Pages

Thursday, October 6, 2022

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

 


ஆற்றுக்குப் பாதை இங்கு 

யாரு தந்தது 

தானாகப் பாதை கண்டு 

நடக்குது 

காற்றுக்குப் பாட்டுச் சொல்லி 

யாரு தந்தது 

தானாகப் பாட்டு ஒன்னு 

படிக்குது  🏝️❤️


உன்னால் முடியும் தம்பி படத்துக்குப் புலவர் புலமைப் பித்தன் பாட்டெழுகிறார். 

“இதழில் கதை எழுதும்” பாடல் கவிஞர் முத்துலிங்கம், “என்ன சமையலோ” இளையராஜா எழுத மீதி எல்லாம் அவரே. “உன்னால் முடியும் தம்பி தம்பி” என்றொரு நம்பிக்கை விதையை முகப்புப் பாடலில் கொடுத்திருப்பார்.


அதில் நாயகன் உதயமூர்த்தியின் சமூகப் பார்வைக்கு இலக்கணமாய் இரண்டு பாடல்கள் கிடைக்கின்றன.

அந்த இரண்டு பாடல்களிலும் இருக்கும் சொற்கட்டுமானத்தைப் பாருங்கள். பாடலாசிரியர் என்பவர் வெறும் மெட்டுக்கு இட்டுக் கட்டுபவர் இல்லை என்று துலங்கும்.

ஒன்று, சாஸ்திரிய இசை மேடையில் அங்கே புழங்கும் தமிழாக அமையும்,


மானிட சேவை துரோகமா

கலைவாணி நீயே சொல்


வீதியில் நின்று தவிக்கும் பராரியை

பார்ப்பதும் பாவமா?


https://youtu.be/0gCyzsG8VkE


என்றமையும் புலமைத்துவமான தமிழைக் கையாண்டிருப்பார் சங்கீத சபையில் மேடையேறும் பாடலை.


இன்னொன்று தான்,


புஞ்சை உண்டு நஞ்சை உண்டு 

பொங்கிவரும் கங்கை உண்டு 

பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க 

பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல


வீதிக்கொரு கட்சியுண்டு 

சாதிக்கொரு சங்கமுண்டு 

நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - சனம்? 

நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது 

நாடா இல்ல வெறும் காடா - இதை 

கேட்க யாரும் இல்லை தோழா 


இந்தப் பாடலின் வரிகளை மட்டும் ஒருதரம் பாடிப் பாருங்கள். மலை மேட்டிலிருந்து உருண்டு வரும் குதூகலத்தைக் காட்டியிருப்பார் எளிமை மிகு தமிழால். அதில் பாட்டாளி வர்க்கத்தின் அவலமும், அவன் எப்படியாவது உயர வேண்டும் என்ற ஆதங்கமும் தொனிக்கும். இதுதான் என்னுடைய களம் என்று சொல்லாமற் சொல்லுவார்.


அந்த எளிமைக்கு ஒரு சோறு பதமாக “சனம்” என்ற சொல்லாடலைக் கையாண்டிருப்பார்.


உன்னால் முடியும் தம்பி படத்தில் ஏலவே அமைந்த பாடல்கள் கவிச்சிறப்பு மிக்கவை என்றாலும் இந்த இரண்டு பாடல்களும் புலவர் புலமைப்பித்தனின் எழுத்தாளுமையை ஒரே படத்தில் ஒப்பு நோக்க உதவும்.


இசைஞானி இளையராஜாவை சப்தங்களின் நாயகன் என்று சொன்னால் மிகையில்லை என்பதை அவர்களின் பாடல்களே சான்று பகிரும்.  

“பருவமே புதிய பாடல் பாடு”வில் கால் குதிப்புகள், “போட்டா படியுது படியுது” பாடலின் இடையிசையில் சைக்கிள் மணி, ஆட்டோ வாகன ஒலி, நெரிசல் எல்லாம் வருவது போல, “சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி” பெண் பார்க்கும் படலத்தில்” தேநீர்க் குவளை வைப்பதில் இருந்து 

பாக்கு இடிக்கும் சத்தம், அப்படியே மைக்கேல் மதன காமராஜனின் “பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும்” 

முக்கிய காட்சியோடு இணைந்த பாடலில் உருட்டுக் கட்டை ஒலி என்று இதைப் பற்றி எழுதப் போனால் ஒரு ஆய்வுக் கட்டுரை அளவுக்கு ரயில் விடலாம் 😀


அந்த வரிசையில் வரும் “புஞ்சை உண்டு நஞ்சை உண்டு” பாடலின் முகப்பு இசை அப்படியே மரம் வெட்டும் தோப்புக்குள் கடத்திக் கொண்டு போய் விடும் உணர்வோடு பின்னப்பட்டிருக்கும். அந்த மரம் வெட்டும் ஓசை மெல்ல மெல்ல இசைச் சங்கமமாகி பாட்டுக்குள் போகும் கணம் இருக்கிறதே ப்பாஆ “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே” என்று இறைவனைப் பாடிய தருணத்தைத் தன் இசை வித்தையால் மெய்ப்பித்திருக்கிறார் எங்கள் பாட்டுக்கார ராஜா.


