Pages

Friday, July 21, 2023

எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே❤️வெள்ளாப்பில் எழுந்து தோட்டத்துக்குப் போக வேண்டும். தோட்டத்துக் கிணத்தில் ஊறும் நீரை மொண்டு பாய்ச்சும் ஊசிலி மெஷினின் குழாய் வழியே பீறிட்டு வளையக் குழாயாய் வந்து வாய்க்கால் வழியாக வடிந்தோடும் நீரைப் பாத்தி கட்டி ஒவ்வொரு கன்றுக்கும் ஈரம் பாய்ச்ச வேண்டும். அப்படியே பொழுதெல்லாம் தோட்ட வேலை கழிய, மாலை நேரம் மேய்ச்சலுக்கு மாடு, கன்றை அவிழ்த்து வீதி வழியே நடத்திக் கொண்டு போய் இரை மீட்க வைத்து விட்டு நுரை தள்ளத் திரும்ப அழைத்து வந்து கட்டி விட்டுக் கோயிலுக்குக் கிளம்பல். 


கோயில் கிணற்றில் அள்ளித் தோய்ந்து விட்டு, கொண்டு போன வேட்டியை இறுகக் கட்டி விட்டு சாயரட்சை பூசை பார்த்து விட்டு அப்படியே தேர்முட்டியடியில் சாய்ந்தால் மேலே வானத்து நட்சத்திரங்கள் கண்ணடிக்கும். உரத்த குரலில் பாடத் தொடங்குவார். பக்க வாத்தியங்கள் ஏதுமின்றித் தன் தொடையே தாள வாத்தியமாக. இருட்டின் வெளிச்சத்திலே டியெம் செளந்தரராஜன் குரலைப் பிரதியெடுத்துப் பாடும் இம்மாதிரி அண்ணன்மார்களோடு 

அவர்களின் அன்றைய பகல் பொழுதுக் களைப்புகளெல்லாம் இரவில் தம் உரத்த குரலில் பாடும் பாடல்களால் கரைத்துக் கொண்டிருப்பார்கள். கையிலே பாட்டுப் புத்தகம் ஏதுமின்றி பொங்கும் பூம்புனலில் இருந்து இரவின் மடியில் வரை ஒலித்த பாடல்கள் எல்லாம் மனப்பாடம்.


அப்படியொரு அண்ணன் “நானொரு ராசியில்லா ராசா” என்று அழுதும், “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு” என்று தத்துவம் பேசியும் பாடிப் பழகியவர் பாசப் பிணைப்பில் பாடிய “எந்தன் பொன் வண்ணமே” திரையிசைப் பாடல்கள் இம்மாதிரி உழைப்பாளிகளுக்குத் தான் உபயோகப்படுகின்றன. அதுவும் கிராமங்களில் மாடாய் மனிசராய் உழைக்கும் சனங்களின் ஆதார ஒலிகள் இவை. அதனால் தான் இன்று திரையிசைப்பாடல்கள் மேற்கத்தேய வரவுகளால் மாசு கண்டாலும் கிராமங்களில் அந்தப் பழைய யுகத்தின் மாசு படாப் பாடல்களோடே இன்னும் வாழ்கிறார்கள். 

எப்பேர்ப்பட்ட கலைஞனாக இருந்தாலும் சரி அவனுக்கு முந்திய தலைமுறையில் வாழ்ந்த துரோணாச்சாரியார்களின் பாதிப்பு அவன் படைப்பில் ஏதோவொரு இடத்தில் ஒட்டிக் கொண்டு விடும். இசைஞானி இளையராஜா ஆத்மார்த்தமாக நேசிக்கும் C.S.சுப்பராமன் அளவுக்குப் போகவில்லை. இளையராஜாவோடே சமீப காலம் வரை பயணித்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் தாக்கம் இளையராஜாவின் ஆரம்ப காலங்களில் ஒட்டியிருக்கும். அப்படியொன்று தான் இந்த “எந்தன் பொன் வண்ணமே”. 

பாடல் முழுக்க எம்.எஸ்.வி தனம் இருக்கும். பிந்திய சரணத்தின் மிதப்பில் வரும் வயலின் ஆர்ப்பரிப்பில் தான் ராஜ முத்திரை இருக்கும். மற்றப்படி திருநீற்றுப் பட்டை நீற்றாகத் துலங்கும் எம்.எஸ்.வி நெத்தி போல ஒரு நேர்த்தியான பாட்டு இது. 


T.M.செளந்தரராஜனின் குரலின் கனிவும், நெகிழ்வும் இந்தப் பாட்டை அப்படியே உருக்கிப் போட்டு விடும். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எத்தனையோ மாற்றுக் குரல்கள் பொருத்தலாம். ஆனால் மாசற்ற் குரலாய் அச்சொட்டாய்ப் பொருந்திப் போனவர் TMS.


கவியரசர் கண்ணதாசன் இந்த மாதிரி எத்தனை வடிவங்களில் நம்பிக்கை ஊட்டும் வரிகளை எழுதியிருப்பார்.


காலம் வரும் அந்த தெய்வம் வரும்

அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும் காலம்தனை நான் மாற வைப்பேன்

கண்ணே உனை நான் வாழ வைப்பேன்


“நான் வாழ வைப்பேன்” தலைப்பை இரகசியமாகச் செருகியிருப்பார் கவியரசர். அதுதான் அவர் முத்திரை.


https://youtu.be/4LflC5bkNSw


கானா பிரபா

1 comments:

Pala said...

பொங்கும் பூம்புனல் அல்ல.
அதிகாலை 5:45க்கு தொடங்கும் புலரும் பொழுதிலிருந்து