"விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்" இப்படியான அழகான கவித்துவம் மிகுந்த வரிகளைக் கட்டிப்போட வைக்கும்இசை கலந்து கொடுத்து அந்தக் காலத்து ராஜாவின் ராஜ்ஜியத்தில்திரும்பிப்பார்க்கவைத்தவர் இந்த டி.ராஜேந்தர். தமிழ் சினிமாவில்இசையமைபாளரே பாடலாசிரியராகவும் அமர்ந்து எழுதி, அவரே எழுதி, சமயத்தில்அவரே கூடப்பாடி வருவது என்பது என்னமோ புதுமையான விஷயம் அல்லவே. இசைஞானி இளையராஜாவில் இருநது, ஆரம்ப காலத்துப் படங்களில்எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றோரும் அவ்வப்போது செய்து காட்டிய விஷயம். இந்தப்பாடலாசிரியர் - இசையமைப்பாளர் என்ற இரட்டைக்குதிரையை ஒரே நேரத்தில்கொண்டு சென்று இவையிரண்டையும் வெகுசிறப்பாகச் செய்து காட்டியவர்களில்டி.ராஜேந்தருக்கு நிகர் அவரே தான் என்பேன்.
இனிமேலும் இவரின் இடத்தை நிரப்ப இன்னொருவர் வரும் காலம் இல்லை என்றுநினைக்கிறேன் இப்போதெல்லாம் பாடல்களுக்கு வரிகளா முக்கியம், முக்கிமுனகத் தெரிந்தால் போதுமே.
டி.ராஜேந்தர் என்ற இசையமைப்பாளர் சக பாடலாசிரியரை எடுத்துக் கொண்டுபதிவு ஒன்று தரவேண்டும் என்ற எண்ணம் றேடியோஸ்பதியின் ஆரம்ப காலத்தில்இருந்தே இருந்தாலும் அவரின் ஒவ்வொரு பாடல்களிலும் உள்ள கவியாழத்தைத்தொட்டு எழுதுவது ஒரு ஆய்வாளனுக்குரிய வேலை. எனவே அந்த விஷயத்தைத்தலைமேற்கொள்ளாமல் தவிர்த்து வந்தேன். ஆனால் டி.ராஜேந்தர் தன்னுடையஇயக்கத்தில் வெளிவந்த படங்களில் மட்டுமன்றிப் பிற இயக்குநர்களின்இயக்கத்தில் வெளிவந்த படங்கள் சிலவற்றுக்கும் இசையமைத்து, கூடவேபாடல்களையும் எழுதி முத்திரை பதித்திருக்கின்றார். அப்படியான படங்களில் சிலமுத்துக்களை எடுத்துக் கொடுக்கலாமே என்ற எண்ணத்தில்முக்குளித்திருக்கின்றேன்.
தமிழ் சினிமாவில் தங்க இசைத்தட்டு விருது பெற்றது "கிளிஞ்சல்கள்" படத்தின்இசை. பசி என்ற கலைப்படம் தந்த துரை இயக்கத்தில் வந்த மோகன் பூர்ணிமாஜெயராம் இணையில் வந்த அருமையான காதற்படம். இந்தப் படத்தில்ஜெயச்சந்திரன் பாடிய "காதல் ஒரு வழிப்பாதை பயணம்" பாடலோடு எஸ்.பி.பிபாடிய அழகினில் நனைந்தது, பி.சுசீலா பாடிய "சின்னச் சின்னக் கண்ணா" போன்ற பாடல்களோடு டாக்டர் கல்யாண், ஜானகி ஜோடிப்பாடலாக அமைந்த"விழிகள் மேடையாம்" என்று எல்லாப்பாடல்களுமே தங்க இசைத்தட்டுக்கானஅங்கீகாரத்தை நிரூபித்தவை.
விழிகள் மேடையாம் பாடல் இந்த வேளையில்
https://www.youtube.com/watch?v=F75_LCOzjeA
எண்பதுகளிலே கச்சிதமான காதல் ஜோடிகள் என்றால் சுரேஷ் - நதியா ஜோடிதான் கண் முன் நிற்பார்கள். அந்தக் காலத்துக் காதலர்களுக்கு இவர்கள் தான்தேவதூதர்கள் போலவாம் 😉.