உன்னால் முடியும் தம்பி படத்தின் மூலம் தெலுங்கில் ருத்ர வீணா வில் இதே காட்சியமைப்புக்கு இன்னொரு மெட்டில் சிரஞ்சீவிக்குக் கொடுத்த பாடலும் வெகு இனிமையானது. ஒரே காட்சி தான் ஆனால் அதற்கு இரண்டு விதமான பாடலைத் தன்னால் தரமுடியும் என்று செப்படி வித்தை காட்டும் ராஜா, ஒரே மெட்டை வைத்துக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரையோடும் வீரர்களுக்கும் சவால் விடுகிறார்.

“தரளி ராத தனே வசந்தம்” 


https://youtu.be/2Cuwg9zVXKU


என்ற “ருத்ர வீணா” பாடலின் முன்னிசையைப் பாருங்கள். மரக் குற்றியை வெட்டிச் சரிக்கும் அதே சூழல் தான். ஆனால் அந்த ஒலியை எவ்விதம் வேறுபடுத்தியிருக்கிறார் பாருங்கள்.


இசைஞானி இளையராஜாவுக்குக் கலைஞானி 

கமல்ஹாசன் எப்போதும் விசேஷமானவர் தான். அதனாலோ என்னமோ “புஞ்சை உண்டு நஞ்சை உண்டு” பாடலையும் அதே விசேஷத்தோடு ரசிக்க முடிகிறது. “தந்தந்தானா தந்தந்தந்தானா தந்தந்தானா தானா” என்று ஜதிகளைப் போடும் போதே கமல் இதற்கு எப்படி அபிநயம் பிடிப்பார் என்று ராஜா கற்பனை செய்திருக்கக் கூடும். ஆனால் இங்கே கமல் ஒரு குறும்புத் தனம் செய்வார் பாருங்கள். அந்த அடிகள் வரும் சமயம் வெட்டிக் கொண்டிருக்கும் அந்தப் பக்கமிருந்து மரத் துகள் ஒன்று கமலின் கண்ணில் அறையும். அதை அப்படியே தட்டிவிட்டு நிறுத்தாது மரம் வெட்டுவதைத் தொடருமாறு சைகை காட்டுவார். இந்த இடத்தில் வாசிப்பதை விட்டு விட்டு நான் சொன்ன அந்தக் கணத்தைக் காட்சியில் பாருங்கள். இப்போது தெரியும் ராஜா ஆற்றில் போட்டாலும் அளந்து போடுவதில்லை ஆனால் கமல் நடிப்பு  ஒரு தெப்பக் குளம் என்றுணர்ந்து கொடுத்த இசையென்று. 


மேலும் அந்த மனிதத் தலைகளில் ட்ரம்ஸ் வாசிப்பது கோடரிகளைத் தேய்த்து இசைக் கேற்ப லயிப்பது, கோடரியை அருவாக் கத்தியில் தட்டிப் பார்ப்பது, 

“காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது 

தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது” வரிகளில் மேலிருந்து சொரியும் பூக்கள் என்று எத்தனை எத்தனை காட்சி இன்பத்தைப் பொருத்தியிருக்கிறது இந்தப் பாடல், 

அந்த ஜனகராஜ் தலையாட்டலும் நளினமும் ஆகா 😀


பொதுவுடமைக் கருத்துகளைத் திரையிசைப் பாடல்களில் காட்சியோடு ஒட்டிக் கொடுக்கும் முறைமை தமிழ் சினிமா வரலாற்றில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தாண்டி நீண்ட வரலாறு கொண்டது.

இங்கே புலவர் புலமைப் பித்தன் அந்தக் காரியத்தை எடுத்து எவ்வளவு அழகாக, இயல்பான மொழி நடைக்குள் அடக்குகிறார் பாருங்கள். இந்தக் காட்சிக்கு “மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்” போன்ற சிவப்புச் சிந்தனையின் உக்கிரம் நிறைந்த வரிகளைக் காட்டியிருந்தால் இங்கே அது பொருந்தாது அந்நியப்பட்டிருக்கும்.


“வானத்தை எட்டி நிற்கும் 

உயர்ந்த மாளிகை 

யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது” 

எனும் போது காட்சியில் மார் தட்டும் அந்த ஏழைத் தொழிலாளி போலவே பாமரருக்கும் சென்று சேரக் கூடிய வரிகளோடே பயணப்படுகிறது இந்தப் பாடல்.

ஒரு கடவுள் மறுப்பாளராக இயங்கும் புலவர் புலமைப்பித்தன் சமுதாய சீர்திருத்தம் காண

இங்கே இறைவனை வேண்டவில்லை, போரடச் சொல்கிறார். 


தன்னுடைய வாழ்வின் இலட்சியத்தோடு பொருந்தக் கூடிய ஒரு படைப்பை ஆக்கச் சொல்லிக் கேட்பது ஒரு படைப்பாளிக்கு எவ்வளவு மகத்தான கெளரவம். அதைச் சிரமேற்கொண்டு எழுதித் தந்த புலவர் புலமைப்பித்தன் வரிகள் காலத்தைத் தாண்டி நிற்கும்.


🌼🌼🌼

ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும் 

நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு 

வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு 

🍃🍃🍃


https://youtu.be/Kyv_1k1SMu8


நம்மில் வாழ்ந்து கொண்டிருக்கும்

புலவரய்யா புலமைப்பித்தனுக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

❤️


கானா பிரபா

0 comments: