ராஜா பாடல் க்விஸ் ஐ மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் இந்த வாரத்துக்கான பாடல்களை நேற்றுத் தொகுத்துக் கொண்டிருந்த போது அடடா இந்தப் பாடலைக் கேட்டு எவ்வளவு நாளாச்சு என்று உச்சுக் கொட்டியவாறே ரசித்தேன். என்னவொரு அற்புதமான ஆலாபனையோடு ஜானகிம்மா குரல் மிதந்து வர, அப்படியே ஏந்திப் பாடும் எஸ்.பி.பியும் இணைய, நீண்ட நாட்களுக்குப் பின் கேட்ட அந்த சுகம் ஆகா.
இனிமேல் தான் வேடிக்கை
நேற்று மாலை பின்னணி விபரங்களைப் போட்டியின் க்ளூவாகத் திரட்டும் போதுதான் அவதானித்தேன், பாடல் இடம்பெற்ற “ஓ மானே மானே” படத்தைத் தயாரித்தது ஃபிலிம்கோ.
நேற்றுக் காலையில் தான் ஃபிலிம்கோவின் தயாரிப்பு நிர்வாகி கஃபாரின் பேட்டியை சாய் வித் சித்ராவில் https://www.youtube.com/watch?v=_lFei1PSXDs பார்த்திருந்தேன். அதில் அவர் பிலிம்கோ சார்பில் “வெள்ளை ரோஜா” படம் உருவான கதையைச் சொல்லியிருந்தார். ஆனால் “ஓ மானே மானே” படம் பற்றிய பேச்சு வரச் சம்பந்தம் வாய்க்கவில்லை.
இந்த இடத்தில் தான் ஒரு முடிச்சுப் போட்டுப் பார்த்தேன்.
“வெள்ளை ரோஜா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் ஏ.ஜகந்நாதன் அவர்களுக்கே இன்னொரு படத்தையும் கொடுத்திருக்கிறார்கள் இந்த ஃபிலிம்கோ நிறுவனத்தினர்.
அத்தோடு “வெள்ளை ரோஜா” படத்தில் இடம்பெற்ற புகழ் பூத்த பாடலான “ஓ மானே மானே உன்னைத்தானே” பாடலின் ஆரம்ப வரிகளையே அந்த இன்னொரு படத்தின் தலைப்பாக்கி இருக்கிறார்கள். அத்தோடு எப்படி வெள்ளை ரோஜா படத்துக்கு சிவாஜியை ஒப்பந்தம் செய்ய உறுதுணையாக இருந்தாரோ அதே வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் தான் “ஓ மானே மானே” படத்தின் வசனமும்.
அத்தோடு கஃபாரின் பேட்டியில் ஃபிலிம்கோ நிறுவனம் தமது தயாரிப்புப் பணியை நிறுத்தியது குறித்த நிறுவனத்தின் மதக் கொள்கைக்கு எதிராக இருந்ததால் என்று சொல்லியிருந்தார். அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அதுதான் முழுக்காரணமாக இருக்க வாய்ப்பில்லை.
தொடர்ந்து உயிருள்ளவரை உஷா, வெள்ளை ரோஜா, நீங்கள் கேட்டவை என்று வெற்றிப் படங்களை அளித்த இந்த நிறுவனத்தின் சறுக்கலில் ஒன்று “ஓ மானே மானே” படம், இது வெளிவந்த சுவடே பலருக்குத் தெரியாது. “பொன்மானைத் தேடுதே” பாடலை மோகனுக்காகக் கமல்ஹாசன் பாடியது என்ற புண்ணியத்தில் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
அதோடு பிலிம்கோவின் அனுசரணையில் கஃபாரும் இன்னொரு தயாரிப்பு நிர்வாகியும் தயாரித்து ரம்யா கிருஷ்ணன் அறிமுகமாகிய “வெள்ளை மனசு" தோல்வி. “ரெட்டை வால் குருவி" முதலுக்கு மோசமில்லை.
அதை விட ஆகப்பெரிய சறுக்கல் என்னவெனில் “மை டியர் குட்டிச்சாத்தான்" 3D படத்தைப் பார்த்துச் சூடு போட்டுக் கொண்ட கதையாக பிலிம்கோவின் 3D படமான “தங்க மாமா” கூட எடுபடவில்லை. அந்தக் காலத்தில் அது பெரும் பொருட்செலவு பிடித்த படமாக இருந்திருக்கும்.
அத்தோடு இன்னொரு முடிச்சு என்னவென்றால், “ஓ மானே மானே உன்னைத்தானே” பாடலை எழுதிய பாடலாசிரியர் நா.காமராசனையே “ஓ மானே மானே” படத்தின் இந்த “ஓ தேவன் கோவில்" பாடலையும் எழுத வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.
ஒரு பேட்டியில் சொல்லாத கதை எப்படி நம்முடைய எண்ண அலையை உரசிப் பார்த்திருக்கிறது என்று நினைத்து ஆச்சரியப்பட்டுப் போனேன்.
பாட்டைக் கேட்டுப் பாருங்கள் நீங்களும் சொக்கிப் போவீர்கள்
ஓ தேவன்
கோவில் வீணை
பாடும் இசை கேட்கும்
காதல் சுகம் தேடும்
https://www.youtube.com/watch?v=bfarKJ_3vJA
கானா பிரபா
0 comments:
Post a Comment