அப்படி இந்த இருவரும் ஜோடி கட்டிக் கோடி குவித்த ஒரு வெற்றிப்படம்"பூக்களைப் பறிக்காதே" வி.அழகப்பன் இயக்கத்தில் வந்த இந்தப் படத்தில் வரும்"பூக்களைத் தான் பறிக்காதீங்க காதலைத் தான் முறிக்காதீங்க" பாடல் அந்தக்காலத்துக் காதலர்களின் தேவாரம், திருவாசகம் எனலாம்.
எஸ்.பி.பி , ஜானகி குரல்களில் "மாலை எனை வாட்டுது மணநாளை மனம் தேடுது" இந்தப் பாடலைக் கேட்டுக் கிறங்காதவர் நிச்சயம் காதலுக்கு எதிரியாகத் தான்இருப்பார்கள். இடையிலே வரும் "விழி வாசல் தேடி" என்று வரும் அடிகளுக்கு ஒருசங்கதி போட்டிருப்பார் டி.ஆர் அதை நான் சொல்லக்கூடாது நீங்கள் தான் கேட்டுஅனுபவிக்கணும்.
https://www.youtube.com/watch?v=71whh__t5ks
"மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்" ஒரு பாட்டைத் தேடிஇணையம் வராத காலத்தில் கொழும்பில் உள்ள ரெக்கோடிங் பார் எல்லாம்அலையவைத்ததென்றால் அது இந்தப் பாட்டுக்குத் தான், கடைசியில்வெள்ளவத்தையில் ஸ்ரூடியோ சாயாவுக்குப் பக்கத்தில் இருந்த Finaz Music Corner தான் அருள்பாலித்தது. ஆகாசவாணி எனக்கு அறிமுகப்படுத்தியபாடல்களில் "பூக்கள் விடும் தூது" படப்பாடல்கள் மறக்கமுடியாது. இந்தப்படத்தின் பாடல்கள் எப்பவாவது இருந்துவிட்டு ஏதோ ஒரு தருணத்தில்ஆசையாகக் கேட்கவென்று வைத்திருக்கும் பட்டியலில் இருப்பவை. ஒன்றல்லஇரண்டு பாடல்களை இப்போது உங்களுக்காகத் தருகின்றேன்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான்கேட்கிறேன்"
https://www.youtube.com/watch?v=kgBoZ78ojM8
அதுவே சித்ராவோடு கூட்டணியில் இன்னொரு ரம்மியம்
https://www.youtube.com/watch?v=TKn9BVrtJ5Y
கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "கதிரவனைப் பார்த்து காலை விடும் தூது வண்டுகளைப்பார்த்து பூக்கள் விடும் தூது"
https://www.youtube.com/watch?v=TxLysTHzCvE
சிவாஜி, சத்யராஜ், பாண்டியராஜன் என்று அந்தக்காலத்தின் பெரும் நட்சத்திரங்கள்ஒன்று சேரும் படம். இந்தப் படத்தின் இயக்குநர் ஜகந்நாதன் ஏற்கனவேஇசைஞானியோடு வெள்ளை ரோஜாவில் இணைந்து அட்டகாசமான பாட்டுக்களைஅள்ளியவர். இருந்த போதும் இந்தப் பெரும் கூட்டணியில் இசைக்கு அவர் மனம்இசைந்தது டி.ராஜேந்தருக்குத் தான். "முத்துக்கள் மூன்று" இந்தப் படத்தில்கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் பாடும் "தேவன் கோயில் தீபமே" பாடல்சோர்ந்து போயிருக்கும் போது ஒத்தடமாகப் பலதடவை எனக்குப்பயன்பட்டிருக்கிறது, உங்களுக்கு?
https://www.youtube.com/watch?v=qlFd2BZoKhc
பூக்களைப் பறிக்காதீர்கள் வெற்றியில் அதே இயக்குனர் வி.அழகப்பன்"பூ" ராசியோடு தலைப்பு வைத்து எடுத்த படம் "பூப்பூவாப் பூத்திருக்கு" யாழ்ப்பாணத்தின் பெருமை மிகு சினிமா நினைவுகளைக் கொடுத்த குட்டிதியேட்டர் லிடோவில் ஓடிய கடைசிப்படம் இதுதான். அதற்குப் பின்னர் லிடோவின்நிலை கடந்த இருபது வருஷங்களில் அந்த நாளில் படம் பார்த்தவர்களில்மனங்களில் தான் வீற்றிருக்கின்றது. "வாசம் சிந்தும் வண்ணச்சோலை" என்றுவாணி ஜெயராம் பாடி வரும் அழகான பாட்டு ஒருபுறம், "எங்கப்பா வாங்கித் தந்தகுதிர அதில நானும் போகப்போறேன் மதுர" என்று குட்டீஸ் பாடும் பாட்டு என்றுஇன்னொரு புறம் இசைபரவ, "பூப்பூத்த செடியைக் காணோம் வித போட்ட நானோபாவம்" என்று ஜெயச்சந்திரன் பாடும் பாடல் படத்தின் அச்சாணி எனலாம்.
வாசம் சுந்தும் வண்ணச் சோலை
https://www.youtube.com/watch?v=4Sh1fRqXlrs
பூ பூத்த செடியைக் காணோம்
https://www.youtube.com/watch?v=h3nz2B8MZ6s
இசையமைப்பாளர் T.ராஜேந்தர் இன்னொரு நட்சத்திரத்துக்கு இசையமைத்துப்பெரும் புகழீட்டிய படங்களில் தலையாயது “கூலிக்காரன்”.
பாடல்கள் எல்லாமே அன்று பட்டையைக் கிளப்பின.
“குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா”
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடிய இந்தப் பாடலை இன்று கேட்டுப்பாருங்கள். அதே பொலிவோடு இசைப் பிரவாகம் கொட்டும் பாட்டு.
T.ராஜேந்தரின் மிருதங்கப் பின்னணி முத்திரை இருந்தாலும் இசையில் ஒரு புதுப்பரிமாணம் கையளப்பட்டது, மெட்டிலும் கூட.
“சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்” என்று இந்தப் பாடல் கேட்டுமுடிந்தும் முணுமுணுக்க வைக்கும். பாடகர் இருவரது வழக்கமான குறும்புச் சிரிப்பு, மேலதிக சங்கதிகள் எல்லாம் இருக்கும்.
“வெச்ச குறி தப்பாது இந்தப் புலி தோற்காது” என்றொரு துள்ளிசைப் பாட்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியக் பாடும் இந்தப் பாட்டும் கூலிக்காரன் வெற்றிப்பாடல்களில் பங்கு போட்டது.
“ஐய்யே ஐய்யே ஐய்யே தொட்டதும் துவண்டிடும் ரோசா” என்று போதையைத்தேக்கி வைத்த குரலோடு எஸ்.ஜானகி பாடும் இன்னொரு பாட்டு, மலேசியாவாசுதேவன் “வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி” (படத்தில் பாண்டியனுக்குக்கொடுக்கப்பட்டிருக்கும்), “பாழும் வயிறு தான்” என்னும் இன்னொரு தத்துவப்பாடலையும் அவரே பாடியிருக்கிறார். அந்தப் பாடல் கூலிக்காரர்களின் வேதனைசொல்லும் பாட்டு. 2017 இல் மதுரை சென்றிருந்த போது இன்னமும்கைவண்டிக்காரர் இயங்குவதைக் கண்டேன். இந்தப் படத்தில் விஜயகாந்த் நடித்தபோது மேலமாசி வீதியின் கைவண்டி ஓட்டும் கூலிக்காரர்களை மனதில்வைத்திருப்பார் என்பதை மறுக்க முடியுமா என்ன?
“போதையேற்றும் நேரம்” பாடலை எஸ்.ஜானகி & எஸ்.பி.பி பாடியிருந்தாலும்பெரிதாக வெகுஜன அபிமானம் பெறாத பாட்டு.
கூலிக்காரன் பாடல்களைக் கேட்க
விஜயகாந்துக்கு ஒரு சூப்பர் ஹிட் இசை விருந்தை “கூலிக்காரன்” படத்துக்காகஅளித்த T.ராஜேந்தர் இதற்கு முன்பே “சட்டம் சிரிக்கிறது” என்ற படத்துக்காகஇசையமைத்திருக்கிறார். அந்தப் படத்தில் விஜயகாந்துடன் பிரதாப், ரயில்பயணங்களில் புகழ் ஜோதி, ஸ்வப்னா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சட்டம்சிரிக்கிறது படத்தின் பாடல்கள் அச்சொட்டான ஆரம்ப கால T.ராஜேந்தர்படங்களின் இசையின் வாடை கொண்டவை. இதனோடு ஒப்பிடும் போதுகூலிக்காரன் படத்திற்கு எவ்வளவு பிரமாண்டமும் புதுமையும் இசையில்காட்டப்பட்டிருக்கின்றது என்ற ஒப்பீட்டையும் செய்யலாம்.
