்கிறது. நம் காலத்து இசையமைப்பாளர்களோடு வாழ்ந்த வரிகள் ஒரு பக்கமிருக்க, கொண்டாடி மகிழத் தான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்லிப் போகின்றன அவை. அப்படியே வாழ்ந்து விட்டும் போனார் நம் கவிஞர் வாலி.
"அவ்வளவு பெரிய மூளை என்னடா காணாமப் போச்சே"
கவிஞர் வாலி இறந்த போது ஏங்கினாராம் தங்கர் பச்சான். அந்த வலி இன்னும் நம்முள் புதைந்துள்ளது.
❤️ கவிஞர் வாலி நினைவு நாள்
கானா பிரபா
18.07.2023
Tuesday, July 18, 2023
காலந்தோறும் வாலி ❤️
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அற்புதம்...
Post a Comment