உச்சிக்குள்ளே
கிடந்த சனம்
கோணிச் சாக்கிலே
சுருண்ட சனம்
பஞ்சம் பசி
பார்த்த சனம்
படையிருந்தும்
பயந்த சனம்
💔
முன்னிரவை எட்டிப் பிடிக்கும் நேரத்தில் இந்தப் பாட்டு வந்து சேந்தது இந்த வாரத்தின் ஒட்டு மொத்த மனநிலையையும் நாடி பிடித்து, தோள் பற்றி விசாரிப்பது போல இருந்தது.
தோற்றுப் போன சனங்களின் குரல் எங்கு ஒலித்தாலும் அது நம்முடைய குரலாகவே மாறிப் போய் விடுகிறது.
இது வெறும் பாடலல்ல, ஒப்பாரிக் கூப்பாடும் அல்ல. அடி மனசு எழுந்து வந்து பேசும் சாட்சியம்.
என்னதான் மகிழ்ச்சிப் படுக்கைக்கு இழுத்து வர முயன்றாலும், அடி மன ஆளத்தில் மாறாப் புண் இலிருந்து எழும் வலி இது.
காலை எழுந்து வந்து காணொளியில் உற்றுப் பார்த்துக் கொண்டேன் இங்கே பதிவு செய்யப்பட்டோரின் அங்க அசைவுகளை.
சனங்களின் கலைஞன் எங்களைச் சிரிக்க வைத்தான். அவன் ஓயக் கூடாது. அவன் ஒரு சுயம்பு.
அந்த செப்பில் படிந்த உப்பு கழுவப்பட்டிருக்கிறது.
வடிவேலு என்ற கலைஞன் இனி ஒரு தலை சிறந்த குணச்சித்திரமாக அடையாளப்படுத்த, இன்னும் இரு தசாப்தமாவது சுற்ற இந்த மாமன்னன் ஒரு திறவு கோலாகட்டும்.
தன் உடல் மொழியில் மின்னிய பரிமாணங்கள் இன்று முன்னெப்போதுமில்லாத பாடகன் வடிவேலுவிலும் மிளிர்கிறது.
“மலையிலே தான்
தீப்பிடிக்குது
ராசா
என் மனசுக்குள்ளே
வெடிவெடிக்குது
ராசா”
வடிவேலுவைக் காணவில்லை அங்கே. கொண்டு வரப் போகும் அந்தப் படைப்பு எழுந்து நின்று பாடுமாற் போல.
தின்னேலிப் பாசையில திட்டித் தீர்த்து வேலை வாங்கும் கடும் உழைப்பாளி. தனக்குத் திருப்தி வரும் வரை விடவே மாட்டார் என்று “பரியேறும் பெருமாள்” வழியாக நடிகர் மாரிமுத்து, இயக்குநர்
மாரி செல்வராஜ் ஐப் பற்றிச் சொல்லி இருப்பார். இந்தப் பாடல் காணொலியில் மாரி செல்வராஜைக் கண் வெட்டாது பார்த்தேன். பரீட்சை மண்டபத்தில் பதற்றமாக இருக்கும் மாணவன் தோரணை. அந்தக் காட்சியையும் சிறைப்பிடித்துக் கொண்டேன்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சமயம் ஏ.ஆர்.ரஹ்மான் வந்திருந்த போது போட்டிப் பாடகியிடம்
“கோயம்புத்தூர் பாசையில் ஒரு பாட்டு பாடுவிங்களா?”
என்று கேட்டபோது அந்த 2K kid பொத்தம் பொதுவாக ஒரு பாட்டைப் பாடவும்
“இது கோயம்புத்தூர் பாஷையா?” என்று ரஹ்மான் கலாய்த்து விட்டார்.
இந்த மாதிரி முற்பதிவு செய்யும் நிகழ்ச்சியில் ரஹ்மான் எதிர்பார்த்த பாட்டு
“ஈச்சம் பழம் நாவப்பழம்
எ மாமா உன் ற கருப்பு”
என்று அப்போது நினைத்துக் கொண்டேன். இதுவும் வடிவேலுவுக்கானது தான். அப்போதே புது முயற்சியாக கோவைக்கார சரளாவையும், மதுரைக்கார வடிவேலுவையும் பயன்படுத்தியிருந்தால் இதன் வீச்சு 2K ஐக் கடந்திருக்கக் கூடும்.
மலையுச்சியில் எங்கோ ஒரு மூலையில் எழும் ஒலி மெல்ல மெல்லப் பொங்கி வியாபிக்கும் பின்னணி கொடுத்த ரஹ்மானின் கிராமியத்தைக் கேட்ட நம் காதுகள் நம் மண் சார்ந்த இன்னுமொரு படைப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இம்மாதிரி முயற்சிகளின் வெற்றி அவருக்கு ஒரு பிடிமானமாக இங்கேயே இருத்தி விடட்டும்
யுகபாரதி
என்ன சொல்ல?
பெருக்கெடுக்கும் காட்டாறு தேங்கிய வெள்ளத்தை அடித்து அலசித் தன் நன்னீரைப் பாய்ச்சும் இன்றைய யுகத்து எழுது கோலான்.
ஒரு இரண்டரை மணி நேரப் படத்தை முன்னோட்டம் போட்டு அசை போட வைத்து விடும் அந்தப் படைப்புக்குக் கொடுக்கப்பட்ட அடி நாதமாய் விளங்கும் பாடல். வணிக சமரசங்களுக்குக் கட்டுப்படாத எழுத்து.
மாரி செல்வராஜுக்கு முகவரி
எங்களின் “முக” வரி இது
பட்ட காயம்
எத்தனையோ
அத சொல்லிப்புட்டா
ஆறிடுமோ ராசா…..
ஆறிடுமோ
ராசா ❤️
கானா பிரபா
21.05.2023
0 comments:
Post a Comment