சட்டம் சிரிக்கிறது படப் பாடல்களில்
“மலரே மலரே உனக்கின்று மணம் வருமா” P.சுசீலா பாடியது
“மலை முகப்பினில் நடுக்காட்டினில்” எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிபாடியது.
மேலுமொரு பாட்டு எஸ்.பி.பி & ஜானகி கூட்டணியில்
“கண்கள் கள்ளானது” என்ற வரிகளோடு அமைந்திருக்கும்.
இந்தப் பாடலைக் கேட்கும் போது கிளிஞ்சல்கள் படத்தில் T.ராஜேந்தர்இசையமைத்த “விழிகள் மேடையாம்” பாடலும் நினைவுக்கு வந்து போகும்.
“கனகாம்பரம் பூ வாங்கு” என்ற சாய்பாபா குழுவினர் பாடும் பாட்டு ஒருதலை ராகம் படத்தில் வரும் “கூடையில கருவாடு” காட்சியை நினைவுபடுத்தும்
சி.வி.ராஜேந்திரன் இயக்கிய “உனக்காக ஒருரோஜா”, மோகன், அம்பிகா, சுரேஷ் ஆகியோர்நடித்தது. இந்தப் படம் எத்தனை பேருக்குநினைவில் இருக்கும்?
ஆனால் இதில் வந்த “ஒரு புல்லாங்குழல்ஊமையானது” https://youtu.be/UlJucvJZsxY
T.ராஜேந்தரின் அடையாளம் பேசும்.
“எங்க வீட்டு வேலன்” சிம்பு நடிப்பில் ராஜேந்தர் இசையோடு இயக்கம் கொடுத்துஒரு நல்ல வெற்றி பெற,
சசிமோகன் இயக்கிய “சபாஷ் பாபு”, மற்றும் சரவணன் நடித்த “பெற்றெடுத்தபிள்ளை” (இயக்கம் : பூர்ணசந்திரன்) ஆகியவற்றுக்கும் இசை கொடுத்தார்.
அது போல் ராம்கி நடிப்பில் “என் ஆசை தங்கச்சி” (K.சண்முகமணி இயக்கியது), எஸ்.எஸ்.சந்திரன் இயக்கிய “பொம்பள சிரிச்சாப் போச்சு”ஆகியவை அதிகம்பெயர் பெறா ராஜேந்தர் இசைத்தவை.
டி.ராஜேந்தர் இசையமைப்பாளராகப் பணியாற்றிய படங்கள் பிரபு நடித்த"இவர்கள் வருங்காலத்தூண்கள்" (வெங்கட் இயக்கம்), இராம நாராயணனின் 'எங்கள் குரல் "மற்றும் பாண்டியராஜன் நடித்த "ஆயுசு நூறு" (பொன்மணி ராஜன்), ஶ்ரீ பண்ணாரி அம்மன் ( பாரதி கண்ணன் இயக்கம்) என்று நீளும்,
ஆயுசு நூறு படத்தில் “பிரம்ம தேவன் அவன்”
https://www.youtube.com/watch?v=1aqKvJRfIY0
அந்தக் காலத்துச் சென்னை வானொலி உங்கள் விருப்ப காலத்தைநினைவுபடுத்தும்.
ஆனால் இந்தப் பதிவுக்கு இந்த முத்திரைகளே போதும் என்று நினைக்கிறேன், இன்னொரு பதிவில் கவிஞர் டி.ராஜேந்தரோடு.
சோலைக்கொரு
வசந்தம் போல் நீ வந்தாய் காளைக்கென்றும்
சொந்தம் என்று
நீ ஆனாய்
கானா பிரபா
2 comments:
அருமையிலும் அருமை
ஒரு தலை ராகத்தை விட்டு விட்டீர்களே
Post a Comment